அட்டமா சித்தி (எட்டு வகைச் சித்திகள்) – (பாகம் 3)

(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)

எட்டுவகைச் சித்திகளில் ஒன்றான பிராத்தி (மண்ணில் இருந்துகொண்டு விண்ணைத் தொடும் சித்தி) பற்றிய திருமந்திரப் பாடல் எண் 679
“நின்றன தத்துவ நாயகி தன்னுடன்
கண்டன பூதப் படைஅவை எல்லாம்
கொண்டவை ஓராண்டு கூட இருந்திடில்
விண்டதுவே நல்ல பிராத்தி அதாகுமே”

யோகப் பயிற்சியால், உலகத் தத்துவ ஞானங்களுக்கெல்லாம் தலைவியாகிய பராசக்தியுடன் உள்ளமும் உணர்வும் ஒடுங்கி நின்றன. ஐம்பூதங்களும், மற்ற வெளி அண்டப் பொருட்கள் எல்லாமுங் கூட அகக் கண்ணுக்குத் தெரியவந்தன. இப்படி அகக் காட்சி கண்ட நிலையிலேயே ஓராண்டுகூட இருந்தால், அணிமா, இலகிமா, மகிமா சித்திகள் கைவந்தபிறகு கூட ஓராண்டுகாலம் முயன்றால், அடையப் பெறுவது பிராந்தி (மண்ணில் இருந்துகொண்டே விண்ணைத் தொடுகின்ற வித்தை) என்னும் சித்தியாகும்.

எட்டுவகைச் சித்திகளில் ஒன்றான பிராகாமியம் (எங்கும் நிறைந்திருக்கும் சித்தி) பற்றிய பாடல் எண் 683
“ஆன விளக்கொளி ஆவது அறிகிலார்
மூல விளக்கொளி முன்னே உடையவர்
கான விளக்கொளி கண்டுகொள் வார்கட்கு
மேலை விளக்கொளி வீடுஎளி தாநின்றே”

உள்ளத்தினுள்ளே ஒளிச் சுடராய்ச் சோதி ஒன்று உள்ளது. இதை மூலாதாரத்தில் மூலக் கனலை உடையவர்கள், இந்த மூலாக்கினியே ஆன விளக்கொளியாவதை தவப்பயிற்சி இன்மையால், அறியமாட்டார்கள். ஆனால் யோகத்தால் இரு புருவ மத்தியில் ஒலியோடு இயங்கும் ஒளி உதயம் உணரப் பெற்றவர்கள் கண்டு கொள்வார்கள். இவர்களுக்கு விண்ணுலகத்துத் தேவர்களுக்கு மேலான சிவப்பரம் பொருளின் திருவடி ஒளியாகிய மோட்ச இன்பம் மிக எளிதாகக் கிட்டும். அதாவது பிரகாமியம் (எங்கும் நிறைந்திருக்கும் சித்தி) கிட்டும்.

எட்டுவகைச் சித்திகளில் ஒன்றான ஈசத்துவம் (ஆக்குதல் அழித்தல், அருளல் ஆகிய பரம்பொருளின் ஆற்றலைத் தரும் சித்தி) பற்றிய பாடல் எண் 684
“நின்ற சதாசிவ நாயகி தன்னுடன்
கண்டன பூதப் படைஅவை எல்லாம்
கொண்டவை ஓர்ஆண்டு கூடி இருந்திடில்
பண்டைய ஈசன் தத்துவம் ஆகுமே”

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் ஐம்பூதங்களிலும் நின்று நிலைத்திருக்கும் சதாசிவமாகிய பரம்பொருள் துணையால், காணுதல், கேட்டல், உண்ணல், உணர்தல், நுகர்தல் என்னும் ஐம்புலன்களின் இச்சையும் அடங்க அடக்கித், தவயோகத்தில் அணிமா முதலான ஆறு சித்திகளும் பெற்ற நிலையில், மேலும் ஓர் ஆண்டு உள்ளம் ஒன்றத் தவயோகம் செய்தால், உலகைப் படைத்த பழம்பெரும் மூலப் பொருளான பரமன் தத்துவ நிலை எய்தல் ஈசத்துவம் (ஆக்குதல் அழித்தல், அருளல் ஆகிய பரம்பொருளின் ஆற்றலைத் தரும் சித்தி) ஆகும்.
சந்திரனைப் போல் தெய்வ நிலை பெறலாம் எனக் கூறும் பாடல் எண் 685

“ஆகின்ற சந்திரன் தன்ஒளி யாய்அவன்
ஆகின்ற சந்திரன் தட்பமும் ஆயிடும்
ஆகின்ற சந்திரன் தன்கலை கூடிடில்
ஆகின்ற சந்திரன் தான்அவன் ஆமே”

வளரும் பிறை நிலவைப் போன்ற நெற்றியில் புருவ நடுவில் ஒளி காணப் பெறுபவன், சந்திரனைப் போலவே குளிர்ச்சி உடையவனாகவும் இருப்பான். சந்திரன் வளர்வது போல் புருவ நடுவில் ஒளியைக் காணும் சித்தியை மேலும் முயன்று வளர்த்துக் கொண்டவன், தானே ஒரு சந்திரனைப் போலத் தெய்வ நிலை பெறலாம்.
ஈசத்துவ சித்தி பெற்றவரின் வல்லமை பற்றிக் கூறும் பாடல் எண் 686
“தானே படைத்திட வல்லவன் ஆயிடும்
தானே அளித்திட வல்லவன் ஆயிடும்
தானே சங்காரத் தலைவனும் ஆயிடும்
தானே இவன்எனும் தன்மையன் ஆமே”

ஈசத்துவ சித்தி பெற்றவன் தானே எல்லாவற்றையும் படைக்கும் வல்லமை பெற்றவனாயிடுவான். தானே படைத்த உயிர்களைக் காக்கவும் திறமை உடையவனாயிடுவான். அவனே அழிக்கும் ஆற்றல் உடையவனுமாவான். இவன் படைத்து, காத்து, அழிக்கும் பரம்பொருள் ஆற்றலைப் பெற்றவனாகவும் ஆவான்.
தெய்வ தரிசனம் தேடி வரும் எனக் கூறும் பாடல் எண் 687
“தண்மைய தாகத் தழைத்த கலையின்உள்
பன்மைய தாகப் பரந்தஐம் பூதத்தை
வன்மைய தாக மறித்திடில் ஓராண்டின்
மென்மைய தாகிய மெய்ப்பொருள் காணுமே”

குளிர்ச்சி உடையதாகப், பரந்து விரியும் சந்திர கலையில், பலவாகப் பிரிந்த ஐம்பொறிகளையும், அடக்கி ஒருமுகப்படுத்தி மனம் ஒன்றி இருந்தால், ஓராண்டு காலத்தில் மேலான பரம்பொருள்காட்சி தெளிவாகும்.
எட்டுவகைச் சித்திகளில் மிகவும் மேலான ஒன்றான வசித்துவம் என்னும் சித்தி பற்றிய பாடல் எண் 688

“மெய்ப்பொரு ளாக விளைந்தது ஏதெனில்
நற்பொரு ளாகிய நல்ல வசித்துவம்
கைப் பொருளாகக் கலந்த உயிர்க்கெல்லாம்
தற்பொரு ளாகிய தன்மையன் ஆகுமே”

உண்மையான ஞானமாக உள்ளத்தில் உண்டான செல்வம் எது என்றால், அது மேலான செல்வமான “வசித்துவம்” (எல்லாவற்றையும் தன்பால் ஈர்த்து வசியப்படுத்தும் சக்தி) என்ற சித்தியே. இந்தச் சித்தி கைமேல் இருக்கின்ற உடனடியாகப் பயன்படுத்த உதவுகின்ற செல்வமாக, உயிர்க் குலத்துக்கெல்லாம் தான் விரும்பியபடி இயக்கக் கூடிய பரம்பொருளைப் பொன்ற மேலான ஒரு நிலையைத் தருகிற அரிய பெரிய செல்வமாகும். ……… தொடரும்

2,595 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *