அவளும் நானும் 44
இணையத்தில் உதித்த இணையில்லாத காதல். என் வாழ்வில் இப்படி ஒரு தேவதையை ஆண்டவன் இப்ப தருவான் என்று நான் கனவிலும் எண்ணவில்லை. இது கனவு அல்ல நிஜயம், என்பதை இறங்குவதும் ஏறுவதுமாக இருந்த விமானங்களின் சத்தம் என்னை நிஜ உலகிலேயே வைத்திருந்தது.
இரவு முழுவதும் நித்திரை இல்லை. கணனியுகத்தில் பாவிக்கக்கூடிய அத்தனை நுட்பத்திற்கூடாகவும் அவளை நான் நுகர்ந்துள்ளேன். ஆனால் முதல் முதல் நேருக்கு நேர் இன்றுதான் காணப்போகின்றோம். கறுப்பு வெள்ளைப்படம் பாரத்தவனுக்கு, திரையரங்கில் திறிடீ படம் பார்தால் எப்படி உருவங்கள் நீட்டிக்கொண்டு முன்வந்து நிற்குமோ! அதுக்கும் கொஞ்சம் மேலாக உயிரோடு உறவாட முன்னாலே அந்த வனப்பை நீட்டிக்கொண்டு வந்து நிற்கப்போகிறாள்.
இதற்கும் மேல் ஒருவன் இரவு முழுவதும் தூங்கியிருந்தால் நான் ஆம்பிளையா என்று எனக்கே சந்தேகம் வந்திருக்கும்.
இந்தனை வருடமாக விமான நிலையத்திற்கு எத்தனை தரம் செல்பவர்களை ஏற்றவும், வந்து இறங்குபவர்களை அழைக்கவும் வந்திருப்பேன். அத்தனை தடவையும் கணனியில் வரும் நேரம் போகும் நேரம் எல்லாம் சரியா என்று செக்பண்ணிவிட்டுத்தான் வருவேன்.
விமானங்கள் தாமதமானால் மகிழ்ச்சிதான். காரணம் அவசரம் இல்லாத ஓட்டமாக இருக்கும்.
இன்று விமானம் இறங்கும் நேரம் பார்க்கவே இல்லை. அதற்கு நேரமும் இல்லை. டோட்மூண்ட் விமான நிலையத்தில் வாகனத்தரிப்பிடத்தில் முதல் தடவையாக வாகனத்தை நிறுத்திவிட்டு, அவள் வரவுக்காகக் காத்து இருக்கின்றேன்.
மற்றும்படி என் வாகனம் எப்பவும்மே விமான நிலையத்திற்கு முன்னால் உள்ள மைக்டோனாவில் ஒரு சிக்கின் பேகருடன் நிற்கும். வருபவர்கள் வந்து மிஸ்கோல் தரும் வரை மில்சேக் துணை நிற்கும். இன்று எல்லாமே தலைகீழாக மாற்றிவிட்டுள்ளது இந்தக்காதல்.
காதல் இந்தக் காலத்தில் படுவேகம். நாம் வாழும்காலம் அப்படி. எத்தனை தடவை காதல் வந்தாலும், அத்தனை தடவையும் அதே உணர்வுதான். ஏதோ முதல் காதல் மனதுக்குள் ரோசாவாக மணத்தாலும், புதுக்காதல் வானத்தில் வெடித்துச்சிதறும் மத்தாப்பை அல்லவா அண்ணாந்து பார்த்து நிற்கிறது. நானும் தான் இப்ப அண்ணாந்து பார்த்தபடி விமான நிலையத்தில் நிற்கின்றேன்.
அவள் வருவதாகச் சொன்ன நேரம் நெருங்குகிறது. அவள் என்னை கட்டிப்பிடித்து நொறுக்குவதுபோல் இருந்தது.. நான் கிரேக்தேசத்தின் ஆணழகன். அவள் பல்கிரியாநாட்டின் இளவரசி.
மிக மிக ஏழ்மையில் பிறந்தவள் மட்டுமல்ல, இன்றும் அப்படியே வாழ்பவள்.
இந்தக்கணனி செய்த மாயம் ஏழைக்கு ஆடை உணவு கொடுக்காவிட்டாலும், கூப்பிட்ட குரலுக்கு பதில் கொடுக்க ஐயோ கடவுளே என்று ஒரு பழைய ஐபோனை என்றாலும் கொடுத்து வைத்துள்ளது. அத்தோடு எந்த நாட்டிலும் எதற்கும் இல்லாத பிளட்ரேட் இந்த போனுக்குத்தான் உண்டு. அதுதான் நம் காதலுக்கும் அத்திவாரமானது.
தண்ணீரும் குடிக்கவில்லை. காப்பியும் அருந்தவில்லை மொத்தத்தில் நீராகரம் ஏதும் இன்றி, நாக்கே வரண்டு போய்க்கிடக்கிறது. இனி அவள் வந்து நனைத்தால் ஒழிய இந்தப் பாலைவனம் நனையாது. ஏன் விமான நிலையத்தில் றெட்புள் இல்லையா? ஒரு கோலா இல்லையா? என்று என்மீது கோபமாகவோ பரிதாபமாகவோ நீங்கள் கேட்கலாம்.
நீங்கள் சொல்வது போல் அந்த ரெட்புல் எனக்குள்ளும் இருக்கு, வெளியேயும் இருக்கு. கோக் அது பார்த்து என்னைக் கடுப்பேத்திக்கொண்டு இருக்கு. இருந்தும் நான் கண்டுகொள்ளாமல் இருக்கிறேன் என்றால் காரணம், அதைவேண்டிக் குடித்தால் எனக்கு உடனம் போகவேண்டும்.
அப்படி போகும் போது அவள் வந்து இறங்கிவிட்டாள் என்றால். அடடா இதுதான்டா காதல். ஏன் என்றால் என்னுடைய வயது அப்படி.
பரீட்சைக்கு போகுமுன்பு முன்னர் படித்தது எல்லாம் ஒருமுறை இரை மீட்டிப்பார்ப்பது போல், மனம் அவளுடன் கதைத்ததெல்லாம் இரை மீட்டிப் பார்க்கின்றது.
நான் பேசிய முதல் வாத்தை உனக்கு என்னைப் பிடிக்காவிட்டால் நீ விலகலாம். உன்னை எனக்கு பிடிக்காவிட்டால் நான் விலகலாம். எதற்கும் ஒருவருடம் வாழ்ந்து பார்ப்போம். அதன் பின் முடிவெடுக்கலாம்.
அவள் பேசி முதல் வார்த்தை எனக்கு உங்களில் பிடித்ததே காதலில் முதுமை பெற்ற உங்கள் வெளிப்படையான பேச்சு. காதலுக்கு காமம் தேவைதான் அதனைவிடவும் கடந்து நிற்பது பரிவும் பாசமும்தான்.
இது என்னிடம் இருப்பதாக அவள் சொன்ன பின்புதான் அதை நானே தேடிக் கண்டுபிடித்தேன். இல்லை என்றால் காதலிக்கத் தொடங்கி ஆறுமாதமாக அவளுக்கு மாதா மாதம் பல நூறு யூரோக்கள் பல்கிரியாவிற்கு அனுப்பி இருப்பேனா? இல்லை இப்பவும் நான் அனுப்பிய பணத்தில்தானே பறந்து வந்து கொண்டு இருக்கிறாள்.
நீ வந்ததும் நாம் கிறிக்நாட்டுக்கு விடுமுறை போகலாம் என நினைக்கிறேன் நீயும் வருவாயா. என்று கேட்டதற்கு – இது என்ன கேள்வி! நீங்கள் என் கணவன். நான் உங்கள் மனைவி. நீங்கள் சொல்லும் இடம் போகும் இடம் உங்கள் முடிவே எனது முடிவும் என்றாள்.
இது எதுவோ நான் முன் விரும்பிப் பார்க்கும் இந்தி படத்தில் வரும் ரோமான்ஸ் மாதிரி இருந்தது.
நான் அதிகம் என் காதலை வெளிப்படுத்த பேசுவது குறைவு. ஓன்றே ஒன்று மட்டும் அடிக்கடி சொல்வேன். எனக்குப்பிறகு யாவும் உனக்கே என்று.
அவள் கண்ணில் நீர்ததும்ப பார்வை ஒன்று பார்ப்பாள். அவள் கண்ணீர்த்துளிகள் ஸ்கைப், பேஸ்ரைம் இதை எல்லாம் தாண்டி, என் நெஞ்சில் வழியும்.
இந்தக் கண்ணீர்த்துளி அவளின் காதலின் அறிகுறியா? அது என்ன குறி? அதனைக் குறிப்பாகச் சொல்லமுடியாத படி அவள் உதடுகளும் சிலிர்க்கும்.
அவள் ஸ்கைப்பில் எனக்கு தந்த முத்தங்கள் எதுவும் வந்து சேரவில்லை. இப்பதான் டிலிவறியாகப் போகிறது என்ற எண்ணம் என்னை பறக்கவும், பதறவும், வைக்கிறது.
இதோ பல்கிரியாவில் இருந்து வந்த விமானம் தரையைத் தொட்டுவிட்டது. அதன் அதிர்வுகள் என் நெஞ்சுக்குள்.
இமைக்காமல் வரும் வழிபார்த்து நிற்கின்றேன். அவள் வருவாளா? வந்துவிட்டாள் என்று எண்ணவே உடல் வியர்க்கிறது.
ஓவ்வொருவராக வருகிறார்கள். தூரத்தில் வரும் பெண்கள் எல்லாம் எனக்கு அவளாகத் தோன்றினாலும் அருகில் வர அவளற்றுப் போகிறார்கள்.
விமானம் வந்து ஒரு மணி நேரமாகிவிட்டது. ஓடிக்கொண்டு இருந்த லகேச் பெல்ட்டும் நின்றுவிட்டதாக, கணனி காட்டுகிறது. விமானம் திரும்பிச் செல்வதற்கான நேரம் அட்டவணையில் போடப் பட்டுள்ளது.
நான் அவளுக்கு போன் எடுக்கிறேன். பதில் இல்லை. சற்று நேரத்தில் ஒரு எஸ் எம் எஸ் வருகிறது. நான் விமானத்தை விட்டுவிட்டேன். அடுத்த விமானத்தில் அடுத்த வாரம் வருகின்றேன் உடன் ரிக்கற்போட காசு அனுப்பவும். ஐ அளைள ரு என்று எழுதி இருந்தது.
நான் உடன் எந்த விமான நிலையத்தில் இப்போ நிற்கிறாய் என்று எழுதினேன் பதில் வந்தது. பேச்சு வரவில்லை. அதுவும் எழுத்திலேதான் வந்தது.
அதனை அப்படியே இன்பமேசன் இடத்தில் காட்டிக் கேட்டேன். இந்த இடத்தில் இருந்து டோட்மூண்டுக்கு எப்ப விமானம் வரும் என்று. அவள் செக்பண்ணிவிட்டு சிரித்துக் கொண்டே சொன்னாள் இப்படி ஒரு விமானநிலயம் பல்கேரியாவிலும் இல்லை. இப்படி ஒரு விமானத்தில் இலக்கம் தொடங்கு வதும் இல்லை, என்றாள். சென்ற மாதமும் நீங்களா வந்து என்னைக் கேட்ட நீங்கள் என்றாள். நான் அவனில்லை என்று கொண்டே இலக்கத்தைப் பார்க்கின்றேன்.
Age 70-26 = 44
கூட்டிக் கழித்துப் பார்க்கின்றேன்
என் 70 இருந்து அவள் 26 போனால் வருவது 44
அவள் கணக்குச் சரிதான்.
எனக்குப்பிறகு எல்லாம் உனக்குத்தான் என்று என் பென்சனைக் கூறும்போது, அவள் உதடுகள் குவிந்ததின் அர்த்தம் இப்ப புரிந்தது.
— மாதவி
1,723 total views, 2 views today