யேர்மனியில் ஐம்பது பேர் கூடும் திருமணங்கள்

தமிழர்கள் எந்தச் சூழலிலும்
வாழக் கற்றுக்கொண்டவர்கள்.
திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது. இரு மனங்கள் மட்டும் சேர்வது அல்ல இரு குடும்பங்கள் சேர்வது ஆகும். திருமணம் என்பது அழகானது. காதல், அன்பு, புரிதல், விட்டுக்கொடுத்தல் இப்படி பல நல்ல விடயங்களைக் கொண்டது.
இந்நாளை மணமகனும் மணமகளும் அவர்களின் குடும்பங்களும் எதிர்பார்த்துக் கொண்டு இருப்பார்கள். ஒவ்வொரு விடயங்களையும் பார்த்துப் பார்த்து செய்வார்கள்.
அனைத்தையும் அழகாக திட்டமிட்டுக் கொண்டு இருக்கும் வேலளயில் கொரோனா என்ற நோய்ப்பரவலால் அனைவருடைய கனவுகளும் அழிந்துவிட்டன. நண்பர்களையும், உறவினரையும், ஊரில் உள்ள அனைவரையும் அழைத்து ஊர் அறிய திருமணம் செய்ய நினைத்த அனைவருக்கும் மனவருத்தம். ஏனெனில் இன்று யேர்மனியில் ஐம்பது பேர் மாத்திரம் திருமண விழாவுக்கு ஒன்று கூடலாம். யாரை அழைப்பது யாரை விடுவது? இக்கட்டான சூழ்நிலையில் தள்ளுப்பட்டுள்ளனர். என்ன செய்வது?
ஐம்பதோ நூறோ திருமணம் என்பது சிறப்பாக நடக்கவேண்டும். ஆனால் சிலருக்கு மகிழ்ச்சி தருமா? ஐம்பது பேருடன் மாத்திரம்?
மகிழ்ச்சி என்பது எண்ணிக்கையில் அல்ல எங்கள் அனைவரின் மனதில் மட்டுமே! நிறைவாக எங்கள் பண்பாட்டுக்கேற்ப யார் மனதையும் புண்படுத்தாமல் நடப்பதே திருமணம். இந்நிலையில் திருமணங்களில் ஏற்படும் வீண் செலவுகள் தவிர்க்கப்படும். பண்பாடுகள் காக்கப்படும்.
திருமணம் செய்து கொள்பவர்களுக்கு நான் கூற விரும்புவது, நிறைய பேர் வரமுடியாவிட்டாலும்
நீங்கள் நினைத்தவாறு, திட்டமிட்டவாறு உங்கள் திருமணங்களை அழகாகவும், நிறைவாகவும் நடாத்துங்கள். நடந்து கொண்டு இருப்பதையும், நடக்கப்போவதையும் நல்ல மனதோடு ஏற்றுக்கொள்ளுங்கள். காலங்கள் ஒருபோது நமக்காகக் காத்திருக்காது. அந்த அந்தக் காலத்தில் செய்யவேண்டியதை செய்துகொண்டுதான் இருக்கவேண்டும்.
பலர் கூடிமகிழ்ந்து வாழ்த்தினால் மகிழ்ச்சிதான். அதே நேரம் காலம் நேரம் அறிந்து புரிந்து எங்கிருந்தாலும் நல்வாழ்த்துக் கூறினாலும் அது நலமானதே என உணரவேண்டும். தாயகத்தில் எத்தனை திருமணங்கள் போர்க்காலச்
சூழலில் சுருக்கமாக சிறப்பாக நடைபெற்றன. நாம் எந்தச் சூழலிலும் வாழக் கற்றுக்கொண்டவர்கள்.
-றஜினா தருமராஜா
1,968 total views, 4 views today