மூச்சுவிட இடம் தேவை

புணர்தலும் பிரிதலும்

ஒத்த அன்பினராகிய ஒருவரும் ஒருத்தியும் கூடுகின்ற காலத்தில் பிறந்த பேரின்பம் காதல் எனப்படுகின்றது. சங்ககாலத்திலே காதல் என்பது பேரின்பமாகவே கருதப்பட்டது. இந்த காதலர் இருவர் கருத்தொருமித்து உடலாலும் உள்ளத்தாலும் இணைந்து தமக்குள் இன்பம் துய்த்து வாழ்தல் காதல் என்று நச்சினார்க்கினியர் அழகாக எடுத்துக் காட்டியுள்ளார். அக்காலத்திலே திருமணம் என்ற முறை இருக்கவில்லை. ~~பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப” அதாவது கரணம் என்றால், சடங்குகள். இந்த திருமணச் சடங்குகள் வந்தமைக்குக் காரணம் களவில் கூடிய காதலன், களவு வெளிப்படும் காலத்தில் நான் அப்பெண்ணைக் கண்டதில்லை என்று கைவிட்டு விடும் நிலை மேலோங்கிக் காணப்பட திருமணச் சடங்கு முறைகள் வழக்கத்திற்கு வந்தன. இவ்வாறே மணவினை முடித்து இன்பம் துய்த்திருப்பது இயற்கை. எதுவாக இருந்தாலும் வேறு வேறு குடும்பச் சூழலில் இருந்து வெவ்வேறு குணாதிசயங்கள் உள்ள இருவர் இணைகின்ற போது சிற்சில விட்டுக் கொடுப்புக்களும், புரிந்துணர்வுகளும் ஏற்பட வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. விருப்பு வெறுப்புக்கள் ஆளுக்காள் மாறுபடலாம். அதனைப் புரிந்து நடந்து கொள்ளும் போதே மனக்கசப்புக்கள் குறைந்தளவில் ஏற்பட்டு மணவாழ்க்கை சுமுகமாக அமையும்.

சென்ற ஆறு மாதங்களில் திருமண பந்தத்தை அறுப்பதற்காக பதிவு செய்துள்ளோர்களின் புள்ளிவிபரம் அதிகரித்துக் காணப்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். இதற்குக் காரணம் யாது? மனக்கசப்பும் மனச்சோர்வுமே இதற்குக் காரணங்களாக அமைகின்றன. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஜப்பான் குறைந்த வாடகையில் தங்கும் விடுதிகளை அமைத்து ஒருநாளுக்கு 36 ஒயிரோக்களை சம்பாதிக்கின்றனர். இளந்தம்பதிகளுக்குத் தம்முடைய தாம்பத்ய வாழ்வை சரியான முறையில் நடத்தத் தெரியவில்லை, விட்டுக் கொடுப்புக்கள் இல்லை, புரிந்துணர்வு இல்லை, சகிப்புத் தன்மை இல்லை. எத்தனை பேரைத்தான் தெரிவு செய்து வாழ்வார்கள்? பிடிக்கவில்லை, பிரிகின்றோம் என்று இவர்களுக்கு எத்தனை பேரைப் பிடிக்காமல் போகும்? என்று பலவாறாகப் பேசும் பெரியவர்களே இக்காலங்களில் என்னையும் அவளையும் வெட்டி விடுங்கள் கடைசிக் காலத்தில் நிம்மதி வேண்டும் என்று விவாகரத்துக்குப் பதிவு செய்கின்றார்கள். இல்லையென்றால், இவ்வாறான விடுதிகள் தேடிப் போகின்றார்கள். இதிலிருந்து என்ன தெரிகின்றது என்றால், மனம் என்பது ஆளுக்காள் மாறுபட்டுத்தான் உருவாக்கப்படுகின்றது. மனப்பதிவுகளும் அவருக்கு ஏற்றாற்போலவே பதியப்படுகின்றன. மூலத்தை மாற்ற முடியாது என்றே கருதுகின்றேன். மாற்றத் தொடங்கினால், மனஅழுத்தம் ஆரம்பமாகும். முதுமையென்ன, இளமையென்ன உணர்வு என்பது ஒன்றே.

கொரொனாக்கு 1.5 மீற்றர் இடைவெளி தேவை போல் கணவன் மனைவிக்கு இடையிலும் இவ் இடைவெளி தேவைப்படுகின்றது போலும். கணவன் வீட்டில் இருக்கின்ற போது தம்முடைய சுதந்திரம் பறி போவதாகவும், தம்முடைய நாளாந்த வேலைகள் அதிகமாக இருப்பதாகவும் பெண்கள் கருதுகின்றார்கள். அதிகமான நேரம் ஒன்றாக இருக்கும்போதும், நெருக்கம் அதிகமாகும் போதும் வாக்கு வாதங்கள் அதிகரிப்பதாகவும் தம்முடைய சகல விடயங்களிலும் ஒருவருக்கொருவர் தலையிட்டு பிரச்சினைகளை அதிகரிப்பதாகவும் இருவரும் கருதுகின்றார்கள். வீட்டில் இருக்கும் ஆணுக்குத் தேவையான சுகங்களைப் பெண் கொடுக்காத பட்சத்தில் கருத்து வேறுபாடுகளும் மன உழைச்சல்களும் ஏற்படுவதற்கு சந்தர்ப்பம் இருப்பது நிஜமே. கோபம் வந்தால், அதனைத் தவிர்ப்பதற்கு வெளியே போகின்ற நிலை கடந்த மாதங்களில் சாத்தியப்படவில்லை. ஆளுக்காள் பேச்சு வளருகின்ற போது மனக்கசப்புக்கள் ஏற்படுவது இயல்பே.
எனவே ஒருவருக்கொருவர் சுமையாக இல்லாமல் சுகமாக இருக்கும் பட்சத்தில் வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கிப் பிரவாகிக்கும். யாராக இருந்தாலும் சிறிதளவு மூச்சுவிட இடம் தேவை.

— கௌசி

1,508 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *