நிபந்தனையற்ற அன்பு
ரோஸ் பிறக்கும் போதே மாபெரும் குறைபாடுடன் பிறந்தாள். அவளுடைய கால்கள் இரண்டும் செயலிழந்து போன நிலையில் இருந்தன. அவளுக்கு இரண்டு வயதானபோது மருத்துவர்களின் ஆலோசனைப் படி இரண்டு கால்களையும் வெட்டியெடுத்தார்கள். அதன்பின் இடுப்பு வரை மட்டுமே உள்ள அரை மனுஷியானாள் ரோஸ்.
பட்ட காலிலே படும் என்பது போல பட்டுப் போன காலுடன் பிறந்தவளுடைய சகோதரன் மன நலம் பாதிக்கப் பட்டவன். தந்தை அல்சீமர் நோயாளி ! வாழ்க்கை தனக்கு முன்னால் வெறுமையின் சாலையாய் நீண்டிருப்பதைக் கண்டார் ரோஸ். எல்லோரையும் போல இயல்பான வாழ்க்கை வாழ முடியவில்லையே எனும் அழுத்தம் மனதை அழ வைத்தது.
1997ம் ஆண்டு ரோஸ் ஆட்டோமொபைல் கடை ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த டேவ் எனும் ஒரு இளைஞனைச் சந்தித்தாள். எல்லோரும் அவளை பரிதாபமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தபோது டேவ் அவளை சாதாரணமான ஒரு பெண்ணாகப் பார்த்தான். அவளிடம் பரிதாபமாய்ப் பேசாமல் நகைச்சுவையாய்ப் பேசினான். அவளுடைய மனம் மயங்கியது ! ஆனால் கால்கள் இல்லாத பெண்ணைத் திருமணம் செய்வானா? எனும் கேள்வி அவளுடைய நாட்களை பதட்டத்துடன் நகர்த்தியது.
ஆனால் டேவ் அவள்மீது நிபந்தனைகள் ஏதுமற்ற அன்பை வைத்திருந்தார். எதையும் எதிர்பார்க்காத அன்பு அது. 1999ம் ஆண்டு டேவ் ரோசியைத் திருமணம் செய்தார். ரோசியின் மனம் நெகிழ்ந்தது. ரோசிக்கு ஒரு மனநலம் பாதித்த சகோதரன் உண்டு என்பதும், அவருடைய தந்தை நோயாளி என்பதும் டேவின் காதலைக் குறைக்கவில்லை.
கால்கள் இல்லாத ஒரு பெண் குழந்தை பெற முடியுமா எனும் மருத்துவ சிக்கல்களையும் மீறி, இரண்டு குழந்தைகளுக்குத் தாயானார் ரோஸ். அவருடைய கணவர் இன்றும் அமெரிக்காவின் கடைகளுக்கு ஷாப்பிங் செல்லும் போது, தவறாமல் அவரை அழைத்துச் செல்கிறார். மனைவியை முதுகில் சுமந்து சுற்றி வருகிறார். பூங்காக்களில் குழந்தைகளுடன் விளையாடுகிறார். அந்தப் பூங்காவின் மரங்கள் கூட அந்த அன்பின் செயல்களில் புன்னகை பூக்கின்றன !
நிபந்தனைகளற்ற அன்பு மிகவும் கடினமானது. அது எந்தவிதமான எதிர்பார்ப்புகளுக்கும் அப்பாற்பட்ட நிலையில் முளைக்கும். அப்படிப்பட்ட அன்பு நிலவுகின்ற குடும்ப வாழ்க்கை மிகவும் அற்புதமானது.
அத்தகைய அன்பு மிகவும் அபூர்வமாகிவிட்டது. பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு தான் பெரும்பாலானவர்களின் அன்பு நிர்ணயிக்கப் படுகிறது. “பணம் கிடைத்தால் பாசம். பணம் இல்லாத இடத்தில் அன்பாவது, நட்பாவது „ என்பதே பலருடைய சிந்தனையாக இருக்கிறது.
நிபந்தனையற்ற அன்பின் உதாரணமாய் தாயன்பைச் சொல்வார்கள். ஆனால் முழுக்க முழுக்க அப்படிச் சொல்லமுடியுமா என்பதை ‘உசிலம்பட்டி” நிகழ்வுகள் சந்தேகிக்க வைக்கின்றன.
“ஆம்பள பிள்ளைன்னா வரவு, பொம்பள புள்ளைன்னா செலவு” என கிராமத்தில் பேசுவதுண்டு. ஒரு குழந்தை பிறந்தால் ஆணா பொண்ணா என்று கேட்பதற்குப் பதிலாக “வரவா, செலவா ?” என்று கேட்பார்கள். ஆண் குழந்தையெனில் ரொம்ப சந்தோசம் என்பார்கள். பெண் குழந்தையெனில் “ஆணோ, பெண்ணோ ஆயுசோட இருக்கட்டும்” என ஒரு மழுப்பல் வாழ்த்துடன் நகர்ந்து விடுவார்கள்.
ஒரு தாய்க்கு தொடர்ந்து பெண்குழந்தைகள் பிறந்தால் அவளுக்கு அவமானப் பேச்சுகள் கணக்கில்லாமல் வரும். “நாலாவது பொம்பளைன்னா நடைக்கல்லையும் பேக்கும்” என்றெல்லாம் கிழவிகள் துக்கம் விசாரிப்பார்கள்.
“எதிர்காலத்தில் தங்களுக்குச் சாப்பாடு போட வேண்டும்” எனும் எதிர்பார்ப்புடன் குழந்தைகளைப் பெற்று வளர்த்துவது கூட ஒருவகையில் எதிர்பார்ப்புடைய அன்பே !
எந்தக் குழந்தையாய் இருந்தாலும் சரி, எப்படி இருந்தாலும் சரி என அரவணைத்து வளர்க்கும் பெற்றோர்கள் நிபந்தனையற்ற அன்பின் உதாரணங்கள்.
என்ன தான் தப்புகள் செய்தாலும் மனுக்குலத்தின் மீது அன்பு செலுத்தும் கடவுள் நிபந்தனையற்ற அன்பின் நிரந்தர உதாரணம் !
“நீ இதைச் செய்தால், உன்னை அன்பு செய்வேன்” எனும் அன்பும் நட்பும் உண்மையில் எதிர்பார்ப்புகளின் பாதையில் தான் நடை போடுகின்றன.
தனது குழந்தை மனநலம் பாதித்தவனாய் பிறந்தான் என்பதற்காக நடு வீதியில் விட்டுச் சென்ற பெற்றோரின் கதைகள் உண்டு. அமெரிக்காவில் ஒரு தந்தை தனது குழந்தையை வெளிநாட்டுக்குக் கொண்டு சென்று அங்கேயே விட்டு விட்டு வந்த நிகழ்வு பத்திரிகைகளில் அதிர்ச்சியாய் அலசப்பட்டன.
கேரளாவின் சமீபத்தில் ஒரு நிகழ்வு. மகன் வெளிநாட்டில் இருக்கிறான். அன்னை கேரளாவில் இருக்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஊருக்கு வருவதாய் சொல்கிறான் மகன். அன்னையின் உள்ளம் குதிக்கிறது. ஆனந்தக் கூத்தாடினாள் தாய். ஊருக்கு வந்த மகன் அன்னையையும் அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்வதாய்க் கூற அவளுடைய ஆனந்தம் இரண்டு மடங்காகிவிட்டது.
மகன் வந்தான். மகிழ்வின் உச்சாணிக் கொம்பில் இருந்தாள் அன்னை. அமெரிக்கா செல்வதற்கான எல்லா ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருந்தன. அன்னை எதையும் பாக்கி வைக்காமல் எல்லா சொத்துகளையும் விற்று மகனிடம் கொடுத்தாள்.
அமெரிக்கா செல்லும் நாளும் வந்தது. அம்மாவையும் அழைத்துக் கொண்டு விமான நிலையம் சென்றான் மகன். அங்கே ஒரு இருக்கையில் அம்மாவை அமர வைத்து விட்டு எங்கோ சென்றான். பின் அவன் திரும்பி வரவேயில்லை.
விசாரித்தபோது தான் தெரிந்தது. அம்மாவின் சொத்துகளைப் பிடுங்க மகன் திட்டமிட்டு அரங்கேற்றிய நாடகம். தாயை அங்கேயே விட்டு விட்டு விமானம் ஏறி அவன் சென்றது பல மணி நேரங்களுக்குப் பின்பு தான் தெரியவந்தது. அமெரிக்கா செல்ல பாஸ்போர்ட் வேண்டும் என்பது கூட அறியாத ஒரு அப்பாவி அம்மாவை விமான நிலையத்தில் குப்பையைப் போல வீசிவிட்டுச் சென்ற மகன் அன்பு வற்றிப் போன மனதின் உதாரணம்.
நிபந்தனையற்ற அன்பு நிலவும் இடங்கள், பூமியின் சுவர்க்கங்கள் என்பதில் கொஞ்சமும் சந்தேகம் இல்லை. அப்படிப்பட்ட ஒரு சூழலுக்காக உங்கள் மனதையும், செயல்களையும் பக்குவப் படுத்தினால் விண்ணகம் மண்ணகத்தில் வந்தமரும்.
நீங்கள் ஒரு செயலைச் செய்யும் போது அந்தச் செயல் உங்களை எப்படி பாதிக்கும் என்பதை மனதுக்குள் நினைத்துப் பாருங்கள். அந்தச் செயலில் ஏதோ எதிர்பார்ப்பு ஒளிந்திருக்கிறதா என்பதை அலசுங்கள்.
“அவனுக்கு நான் எவ்வளவோ செய்திருக்கேன், அவன் எனக்காக ஒரு நயா பைசா செலவு செஞ்சிருப்பானா ?” எனும் உள் மன புலம்பல்கள் இருந்தால் உங்கள் அன்பு எதிர்பார்ப்புடன் செயல்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
எதையும் பதிலுக்குத் தர இயலாத மனிதர்களிடம் அன்பு செலுத்தும் போது அந்த அன்பு வலிமையாகிறது. அப்போதும் “நான் ரொம்ப நல்லவாக்கும் எனும் சிந்தனையைத் தலையில் தூக்கி விடாதீர்கள் !”.
நிபந்தனையற்ற அன்பு என்பது உங்கள் குழந்தைக்கு கேட்டதையெல்லாம் வாங்கித் தருவதல்ல. அல்லது தோல்வி என்றால் என்ன என்பதையே அறியாதபடி அவனை வளர்த்துவதுமல்ல. குழந்தைகளை நல்வழிப்படுத்துவதும், அரவணைப்பதும், தண்டிப்பதும் பெற்றோரின் கடமை. அதே நேரத்தில் “இப்படி இருந்தால் தான் நீ அன்பு செய்யப்படுவாய்” எனும் பிம்பத்தையும் உருவாக்காதீர்கள். அது ஒரு தப்பான முன்னுதாரணத்தைக் குழந்தைக்குக் கற்றுக் கொடுக்கும்.
“இப்படித் தான் இருக்க வேண்டும்” எனும் எதிர்பார்ப்புடன் ஒரு நபரை அணுகும் போது நமது செயல்களும் ஒரு அட்டவணைக்குள் விழுந்து விடுகின்றன. ஒவ்வொருவரையும் அவருடைய இயல்போடே அணுகுவது தான் இயல்பான அன்புக்கு உத்தரவாதம் தரும்.
ஒவ்வொரு சூழலிலும் “இந்த நபருக்கு என்னால் செய்ய முடிந்த அதிக பட்ச அன்பான செயல் என்ன ?” என்பதை நினைத்துப் பாருங்கள். அதன் விளைவுகளோ, பலன்களோ உங்கள் மனதில் எழாமல் இருக்கட்டும். அப்போது உங்கள் அன்பு புனிதமடையும்.
நிபந்தனையற்ற அன்பு உங்களுக்குத் தெரிந்த நபர்கள் எனும் எல்லைக்கு வெளியே உங்களை அழைத்துச் செல்லும். ஏதோ ஒரு வழிப்போக்கருக்கோ, ஏதோ ஒரு ஆதரவு இல்லத்துக்கோ நீங்கள் கொடுக்கும் அன்பு பெரும்பாலும் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டதாகவே இருக்கும்.
“உள்ளங்கையில் இருக்கும் தண்ணீரைப் போன்றது அன்பு. விரிந்த நிலையில் உங்கள் கை இருக்கும் வரை தண்ணீர் கையிலேயே தங்கும். அதைப் பொத்திக் கொள்ள ஆசைப்பட்டால், விரல்களுக்கிடையே வழிந்து வெளியேறும்.” என்கிறார் சுவாமி விவேகானந்தர்.
சட்டங்களுக்குள்ளும், விதிமுறைகளுக்குள்ளும் நிலவும் அன்பு நிச்சயமாக நிபந்தனையற்ற அன்பல்ல. அது ஒரு கணித சூத்திரம் போல. சரியான மதிப்புகளைப் போட்டால் விடை கிடைக்கும். நிபந்தனையற்ற அன்பு என்பது அப்படியல்ல. அது நல்லோர் மேலும் தீயோர் மேலும் பெய்யெனப் பெய்யும் மழையைப் போன்றது !
நிபந்தனையற்ற அன்பு வழங்க மிக மிக முக்கியமான தேவை ஈகோவை விரட்டுதல். ஈகோ நிலவும் இடத்தில் அன்பின் காற்று மூச்சுத் திணறும். ஈகோவை விரட்டிப் பாருங்கள் இதமான அன்பு எதிர்பார்ப்பின்று உலவத் துவங்கும்.
ஈகோவுடன் சேர்ந்து கர்வத்தையும் கூட கழற்றி வைத்தீர்களெனில் எதிர்பார்ப்புகளற்ற அன்பு மிக எளிதாய் உங்களுக்குக் கைவரும்.
ஒரு வயதான தம்பதியர் இருந்தனர். மனைவிக்கு நோய். யாரையும் அடையாளம் கண்டு கொள்ள முடியாத அல்சீமர் எனும் நோய். தாத்தா தினமும் காலையில் வருவார். மனைவியுடன் அமர்ந்து காலை உணவு அருந்துவார். நிறைய பேசுவார். மனைவியுடன் நிறைய நேரம் செலவிடுவார். ஆனால் அவர் யார் என்பதே மனைவிக்குத் தெரியாது. காரணம் அல்சீமர் நோய் !
எத்தனை மழையாய் இருந்தாலும், எத்தனை வெயிலாய் இருந்தாலும் என்ன பிரச்சினை வந்தாலும் மனைவியைப் பார்க்க அவர் வராமல் இருந்ததே இல்லை !
தினமும் இதைக் கவனித்து வந்த டாக்டர் ஒரு நாள் கேட்டார். “இந்த தள்ளாத வயசுல நீங்க வரணுமா ? நீங்க யாருன்னே உங்க மனைவிக்குத் தெரியாதே ?”
அவர் சொன்னார் “அவளுக்கு என்னைத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் எனக்கு அவளைத் தெரியும். அவளை அன்பு செய்யாமல் என்னால் இருக்க முடியாது !”
டாக்டரின் கண்களின் கண்ணீர். நிபந்தனையற்ற அன்பு இப்படி இருக்க வேண்டும். எதையுமே எதிர்பார்க்காமல் உள்ளிருந்து ஊற்றாய் பெருகும் அன்பு.
அன்பு கிடைக்குமிடத்தில் அன்பு செய்வது சாதாரண அன்பு ! அன்பு கிடைக்காத இடத்திலும் அன்பு செய்வது புனிதமான அன்பு !! வெறுப்பைத் தருபவர்களைக் கூட அன்பு செய்வது தெய்வீகமான அன்பு !
நிபந்தனையின்றி அன்பு செய்
அன்பினாலே அவனி செய் !
— சேவியர்.
2,561 total views, 2 views today