‘கூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும்’
அம்மா என்னுடன் சிட்னியில் வாழந்த காலங்களில் தைப்பெங்கலன்று, சிட்னி கோவிலொன்றில் எழுந்தருளி இருக்கும் வைரவருக்கு வடை மாலை சாத்துவார். இதற்கான நினைவூட்டல், தைப்பொங்கலுக்கு ஒருவாரத்துக்கு முன்னரே துவங்கிவிடும்.
கனவில் தன்னை நாய் துரத்துவதாகவும், வைரவர் நாய் வாகனத்தில் திரி சூலத்துடன் வந்து, நெஞ்சாங்கூட்டை அமத்துவதாகவும் இதனால் இரவில் மூச்சுவிடக் கஷ்டப் படுவதாகவும் கதைகளை அவிழ்த்து விடுவிடுவார்.
அம்மாவின் இந்த அதிதீவிர வைரவர் பக்திக்குக் காரணம் உண்டு!
எங்கள் குடும்பத்துக்கென அம்மாவுக்கு சீதனமாக வந்த பனங்கூடலில், கொண்டல் மரத்தின் கீழ் ஒரு வைரவர் இருந்தார். வெள்ளிக் கிழமைகளில் மாத்திரம் அவர் நாங்கள் ஏற்றும் வெளிச்சத்தில் இருப்பார். மற்றும்படி இருட்டில்தான் அவரது சீவியம்.
தைப் பொங்கலன்று மாத்திரம் வைரவருக்கு பொங்கல் பொங்கி முக்கனிகள் சகிதம் படையல் வைப்போம். இப்படி மூன்று நான்கு குடும்பங்களுக்கு ஒரு வைரவர் வீதம், பல வைரவர்கள், பனைகளுக்கு நடுவே இருந்து யாழ் குடாநாட்டில் அருள் பாலிப்பர்கள்.
வைரவர் வழிபாடு பற்றி என்னுடைய ஐயா சொன்ன சங்கதி ஒன்று இங்கு பதிவுக்குரியது. ‘போத்துக்கேயர் இலங்கைக்குப் படையெடுத்து இலங்கையை ஆண்டபோது மக்களை வலோற்காரமாக மதம் மாற்றியதுடன் வழிபாட்டு தலங்களையும் அழித்தார்களாம். அப்போது யாழ்ப்பாண மக்கள், பயத்தில் தங்கள் பின் வளவுகளுக்குள் அல்லது பனங்கூடலுக்குள் வைரவர் சூலங்களை நாட்டி மறைவாக வழிபடடார்களாம். அதுவே காலப்போக்கில் வைரவர் கோயில்களாக வந்திருக்கலாம்’ என்ற கருத்தை சொன்னார்.
இந்த வகையில்தான், போத்துக்கேய எஜமானர்களுக்கு பயந்து யாழ்ப்பாணத்தில் ‘அடுப்பு நாச்சியார்’ என்ற பெயரில், அடுப்படிக்குள் அடுப்பைக் கும்பிட்ட வழக்கம் வந்ததாம். இன்றும் கிராமத்தில் தைப்பொங்கலன்று முற்றத்தில் பொங்கியவுடன், பொங்கிய சாதத்தில் ஒரு பகுதியைக் கிள்ளி அடுப்பில் வைப்பதும் இதன் நீட்சியாகவே இருக்க வேண்டும்
தைப்பொங்கலன்று, வைரவருக்கு பொங்கல் பொங்கி, முக்கனிகளாகச் சொல்லப்படும் மா, வாழை, பலாப் பழங்களுடன் மடைவைக்கும் போது, பனை மரம் பற்றிய தகவலொன்றை அறிந்து கொண்டேன்.
முக்கனிகளைப் பற்றிய புனிதம் சைவசமய பூசை அநுட்டானங்களிலே வலியுறுத்தப் படுவது பிற்காலத்திலே தோன்றியதாம். ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு விருட்சம் சிறப்பாகச் சொல்லப் படுகிறது. ஆதிகாலத்தில் யாழ்ப்பாணக் கோவில்களுக்கு தல விருட்சமாக அமைந்தது, யாழ் கலாசாரத்துடன் கைகோத்துச் செழித்து வளர்ந்த பனை மரமே’ என்றார் புராண இதிகாசங்களை முறைப்படி கற்றுத் தேர்ந்த பெரியவர் ஒருவர்.
அம்மா வழியில் நெருங்கிய உறவினரான ஒரு பெத்தாச்சியின் வீடு எங்கள் வீட்டிலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் இருந்தது. அவர் ஒரு கைம்பெண். இரு பெண் பிள்ளைகளுடன் பனை ஓலையால் வேயப்பட்ட மண் வீட்டில், தங்களுக்குச் சொந்தமான பனைகளை நம்பி மிகவும் கண்ணியமாக வாழ்ந்துவந்தார். சின்ன வயதில் அவர் வீட்டிலேயே, பனை மரத்தின் விளை பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் உணவு வகைகளை அதிகம் சாப்பிட்டிருக்கிறேன். அவரது கைப் பக்குவத்தில் தயாராகும் பாணிப் பினாட்டும், புழுக்கொடியல் மாவுறுண்டைகளும் மிகவும் சுவையானவை. பனம் பழக் காலங்களிலே பனங்காய்ப் பணியாரம் சுடப்படுவதுமுண்டு.
இவரைப்போல இன்னும் சில பெத்தாச்சிகளும் அயலட்டையில் வாழ்ந்தார்கள். அவர்கள் வீட்டில் எப்பொழுதும் நான் செல்லப் பிள்ளை. அவர்கள் அனைவரும் தோட்டத்தை நம்பியே வாழ்ந்தார்கள். அவர்களிடம் பணவசதி இல்லாவிட்டாலும் வந்தவர்களையும் உறவினர்களையும் மனதார வரவேற்று உபசரிக்கும் பண்பு இருந்தது. போலித்தனமோ எந்தவித எதிர்பார்ப்போ அவர்களிடம் இருந்ததில்லை.
பெத்தாச்சி தனது வளவிலுள்ள பத்து பெண் பனை மரங்களை கள்ளுச் சீவ, கந்தையாவுக்கு கொடுத்திருந்தார். ஆண் பனைகளைக் கொடுப்பதற்கே பெத்தாச்சி முதலில் ஆசைப்பட்டார். ஆனால் ஆண் பனை மரப் பாளையில் அதிகம் கள்ளு ஊறாதென கந்தையா மறுத்துவிட்டார்.
இருந்தாலும் ஆண் பனைக் கள்ளுக்கும் ஊரில் தனி மரியாதை இருந்தது. ஆண் பனையிலிருந்து இறக்கப்படும் உடன் கள்ளு, முடக்கு வாதத்துக்கு நல்லதென அதையே நம்மூர் பெரிய கமக்காரரான துரையர், தினமும் தன் பின்வளவு ஆண் பனையிலிருந்து இறக்குவித்துக் குடிப்பார். இருப்பினும், அவரைப் பொறுத்தவரை அது பொய்யாகி, அறுபது வயதில் பாரிசவாதத்தால் இறந்தது கொசுறுச் செய்தி.
சென்ற நூற்நாண்டின் அறுபதாம் ஆண்டுகளில் பனை தென்னை மரங்களுக்கு ‘மர-வரி’ இலங்கையில் அறிமுகப் படுத்தப்பட்டது. இந்த வரிமுறையின் கீழ் கள்ளிறக்குவதற்கு, பெண்பனைக்கும் தென்னைக்கும் ஆண்டு ஒன்றுக்கு ‘லைசென்ஸ்’ பெற அப்போது பத்து ரூபாய் வீதம் கட்டவேண்டும். தென்னையிலும் பெண் பனையிலும் கள்ளுச் சீவுவதால் தேங்காய், பனங்காய் ஆகியவற்றினால் கிடைக்கும் பயன்கள் இல்லாமற் போவதை ஈடுசெய்வதற்காக மரத்துக்கு பத்து ரூபாய் வீதம் அப்போது பணம் வசூலிக்கப் பட்டது. தென்னை மரங்களில் ஆண் பெண் என்ற பேதம் இல்லை. ஆனால் பனை மரங்களில் உண்டு. ஆண் பனைகளிலே பெண் பனைகளைப் போல பயன்கள் கிடைக்காத காரணத்தால் அதற்கான ‘லைசென்ஸ்’ பணமாக ஆண் பனைக்கு, ரூபா இரண்டு வசூலிக்கப்பட்டது.
‘லைசென்ஸ்’ கட்டிச் சீவப்படும் மரங்களுக்கு வெள்ளை மையால் நம்பர் எழுதப்படும். நாலு மரங்களுக்கு பணம் கட்டி, கொசுறாக மேலும் சில மரங்களிலேயும் கள்ளுச்சீவுதல் கிராமங்களிலே சகஜமாக நடைபெறும். அப்பொழுது ‘கலால்’ இலாகா விழித்துக் கொள்ளும். நம்பரில்லாத மரங்களிலுள்ள கள்ளு முட்டிகளை அடித்துடைத்து, பாளைகளையும் ‘கலால்’ இலாகாவினர் வெட்டி எறிவது கிராமங்களில் அவ்வப்போது நடக்கும் சங்கதி.
பெத்தாச்சியின் வளவில் பத்து பெண் பணைகளில் கள்ளுச் சீவி, கொழுத்த வருமானம் பார்த்த கந்தையா, எந்த மரத்துக்கும் மரவரி கட்டவில்லை. இதை கந்தையாவின் குடும்ப எதிரி சின்னராசா கலால் இலாகாவுக்கு அறிவித்திருக்கிறான். கலால் இலாகா வந்து விட்டார்கள். கந்தையாவின் மனைவி வள்ளி, ஒப்பாரி வைத்து ஊரைக் கூட்டினாள். வந்தவர்கள் அசரவிலல்லை. பாளையை வெட்ட ஆயத்தமானார்கள்.
அப்போது நடந்ததுதான் அதி உச்ச கிளைமாக்ஸ் காட்சி!
திடீரென வள்ளி தன் மாராப்பை அவிட்டு, மார்பைக் காட்டிக் கத்தவே, பாளை வெட்ட வந்தவர்கள் தலை தெறிக்க ஓடியது எங்கள் ஊரின் அந்த நாளைய ஈஸ்மன் கலர் வசுக்கோப்பு.
பனைகளின் முக்கிய பொருளாதார பயன்கள், கள்ளு சாராயம் பனங்கட்டி பனங் கற்கண்டு ஆகியனவே. ‘கல்லாக்காரம்’ என்னும் பெயரில் விற்பனையாகும் பனங்கற்கண்டு இருமலுக்கும் தொண்டை அரிப்புக்கும் நல்ல மருந்தென விஞ்ஞான ரீதியாக இப்பொழுது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் காலாதிகாலமாக கல்லாக்காரமே யாழ்ப்பாணத்தில் இருமலுக்கான இயற்கை மருந்தாக பாவனையியிலிருந்த தகவல், முறைப்படி நம்மால் பதியப்படாதது துர்ரதிஸ்டமே!
இவைதவிர பனாட்டு, பாணிப்பனாட்டு, பனங்காயப் பணியாரம், பூரான், பனங்கிழங்கு, ஒடியல். புழுக்கொடியல், ஊமல், மற்றும் பனை ஓலையிலிருந்தும், மட்டையிலிருந்தும், மரத்திலிருந்தும் பெறப்படும் பயன்களை நீண்ட பட்டியலிடலாம்.
இடையில் அவசரமாக இன்னொரு சங்கதி மூளையைக் குடைகிறது. யாழ்ப்பாணத்துக் ‘கிளாக்கர் ஐயாக்களின்’ அதிகாரங்கள் கொழும்பிலே கொடிகட்டிப் பறந்த காலத்தில், கந்தோர்களில் கோப்புக்களைக் கட்டிப்பிடித்து, நாட்டின் நலன்களை அடைகாத்துப் பெருக்கியதாகப் பெருமைப் பட்ட காலங்களில், அவர்களுக்குத் தேவையான ‘சுதி’யை பனங்கள்ளே அளித்தது என்பதை அவுஸ்திரேலியாவில், அறுபதைத் தாண்டி வாழும் எந்த யாழ்ப்ப்பாணியாலும் மறுக்க முடியாது.
வாயவவரஎயஅ2ஜ1ஸஅன்றைய காலங்களில் யாழ்ப்பாணத்து கள்ளுக் கொட்டில்களில்தான் ‘சமத்துவம்’ முழுதாக அமுல் படுத்தப்பட்டது. சின்னவிக்கும் விதானை நமசிவாயகத்துக்கும் கொட்டிலில் ஒரே ‘பிளா’தான். பிளா, யாழ்ப்பாணத்தானின் மகத்தான கண்டு பிடிப்பில் ஒன்று. பனை ஓலையை வெட்டி மடித்து, கை பிடிக்க வசதியாக ஒரு பக்கத்தில் வால் விட்டு செய்தால், அது பிளா. இது கள்ளுக் குடிக்கப் பாவிக்கப்படும். பனை ஓலையை பக்கவாமட்டில் மடித்து மூடிக் கட்டினால், அது குடலை. இது கிராமப்புறங்களில் இறைச்சி, வெள்ளரிப்பழம் என்பவற்றை காவிச்செல்ல பாவிக்கப்படும். முற்றிய பனை ஓலையை பிளாபோல் மடித்து, வாலை பக்கவாட்டில் மடித்துக் கட்டினால், அது தட்டுவம். இது சோறு தின்னப் பாவிக்கப்படும். தோட்டத்தில் புகையிலை அறுவடை செய்வதற்கு முன்னர் படையல் வைப்பதும் இந்த தட்டுவத்தில்தான்.
பனையும் அதன் பானமும் அவற்றை உண்டு தமிழிலே களிப்புற்ற பாணருமே நமது தமிழ்க் கலை இலக்கிய வடிவங்களுக்கு முதன் முதலாக வடிவமும், வகையும், சுவையும் அளித்தனர். பாணர்கள் மகிழ்ந்து, அவற்றைச் சுவைஞர்களுடன் பங்கிடுவதற்கு, ‘உற்சாக பான’மாகக் கள்ளே பயன்பட்டது. இதனால்தான் சங்க காலத்திலே தமிழின் படைப்புக்கும் சுவைக்கும், ஊடக பானமாக விளங்கிய கள், மது வகையிலே சேர்க்கப்படாது உணவு வகைகளிலே சேர்க்கப்பட்டதாக உசாத் துணை நூல்கள் சொல்கின்றன.
உண்மைதான்! பரம உண்மைகளைப் பரிமாறிக் கொள்வதற்கு உருவானவைதான் குறியீடுகளும் மரபுத் தொடர்களும்.
இந்த வகையில் ‘கூவில் கள்ளும் கீரிமலைக் குளிப்பும்’ என்ற சொற்தொடர் இன்றும் என் நெஞ்சிலே முகங்காட்டி மறைகிறது.
ஆசி கந்தராஜா
3,605 total views, 2 views today