வதந்திகள் வைரசைவிட வேகமானது! கொடுமையானது!!!
போலிச் செய்திகள் பரவுவது சமூகத்தின்
மிகப்பெரிய எதிரி என்கிறார்கள் யேர்மனியர்!
உண்மைச் செய்தி நத்தையின் தோளில் ஏறி நகர்வலம் போகும் போது, பொய்ச் செய்தி மின்னலின் தோளிலேறி கண்டங்களைத் தாண்டி வருகிறது. இது தான் இன்றைய உலகில் செய்திகள் பரவும் வேகம். முன்பெல்லாம் ஐநூறு கிலோமீட்டர் தொலைவில் இருக்கின்ற ஒரு நபருக்குச் செய்தி அனுப்பவே சில நாட்கள் ஆகிவிடும். அதுவும் கடிதப் போக்குவரத்து காலத்தில் அந்த செய்தியைச் சுமந்து வருகின்ற தபால்காரர் நமக்குத் தெய்வமாகவே காட்சி தருவார்.
“ஊருக்கு போன பையன் இன்னும் கடுதாசி போடலையே… எப்படி இருக்கானோ, எப்போ போய் சேர்ந்தானோ” என நான்கு நாட்கள் கிராமத்துத் தந்தை நகம் கடித்த காலம் மலையேறிப் போய்விட்டது. இப்போதெல்லாம் வினாடிக்கு வினாடி தகவல்களை டிஜிடல் உலகம் தந்து கொண்டே இருக்கிறது. இதில் பல நன்மைகள் உள்ளன.
குறிப்பாக, திரைகடலோடியும் திரவியம் தேடுவதை இப்போது வீட்டிலிருந்தே சாதிக்கலாம். பல நீண்ட நெடிய காலங்கள் செலவிட்டு செய்ய வேண்டிய விஷயங்களை வெகு சீக்கிரத்திலேயே செய்தும் முடிக்கலாம். அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நாய்க்குட்டி இருமுவது முதல், உள்ளூர்க் கிழவியின் பாம்படத்தை லோக்கல் திருடன் திருடுவது வரை எல்லா விஷயங்களையும் இன்றைய டிஜிடல் கப்பல் அள்ளிக் கொண்டு வந்து கொட்டுகிறது.
தகவல்களில் இப்போது ஒளிவு மறைவுகள் இல்லை. எல்லாமே பொதுவெளியில் தெரிந்து விடுகின்றன. “பாத்தியா… இந்த புதிய படத்துக்கான போஸ்டரை, ஒரு கொரிய படத்தின் போஸ்டரிலிருந்து காப்பியடித்திருக்கிறார்கள்” என்று சாமான்யனே இன்று பேசுகிறான். இசை, எழுத்து, கலை, தொழில்நுட்பம் எல்லாமே எல்லோருக்கும் பொதுவான பந்தியாய் பரிமாறப்படும் சூழல் இன்றைக்கு உருவாகியிருக்கிறது.
இந்த காலம் செய்கின்ற ஒரு மிகப்பெரிய கொடுமை ஒன்று உண்டு. அது தான் தகவல்களிலுள்ள நம்பகத் தன்மை. “இந்த பையனைக் காணவில்லை, தயவு செய்து பகிருங்கள்” என்ற ஒரு குழந்தையின் படம், அவன் கண்டுபிடிக்கப்பட்டு பத்து ஆண்டுகள் ஆனாலும் தனது டிஜிடல் ஊர்வலத்தை நிறுத்துவதில்லை.
வாட்ஸப்பில் வருகின்ற செய்திகளை நம்பி வீட்டு அம்மாக்கள் செய்கின்ற அலப்பறைகள் இன்னொரு ரகம். சில நாட்கள் காலையில் பூண்டை வெட்டி வேகவைத்து, தண்ணீரையும் பூண்டையும் சாப்பிடு என கழுத்தை நெரிப்பார்கள். அதற்குள் அடுத்த வாட்சப் வந்து விடும், இப்போது எலுமிச்சை பழத்தையும், இஞ்சியையும் கலந்து சுடுநீரில் கொதிக்க வைத்து கொஞ்ச நாள் காலையில் முழி பிதுங்கும். கீதா சாராம்சம் போல, “அதுவும் கடந்து போகும்”. அடுத்த நாள் ஆப்பிளையும், பீட்ரூட்டையும், கேரட்டையும் மிக்சியில் போட்டு அரைப்பதற்காக காத்திருப்பார்கள்.
வாட்சப் தான் சர்வதேச அங்கீகாரம் பெற்ற மருத்துவக் குழுவைப் போல பாவிக்கும் மக்கள் எக்கச்சக்கம் உண்டு. அவர்களும் சளைக்காமல் பூண்டு, வெங்காயம், இஞ்சி, அவரைக்காய், பீர்க்கங்காய் என வரிசையாக தங்களது வைத்தியங்களைப் பந்தி வைத்துக் கொண்டே இருக்கிறார்கள். இதில் எது நல்லது, எது தவறு என்பதைக் கண்டு பிடிக்க முடியாமல் மக்கள் வாட்சப்பின் வாசலில் குப்புற விழுந்து விடுகிறார்கள்.
இது ஒரு புறம் என்றால், நோய்கள் வரும்போதும், கிருமிகள் வரும்போதும் எழுகின்ற திடீர் டாக்டர்களும், மருத்துவ ஆய்வாளர்களும், கருத்து கந்தசாமிகளும் எக்கச்சக்கம். மருந்துக்கான தடுப்பு மருந்தை சர்வதேச மருத்துவர்கள் கண்டு பிடிக்கும் முன் ஆண்டிப்பட்டி டீக்கடை பக்கத்திலிருக்கும் அரசரடிப் பொடியார்கள் கண்டுபிடித்து விடுகிறார்கள்.
‘இதெல்லாம் ஒரு மேட்டரா ? கருஞ்சீரகத்தையும், பெருஞ்சீரகத்தையும் அரைத்து கூழாக்கி வடிகட்டி நாலு சொட்டு காது வழியா விட்டா இதெல்லாம் சட்டுன்னு காணாம போயிடும்” என அவர்கள் சொல்வதை வியந்து போய் கைதட்ட ஏகப்பட்ட கூட்டம் இங்கே உண்டு என்பது தான் கொடுமை.
‘அந்த வைரஸ் வேற ஒண்ணுமில்லைங்க, அமெரிக்காவோட பயோலாஜிக்கல் வெப்பன்… உயிரியல் ஆயுதம். போட்டான் பாருங்க கரிக்ட்டான டைம்ல..’ என அவர்கள் அனுப்புகின்ற யூடியூப் வீடியோக்களோ, ஃபேஸ்புக் பதிவுகளோ, இல்லுமினாட்டி கதைகளோ சடுதியில் உலகின் மறு கரை வரை சென்று சேர்கின்றன. உண்மை எது என கண்டறிய முயலாத மக்களில் கணிசமானவர்கள் அது சரி என்று நம்பியும் விடுகிறார்கள்.
அந்த வைரஸ் இப்போ நம்ம வாய்க்கால் வழியா வடுகப்பட்டிக்கும் வந்துடுச்சு. அதுல குளிச்ச எல்லாருமே காலி என அவர்கள் கிளப்பி விடும் திகிலில், அரை குறை உயிரோடு இருப்பவர்களெல்லாம் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சாய்ந்து விடுகிறார்கள்.
இப்படி தவறான தகவல்களைப் பரப்புவதில் இரண்டு விஷயங்கள் உண்டு. ஒன்று இதை ஸ்றாட்டஜியாக பயன்படுத்தி, வேண்டுமென்றே தவறான தகவல்களைப் பரப்பி, அதன் மூலம் ஆதாயம் அடைவது. உதாரணமாக சில நாட்டுத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்னணியில் இத்தகைய ‘டேட்டா அனாலிசிஸ்’ உண்டு என்கிறார்கள். “இது தான் என்னோட மாடல்” என ஒரு மாயையான பிம்பத்தைக் கட்டியெழுப்புவதும், “இவர்தான் நம்மோட இரட்சகர்” என ஒரு போலியான பிம்பத்தைக் கட்டியெழுப்புவதும் இன்றைய சூழலில் மிக எளிது.
இத்தகைய பணிகளைச் செய்வதற்காகவே பல நிறுவனங்கள் இருக்கின்றன. அவர்கள் விரும்புகின்ற ஒரு கருத்துருவாக்கத்தை வலிந்து திணித்து எல்லோரையும் நம்ப வைப்பார்கள். தூய்மையும், திறமையும் வாய்ந்த ஒருவரை காமெடியனாகச் சித்தரிக்கவும் அவர்களால் முடியும். சற்றும் திறமையற்ற ஒருவரை ஆஜானுபாகுவாய் சித்தரிக்கவும் இவர்களால் முடியும். இதற்கு அவர்கள் செய்வதெல்லாம் தவறான செய்திகளை திரும்பத் திரும்ப மக்களின் மனதில் நுழைத்து நுழைத்து அது சரியென நம்மை நம்ப வைப்பது தான்.
‘முக்காவாசி பேரு நம்ப மாட்டாங்க’ என நாம் சொல்லலாம். ஆனால் ‘கால்வாசி பேரு நம்பிட்டான்’ என்பது தான் அவர்களுடைய வெற்றி. அந்த கால்வாசி பேர் அந்த செய்தியை பரப்பி அடுத்த கால்வாசி பேரை நம்ப வைப்பார்கள். இப்படித்தான் போலிச் செய்திகளின் விதைப்பு நடக்கிறது.
போலிச் செய்திகள் பரவுவது சமூகத்தின் மிகப்பெரிய எதிரி என 74 சதவீதம் ஜெர்மானியர்களும், 54 சதவீதம் அமெரிக்கர்களும் நம்புவதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
தவறான செய்திகளின் பரிமாற்றத்தைத் தடை செய்வது என்பது இயலாத காரியம். ஒரு காலத்தில் செய்தித் தாளில் வந்ததையெல்லாம் நம்பினோம். ஆனால் இன்றைய டிஜிடல் உலகில் அத்தகைய ஒரு நிலைப்பாட்டை நாம் எடுக்கவே முடியாது. காரணம் ஒரே செய்தியின் ஆயிரம் வடிவங்களை நாம் இணையத்தில் காண முடிகிறது.
ஆனாலும், ஒரு சில விஷயங்களை நாம் மனதில் கொள்ள வேண்டும். அப்போது தான் நம்பகத் தன்மை உடைய தகவல்களை நாம் கண்டறிய முடியும். அதே போல நாம் பகிரும் விஷயங்களும் உண்மை தானா என்பதை அறிந்து கொள்ள முடியும். அதற்கு சில எளிய வழி முறைகள் உள்ளன.
01.நீங்கள் வாசிக்காத ஒரு செய்தியைப் பகிராதீர்கள். அதாவது, ஒரு செய்தி வாட்சப்பில் வந்தால் அது உண்மையா பொய்யா என்பதைக் கண்டறிய ஒரு ஐந்து நிமிடம் இணையத்தில் செலவிடுங்கள். நம்பகத்தன்மை உடைய பத்திரிகைகள், நபர்கள், பிளாக் கள், வீடியோ தளங்கள் போன்றவற்றில் அது குறித்து என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதைக் கண்டறிய வேண்டும். அப்போது செய்தி உண்மையா பொய்யா என்பதைக் குறித்த புரிதல் நமக்குக் கிடைக்கும். அதன் பின்பே ஒரு செய்தியைப் பகிரவேண்டும்.
- உங்களுக்குத் தெரியாத புதிய வலைத்தளத்தில் போடப்பட்ட செய்தியை சட்டென நம்பி விட வேண்டாம். அந்த செய்தி உண்மையா என்பதை மற்ற வலைத்தளங்களில் சோதித்து அறியுங்கள்.
- ஒரு செய்தியை நம்பும் முன், அல்லது பகிரும் முன் ஐந்து கேள்விகளைக் கேளுங்கள். இந்த செய்தி புதிய விஷயம் தானா அல்லது காலாவதியான செய்தியா ? இந்த செய்தி தொடர்புடைய செய்தி தானா ? இதை எழுதிய எழுத்தாளருக்கு இந்த விஷயத்தில் அனுபவம் உண்டா ? இந்த செய்தி ஆய்வுகள் ஆராய்ச்சிக் கட்டுரைகள் போன்றவற்றால் நிரூபிக்கப்பட்டதா ? இந்த செய்தி பகிரப்பட்டதன் நோக்கம் என்ன ? இந்த ஐந்து கேள்விகளுக்கும் நீங்கள் பெறும் பதிலைப் பொறுத்து அந்த செய்தியை நம்புவதா இல்லையா எனும் முடிவை எடுங்கள்.
04.இன்றைய மிக முக்கியமான சவால் இந்த மீம்ஸ் தான். எந்த ஒரு செய்தியையும் போட்டு அதை நகைச்சுவையாக மாற்றி விடுவார்கள். அல்லது ஒரு தவறான தகவலைப் போட்டு, “கனடா பிரதமர் தினமும் பழங்கஞ்சி சாப்பிடுகிறார்” என வடிவேலுவின் ஆஹாங்… எனும் வாக்கியத்துடன் பரப்புவார்கள். மீம்ஸ் வரும்போது செய்திகளின் நம்பகத் தன்மையை பெரிதாக யாரும் கண்டுகொள்வதில்லை. ஆனால் அது தான் சாமான்ய மக்களை சட்டென சென்று சேர்கிறது. மீம்ஸ்கள் விஷயத்தில் கவனமாய் இருக்க வேண்டும். சிரிக்க வைக்கிறது என்பதற்காக ஃபார்வேர்ட் செய்து ஒரு தவறான தகவலைப் பரப்ப நாம் காரணமாய் இருக்கக் கூடாது.
05.தவறான செய்திகளைக் கண்டறிய ஃபேக்ட் ஆர் ஃபிக்ஷன், ஹோக்ஸ் போன்ற பல வலைத்தளங்கள் உள்ளன. அவற்றில் ஒரு தகவலைப் போட்டால் அது உண்மையா இல்லையா என்பதைக் குறித்த வரலாற்றைப் புட்டுப் புட்டு வைப்பார்கள். இதன் மூலம் நாம் செய்திகளின் உண்மைத் தன்மையைக் கண்டறியலாம். பொய்யான தகவலைப் பரப்பாமல் தவிர்க்கலாம்.
- பல வேளைகளில் வலைத்தளமே போலியானதாய் இருக்கும். உண்மையான வலைத்தளத்தைப் போல ஒரு வலைத்தளத்தை உருவாக்கி அதில் போலியான செய்திகளைப் போட்டு நம்மை முட்டாளாக்கும் முயற்சிகளும் நடப்பதுண்டு. எனவே அதுகுறித்து கவனமாக இருக்க வேண்டும். வலைத்தள முகவரியில் ஸ்பெல்லிங், என்ன டொமைன் போன்றவற்றை விழிப்புடன் கவனிக்க வேண்டும்.
07.மனிதர்களைப் போல ரோபோக்களும் தவறான தகவல்களைப் பரப்புகின்றன. கேட்கவே ஆச்சரியமாக இருக்கும் ஆனால் அது தான் உண்மை. இன்றைக்கு தொழில்நுட்ப உலகை ஆக்கிரமித்திருக்கும் பாட்ஸ் பல தகவல்களை பயனர்களுக்குக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. இணையத்தில் இருக்கின்ற தகவல்களின் அடிப்படையில் இவை இயங்குகின்றன. ஆனால் அவை சரியா தவறா என்பதைப் பகுத்தறிவதில் இன்னும் மென்பொருட்கள் தேர்ச்சியடையவில்லை என்பது தான் உண்மை.
08.தவறான செய்தி தருபவர்கள் நம்மைக் குழப்ப ஒரு உத்தி வைத்திருப்பார்கள். சொல்கின்ற செய்தியில் 70 சதவீதம் உண்மையும், 30 சதவீதம் பொய்யும் கலந்து தருவார்கள். நாம் பெரும்பாலான செய்திகள் உண்மை என்பதால் மிச்சத்தையும் உண்மை என நம்பி விடுவோம். இந்த உத்தியில் வீழ்ந்து விடாமல் கவனமாய் இருக்க வேண்டும்.
- தத்துவங்கள், கோட்ஸ், பொன்மொழிகள் போன்றவற்றில் பெரும்பாலானவை போலிகள் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். மதம், இனம், சாதி எல்லாவற்றையும் கடந்து இத்தகைய பொன்மொழிகள் உலாவரும். ‘சென்னை இரயில் நிலையம் வாஸ்து படி கட்டப்படவில்லையென சேக்ஸ்பியர் சொன்னார்’ என்று சொன்னால் கூட நம்ப ஒரு கூட்டம் இருக்கும் என்பது தான் கசப்பான நிஜம்.
10.படங்கள். பல வேளைகளில், செய்திகள் உண்மையா என சோதித்தறியும் நாம் கூட பகிரப்படும் படங்கள் உண்மையா என்பதைப் பார்ப்பதில்லை. அதை கவனத்தில் கொள்ள வேண்டும். இப்போது புகைப்படங்களின் உண்மைத் தன்மையை உரசிப் பார்க்கவும் வலைத்தளங்கள் உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஒரு செய்தியைப் பகிர்வதும், நம்புவதும் ஏதோ சின்ன விஷயம் என நாம் நினைப்போம். ஆனால் அப்படி அல்ல. இன்றைய உலகம் உணர்வுகளால் கட்டமைக்கப்பட்டதை விட இறுக்கமாய் தகவல்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது. எனவே நம்மைச் சந்திக்கும் தகவல்களையும், நாம் சிந்திக்கும் தகவல்களையும், நாம் பகிரும் தகவல்களையும் உண்மையா என்பதை ஆழமாய் அறிந்து கொள்ள வேண்டும்.
-சேவியர்
2,262 total views, 3 views today