உண்டால் அம்ம இவ்வுலகம் !
இறுகிய நாட்கள் தொடர்ந்து நீளுகின்றன,இதெல்லாம் ஒரு கனவாய் இருந்து சட்டென விழித்துப் பார்க்கையில் உலகம் பழைய நிலைக்குத் திரும்பாதா என்று கனவுக்காக நித்திரைகொள்ளும் மனங்கள் ஏங்கிக் காத்துக் கொண்டிருக்கின்றன, ஒரு புறம் மனிதர்கள் வீட்டினுள் அடைந்து கிடைக்க மறுபுறம் இயற்கை தன்னைத் தானே சரி செய்துகொண்டிருக்கிறது.
கங்கையில் தூய நீர் பெருக்கெடுத்து ஓட, அறிய தாவரங்களும் பறவைகளும் பாடிக்களிக்கின்றன. எந்த சோதனை வந்த போதும் இந்த உலகம் சுழன்று கொண்டுதான் இருக்கிறது. வள்ளுவர் மழை பெய்வதற்கு அழகாய்ச் சொல்லுவார் நல்லோர் ஒருவர் இருந்தால் அவருக்காக மழைப் பெய்யும் என்று அது போல, நல்ல மனங்கள் இருப்பதால் தான் இந்த உலகம் இன்னமும் அழியாமல் இருக்கிறது.
இதனை நாம் இன்றைக்கு யோசித்துப் பார்க்கிறோம், ஆனால் அடுத்தவர்க்கு ஒரு குறையென்றால் இயற்கையிலேயே பதறும் தமிழர் மனம் அன்றே யோசித்திருக்காதா ? தமிழ் இலக்கியங்கள் உலகிற்கே வழிகாட்டி அல்லவா ?
மூன்று தமிழும் செழித்து வளரும் இடம், வற்றாத வையை வளங்கொழிக்கும் இடம், நீரில் விளையாடும் கெண்டை மீன்கள் வானில் தென்னவனின் கொடியில் பறக்கும் இடம், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை அது, அந்த பெருமையுடைய மதுரை நகரை தலைநகராக்கி சங்ககாலத்தில் பாண்டியர் மரபில் உதித்த மன்னன் ஒருவன் பல நாடுகளுகையும் வென்று கப்பல் படையால் சாவகம், கடாரம் என நாவாய்கள் ஒட்டி பெரும்புகழ் அடைந்திருந்தான். அவன் பெயர் இளம்பெருவழுதி !
கடற்படை போருக்குச் செல்லும் பொழுது மன்னர்களும் தம் கடற்படையோடு செல்வது வழக்கம். அவ்வாறு கடற்படையோடு இளம்பெருவழுதி சென்ற பொழுது, அவன் சென்ற கப்பல் கவிழ்ந்ததால் அவன் கடலில் மூழ்கி இறந்தான். அவனுக்கு கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி என்ற பெயர் நிலைத்துவிட்டது, ஆனால் வெறும் நாவாய் ஓட்டி நாடுகளை வெல்லும் அரசனாய் மட்டும் இருந்திருந்தால் இன்றைக்கும் அவனை நாம் நினைத்துப் பார்த்திருக்க மாட்டோம், சங்கத்தில் இருந்து தமிழ்க் கவிகள் எழுதியிருக்கிறான் அவன்.
சங்க இலக்கியத் தொகுப்பில் புறநானூற்றில் ஒரு பாடலையும் பரிபாடலில் ஒரு பாடலையும் இவன் பாடியிருக்கிறான்.
அவன் யோசித்திருக்கிறான் இப்பாடல் மூலம் ஏன் இந்த உலகம் இன்னமும் நிலைபெற்றிருக்கிறது என்று.
“உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத்
தமியர் உண்டலும் இலNர் முனிவிலர்;
துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப்
புகழ்எனின் உயிருங் கொடுக்குவர்; பழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்;
அன்ன மாட்சி அனைய ராகித்
தமக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே” (புறம்: 182)
தன்னலம் துறந்து வாழ்பவர்கள் இந்திரனின் தேவாமுதம் போன்ற கிடைப்பதற்கரிய பொருள் கிடைத்தாலும் கூடத் தனக்கென மட்டுமே பதுக்கி,ஒதுக்கி வைத்துக் கொள்ளாதவர்களாகப் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் பண்பாளர்களாக மட்டுமே இருப்பார்கள்.
யாரையும் அவர்களால் வெறுக்கவோ,பகையாளிகளாக ஆக்கிக் கொள்ளவோ முடியாது. எவருமே செய்ய அஞ்சக் கூடிய பழிச் செயல்களுக்கு அஞ்சி அவற்றைச் செய்யாமல் இருப்பதோடு, அவற்றுக்குத் தீர்வு காணக் கூடிய செயல்களில் மனச் சோர்வும் சலிப்பும் கொள்ளாமல் தொடர்ந்து இயங்குவர்.
புகழுக்காகத் தங்கள் உயிரையையும் கொடுக்கத் துணியும் அவர்கள் பழி வருமெனின் உலகையே பரிசாகத் தந்தாலும் அப்படி ஒரு செயலைச் செய்யத் துணியாதவர்கள். மனதை எந்த வகையான சஞ்சலங்களுக்கும்,உளைச்சல்களுக்கும் ஆட்படுத்திக் கொள்ளாதவர்களாக-எடுத்த காரியம் வெற்றியுடன் முடிய வேண்டுமென்ற ஒற்றை இலக்குடன் மட்டுமே உறுதியுடன் இயங்குவர். தனது முயற்சிகளை,சக்திகளைப் பிறருக்காகவே அர்ப்பணித்து வாழும் அத்தகைய மாண்பிற்குரியாளர்களால்தான் உலகம் சுழல்கிறது என்கிறது பாடல்
திருக்குறளில் பல அதிகாரங்களில் விளக்கமாகக் கூறப்பட்டிருக்கும் கருத்துகள் இப்பாடலில் சுருக்கமாகக் கூறப்படிருக்கின்றன. குறிப்பாக, விருந்தோம்மபல், அன்புடைமை, வெகுளாமை, அறிவுடைமை, மடியின்மை, தீவினையச்சம், ஊக்கமுடைமை, புகழ், ஈகை, ஒப்புரவு, பண்புடைமை ஆகிய அதிகாரங்களின் மையக்கருத்துகளை இப்பாடலில் காணலாம்.
சில சமயம் அடைந்து கிடப்பதும் நமக்கு சில படிப்பினைகளை சொல்லிக்கொடுக்கத்தான், பிறரையும் வாழவைத்து நாம் வாழ்வோம் ! அதனால் தானே உலகம் இன்றும் நிலைத்திருக்கிறது ?
-தனசேகர். பிரபாகரன்
3,665 total views, 3 views today