பரபரப்பு வேண்டாமே, தெளிவு பிறக்க அமைதியடைக!
நில், கவனி, முன்னேறு என இலக்கை நோக்கி பயணிக்கும் ஒரு வெற்றியாளருக்கு பழக்கப்படுத்த ஆலோசனை வழங்கப்படுகிறது. சாதாரண பிராணிகளில் இருந்து காட்டின் விலங்கு சிங்கம் வரை எடுத்த எடுப்பில் தன் உணவை வேட்டையாடுவதில்லை. பறவைகள், விலங்குகள் கூட தமது அறிவுக்கு ஏற்ப தம் பாதுகாப்பை உறுதிப்படுத்திய பின்னரே ஒரு விடயத்தில் இறங்கும். சிறிது அமைதி அதற்கான தெளிவை வழங்கிவிடும். வீட்டில் வளர்க்கும் பூனையில் இதனை கவனித்திருப்போம்.
பரபரப்பான மனநிலையில் ஒரு தையல் ஊசியை எடுத்து அதில் நூலினை கோர்த்து பாருங்கள். அமைதியடைந்தால் மட்டுமே அதனை செய்ய முடியும். வாழ்வில் எத்தனையோ விடயங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு விடயங்களும் பதில் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியன. அவ்வளவு முக்கிய விடயங்கள் இலகுவானதாக இருப்பினும் இந்த ஊசியில் நூல் கோர்ப்பதை போன்ற தெளிவு மனநிலையில் செய்யும் போதே விளைவு பிடித்த மாதிரி அமைய அதிக வாய்ப்புள்ளது.
வீட்டில் தந்தை கோபமாக இருக்கும்போது தாய் இரகசியமாக பிள்ளைகளோடு உரையாடுவார் அல்லது கைப்பாவனை மூலம் பேசுவார். இதன் பொருள் பேசுவதற்கு இது நேரமல்ல என்பதே. கோபம், ஆழ்ந்த கவலை, வெறுப்பு, பாசம், ஆர்வக்கோளாறு, பகை, சித்தமயக்கம், ஆசை, காமம் போன்ற உணர்ச்சிப்பெருக்கால் ஆட்கொள்ளப்பட்டிருக்கும் போது அவற்றிலிருந்து தெளிவு பெற அமைதி இன்றியமையாதது. இந்த அமைதியான நிலை பெறுவதற்கு இவ்வாறான நேரங்களில் அமர்ந்திருந்து சிறிதளவு நீர் அருந்துவது கூட மிகுந்த பலனைத் தரும்.
புத்தியும் மனமும் நேராக இருந்தால் எண்ணங்களும், சிந்தனைகளும் தெளிவாகும். செய்யும் காரியங்களின் அசைவுகள் கூட புலனாகும். அப்போது சிந்தனைகள் வலுவடையும். மனம் அமைதியடையும். கலங்கி விட்ட நீர்நிலையில் தெளிந்த நீர் பெற வேண்டும் எனில் அது தெளியும்வரை அமைதியாக காத்திருத்தல் வேண்டும். குழம்பிவிட்ட மனநிலையிலிருந்து தெளிவு பெற வேண்டும் எனில் அமைதியாக சுவாசம் நடைபெற காத்திருக்க வேண்டும்.
இன்றைய வாழ்க்கை முறையில் உள்முக வாழ்வின் அமைதியின்மையே பெரும்பாலான நோய்க்கு காரணமாக இருக்கின்றன. தனிமையில் கூட எண்ணங்கள் தொடர்ச்சியாக செயல் புரிந்தவண்ணம் இதயம் கடின வேலை செய்பவர்களுக்கு எப்படி தொழிற்பட வேண்டுமோ அவ்வாறு மேலதிகமாக தொழிற்பட்டுக்கொண்டே இருக்கிறது. பிறப்பின் முன்பு துடிக்கத் தொடங்கிய இந்த இதயம் தனது சேவையை இரவு பகலாக செய்துகொண்டிருக்கிறது. பயங்கர கனவில் அதி வேகமாக நாம் தப்பி ஓடுவதாக இருக்கும் நிலையில் தூக்கம் கலையும் போது இதயம் அதீத வேகத்துடன் துடிப்பதை உணர்கிறோம். அது போன்றே எண்ணங்களில் தீவிரமாகவும், குழப்பமாகவும் இருக்கும் போது வீணாக சக்தி விரயம் ஏற்படுகிறது. சிறிதளவு அமைதிக்குப் பின் அதிகமாக உணர்ச்சிவசப்பட்ட விடயங்கள் சாதாரணமாகவும் தாங்குசக்தியை தருவதாகவும் இருக்கும்.
உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை, மன அழுத்தம், நரம்புத்தளர்ச்சி, மனச்சிதைவு, மனச்சோர்வு, பசியின்மை, விரக்தி போன்ற ஆயிரக்கணக்கான நோய்கள் மற்றும் தற்கொலைகளுக்கு அமைதியற்ற மனம் முக்கிய காரணமாக இருக்கிறது. தெளிந்த மனநிலையில்த்தான் உணவு உண்ணுதல் கூட இடம்பெற வேண்டும். இல்லாவிட்டால் உடலின் உட்செயற்பாட்டில் சிக்கல்கள் தான் விளையும். இலகுவான நடைப்பயிற்சி, வண்ண மீன்கள் தொட்டிகளில் வளர்த்து அதனை இரசித்தல், மூச்சுப்பயிற்சி, தியானம், வழிபாடு என்பன மன அமைதியைப் பேணவே பரிந்துரைக்கப்படுகின்றன.
ஆமை மிகவும் வேகம் குறைந்தது இருப்பினும் இருந்த இடத்தில் நிதானமாக எப்போதும் செயல் புரிந்தவண்ணமே இருக்கும். ஓட்டமும், பரபரப்பும் இல்லாத நிதானமே அதனுடைய ஆயுள் நீடிப்பிற்கான காரணமாக இருக்க முடியும். பரபரப்பில் சுவாசம் சீரில்லாமலும், நிதானத்தில் சீராகவும் இயங்குகிறது.
சம்மந்தப்பட்ட இருதரப்பும் அமைதி காத்தால் ஒருபோதும் போர் மூளாது. இது இரு நாடுகளுக்குள் நடக்கும் போர் என்றாலும், கணவன் மனைவிக்குள் ஏற்பட இருக்கும் விவாகரத்து என்றாலும் இது பொருந்தும். பரபரப்பான மனநிலைக்கு இடமளிக்காது அமைதியின் பின்னரான தெளிவு என்றும் எவர்க்கும் சுபமே.
………………………………………………..கரிணி
2,094 total views, 3 views today