தன்னை அறிவாளியாகக் காட்ட மனிதன் என்னென்ன செய்கிறான்
ஏன் ? என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை ! எனும் பாடல் எப்போதும் என்னை வசீகரித்துக் கொண்டே இருக்கிறது. எதைக் குறித்து சிந்தித்தாலும் இந்தப் பாடல் வரிகள் என் மனதில் முந்திக் கொண்டு வந்து ரீங்காரமிடுகின்றன.
ஒரு மனிதன் தன்னை அறிவாளியாகக் காட்ட மெனக்கெடுகிறான் என்பதைச் சிந்தித்த போதும், “ஏன் ?” எனும் கேள்வி வந்து மனதில் அமர்ந்தது. அந்தக் கேள்வியுடன் கொஞ்ச நேரம் உரையாடினேன். கிடைத்த முதல் பதில் “பிறருடைய அங்கீகாரம்” என்றது.
பிறர் என்ன நினைப்பார்கள் ? பிறர் முன்னிலையில் நமது பெயர் கெட்டுப் போய்விடுமோ ? நமக்குத் திறமை இல்லை என பிறர் நினைப்பார்களோ ? நாம் அவமானப்பட்டு விடுவோமோ , எனும் கேள்விகள் தான் ஒரு மனிதன் தன்னை அறிவு ஜீவியாகக் காட்ட முக்கியமான காரணங்கள். அது ஒரு வகையில் தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடு. “பிறர் என்ன நினைத்தாலும் கவலையில்லை, நான் என்னுடைய இயல்பிலிருந்து மாற மாட்டேன்” என நினைப்பவர்கள் தங்களை அறிவு ஜீவிகளாய்க் காட்டிக் கொள்வதில்லை.
ஒரு சிங்கம், தான் காட்டுக்கு ராஜா என கர்ஜித்துத் திரிய வேண்டியதில்லை. அதன் இயல்பிலிருந்தே அதை அறிந்து கொள்ளலாம். ஆனால் ஒரு நரி தன்னை சிங்கமாகக் காட்டிக் கொள்ள வேண்டுமெனில் நிறைய மெனக்கெட வேண்டும். ஆனால் அது எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். மழை பெய்யும் போது சாயம் விலகும். நிறத்துக்குள் ஒளிந்திருக்கும் ஓநாயின் உண்மை வெளிப்பட்டே தீரும். அப்போது இயலாமையுடன் சேர்ந்து அவமானத்தையும் அணிந்து கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும்.
என்னுடைய அலுவல் வாழ்க்கையில் ஏராளமான போலி அறிவு ஜீவிகளை சந்தித்திருக்கிறேன். முதல் சந்திப்பில், “வாவ்” என வியந்து போவோம். பழகப் பழக அவர்களுடைய உண்மை இயல்பு வெளிப்படத் துவங்கும். எவ்வளவு நாள் தான் முலாம் பூசப்பட்ட நகைகள், தங்கம் என தங்களைச் சொல்லித் திரிய முடியும் ? உரசும் போது உண்மை வெளிப்பட்டுத் தானே ஆகவேண்டும்.
உதாரணமாக, ஒரு மீட்டிங்கிற்குப் போகிறோம் என வைத்துக் கொள்ளுங்கள். சில போலி அறிவு ஜீவிகள் நிச்சயம் இருப்பார்கள். அவர்கள், “காக்கா கருப்பாக இருக்கிறது” என்று நேரடியாகச் சொல்ல மாட்டார்கள். அப்படிச் சொல்கின்ற நேரடிச் செய்திகள் தங்களை அறிவாளியாகக் காட்டாது என தவறாக நினைப்பார்கள். உண்மையில், உலகத்தின் மாபெரும் அன்புப் புரட்சியை உருவாக்கிய இயேசுவின் வார்த்தைகளே எல்கேஜி பிள்ளைகள் படித்து புரியுமளவுக்கு எளிமையானதாய் தான் இருக்கும். இவர்களோ ஒரு செய்தியை எப்படி சுற்றி வளைத்து சொல்லலாம் என நினைப்பார்கள்.
உதாரணமாக, இந்த காகத்தின் நிறத்தைப் பற்றி நாம் சிந்தித்துப் பார்க்கும்போது இவை வெளிச்சத்துக்கு எதிரான நிறமாகவும், நிழலுக்கு அருகாமையிலுள்ள நிறமாகவும், இரவில் விழுந்தால் தேடி எடுக்க முடியாத நிறமாகவும் இருக்கும். என்பார்கள். “காக்கா கருப்பு” ந்னு சொல்லிட்டு போக வேண்டியது தானேப்பா,என நாம் நினைப்போம். ஆனால் அவ்வளவு எளிதாக அவர்கள் சொல்ல மாட்டார்கள்.
அதே போல ஒரு உரையாடலில் கலந்து கொள்ளும் போது அதைப் பற்றி மேலோட்டமாக நான்கைந்து செய்திகளைப் படித்திருப்பார்கள். அதை அப்படியே மனசில் குறித்து வைத்துக் கொள்வார்கள். உரையாடலில் ஒரு எழவும் புரியாவிட்டால் கூட, “இது நல்லா இருக்கு.. இதே போல நெதர்லாந்துல 2017ம் ஆண்டுல ..” என ஆரம்பித்து ஒரு செய்தியை போடுவார்கள். அது பல வேளைகளில் தேவையற்ற இடைச்சொருகலாக இருக்கும். அப்போது கேட்பவர்களெல்லாம், “ஓ.. இவனுக்கு உலக விஷயம் நிறைய தெரிஞ்சிருக்கு” என நினைப்பார்கள்.
இடத்துக்கு தக்கபடி இவர்கள் நிறைய உதாரணங்களை அள்ளித் தெளிப்பார்கள். கணினி சார்ந்த மீட்டிங் எனில் அது சார்ந்த நபர்களை இழுப்பார்கள். “பார்பரா லிஸ்கோவ்” மட்டும் இல்லேன்னா இன்னிக்கு நாம இந்த மென்பொருள் பற்றி பேசிட்டிருக்க மாட்டோம். நாம சாதாரணமா இருக்கக் கூடாது, கைடோ வேன் ராஸ்ஸம் மாதிரி ஒரு மாற்றத்தை உருவாக்குபவரா இருக்கணும் என ரெண்டு பிட்டு சேர்த்துப் போடுவார்கள். ‘வாவ்… பெரிய ஆளுதான்பா இவன்” என மக்கள் புருவத்தை உயர்த்துவார்கள்.
அதே போல ரெடிமேட் செட் பொன்மொழிகளை சுருக்குப் பையில் வைத்திருப்பார்கள். கார்ல் மார்க்ஸ் என்ன சொன்னார் தெரியுமா ? சார்லஸ் பேபேஜ் என்ன சொன்னாரு தெரியுமா ? சேக்ஸ்பியர் என்ன சொன்னார் தெரியுமா ? என அவர்கள் எப்போதாவது இருமிய விஷயத்தையோ, பொருமிய விஷயத்தையோ சபையில் வைப்பார்கள். அவசரத்துக்கு நாலு பழமொழிகளை கூகிளில் தேடி சுடச் சுடப் பரிமாறுவதும் உண்டு.
என்னது ? ஸ்டீவன் கோவேயுடைய 7 ஹேபிட்ஸ் ஆஃப் ஹைலி எஃபக்டிவ் பீப்பிள் புக் படிச்சதில்லையா ? கண்டிப்பா படிங்க. எப்படி மிஸ் பண்ணினீங்க. அதெல்லாம் நமக்கு ஒரு மேனேஜ்மென்ட் பைபிள் மாதிரி. அப்போ நீங்க மைக்கேல் போர்ட்டரோட புக்ஸ் கூட படிச்சிருக்க மாட்டீங்களே, படிங்க அதெல்லாம். நான் பத்து பெஸ்ட் புக்ஸோட பெயரை தரேன். அதை வாங்கி படிங்க. என படம் காட்டுவார்கள் போலி அறிவு ஜீவிகள். அந்த நூலைப் பற்றிய விமர்சனமோ, ஒரு சுருக்கமான தகவலோ மட்டும் தான் அறிந்திருப்பார்கள். மேலோட்டமான சில தகவல்களை வைத்துக் கொண்டு கதையளப்பார்கள்.
இப்படிச் செய்தால் அப்படி இருக்கலாம். அப்படிச் செய்தால் இப்படி இருக்கலாம் என்றெல்லாம் காற்றில் படம் வரைந்து பாகங்களைக் குறிப்பார்கள். அவர்களிடம் சென்று, இப்படி எங்காவது செய்திருக்கிறீர்களா ? வெற்றி பெற்றிருக்கிறீர்களா ? சில உதாரணங்களைச் சொல்ல முடியுமா எனக் கேட்டால் பம்முவார்கள். ஏன் சந்தேகப்படறீங்க, முயற்சி பண்ணி பாருங்க என சைடு வாங்குவார்கள். வாய்ச்சொல்லில் வீரரடி கிளியே என இவர்களை நாம் அழைக்கலாம்.
உண்மையான அறிவாளிகளைத் தனக்குத் தெரியும், அவர்களோடு பேசுவேன், அவர்களுடன் விவாதங்களுக்குச் செல்வேன் என சொல்வதன் மூலம் ஒரு நம்பிக்கையைக் கட்டமைக்க முயல்வார்கள். பேச ஆரம்பித்தால் ஒரு தலைப்பிலிருந்து இன்னொரு தலைப்புக்கு தவளையைப் போல தாவுவார்கள். தண்ணீருக்கும், தரைக்குமிடையே மாறி மாறிக் குதித்து தண்ணி காட்டுவார்கள். ஏதாவது ஒரு பொருளில் கொஞ்ச நேரம் தொடர்ந்து பேசச்சொன்னால் பதறுவார்கள்.
இவர்களுடைய பேச்சில் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ‘ஜஸ்ட் மிஸ்’ தான். எனக்கு அந்த விருது கிடைக்க வேண்டியது, நான் ஊர்ல இல்லாததால கிடைக்கல ஜஸ்ட் மிஸ். நான் அந்த ஆராய்ச்சிக்கு தலைமை தாங்க வேண்டியது அப்போ என்னோட மாமனாருக்கு உடம்பு சரியில்லாததால அக்ஸப்ட் பண்ண முடியல, ஜஸ்ட் மிஸ். எனக்கு டாக்டரேட் தரேன்னு சொன்னாங்க, பட்.. அந்த டைம்ல நான் அமெரிக்கால இருந்தேன், ஜஸ்ட் மிஸ். என தவற விட்ட தருணங்களின் பட்டியலே இவர்களிடம் அதிகம் இருக்கும். அதற்கு மட்டும் தானே ஆதாரம் தேவையில்லை.
அகல உழுவதை விட ஆழ உழுவது சிறந்தது என்றொரு பழமொழி உண்டு. இவர்கள் அகல உழும் பார்ட்டிகள். எந்த தலைப்பிலும் ஆழமாகப் பேச மாட்டார்கள். கல்வி விஷயத்திலும், அறிவை வளர்த்தும் விஷயத்திலும் அவர்கள் பரந்து பட்டு வாசித்துக் கடக்க வேண்டும் என்று தான் ஆசிப்பார்கள். ஒரு விஷயத்தை நுணுக்கமாய் கற்றுத் தேர்வோம் என நினைக்க மாட்டார்கள். அதற்குரிய திறமையும், பொறுமையும் அவர்களிடம் இருக்காது.
பெரும்பாலும் தங்களுக்கென ஒரு அபிப்பிராயம் தெளிவாய் இருக்காது. பிறருடைய கருத்தையோ, சிந்தனையையோ பிரதியெடுத்து பேசுவார்கள். அல்லது அதன் மையக்கருத்தை உருவியெடுத்து புதிதாய் ஒன்றைக் கட்டமைக்க முயல்வார்கள். நல்ல நாலு சர்வதேச மாத இதழ்களுக்கு சந்தா கட்டியிருப்பார்கள், அதிலுள்ள நாலு தலையங்கத்தை மனதில் வைத்திருப்பார்கள். நல்ல அழகான வார்த்தைப் பிரயோகங்களால் வசீகரிக்கப் பார்ப்பார்கள். உதாரணமாக, அவன் கூட வேலை பாக்கறது சொர்க்கத்துல இருக்கிறவங்களுக்கு நரகம், நரகத்துல இருக்கிறவங்களுக்கு சொர்க்கம். என்பார்கள். அது என்ன என்பது புரிவதற்குள் நமக்கு நாலு நாள் ஓடி விடும்.
மொத்தத்தில் தன்னை அறிவாளியாய்க் காட்ட விரும்பும் எல்லோருமே ஏதோ ஒருவகையான முகமூடியையோ, அறிவுப் போர்வையையோ அணிந்து கொள்கிறார்கள். அதெல்லாம் எதுக்கு ? உண்மையைச் சொன்னால் ஒரு பதில், பொய்மையை அழைத்தால் பதில் எத்தனை விதமாய் முகம் காட்டும் ! அதெல்லாம் நமது இயல்புகளின் மீது நாம் நம்பிக்கை வைக்காததன் விளைவே. நாமே நம் மீது நம்பிக்கை வைக்காவிடில் யார் தான் வைப்பார் ?
எனவே முதலில் நம்மை நாமே நம்புவோம். நமக்கு என்ன தெரியுமோ, அதைத் தெரியும் என சொல்வோம். எது தெரியாதோ அது தெரியாது எனச் சொல்வோம். எல்லாம் தெரிந்தவர் என எவருமே இல்லை. எதுவும் தெரியாதவர் என்றும் எவருமே இல்லை. எது தெரியுமோ அதைக் குறித்து பெருமை கொள்வோம். எது தெரியாதோ அதைக் கற்றுக் கொள்ள முயற்சி செய்வோம். அவ்வளவு தான் வாழ்க்கை.
ஆம்பல் பூ தன்னை தாமரையாய்க் காட்டிக் கொள்ளத் தேவையில்லை. ஆம்பலுக்கு ஒரு அழகு, தாமரைக்கு ஒரு அழகு. நமது இயல்புகளை ரசிப்போம், இயல்புகளை ஏற்றுக்கொள்வோம். தனது பலவீனங்களை அறிந்து அதை வாழ்வின் பாகமாக்கிய பாசிடிவ் மனிதர்களே வாழ்க்கையில் வெற்றியடைந்திருக்கிறார்கள். வெற்றிகரமான மனிதர்களுடைய வாழ்க்கையில் நிராகரிப்புகள் ஏராளம். தோல்வியடைந்தவர்களுடைய வாழ்க்கையில் போலித்தனங்கள் ஏராளம்.
நிராகரிப்புகளைப் போராடி வெல்ல முடியும், காரணம் அது நம்மேல் சுமத்தப்படுவது. போலித்தனங்களை வெல்ல முடியாது. காரணம் அது நாமே விரும்பு சுமந்து திரிவது. எனவே சுமந்து திரியும் போலித்தனங்களை இறக்கி வைப்போம். உண்மை இயல்புகளை இதயத்தில் ஏற்றி வைப்போம். அப்போது நமது வாழ்க்கை வெற்றியின் சிறகுகளில் அமர்ந்து, பிரபஞ்சத்தைச் சுற்றி வரும்.
*
சேவியர்
வெற்றிமணி மாத இதழ்
ஜெர்மனி
2,280 total views, 4 views today