சிலபேருக்கு தாங்கள் தமிழ் எண்டு சொல்ல வெட்கம்’ – சிறுகதை

இந்தக்கிழமை முழுவதும் இரவு வேலை செய்யவேண்டும். இரவு நேரங்களில் வைத்தியசாலையின் அவசரபிரிவிற்கு வருபவர்களில் கொஞ்சம் வித்தியாசமானவர்களும் இருப்பார்கள். வெறி முற்றியவர்கள், போதைவஸ்துக்கள் பாவித்து கிலி முற்றியவர்கள் என பல ரகம். சாதி மத இன பால் பாகுபாடுகளின்றி எல்லாநாட்டு மனிதர்களும் இதற்குள் அடக்கம். அவர்களை ஒரு கொன்ரோலுக்குள் கொண்டுவருவது மிகவும் கடினம். நான் ஒரு பெண் தாதி என்பதையும் மறந்து, என் கை கால்களையும் பிடித்துவிடுவார்கள். தமிழ்மக்கள் இப்படி வரும்போது நான் ஒடுங்கிப் போவேன். அவர்களுக்கு நான் ஒரு தமிழச்சி எனக் காட்டிக் கொள்ள விரும்புவதில்லை. அவர்கள் அதை அனுகூலமாக்கிக் கொண்டுவிடுவார்கள். இரவு பத்துமணி இருக்கும். ஒருவர் தலைவிரி கோலத்தில் வந்தார். வயது ஐம்பதிற்கு மேல் இருக்கலாம். அம்புலன்சில் வந்திருந்தார். எலும்புக்கூடு போன்ற உருவம். உடம்பில் ஆடைகள் இல்லை. ஆடைகள் இல்லையென்றா சொன்னேன்! இடுப்பில் ஒரு சாரம் சுருள் சுருளென்று சுருண்டு ஒரு கயிறு போல் ஆகியிருந்தது. உள்ளே எந்தவிதமான மறைப்பு ஆடைகளும் இல்லை. தலைகீழாகக் கவிண்டு கிடந்தார். தலைஅப்சைட் டவுணாகக்’ கிடந்தபோதும், அவரின் பார்வை என்மேல் தான் நிலைகுத்தியிருந்தது. ஊசிப்போன வாழைப்பழமொண்றும் நாறல்பாக்குகள் இரண்டும் கவனிப்பாரற்றுக் கிடந்தன.
நானும் எலிசபெத்தும் வரவேற்பறையில் இருந்தோம். எனக்கு அவரைப் பார்க்க வெட்கமாக இருந்தது. எலிசபெத் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்துச் சிரித்தாள். அந்தப் பார்வை, வந்திருந்தவர் எனது நாட்டைச் சார்ந்தவர் என்பதாகும்.
கரகரவென அவரை இழுத்துக் கொண்டுபோய் ஊசி போட்டார்கள். இதற்கெல்லாம் மருந்து மாத்திரைகள் இல்லை. எல்லாம் அடங்க, அதிகாலையில் அனுப்பிவிடுவோம். இனி அவரைப்போல வேறு சிலரும் வரக்கூடும். சிலவேளைகளில் மிகவும் வயது குறைந்தவர்களும் வருவார்கள். பெண்பிள்ளைகளும் வந்திருக்கின்றார்கள்.
நேரம் பன்னிரண்டைத் தாண்டியிருக்கும். பத்துமணிக்கு வந்திருந்த அந்த மனிதர், தனது படுக்கையிலிருந்து எழுந்து, சுவரைத் தடவித் தடவி எங்களை நோக்கி வந்தார். வெறி முறிந்திருக்க வேண்டும். ஏன் வருகின்றார் என்பது எங்கள் இருவருக்கும் தெரியும். வீட்டிற்குப் போவதற்கு அனுமதி கேட்க வருகின்றார். இவர்களுக்கெல்லாம் வைத்தியரின் அனுமதி தேவையில்லை. நாங்களே பார்த்து அனுப்பிவிடுவோம். உண்மையில் காலைதான் அவரை அனுப்ப வேண்டும். சிலவேளைகளில் அனுமதியின்றி ஓடியும் விடுவார்கள்.
“பிள்ளை…. சீறீலங்கன் தமிழோ?” என்னைப் பார்த்துக் கேட்கின்றார்.
“நோ…”
“அச்சுவேலியிலை கண்ட மாதிரிக் கிடக்கு…”
“நோ…. ஐ ஆம் ஃபுறம் ஆஃபிரிக்கா…” சொல்லிவிட்டு உள்ளே போய் மறைந்து கொண்டேன். எலிசபெத் ஆங்கிலத்தில் சரமாரியாக அவரைப் பேசித் தள்ளினாள். விறுவிறென்று வந்தவழியே நடந்து மறைந்து கொண்டார்.

இரண்டுநாட்கள் கழிந்து, தமிழ்க்கடையொன்றிற்கு சில பொருட்கள் வாங்குவதற்காகச் சென்றேன். பருப்பு, மிளகாய்த்தூள், சரக்குத்தூள்,கருவாடு என தேவையானவற்றை எடுத்துக் கொண்டேன். கணவருக்கு தொதல்’ என்றால் கொள்ளை ஆசை. காசு குடுக்கும் இடத்திற்கு அருகாகவிருந்த கண்ணாடிப்பெட்டிக்குள் அழகு காட்டியது தொதல். அதில் ஒரு சிறு துண்டை வெட்டிக் தருமாறு அங்கே நின்ற பெண்மணியிடம் கேட்டேன். அவர் வெறுங்கையினால் தொதலைப் பிடித்து வெட்டத் தொடங்கினார். “அக்கா கிளவுஸ் போட்டு வெட்டித் தாருங்கோ” கொஞ்சம் காட்டமாகக் கேட்டேன். அவர் முகத்தைச் சுழித்தவாறே தயங்கினார். “சரி அக்கா… எனக்குத் தொதல் வேண்டாம். நீங்க மிச்சத்துக்கு பில் போடுங்கொ” எங்களுக்கிடையே நடந்த இந்த உரையாடலை, யாரோ ஒருவர் உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பது போல் இருந்தது. இப்படியான சந்தர்ப்பங்கள் உங்களுக்கும் நேர்ந்திருக்கலாம். நாங்கள் படு பிஷியாக இருக்கையில், ஆராவது எங்களை மறைவாகவோ அல்லது நேரிடையாகவே பார்க்கலாம். அந்தப் பார்வை., கம்பியில்லாத் தந்தி போல எங்களை வந்தடைந்துவிடும். என்னை அப்படி மறைமுகமாக ஒளிந்து நின்று பார்த்தவர் யார்? இரண்டுநாட்களுக்கு முன்னர் வைத்தியசாலைக்கு வந்த அந்தப் பெருங்குடிமகன் தான். இனி இந்தாளின்ரை தொல்லை… பெரிய தொல்லையாகப் போகின்றது.’
அவசர அவசரமாக பொருட்களை எடுத்துக் கொண்டு கார் நிற்குமிடம் விரைந்தேன். கார் பூற்லிட்டிற்குள் பொருட்களை அடிக்கிக் கொண்டிருக்கும் போது பின்னால் இருந்து ஒரு குரல் வந்தது.
“சிலபேருக்கு தாங்கள் தமிழ் எண்டு சொல்ல வெட்கம்” என் காதிற்குள் குனிந்து சொல்லிவிட்டு விறுவிறெண்டு நடக்கத் தொடங்கினார் அந்தப் பெருங்குடிமகன்.
“அது சரி…. சிலபேர் வெட்கம் மானமில்லாமல் குடிச்சுவெறிச்சு அம்மணமா தலைகீழாக பொதுவெளியிலை கிடந்தால், எங்களுக்கு தமிழ் எண்டு சொல்ல வெட்கமாத்தான் இருக்கும்” சொல்லிக்கொண்டே பூற்லிட்டை மூடிவிட்டு திரும்பிப் பார்த்தேன். நான் சொன்னது அவருக்குக் கேட்டதோ இல்லையோ, அவர் கொஞ்சத்தூரம் போயிருந்தார். அவரின் கையிடுக்கிற்குள்ளால் ஒரு போத்தல் நீண்டு பின்னாலே தெரிந்தது.

— சுருதி

2,500 total views, 2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *