ஏப்பமும் வயிற்று பொருமலும்.
சேலை அவிண்டு விழ அம்மணமாக நிற்பது போன்ற அவமானம் அந்தப் பெண் முகத்தில் முகத்தில் தெறித்தது.
ஏவ்! ஏவ் என்ற பெரிய ஏப்பச் சத்தம் வைத்தியசாலை முழுவதும் எதிரொலிக்குமாற் போல ஓங்காரமாக ஒலிக்க அவளைப் பின் தொடர்ந்து வந்தார் நோயாளி. உடல் கனத்த பெரியவர் உற்சாகமற்ற முகத்துடன், மிகுந்த சோர்வுடன் உள்ளே நுழைந்தார்.
‘மாடு மாதிரி எந்த நேரமும் ஏப்பம் விடுகிறார். பெரிய சத்தம்.சகிக்க முடியாது. நாங்கள் இருக்கிறது பிளட்ஸ் வீட்டிலை, அக்கம் பக்கமெல்லாம் சிரிப்பாய் சிரிக்குது. மானம் பறக்குது’ என்றாள்.
ஏப்பம் இயல்பானது
உண்மையில் வாய்வு, ஏப்பம் போன்றவையெல்லாம் இயற்கையான நிகழ்வுகள்தான். இதில் வெட்கப்படவோ அவமானப்படவோ எதுவுமில்லை. ஆயினும் நாலு பேர் மத்தியில் வெளியேறும் போது சற்று அநாகரீகமான, மரியாதைக் கேடான செயலாகத்தான் சமூகத்தில் கணிக்கப்படுகிறது.
இந்திய மற்றும் சீன கலாசாரங்களில் ஏப்பம் வெளியேறுவது இயல்பாகவே கருதப்பட்டது. திருப்பதியாக உண்டதின் அறிகுறியாக இது ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் மற்றவர்கள் மத்தியில் ஏப்பம் விடுவதை மேலை தேச மற்றும் ஜப்பானிய கலசாரங்களில் மரியாதைக் குறைவான செயலாக வெறுக்கப்படுகிறது.
குழந்தைகளிலும் வாய்வு வெளியேறுகிறது. ஒரு பக்க மார்பில் பால் ஊட்டிய பின்னர் குழந்தையை அணைத்து நிமித்தி தோளில் போட்டு முதுகில் தட்டி ஏப்பம் விடுவிக்க வேண்டும் என பாலூட்டும் தாய்மாருக்கு அறிவுறுத்தப்படுவது இதனால்தானே.
ஆடு, மாடு, செம்மறி, நாய் போன்ற பல மிருகங்களும் ஏப்பம் விடுவதை நீங்கள் அவதானித்திருக்கலாம். உண்மையில் மாடுகள் தினமும் 500 முதல் 600 லீட்டர் வரையான காற்றை ஏப்பமாக வெளியேற்றுகின்றன.
ஆனால் அவை வெளியேற்றுவது மீதேன் என்ற வாய்வை ஆகும். வர்த்தக ரீதியான மாடுகளைப் பண்ணைகளாக வளர்க்கும் போது இவை வெளியேற்றும் வாய்வு ஆனாது சூழலை மாசுபடுத்தி பச்சை வீட்டு விளைவை
(Green house effect) ஏற்படுத்துகிறது அஞ்சப்படுகிறது.
வாய்வு எவ்வாறு ஏற்படுகிறது?
நாம் உண்ணும் உணவுகள் ஜீரணமடையும் போது வாய்வுகள் இயற்கையாக உணவுக் கால்வாயில் உற்பத்தியாகின்றன.
அத்துடன் உணவு உண்ணும் போதும், நீராகாரம் அருந்தும் போதும் அவற்றோடு சேர்ந்து உட்செல்லுகின்ற காற்றும் சேர்ந்து விடுகிறது. அவசர அவசரமாக உண்ணும்போது கூடிய அளவு காற்றையும் எம்மையறியாது விழுங்கிவிவடுகிறோம். இவை ஏப்பமாக மட்டுமின்றி விக்கலாகவும் வெளியேறுவது உண்டு.
மென்பானங்களில் நிறைய வாய்வு உண்டு. அவற்றில் உள்ளது கார்பன்டை ஒட்சைட் வாய்வு ஆகும்.
மலச்சிக்கல் இருந்தால் வயிறு பொருமலாக இருக்கலாம். தேங்கி நிற்கும் மலத்தில் கிருமித் தொற்றுகள் ஏற்படுவதால் நாற்றமாக வாய்வு வெளியேறவும் கூடும்.
இந்த வாய்வுக்கள் இரைப்பையில் இருந்தால் அவை ஏப்பமாக வெளியேறுகின்றன. இரைப்பையைத் தாண்டி குடலை அடைந்துவிட்டால் வயிறு பொருமலாக, முட்டாக இருக்கும். அவ் வாய்வுகள் மலவாயில் ஊடாக வெளியேறும்.
ஏப்பம் என்பது ஒருவருக்கு தன்னிச்சையாக வாய்வு வெளியேறுவதாக அமையலாம். அல்லது அவர் தானாக விரும்பி வெளியேற்றுவதாகவும் நடைபெறலாம். அதாவது வயிறு உப்பலாக அல்லது வயிற்று முட்டாக இருந்தால் ஒருவர் தானகவே காற்றை ஏப்பமாக வெளியேற்றிச் சுகம் காண முயலலாம்.
ஏப்பமானது எப்பொழுதும் பெரிய சத்தமாகத்தான் வெளியேறும் என்றில்லை. சத்தமின்றி அல்லது மிகவும் தணிந்த சத்தத்துடன் வெளியேறும் ஏப்ப வாய்வு எமது கவனத்தை ஈர்ப்பதில்லை என்பதே உண்மையாகும். உணவின் பின் மூன்று நான்கு தடவைகள் ஏப்பம் விடுவது எவருக்குமே சாதாரண நிகழ்வுதான் என்கிறார்கள்.
மல வாசலால் பறபற வாய்வு
வாயினால் வெளியேறாத வாய்வுகளும், உணவுக் கால்வாயில் உணவு சமிபாடடையும்போது உற்பத்தியாகும் வாய்வுகளும் மலவாயில் ஊடாக வெளியேறும்.
ஒவ்வொருவருக்கும் தினமும் ஆறு முதல் இருபது தடவைகள் வரை வாய்வானது மலவாயில் ஊடாக வெளியேறலாம் என்கிறார்கள். பெரும்பாலும் மலம் கழிக்கும் போது வெளியேறுவதால் எவரும் கவனிப்பதில்லை.
ஆனால் ஓட்டைக் கார் புற்படுவது போன்ற பெரிய சத்தத்துடன் வெயியேறும்போது சங்கடமாகவே இருக்கும். ஆசூசையான மணத்துடன் குசுவாக வெளியேறுவது குடலில் கிருமித் தொற்று ஏற்பட்டதால் இருக்கலாம்.
வயிறுப் பொருமல்
வயிற்றுப் பொருமல் என்பது மேல் வயிற்றுப் பகுதியில் ஏற்படுவதாகும். ‘வயிறு ஊதிக் கிடக்கு’, ‘செமிக்கயில்லை’, ‘வயிறு உப்பசமாகக் கிடக்கு’ எனப் பல மாதழச் சொல்வார்கள். இதுவும் பெரும்பாலும் உணவுடன் அல்லது பானங்களுடன் உட்சென்ற வாய்வாகவே பெரும்பாலும் இருக்கும்.
ஆயினும் குடற் புண்கள், களத்திற்கு இரைப்பையிற்கும் இடையில் உள்ள வால்வ் செயற்பாடு தளர்தல் (gastroesophageal reflux disease (GERD) or a hiatal hernia) போன்றவற்றால் ஏற்படுது சகசம்.
ஆடு மாட்டின் பால் ஜீரமடைவதில் சிக்கல் இருக்கும் டயஉவழளந iவெழடநசயnஉந நோயிலும் வயிறுப் பொருமல் ஏற்படும்.
உணவுக் கால்வயில் உணவு ஜீரணமடைவதிலும் உணவு பயணப்படுவதிலும் ஏற்படும் பிரச்னை சைசவையடிடந டிழறநட ளலனெசழஅந எனப்படும். இதிலும் வயிற்றுப் பொருமல் ஏற்படும்.
பலரும் சொல்வது போல மலச்சிக்கலால் வயிற்று ஊதல் ஏற்படுமே ஒழிய ஏப்ப வாய்வுத் தொல்லை ஏற்படுவதில்லை.
மலக்குடற் சிக்கல், குரொனஸ் நோய் போன்ற நோய்களும் வாய்வுத் தொல்லையை உண்டாக்கலாம்.
சில மருந்துகளும் வாய்வுத் தொல்லையை ஏற்படுதத்லாம். பெரும்பாலன அன்ரிபயோடிக் மருந்துகள் உணவுக் காய்வாயில் இயல்பாக இருக்கும் பக்டீரியா கிருமிகளைத் தாக்கி அழித்து வேறு சில பக்றீரியாக்களை பெருகச் செய்வதால் வாய்வை உற்பத்தி செய்யலாம். இது வயிற்றில் கடா முடா சத்தத்தை ஏற்படுத்துவதுடன் மலவாயில் ஊடாக வெளியேறவும் செய்யும். ஆனால் இது தற்காலிகமானதே.
மருந்துகள் போலவே கோப்பி மதுபானம் போன்றவையும் காரணமாகலாம்.
மனப் பதற்றம், மனச் சோர்வு போன்ற உளவியல் நோய்களும் காரணமாகும்.
நீரிழிவிற்கு உபயோகிக்கும் மெட்போமின் மருந்து ஒரு சிலரில் வயிற்றுப் பொருமலை ஏற்படுத்துவதுண்டு. பெரம்பாலும் இது தற்காலிகமானது. சில நாட்களில் சரியாகிவிடும்.
தடுப்பது எப்படி?
வாய்வுத் தொல்லைகளைத் தடுக்க என்ன செய்யலாம்?
அவசர அவசரமாக உணவுகளையும் நீராகாரங்களையும் உட்கொள்ளாதீர்கள். அவ்வாறு உட்கொண்டால் அவற்றுடன் காற்றும் உட்சென்று வாய்வுத் தொல்லை ஏற்படும்.
சோடா போன்ற மென்பானங்களில் நிறைய காற்று சேர்ந்திருப்பதால் அவற்றையும் தவிர்க்க வேண்டும்.
பயறு, கடலை, சோயா, பருப்பு போன்ற உணவு வகைகளில் உள்ள புரதங்கள் சமிபாடு அடைவதற்கு சிரமமானவை. இவற்றை நன்கு வேக வைத்து உண்டால் சுலபமாக சமிபாடு அடைவதுடன் வாய்வு தோன்றுவதும் குறையும்.
லக்டோஸ் இன்டொலரன்ஜ் உள்ளவர்கள் பால்மா, பால் அருந்துவதைத் தவிரக்க வேண்டும். சோயாப்பால் அருந்தாலும். சில குழந்தைகளில் இது ஒரு முக்கிய பிரச்சனையாக இருப்பதுண்டு.
இவற்றைத் தவிர மனோவியல் காரணங்களாலும் ஏப்பம் வரலாம். உடல் நோயின்றி ஏற்படும் Functional Dyspepsia அவ் வகையைச் சார்ந்தது. இந்த நோயாளியின் நோயும் அத்தகையதே.
நன்றி: தமிழர் தகவல்
டாக்டர் எம்.கே.முருகானந்தன்
MBBS (Cey),DFM (Col),FCGP (Col) ,
குடும்பவைத்தியர்.
1,985 total views, 3 views today