அம்மா சமைத்த உணவில் அத்தனை இனிமை எப்படி?
கடைசி உருண்டையில்த்தான் அதிக சத்து உண்டு என்று அத்தனை உணவையும் ஊட்டி விடுவார் அம்மா என்பார்கள் .
அவரை மகிழ்விக்க வேண்டுமானால் இன்னொரு கோப்பை உணவு கேட்டாலே போதும். இது எத்தகையதொரு உன்னத உணர்வு. உணவுக்கும், உணர்வுக்கும் அப்படி என்ன ஒரு நெருக்கம்? “அழுதுகொண்டு சமைக்காதே”, “துயரத்தோடு உணவருந்தாதே”, “இன்னார் கையால் வாங்கி உண்ணாதே” “அடுப்பங்கரையில் நின்று அழாதே” என பெரியோர்கள் கூறிக் கேட்டிருக்கிறோம். இவை நேர்மறை மற்றும் எதிர்மறை அதிர்வலைகளைக் குறிப்பன. வெறும் அடுப்பு தானே என்றல்லாது அடுப்பிற்கு நீறிட்டு, பொட்டிட்டு பின் வைக்கும் உலைப்பானையை தொட்டு வணங்கும் பக்குவம் எப்படி உருவாகிற்றோ? அடுப்பங்கரைக்கு ஏன் இத்தனை மரியாதை?
பாரப்பரிய வாழ்வில் ஒரு திருமண வீட்டிற்கோ அல்லது விருந்தினர் வீட்டிற்கோ தாயாருடன் பிள்ளைகள் யாரேனும் சென்றுவிட்டால் உணவு பரிமாறும் வேளையில் பெரும்பாலான அன்னையர் தம் பிள்ளைக்கு தாமே எடுத்து பரிமாறுவதாக இடைமறிப்பார்கள். இதையே அந்த பிள்ளையும் விரும்பும். அன்னைக்கு நன்கு தெரியும் எதை அதிகம் விரும்பி தன் பிள்ளை உண்ணும் என்றும், எவ்வளவு உண்ணும் என்றும், தன் கையால் அன்போடு பரிமாறும் போது கூச்சமின்றி பிள்ளை உண்ணும் என்பதும் அன்னை நன்குணர்வார். பொதுவாக ஒரு அன்னை உணவு தயாரிக்கும் போது அந்த தருணத்திலேயே அக்கறை, அன்பு, என்ன சத்துக்கள் தேவை என்ற கவனம், மற்றும் தான் அறிந்து வைத்திருந்த உணவுப் பத்தியமுறை, மருத்துவம் எல்லாமே சரியாக கவனிக்கப்பட்டிருக்கும். இவை எல்லாவற்றையும் விட அன்பினால் ஏற்படும் நல்ல நேர்மறையான அதிர்வலைகள் அந்த உணவில் இருக்கும். ஏனெனில் இது அந்த தாயின் உருவாக்கத்தில் அமைந்த குடும்பம் எனப்படும் தன் நேசத்துக்கான கோயில்.
சமையல் கலை என்பது வெறுமனே சுவையாக சமைக்க தேர்ச்சி பெறுதல் என்பதல்ல. அது ஒரு படைப்பு, தாய்மை நிறைந்தது. இது மிக கவனத்தோடு தூய தவம் போன்று மேற்கொள்ள வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு. அதனால் தான் அதனை ஏற்பவர்கள் இல்லத்துக்கு அரசி எனப்படுகின்றனர். அதற்காக வேறு உறவு முறையினர் சமையல் செய்யக்கூடாது என்று பொருளல்ல. அந்த பொறுப்பை ஏற்பவர் மிகவும் தூய எண்ணத்துடன் செயல்பட வேண்டியது அவசியம். எம் உணவின் இயல்பை அறிந்தவர்கள் பரிமாறுவதற்கும் பிறர் பரிமாறுவதற்கும் நிறையவே வேறுபாடு உண்டு.
குறிப்பாக நீண்ட காலமாக அறிமுகம் ஆன ஒரு மனிதனை சந்தித்துக் கொள்ளும் பொழுது அவருடைய தன்மைகளை எப்படி நாம் இலகுவாக புரிந்து கொள்கின்றோமோ அதேபோலவே எங்கள் மரபணுக்களுக்கு பரிட்சயம் ஆன உணவுகளை நாம் உண்கின்ற பொழுது அந்த உணவு எம் மரபணுக்களுடன் இலகுவாகவே கலந்து இசைந்து போய் விடுகின்றன. மாறாக புதிது புதிதாக ஒத்துவராத உணவுகளை நாம் உண்கின்ற பொழுது மரபணுக்கள் குழப்பம் அடைந்து எதிர்விளைவுகளை உருவாக்கி விடுகின்றன.
பொதுவாக உணவுப் பொருளானது உற்பத்தியின் நிலத்தின் தன்மை தொடங்கி அறுவடையாளர், சந்தைப்படுத்துபவர், விற்பனையாளர், கொள்வனவாளர் என எல்லோருடைய எண்ணங்களின் அதிர்வலைகளைத் தாங்கியே வீட்டிற்கு வருகிறது. அந்த அதிர்வலையோடான உணவில் அதனை உண்ணுவதற்கு முன் உள்ள படிநிலையில் ஏற்படும் அதிர்வலை நேரடியாக உண்ணும்போது உள்ளெடுக்கப்படுகிறது. உணவை சமைக்கும் மனிதர்களின் உணர்வுகளின் தன்மைக்கு ஒப்ப அந்த உணவை உட்க்கொள்ளும் மனிதர்களுக்கும் அந்த உணர்வு கடத்தப் பட்டு விடும். இவை தத்தம் அனுபவங்களுக்கு உட்படாத வரை விந்தையாக தோன்றலாம் ஆனால் ஒவ்வொரு பொருட்களுக்கும் அவற்றின் தன்மைக்கேற்ப ஞாபக சக்தி இருக்கின்றது. அவையவை அவற்றின் தன்மைக்கேற்ப உணர்வுகளுடன் கலந்து கொள்கின்றன.
இந்த சிக்கலை அறிந்து தப்பிப்பது எப்படி எனப் பயம் கொள்ளத் தேவையில்லை நேர்மறையான எண்ணங்களோடான ஒரு அன்பான தீண்டல் அந்த உணவு சுமந்து வந்த அத்தனை அதிர்வலைகளையும் நிமிடத்தில் நல்லபடி மாற்றிவிடக் கூடியது. இத்தகைய நிலைப்பாட்டை உணவகங்களிலோ, சமையல் வேலையாட்களிடமோ வெறுப்போடு இருக்கும் ஒருவரிடமிருந்தோ முழுமையாக எதிர்பார்த்துவிட முடியாது. ஆனால் யாராக இருப்பினும் அன்போடும், அக்கறையோடும் நேர்மறையான எண்ணத்தோடு சமைத்து பரிமாறும் உணவு அன்பான தாய் பரிமாறும் உணவு போன்றதே.
இன்றைய காலத்தில் எத்தனையோ குளறுபடியான சின்னத்திரை நாடகங்களை பார்த்துக்கொண்டு துயரம், வெறுப்பு போன்ற எதிர்மறை எண்ணங்களோடு சமையல் செய்வதும் அல்லது அதனை ஒரு சிரமமான ஒரு வேலையாக நினைத்து செய்வதும், உள்ளத்தில் கவலை, பயம் போன்ற எதிர்மறை எண்ணங்கள் உள்ள பொழுதுகள் மற்றும் உடல்சுகவீனமான பொழுதுகளில் சமைப்பதும் நல்லதல்ல. அமைதியாக இருந்து மனதை புத்துணர்வாக வைத்துக் கொண்ட பின்னர் மகிழ்வோடும், அன்போடும் அக்கறையாக சமையல் செய்ய வேண்டும். இந்தப் பொறுப்பு மற்றவருடைய தனிப்பட்ட வாழ்வில் விளைவுகளை ஏற்படுத்தவல்லது என்பதை உணர்ந்து செயற்படுவது அவசியம். முக்கியமாக உணவை உண்பவர் மேற்சொன்ன விடயங்களில் சிக்கல் இருப்பினும், இல்லாதவிடத்தும் உணவை உண்ணுவதற்கு முன்பு நேர்மறையான சிந்தனையோடு இயற்கைக்கோ, இறை சக்திக்கோ அல்லது சமைத்தவருக்கோ நன்றி உணர்வோடு அந்த உணவு உடலுக்கும், மனதிற்கும் நலம் வழங்க வேண்டும் என தன் உணவைத் தானே ஆசிர்வதித்து பின் உண்ண வேண்டும். அப்போது அந்த உணவு உண்ணத் தகுந்த நல்ல அதிர்வலையோடு இருக்கும்.
ஆகவே உணவை உண்பவர், உணவை தயாரிப்பவர், பரிமாறுபவர் யாவருமே வாழ்வின் மீது சிறிதளவேனும் மதிப்பும் மரியாதையும் கொண்டவர்களாக இருந்தால், வாழ்வை மற்றுமோர் பரிணாமத்துக்கு முன்னெடுத்து செல்ல விரும்பினால் உண்ணும் உணவு, அவை ஆக்கப்பட்ட முறை, மற்றும் அவற்றை உட்கொள்ளும் விதத்திலும் முழுமையான கவனத்தை செலுத்த வேண்டும்.
உணவு சாதாரண விடயமென எண்ணி குப்பையை உணவாக்கி தொப்பையை வளர்க்கக் கூடாது. விருந்தோம்பும் தாய்மைத் தன்மையானது கனிவான எவரிலும் இருக்கும். அவர்களின் சமையலில் அன்பிருக்கும், சுவையிருக்கும், சுவையோடு கலந்து அக்கறை இருக்கும், அக்கறைக்குள் பொதிந்து சத்து வழி இருக்கும், சத்துக்குள் சித்து இருக்கும், சித்துக்குள் ஆனந்தம் இருக்கும்.
-கரிணி
2,112 total views, 2 views today