இந்த உலகு மனிதனுக்கு மட்டுமா?
அன்னை வயிற்றில் இருந்தபோதே அவள் உண்டதையும் ஈர்த்து வளர்ந்து பின் பிறந்து
அறுசுவை, தீங்கனிகள் மற்றும் மதுரசம் என தித்திக்க உண்டுறங்கிக் கழித்து, மீண்டும் வயிறு பசி எடுக்க இயற்கையை எதிர்பார்த்து அதனிடம் கையேந்தும் மனிதனை என்றைக்கும் ஒட்டுமொத்த இயற்கையும் ஏமாற்றியதில்லை. இருந்தாலும் மனிதன் மட்டுமே அதன் குழந்தையும் இல்லை. இந்த இயற்கை தன் வளத்தை பேணுவதற்கென, சமநிலை சரியாக இருப்பதற்காக சில சிறப்பம்சங்களை வைத்தே ஒவ்வொரு படைப்பினையும் உருவாக்கியுள்ளது, தனக்குள்ளும் சட்டதிட்டங்களோடே இப்பூமி சூரியனை வலம்வருகின்றது .
உதாரணமாக ஒரு மரமானது தனது இனமும் இம்பூமியில் எங்கும் பரந்து வாழ தன்னை பரப்ப வேண்டியுள்ளது. சில தாவரங்களினுடைய வித்துக்கள் காற்று மற்றும் நீரினால் எடுத்துச் செல்லப்படத்தக்கது. தவிர்ந்த ஏனைய வித்துக்களையுடைய தாவரங்களுக்கு ஓரிடத்திலிருந்து பிறிதோர் இடத்துக்கு எடுத்துச் சென்று பரப்புவதற்கு நகரக்கூடிய உயிரிகளே உதவியாக இருக்கும். இருப்பினும் வெறுமனே அந்த உயிரிகளை தன் தேவைக்காக பயன்படுத்தாமல் அந்த வித்தினை சுற்றி காய் வளர்த்து அந்த வித்து தயாராகும் வரை இனிய சுவையற்ற காய் பதத்திலே வைத்திருந்து பின் அந்த வித்து முளைப்பதற்கான பதம் வந்ததும் அதன் வெளியே காயினை இனிய கனியாக்கி அதனை எடுத்துச் செல்லும் உயிரினத்திற்கு சூரிய ஒளியில் சமைத்த சுவையான உணவாகிய கனியை கொடுத்தே விதையை கையளிக்கிறது. இதுதான் இயற்கையின் உன்னதம். இந்தத் தொடர் நிகழ்வினை மனிதன் தவிர்ந்த பிற விலங்குகள் சரியாக கடைப்பிடிக்கின்றன எனலாம். இயற்கையின் எதிர்பார்ப்பு இன்றைய நாகரிக மனித வாழ்வில் எப்படி முடிகிறது என்பதை உணர்ந்தால் வெட்கித் தலைகுனிவை ஏற்படுத்தும்.
மரத்தில் தொடங்கி மனிதன் வரை அத்தனை விடயங்களையும் மனிதனே உடமை கொள்ள விரும்புகிறான். அவன் அடைந்தவற்றின் மீதுள்ள அலட்சியமும், அடையத் துடிப்பதன் மீதுள்ள அழுத்தமும் இயற்கையில் பாதிப்பை ஏற்படுத்தி எதிர் விளைவுகள் ஏற்படுகின்றன.
சிறு பூச்சிதானே என நாம் அலட்சியமாகப் பார்க்கும் தேனீக்களின் இனம் அழிந்துவிட்டால் குறுகிய காலத்தில் மனித இனமும் அழிந்துவிடும் என ஆய்வில் கூறப்படுகிறது. இன்று கதிரியக்க கோபுரங்கள் மற்றும் பல அதிர்வுகள், பேரிரைச்சல்கள் காரணமாக இத்தேனீக்கள் பெருமளவு அழிந்து வருவதால் தாவரங்களுக்கு இடையேயான மகரந்தச் சேர்க்கை வெகுவாக குறையும். இதனால் தாவரங்களும் பெருமளவாக அழிந்துவிடும். பிறகென்ன மனிதன் மட்டுமன்றி இயற்கையை அண்டி வாழும் அத்தனை உயிரினங்களும் பேரழிவை சந்திக்க வேண்டி வரும். நகரப்புறங்களில் வளர்க்கும் காய்கறித் தோட்டங்களில் செடிகள், மரங்கள் அதிக பூக்களை பூத்தாலும் அவை பின் மகரந்தச் சேர்க்கையின்றி உதிர்ந்துவிடும் இதனால் அதிக காய், கனிகளைப் பெறமுடியாமல் போவதை கண்கூடாக காணலாம்.
தின்று தீர்த்த உணவின் சமிபாட்டுக் கழிவுகளை மண்ணோடு சேர்த்தால் அடுத்த நிமிடமே அது மண்ணோடு சமிபாடடையும் வேலை நடைபெறத் தொடங்கும். இதுதான் படைப்பு. இன்று எத்தனை நாள் அதனை வயிற்றில் கட்டிவைத்து பின் தொட்டிகளில் அடைத்து, பின் இறப்பர் குழாய்களில் அடைத்து. பலநாட்களின் பின் கொடுமையானதொரு பொருளாக்கிவிட்டு இயற்கையின் கரங்களில் கொடுத்தால் அது என்ன செய்யும். ஆற்றில், குளத்தில், கடலில் உள்ள பிராணிகள் இந்த பெயரிடப்படாத பொருளை எப்படி ஏற்று உயிர் வாழும். மனிதக் கழிவுகள் மட்டுமன்றி தொழிற்சாலைகளின் இயந்திரக் கழிவும் சேர்ந்தே கூட்டு அழிவை மேற்கொள்கின்றன.
மண்ணினால் சமிபாடடைய முடியாத பொலித்தீன் பொருட்களை உபயோகிக்க கூடாது என்ற விழிப்புணர்வினை ஏற்படுத்தும் சட்டத்தினால் ஏன் அதனை தடை செய்ய முடியவில்லை என்பது பௌதீகத்தின் மேலுள்ள கரிசனையற்ற தன்மையினைக் காட்டுகிறது. இரசாயனக் கழிவுகள், அதிகப்படியான புகை, காடழிப்பு என நீண்டு செல்லும் மனிதனின் அலட்சியப் போக்குகள் சிறு புற்கள் தொடங்கி மண்புழு, வண்டு, பூச்சி, மீன், பறவை, விலங்குகள் என அத்தனை உயிரினங்களுக்கும் மிகப் பெரும் இடைஞ்சலாகிவிட்டது.
அணுகுண்டு தயாரிப்பில் நாட்டுக்கு நாடு போட்டியிட்டுக் கொண்டிருக்க ஏற்கனவே தயாரித்து வெற்றி கண்ட நாடுகள் அதனை வைத்து பிற நாடுகளை மிரட்டிக் கொண்டிருக்கிறது. நூறு வருடங்களுக்குள் வாழ்ந்துவிட்டு இவ்வுலகை விட்டே சென்றுவிடக் கூடிய ஒரு தலைமுறையானது இப்பூமியில் ஏனைய உயிரினங்களுக்கும், இனி வரும் தலைமுறைக்கும் காலாகாலமாக சிதைவை ஏற்படுத்தக்கூடிய ஒரு செயலை எவ்வாறு உருவாக்கலாம்? இனி பிறக்கப்போகும் தலைமுறைக்கும், இப்போது அணுகுண்டை உருவாக்கி யுத்தத்துக்கு தயாராகி இருப்பவர்களுக்குமிடையே என்ன பகை? இது எத்தகைய ஈனச் செயல். இப்பூமியில் இப்படிப்பட்ட பாரிய இயற்கை சிதைவை ஏற்படுத்த மனிதனுக்கு என்ன அதிகாரம் உள்ளது?
இப்புவியில் படைக்கப்பட்ட ஒவ்வொரு விடயமும் இயற்கை சமன்பாட்டில் முக்கிய பங்காற்றுகிறது. அதனை தகர்க்கும் மனித செயற்பாடுகளில் இருந்து விழிப்புணர்வு பெற வேண்டும். இயற்கையினை பாதுகாக்க ஒவ்வொரு தனி மனிதனும் அக்கறை எடுக்காதவிடத்து அதன் எதிர் விளைவுகளை தானும் அனுபவிப்பது மட்டுமன்றி இவ்வுலகை நம்பி வாழும் எல்லா உயிரினங்களுக்கும் தீங்கினை ஏற்படுத்தும் என உணர வேண்டும். அது தவிர இந்த இயற்கை தன் சமநிலையில் சரிவை சந்திக்கும் போது அதை சரிசெய்வதற்காக நிச்சயம் பாரிய எதிர் விளைவுகளை ஏற்படுத்தும். அப்போது இயற்கையினால் மனிதருக்கு விழும் சவுக்கடிகள் அப்பாவி உயிர்களையும் சேர்த்தே தாக்கக் கூடும்.
2,059 total views, 3 views today