ஆகா வந்திடுச்சு சூம் பாட்டி. (zoom party)

எப்பதான் இனிச் சேலை உடுப்பது வேட்டி கட்டுவது!

என்னப்பா நான் இஞ்சை எதை உடுக்கிறது என்று மாறி மாறி உடுத்து கொண்டு இருக்கிறேன். நீங்க என்னவென்றால் நியூஸ் பார்த்துக்கொண்டு இருக்கிறியள். இஞ்சபாருங்கோ அண்டைக்கு சியாமிளாவின் மகளின் கல்யாணவீட்டுக்கு இதே உடுத்தனான்! நீங்களும் வடிவாக இருக்கு என்றும் சொன்ன நீங்கள். அட நான் எப்பதான் வடிவில்லை என்று சொன்னனான். இது அவன் மனதுக்குள் சொன்னது உங்களுக்கு கேட்டது என்றால் நிச்சயம் நீங்கள் ஆம்பிளைதான்.

வேட்டி தேடியெடுத்து அயன்பண்ணி கட்டிவிடும் வரைக்கும் நான் வேணும். இப்ப நான் கேட்ட கேள்விக்கு மட்டும் ஒரு பதிலும் இல்லை. ஏதோ எனக்கு சேலையுடுத்தி அழகு பார்க்கிற மன்மதன் என்ற நினைப்பு அவருக்கு. என்ன மிஞ்சி மிஞ்சிப்போனா ஒருக்கால் தாவணியை இழுத்து பிளவுசிலை பின்னுக்கு ஒரு ஊசி குத்திவிடுவார், இல்லை என்றால் ஒருக்கால் என்ரை சேலை காலடியில் ஏறி நின்றால், குனிந்து இழுத்து விடுவார். மற்றது கல்யாணவீடு என்றால் ஆலாத்தி எடுக்கும்போது மறைஞ்சு நின்று உஸ், உஸ், என்று சேலை விலத்தி வண்டிதெரியுது என்று சைகை காட்டுவார். ஏதோ இந்தக் கண்காணிப்புகக்கு மட்டும்தான் கல்யாணம் பண்ணினமாதிரி.

இப்ப கொரோன வந்ததும் வந்தது, கோவிலும் இல்லை, பிறந்தநாளும் இல்லை, திருமணங்களும் இல்லை, கவலைகள் மறக்க ஒரு கலைவிழாவும் இல்லை. பழைய படங்கள் பார்த்து பார்த்து எதோ சிவாஜி எம்.ஜி.ஆர்.முத்துராமன்.ஜெமினிகணேசன் நாகேஷ்,ஜெயலலிதா, பத்மினி சாவித்திரி எல்லாம் இப்பவும் உயிரோடு இருகிறமாதிரி இருக்கு. தியேட்டரில் படம் பார்க்காமல் அஜித் விஜய் எல்லாம் இன்னும் பிறக்காதமாதிரி இருக்கு.

ஏதோ வாழ்க்கையில் இன்று இப்படிக் கழிகிற காலத்தை கணக்கில் சேர்க்க முடியாதது போல் வாழ்கை போகிறது.
சேலை எப்பதான் உடுக்கிறது? விடுமுறைக்கு எப்பதான் புறப்படுகிறது. பாடசாலை 80ம் ஆண்டு பச் 90ம் ஆண்டு பச் என்று பச்பச்சா ஆண்கள் தனியாக பெண்கள் தனியாக வேறு நாடுகளில் சந்தித்து பழையகதைகள் பேசுவது. கோவிலுக்கு எப்ப போவது? கும்பிட்டு முடிய எப்ப இனிக் கூட்டம் கூடுவது. சொப்பிங் எப்ப போவது எப்படி மனுஷனின் பொறுமையைச் சோதிப்பது.
புதுக்கார் எப்ப மாத்திறது. வீட்டில் மனைவி ஆறு கறியோடு சமைத்தாலும் மெல்ல கடையில் ஏதும் வாங்கி போட்டுவிட்டு வந்து வீட்டில் எப்ப இனி டயட் நாடகம் ஆடுவது.
இப்படி எப்ப எப்ப என்ற கேள்வி அப்பப்பா அடுக்கிக்கொண்டே போகலாம். எப்போது என்ற கேள்விக்கு பதில் கிடைக்குமா? கிடைக்காதா?
நாம் புலம்பெயர்ந்து வந்து மிளகாய்த்தூள் இல்லாமல் குழம்பும், தேங்காய்ப்பால் இல்லாமல் சொதியும் வைத்த எங்கள் ஆரம்ப வாழ்க்கையை ஒருமுறை (zoom) சூம்பண்ணிப் பார்த்தால் இதற்கும் ஒரு மாற்றீடு வராமலா போய்விடும்.
ஆகா வந்திடுச்சு சூம் பாட்டி. (zoom party )

பிள்ளையள் ஏன் தாய்மாரும் இப்ப போட்டி போட்டுக்கொண்டு வெளிக்கிடுகினம். என்னப்பா நீங்கள் வேலையும் இல்லை ஒண்டுமில்லை உதில் இருந்து ரீவி யை நோண்டிக்கொண்டு இருக்கிறியள் என்பாள் மனைவி.. நீங்களும் வந்து வெளிக்கிட்டு வாருங்களேன். இண்டைக்கு கனடாவில் உங்கடை தம்பியின் மகளுக்கு  கல்யாணம் அல்லோ. எனக்கு இப்ப சேலைத் தலைப்பை மட்டும் பின்னுக்கு பிளவுஸ்சில்  ஊசியால் குத்திவிட்டால் போதும், மற்றது காலுக்குள் சீலை ஒன்றும் இழுக்கத்தேவை இல்லை. பிள்ளையளையும் வெளிக்கிடச் சொல்லுங்கோ. மகன் நீங்க சொன்னாத்தான் கேட்பான்.

அவன் அப்போதே வெளிக்கிட்டுவிட்டான். மகள்தான் பேசிங் முடியவில்லையாம். நீங்கள் சறத்தோடை மேலை சேட்டைப்போட்டு ரையைக் கட்டுங்கோ, மடிக்கணனியை கவனமாக செட்பண்ணிவைத்தால் இடுப்புக்கு கீழ் தெரியாது.
வீடு எல்லாம் துப்பரவாக்க வேண்டாம்.  தேத்தண்ணிக் கோப்பை மற்றது மேசையில் கிடக்கிற உங்கட கடிதங்கள் பேப்பர்களை கொஞ்சம் ஒதுக்கினால்; போதும். இந்தச் சுவர்பக்கம் வேண்டாம். அதிலை வெளிச்சம் வராது. பிறகு நாம் கறுப்பாய்த் தெரிவோம்.  நேர யன்னலுக்கு எதிராக லப்ரொப்பை அதுதான் மடிக்கணனியை வையுங்கோ, மகளை ஒருக்கால் சரிபாக்கச்சொல்லுங்கோ. அவளுக்குதான் எந்த வியூவிலை தான் வடிவு என்று தெரியும்.

மற்றது வீட்டு போன் வயறைப் பிடுங்கிவிடுங்கோ.
சூம்;பாட்டி தொடங்கப்போகுது, அக்காவின் பிள்ளையள் அவுஸ்திரேலியாவில் இருந்து வருகினம். அண்ணன் தம்பி பிள்ளைகளும் அவை இலங்கையில் இருந்து வருவினம். கரன் கட்டு மழை என்றால் அங்கு தெளிவாக இருக்காது.

சூம்பாட்டி தொடங்கிவிட்டது. எனப்பா நேரில் இருக்கிறமாதிரி இருக்கு. இஞ்சை பாரும், தம்பியின் மகள் எனக்கு லட்டு விருப்பம் என்று முகத்துக்கை நீட்டிப் போட்டு போகிறாள். நேரில் இருக்கிற மாதிரி இருக்கு. வீடு நல்ல பெரிதாகக்கிடக்கிறது. அது கனடா வீடு அப்படித்தானே. நான் அப்ப சொன்னேன் கனடாவிற்கு மாறுவோம் எண்டு நீங்கள் பயந்தாம்கொள்ளி. சரி சரி  கொஞ்சம் இந்த லப்ரொப்பை திருப்பும். ஏன் அப்பா. இல்லை நான் பிறகு சொல்லுறேன் இப்ப திருப்பும். அவர் அதைப்பிறகு சொல்லுறேன் என்றது. -அலுமாரிக்கு மேல் அவசரத்தில் ஒதுக்கும்போது மேலை தூக்கிவைத்த பியர் போத்தல்கள் தலை நீட்டிக்கொண்டு எட்டிப்பார்க்குது.-என்றதுதான். இதை அண்ணர் யாழ்ப்பாணத்தில் இருந்து பார்த்தால் கதை கந்தல்.
ஏதோ விஜய் ரிவியில் சுப்பர் சிங்கர் மற்றது நீயா நானா வுக்கு குப்பைகளை விட்டு விட்டு செற்றை மட்டும் போக்கஸ் பண்ணிக் காட்டுவதுபோல இருக்குது எங்கடை சூம்பாட்டியும்.
என்னதான் இருந்தாலும் அண்ணனும் பிள்ளையளும் அந்த மாமரத்துக்குக் கீழே நின்று கதைக்கிற அழகு வரவே வராது. நீங்கள் அப்படி நினைக்க, அவர்கள் அட தம்பி குடுத்து வைத்தவன் பாரடா வீட்டை என்னமாதிரி வைச்சிருக்கிறான். ஒரு குப்பையும் இல்லை. இப்படியான அக்கரைப் பச்சை என்றைக்கும் இருக்கும்.
கல்யாணவீடு சூம்பாட்டி இப்ப முடிஞ்சுது.

இனி மகள் (holidav) கொலிடே போகிறாளாம், மாலைதீவுக்கு. என்னடா ஒரு பிளேனும் இல்லை எப்படி பறக்கப்போகிறாள் என்று பார்த்தால், அவளது சிநேகிதிகள் சூம்பாட்டி கொலிடேயை ஒழுங்கு செய்திருக்கினமாம். போனமுறை போனதை நினைவு படுத்தி அந்த குறூப்புகள் கதைக்கபோகினமாம்.
அதற்கு பெட்டி அடுக்குவதில் இருந்து எல்லாம் நடக்கும். இந்த உடுப்பு வெய்யிலுக்கு நல்லதோ. அட இது கொஞ்சம் கண்ணறையாக இருக்கு இதை எடுக்கட்;டா என்பதில் இருந்து கதைகள் எல்லாம்  நிஜயமாகவே இருக்கும். கொஞ்சம் ஒட்டி நின்று சம்பாஷனையைக் கேட்டால். உலகில் கொரோனோ என்று ஒன்றுமே இல்லை எனத்தோன்றும். அல்லது மண்டை தட்டிப்போச்சோ என்று எண்ணவைக்கும்.

உண்மையில் இந்த வீடியோ சம்பாஷனைகள், முன்னர் வணிகநோக்கத்திற்கும். மற்றும் ஆசிரியர்கள் கலந்துரையாடலாகவும் மட்டுமே பாவனையில் இருந்தது. இப்ப இலங்கையில் தேங்காய் புளிஞ்சு மீன்குழம்பு வைச்சு முடியும் வரைக்கும் இருக்கும். இங்கு  உடுப்புகள் தோய்த்து அயன் பண்ணி முடியும் வரைக்கும் தொடரும்.
இது இப்படி என்றால் சிங்கப்பூரில் ஒரு குற்றவாளிக்கு அவரது குற்றங்களை சூம்பண்ணி மரணதண்டனை கூட விதித்து விட்டார்கள்.

சிங்கப்பூரில்;COVID-19 மேலும் பரவலைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளுக்கு இணங்க, நீதிமன்றங்கள் குற்றவியல் விவகாரங்கள் தொடர்பான விசாரணைகள் வீடியோ கான்பரன்சிங் மூலம் (video conferences) நடத்தி வருகின்றன. அதன்படி மலேசிய வாலிபர் (37) புனிதன்; கணேசன் போதைப்பொருள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டார். 2011 ல் 28.5 கிலோகிராம் ஹெராயின் கடத்தலுக்கு அவர் உடந்தையாக இருந்தார். கடந்த மாதம் 15.05.2020 வெள்ளிக்கிழமை, உயர்நீதிமன்ற அதிகாரிகள்,  குற்றவாளி மற்றும் அவரது சட்டக் குழுவினருக்கு இடையிலான சூம் (zoom ) அழைப்பு விசாரணை மூலம் அவருக்கு மரண தண்டனை விதித்தனர்.
நாம் விளையாட்டாக செய்யும் இந்த தொழில் நுட்பத்தை ஒரு அரசாங்கம் மரண தண்டனை வழங்கும் அளவிற்கு ஒரு குற்றவிசாரனைக்கும் பயன் படுத்துகிறது என்று எண்ணும்போது சற்று பயமாகவே உள்ளது.

வீட்டுக்குள் சும்மா எப்படி இருப்பது அதிலும் தமிழர் வாழ்வு எப்போதுமே சமூகம் சார்ந்தது. எந்த நாட்டில் நாம் வாழ்ந்தாலும் அந்த நாட்டவரை விட அதிக தொலைதூரம் வரை சென்று உறவுகளுடன் கொண்டாடுவது எமது தமிழ் இனமே.
சூம் பாட்டி சற்று நகைச்சுவையாக இருந்தாலும். நாம் மன அழுத்தம் அதிகரிக்காமல் இருக்க இவை அவசியாமாகிறது. நம்மை நாமே சற்று அலங்கரித்து மகிழாமல் வீட்டில்தானே இருக்கிறோம் என்று எண்ணி இருந்துவிட்டால். முடிவு தெரியாத இந்த இக்கட்டான நிலையில் நாம் காட்டுவாசிகள் போல் ஆகிவிடுவோம். தினமும் முகச் சவரம் செய்யும் நாம் அதனையும் மறந்துவிடுவோம்.

-மாதவி

1,840 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *