இவையெல்லாம் உயிர்க்கட்டும்

நம் எல்லோரிடமும் ஒவ்வொரு கோப்பை இருக்கிறது என வைத்துக் கொள்வோம். நீண்ட நாட்களாக அதைப் பயன்படுத்தி வருகிறோம். தண்ணீர் குடிக்க, டீ குடிக்க, ஜூஸ் குடிக்க என அனைத்திற்கும் அதைப் பயன்படுத்துகிறோம்.

“எல்லாரும் அவரவர் கோப்பையை எடுத்துட்டு வாங்க, ஸ்பெஷல் டீ ரெடியாக இருக்கிறது” என்று ஒரு நால் திடீரென‌ அழைப்பு வந்தால் என்ன செய்வோம் ? நமது கோப்பையை எடுத்து நன்றாகக் கழுவி ரெடி பண்ணிவிட்டு டீ நிரப்ப வருவோம்.

கழுவாமல் அழுக்கேறிக் கிடக்கும் கோப்பையில் யாரும் டீ ஊற்றுவதில்லை. ஊற்றினாலும் அது அழுக்குடன் கலந்து குடிக்க முடியாமல் வீணாகும்.

வெறுமனே கோப்பையைக் கழுவி வைத்தாலும் பயனில்லை, டீயை ஊற்றினால் தான் குடிக்க முடியும். உடலுக்கு உற்சாகம் கிடைக்கும்.

இந்த கோப்பையைப் போன்றது தான் நமது இதயம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இதயம் இருக்கிறது. அதில் எதையெதையோ இட்டு நிரப்புகிறோம். எதற்கெல்லாமோ பயன்படுத்துகிறோம். சிலரது கோப்பை சரியாகப் பராமரிக்கப்பட்டு தூய்மையாய் இருக்கிறது. சிலருடைய கோப்பை அழுக்கேறிக் கிடக்கிறது.

இந்த உயிர்ப்பின் வழியாக இறைமகன் இயேசு, புது வாழ்வு எனும் பானத்தை நமது இதயங்களில் ஊற்ற அழைக்கிறார். அந்த பானத்தை நிரப்பிக் கொள்ள வேண்டுமெனில் முதலில் நமது இதயத்தின் துருக்களை துரத்தவேண்டும். பின்னர் தூய்மையாக்கப்பட்ட இதயத்தில் இறைவனின் புதிய வாழ்க்கையை ஊற்றிக் கொள்ள வேண்டும்.

அழுக்கான இதயம், தூய்மையான இறைவனை ஏற்றுக் கொள்வதில்லை. அழுக்குகள் விலக்க வேண்டுமெனில் நாம் நமது பாவத்தை விட்டு விலக வேண்டியது அவசியம். பாவமும், பரிசுத்தமும் ஒரே இடத்தில் வசிப்பதில்லை. இருளும் வெளிச்சமும் ஒரே அறையில் கூடிக் குலாவுவதில்லை.

இறைமகன் இயேசு பாடுகளை அனுபவித்து, நமது பாவங்களுக்குப் பலியாய் சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்த நிகழ்வை இப்போது நினைவு கூருகிறோம். இந்த காலத்தில் நமது இதயத்தில் இறக்க வேண்டியவை என்ன ? உயிர்க்க வேண்டியவை என்ன ?

  1. கால விரயம் இறக்கட்டும், செபம் உயிர்க்கட்டும்!

இன்றைய தொழில்நுட்ப உலகம் வசீகர வலைகளோடும், விரசக் கண்ணிகளோடும் காத்திருக்கிறது. சமூக வலைத்தளங்கள், உரையாடல் தளங்கள் எல்லாமே ஒரு புதைகுழி போல. இந்தக் குழிக்குள் விழுந்து விட்டால் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை மூழ்கடித்து விடுகிறது.

“நான் தப்பா எதுவும் பண்ணலையே” என சிலர் சொல்லலாம். ஆனால் சரியானதைச் செய்ய முடியாதபடி இவை உங்களைத் தடுக்கின்றன என்பது தான் நிஜம். எனவே தேவையற்ற கால விரயம் பாவம் என்பதை உணர்வோம். இந்த சமூக வலைத்தளங்கள், உரையாடல் தளங்கள் போன்றவற்றையெல்லாம் ஒதுக்கி விட்டு, பைபிள் வாசிப்பது, அன்புச் செயல்களில் ஈடுபடுவது என மனதை வளமாக்குவோம்.

செபம் ! சூல் கொண்டு சோகங்களை கால் கொண்டு நசுக்குமிடம். இயேசு தந்தையோடு எப்போதும் செபத்தில் ஒன்றித்திருந்தார். செபத்தில் நிலைத்திருக்கும் போது, நமது நேரங்களெல்லாம் இறைவனுக்காகின்றன. விண்ணக செல்வங்கள் அதிகரிக்கின்றன. நமது வாழ்க்கை பாவத்தின் பரந்த பாதைகளில் நடக்காமல் புனிதத்தின் ஒற்றையடிப்பாதையில் நடக்க செபமே நமக்கு வலிமை தரும்.

  1. வெறுப்புகள் இறக்கட்டும், அன்பு உயிர்க்கட்டும்

பிறரோடு கொள்கின்ற விரோதமும், வஞ்சகமும் மிகப்பெரிய பாவச் செயல்கள். சக மனித அன்பை நிராகரிக்கும் செயல்கள் எல்லாமே இறை விரோதச் செயல்களே. பிறரைப் பற்றிய கிசுகிசுப் பேச்சுகளை விட்டு விடவேண்டும். அழுக்குகளை விரும்பித் திணிக்கும் விஷயங்கள் இந்த கிசுகிசுக்கள். அன்பின்மையின் அப்பட்டமான வெளிப்பாடு. அடுத்த மனிதரை மட்டம் தட்டி அதன் மூலம் நம்மை உயர்ந்தவர்களாய்க் காட்டும் தற்பெருமை மனநிலை. அதை விலக்கி விடுவோம்.

கிசு கிசு வெறும் பலவீனம் அல்ல ! அது மிகப்பெரிய பாவம். ” உங்களுள் ஒருவர் மற்றவரைப் பழித்துரைக்க வேண்டாம். தம் சகோதரர் சகோதரிகளைப் பழித்துரைப்போர் அல்லது அவர்களுக்குத் தீர்ப்பு அளிப்போர் திருச்சட்டத்தைப் பழித்துரைக்கின்றனர்” என மிகத்தெளிவாக விவிலியம் நமக்கு விளக்குகிறது.

பிறரை அன்பு செய்வதில் மன்னிப்பும் அடங்கியிருக்கிறது. மன்னிப்பது என்பது மனதில் வெறுமனே சொல்வதல்ல. அந்த மனிதருடன் ஒப்புரவாவது. இறைமகன் இயேசு யூதாசை “தோழா” என்று தான் கடைசி வினாடியில் கூட அழைத்தார். நாமோ தோழர்களை விரோதிகளாய் பார்க்கிறோம். நம்மிடம் வெறுப்புகள் இறக்க, அன்பு பிறக்கட்டும்.

  1. உணவு மோகம் இறக்கட்டும், கனிகள் உயிர்க்கட்டும்

உண்பதையும், குடிப்பதையும் கூட‌ இறை மகிமைக்காகச் செய்ய வேண்டும் என்கிறது பைபிள். சாப்பாட்டு பிரியர்களையும், வயிறை தெய்வமாய் வணங்குபவர்களையும் விவிலியம் இடித்துரைக்கிறது. அவர்களுடைய மீட்பு, இந்த உலக ரசனைகளினால் தடைபடும் ஆபத்து கூட உண்டு. “குடிகாரரோடு சேராதே; பெருந்தீனியரோடு சேர்ந்து கொண்டு அவர்களைப் போலப் புலால் உண்ணாதே” என பைபிள் அறிவுரை தருகிறது.

நமது வாழ்க்கை வெறுமனே பூத்துக் குலுங்கும் வாழ்க்கையாய் இருக்க இறைவன் விரும்பவில்லை. “நீங்கள் பூ கொடுங்கள்” என இயேசு சொல்லவில்லை. “கனி கொடுங்கள்” என்றே சொன்னார். நமது வாழ்க்கை ஆன்மீகத்தில் பூத்துக் குலுங்குவது அழகு நிலை. ஆனால் கனிகளால் நிரம்பி வழிவதே உயர் நிலை !

நமது வாழ்க்கை பிறருக்கு பயனுள்ள வாழ்க்கையாய் இருக்கிறதா ? பிறரை மனிதநேய வழியில் கொண்டு வர உதவுகிறதா ? பிறருடைய பதட்டங்களின் பயணத்தில் ஆறுதல் துடுப்பாய் இருக்கிறதா என்பதை சிந்திப்போம்.

  1. பகைமை இறக்கட்டும், மனிதம் உயிர்க்கட்டும்

“மனக்கசப்பு, சீற்றம், சினம், கூச்சல், பழிச்சொல் எல்லாவற்றையும் தீமை அனைத்தையும் உங்களை விட்டு நீக்குங்கள்” என விவிலியம் நமக்கு அறிவுறுத்துகிறது.

மனிதநேயம் இறைவன் நமக்குக் கற்பித்துத் தந்த மிகப்பெரிய பாடம். தன்னைப் போல அயலானை நேசிப்பதில் அடங்கியிருக்கிறது கிறிஸ்தவத்தின் உயர்நிலை. அதையே இறைமகன் இயேசு விரும்பினார், அதையே தனது வாழ்க்கையில் செயல்படுத்தினார். அதனால் தான் கடவுள் தீர்ப்பு நாளில் மனிதநேயம் சார்ந்ததை மட்டுமே கேட்கிறார். “ஏழைகளுக்கு உதவினாயா ? நோயில் ஆறுதலளித்தாயா ? உடுத்தினாயா ? தனிமையில் ஆதரவளித்தாயா?” என்பதையே இயேசு கேட்கிறார்.

சகமனிதனை வெறுத்து விட்டு இறைவனை அன்பு செய்கிறேன் என்பது போலித்தனம். குடும்பத்தை அழ வைத்து விட்டு, இறைவனிடம் தொழ வருவது கயவாளித்தனம். மனிதனை ஏமாற்றலாம் மனுஷ குமாரனை ஏமாற்ற முடியாது ! மனிதம் பயில்வோம், அதுவே உயிர்த்தெழ வேண்டிய முக்கிய தேவை.

  1. பாவம் இறக்கட்டும், புனிதம் உயிர்க்கட்டும்.

பாவம் தவிர்த்தல் கிறிஸ்தவத்தின் அடிப்படை. கறைகளை நமது இதயத்திலிருந்து அகற்ற கொஞ்சம் கொஞ்சமாய் பாவ வாழ்க்கையை விட்டு விலக வேண்டும். முதலில் இறைவன் சொன்ன நமக்கு தெளிவாய் தெரிந்த பாவங்களை விட்டு விலக வேண்டும். உதாரணமாக இச்சை, பண ஆசை, கோபம் போன்றவை. அதன் பின் இறைவன் படிப்படியாக நம்மிடமிருக்கும் மற்ற சிறு பாவங்களை அடையாளம் காட்டுவார்.

இருட்டில் இருந்து பார்த்தால் சட்டையில் இருக்கும் கருப்புப் புள்ளை தெரிவதில்லை. அதே போல பாவத்திலிருந்து பார்த்தால் நமது வாழ்க்கையில் இருக்கும் கறைகள் தெரிவதில்லை. வெளிச்சத்துக்கு வருவோம். வெளிச்சமாகிய இறைவன் நமது வாழ்க்கையிலிருக்கும் பாவங்களை கொஞ்சம் கொஞ்சமாய் நமக்கு அடையாளம் காட்டுவார். அவற்றை உடனடியாக நம் வாழ்விலிருந்து விலக்குவோம். படிப்படியாய் இறைவனைப் போலாக முயல்வோம். புனிதம் அணிவோம்.

கோபம் மிகப்பெரிய பாவம் என்கிறார் இயேசு. சகோதரன் மீது கோபம் கொள்பவன் எரிநரகத்தில் எறியப்படுவான் என அவர் தீர்க்கமாய் சொன்னார். கோபத்தின் குழந்தையே பல்வேறு பாவச் செயல்களாக வெளியே வருகிறது. கவலை கொள்வது இறைவன் மீதான நம்பிக்கை நீர்த்துப் போவதன் அடையாளம். தனது தந்தையின் கைப்பிட்டிக்குள் இருக்கும் குழந்தை கவலைப்படுவதில்லை. பிடியை விட்டு விட்டால் பிடிமானம் இல்லாமல் அது கலங்கிக் கதறும். கடவுளிடம் நாம் பிடியை அழுத்தமாய் வைத்திருந்தால் கவலை நம்மை சேர்வதே இல்லை.

எனவே இந்த உயிர்ப்பு காலத்தில் இதயத்தை அலசி ஆராய்வோம். கறைகளை அகற்றுவோம், அன்பைபும் மனிதநேயத்தையும் நிரப்புவோம்.

சிலுவையோடு சேர்ந்து பாவங்களும் இறக்கட்டும்,
இயேசுவோடு சேர்ந்து மனிதம் நம்மில் உயிர்க்கட்டும்.

— Xavier

1,606 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *