யேர்மனியில் தமிழ் வர்தகர்களின் மனிதநேயம்!

யேர்மனியில் எந்த ஊரடங்கு சட்டமும் அமுலில் இல்லாமல் தாமாக மக்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்கிறார்கள். காரணம் யேர்மன் நாட்டின் தலைவி Angela Merkel நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஒரே வழி தேவையில்லாமல் பொது இடங்களில் கூடாதீர்கள். அது மட்டுமல்ல 2 பேருக்கு மேல் தெருவில் தேவை இன்றி திரிந்தால் அபராதம் 75 யூரோ முதல் 25 ஆயிரம் வரை. அவர் சொன்னவற்றை ஏற்றுக்கொண்ட மக்கள் செயலில் அதனைக் காட்டுகிறார்கள். செயலுக்கு முக்கியமாக அபராதம் என்பது காரணமே அல்ல.

பொதுவாக கிராமங்களில் வாழும் மக்கள் வெளியில் தேவை இன்றி சுற்றுவது மிகக்குறைவு. உணவுப்பழக்கம்கூட உணவு விடுதிகளுக்கு செல்லாமல் தாமாகத் தயரித்து உண்பவர்களே ஏராளம். உலக மகாயுத்தத்திற்கு எதிர்கொண்ட பரம்பரையினர் அல்லவா அவர்கள்.
வெள்ளிக்கிழமை வேலையால் வீடுதிரும்பி வாகனத்தை தரிப்பிடத்தில் விட்டால் திங்கள் காலை மட்டும் வாகனம் அந்த இடத்திலேயே நிற்கும்.
வெள்ளி விடுமுறை என்றால் வியாழன் கடைகள் நிரம்பி வழியும், காரணம் வெள்ளிமுதல் திங்கள் காலைவரை வீட்டுக்குள் இருபதையே விரும்புவர். இளையவர்கள் இதில் விதிவிலக்காக இருக்கலாம்.
ஆனால் தமிழர்கள் அப்படி அல்ல.
ஒரு மாதம் யேர்மனியர்கள் வாகனத்தில் ஓடும் தூரத்தை தமிழர்கள் சனி ஞாயிறுகளில் ஓடி முடித்துவிடுவர். கடைகள், கோவில் பிறந்தநாள் திருமண நாள் விழாக்கள் என தேடி தேடிச் செல்பவர்களும் உண்டு. 200 கி.மீற்றர் வாகனம் ஓடி ஒருமணி நேரம் அங்கு உறவினர் நண்பர்கள் என செலவு செய்துவிட்டு வருபவர்களும் உண்டு.

ஆனால் இன்று வீட்டுக்குள் முடங்கி இருத்தல் பெரும்பாடாக உள்ளது.
இந்த நேரத்தில் யேர்மனியில் உள்ள கடைகள் தமிழ் மக்களுடன் எவ்வாறு பிணைந்து இருந்தது, இருக்கிறது என்பதனை நோக்கும் நேரம் இது.
தமிழர்களது வர்த்தக ஸ்தாபனங்களின் சேவை அளப்பரியது.
இலங்கையில் இருந்து யேர்மனி வந்த காலத்தில் (1979 களில்) கருவேப்பிலையை கண்ணில் காணத காலத்தில் இலங்கையில் இருந்து வரும் கடிதத்தில் அம்மா வைத்துவிடும் மூன்று நாலு கருவேப்பிலையைக்கூட மாறி மாறி பலர் பாவித்த காலம் மறக்க முடியாது. மிளகாய்த்தூள் கிடையாது. முருக்கங்காய் கிடையாது. தேங்காய் கிடையாது. என பல கிடையாதவற்றுடன் வாழ்வை ஓட்டிய எமக்கு வர்த்தக ஸ்தாபனங்களின் வரவு வரப்பிரசாதமாக அமைந்தது.
இல்லாத தொன்றில்லை சுடர்விடு வடிவேலா என்ற முருகன் பாடல்தான் நினைவுக்கு வரும் அத்தனையும் நம் கடைகளில் கிடைக்கும். தாயகத்தில் முருக்கங்காய் இல்லலை என்றாலும் நம் வீட்டு சமையலில் அது இருக்கும்.
அப்படி உணவளித்தவர்கள் அவர்கள். அவர்கள் தமது வருமானத்தில் தம் வாழ்வை வளமாக்கிக்கொண்டாலும் அவர்கள் தமிழுக்கும் நம்கலைகளுக்கும் தாய் மண்ணுக்கும் அள்ளிக் கொடுத்ததை மறக்கமுடியாது.
இன்று உலகை உலுப்பும் கொரோனா வைரஸ் வாழ்வின் இயல்புநிலையை புரட்டிப்போட்டுள்ள நேரம் வார்த்தக ஸ்தானங்கள் செய்யும் பணி போற்றப்பட வேண்டியதே.

யேர்மனியில் மாவு தட்டுபாடு, நூடுள் கிடையாது. ரொலைட்பேப்பர் கிடையவே கிடையாது. இப்படி கடைகள் வெறிச்சோடிகிடக்கும்போது, நமது தமிழ் கடைகள் நமக்கு வேண்டிய வெண்டிக்காய் முருக்கங்காய் புடலங்காய், பாவற்காய், இராசவள்ளிக்கிழங்கு பனங்கிழங்கு முக்கியமாக அரிசி,அரிசிமா,ஆட்டாமா எனக் கடைகளில் பதுக்காமல் வெளியாகவைத்து விற்பனை செய்த காட்சி அவர்களது மனித நேயத்தை பறைசாற்றியது.
யேர்மனியில் தெருக்களில் இருவர் மட்டுமே செல்லமுடியும் என்ற எழுதாத சட்டம் இருந்தும். அதற்கு தலைவணங்கி கடைப்பிடிக்கும் சமூகமாக உள்ளார்கள்.

நோய்க்கிருமிகள் தொற்றும் ஆபத்து இருந்தும் தமிழ் மக்களின் தேவைகளை கடைகள் கணிசமான அளவு பூர்த்திசெய்கின்றார்கள்.
தமிழ் மக்களின் வர்த்தக ஸ்தாபனங்கள் அனைத்தும் உணவகங்கள் உட்பட மூடப்பட்ட நிலையில்,பலசரக்கு கடைகள் மட்டுமே திறந்து உள்ளன.
தமிழ் கடைகள் ஒருபுறம் இருக்க யேர்மன் கடைகள் காலை முதல் மாலைவரை திறந்து இருந்தாலும் கடைகளுக்கு செல்பவர் தொகை மிகக்குறைவே. செல்பவர்களும் கடைக்குள் குறிப்பிட அளவினரே அனுமதிக்கப்படுவர். காத்திருந்து செல்லவேண்டும். ஆனால் இலங்கையில் உள்ளதுபோல் யோமனியில் நீண்ட வரிசைகள் இல்லை.
இத்தாலியும் யேர்மனியும்.
மரக்கறி பால் வகைகள் நிறைவாக இதுவரை உண்டு. கொரோனா 40 ஆயிரத்தைத் தொடுகிறது. ஆனால் உலக நாடுகளில் மரணித்தவர்களது தொலையில் யேர்மனி வீதாசாரம் மிகக்கறைவாகவே உள்ளது. இதற்கு காரணம் மக்களது சுய கட்டுப்பாடு என்பது மறக்கமுடியாத உண்மை. அத்துடன் சிறப்பான அவசர சிகிச்சைப்பகுதி என்றும் தயார் நிலையில்.

இத்தாலியில் கொரோனா ஆரம்பித்த நேரம் அதனை பெரிதாக நினைக்கவில்லை. அத்துடன் அவர்கள் அது நமக்குவராது என்ற அசாதாரணப்போக்கும் ஒரு காரணம். தெருக்களில் பஸ்க்கு காத்திருக்கும் நேரம் மஸ்க் அணிந்திருந்தாலும் நெருக்கமா இருந்தார்கள். பெண்கள் ஆண்கள் தெருக்களில் முத்தம் கொடுத்தும் காதலை வெளிப்படுத்தினார்கள். இது ஒருவித யுத்தகாலம் என எண்ணவில்லை.
இங்கிலாந்து பிரதமர் உரையை மக்கள் கேட்பதாக இல்லை?
இங்கிலாந்தில் குறிப்பாக லண்டனில் இந்நிலமை இல்லை. சுய கட்டப்பாடு மிகக்குறைவு. கடைகள் தெருக்கள் என்பது மட்டுமன்றி உடற்பயிசிக்கு என விளையாட்டு மைதானத்திலும் கூடி நிற்பவர்கள் அதிகம். வீட்டுக்குள் இருந்து பழகாத மக்கள். சொப்பிங் என்பது அவர்களுக்கு உயிர் நாடி. உலகிலேயே உணவுப் பொருட்களை தேவைக்கு அதிகம் வேண்டி எறியும் நாடுகளில் முதல் வரிசையில் நிற்பவர். பிரதமர் வேண்டுதல் விடுத்தும் செவிசாய்காதவர்களாக பலர் வாழ்கிறார்கள்.
நோய் தமக்கு இல்லை அது நம்மைத்தாக்காது என்ற மனோபாவம் உள்வர்களாக உள்ளனர்.
ஆனால் அரச சேவையாளர்கள் அர்பணிப்புடன் கடைமை புரிகின்றனர். அவசர சேவை புரிபவர்களுக்கு என கடைகளை ஞாயிறு தினங்களிலும் திறந்து, அவர்களுக்கு பூக்கொத்துக்கொடுத்து வரவேற்று தமது நன்றியை உணர்த்துகின்றனர்.
ஒருவருக்கு ஒரு பொருள் என வழங்கும் திட்டம் தற்போது இங்கிலாந்திலும், யேர்மனியிலும் கடைப்பிடிக்கப்படுகின்றது.
இங்கிலாந்தில் கடைகளில் முதியவர்களுக்கு முன்னுரிமை

இங்கிலந்தில் முதியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. பல கடைகள் காலை 9.00 மணிமுதல் 10.00 மணி வரை 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் கொள்வனவு செய்ய வசதியாக திறந்து உள்ளனர். கடை வாசலில் ஒருவர் நின்று வயதானவர்களையும் அவருக்கு உதவியாகவரும் ஒருவரையும் மட்டும் அனுமதிக்கின்றனர்.
பாடசாலைகள் யாவும் கோடைகாலம் வரை மூடப்பட்டுள்ளன. பிள்ளைகள் வீட்டில் இருந்து படிக்கிறார்கள். இங்கிலாந்தில் பாடசாலை நேரம் மாணவர்களுக்கு இணையத்தளத்தில் வேலை கொடுக்கபடுகிறது. பெரியவர்கள் work from home மாணவர்கள் Study at home என வாழ்வு நகர்கிறது.

விமானச் சேவை யேர்மனிக்கும் இங்கிலாந்திற்கும் இக்கட்டுரை வடிக்கும் நேரம் வரை நடக்கிறது. பயணிகள் தொக 10 இருந்து 15 ஆகவே உள்ளது.
—
-வெற்றிமணி மு.க.சு.சிவகுமாரன்.
2,894 total views, 2 views today