வாழ்க்கை என்பது எதை எல்லாம் சாதித்தேன் என்பது அல்ல…
வாழ்க்கை தனது கைகளில் பல்வேறு ஆட்ட முறைகளை வைத்திருக்கிறது. காலத்துக்கு ஒன்றாக அது தனது தன் முன்னால் விளையாட்டுகளை விரிக்கிறது. பால்யம் தனக்கு முன்னால் பல்லாங்குழியை வைக்கிறது. எப்படி ஆடினால் அதிகமாய்ச் சேமிக்க முடியும் எனும் சிந்தனையை அது சொல்லாமல் சொல்லிச் செல்கிறது. தனக்கு அதிகம் கிடைக்க வேண்டும் எனும் சுயநலப் பாடத்தை அது மௌனமாய் தனக்குள் மறைத்து வைத்திருக்கிறது.
பதின்வயது தனக்கு முன்னால் சீட்டுக்கட்டுகளை விரிக்கிறது. கிணற்றடியில், குளக்கரையில், மாமரத்தின் இதமான நிழல்களில் அது சீட்டுக்கட்டுகளின் வாசனையை அறிமுகம் செய்கிறது. வெளிப்படைத் தன்மையில்லாமல் இருக்க வேண்டியதன் அவசியத்தை அது நாசூக்காய் கற்றுத் தருகிறது. தன்னிடம் இருக்கும் சீட்டு என்ன என்பதை சிறு முக அசைவு கூட முன்னறிவித்துவிடக் கூடாது எனும் கவனத்தை அது கற்றுத் தருகிறது. எதைப் போட்டால் வெற்றி பெறலாம், எந்த துருப்புச் சீட்டை கடைசிவரை ஒளித்து வைத்திருக்கலாம் எனும் சூட்சுமத்தை அது சொல்லித் தருகிறது. அடுத்தவனை ஏமாற்றிச் சீட்டுகளைத் தனக்கு சாதகமாய் மாற்றும் சுயநலக் கலையை அது தனக்குள் ஒளித்து வைத்திருக்கிறது.
இளவயது தனக்கு முன்னால் சதுரங்கப் பலகையை நீட்டுகிறது. யாரை வெட்டலாம், யாரைத் தாண்டலாம், யார் வலையில் சிக்காமல் போகலாம் எனும் களப் பயிற்சியை அது தருகிறது. எப்போது எவனை வெட்டலாம் எனும் கண்ணியின் கவனிப்போடு அது பயணிக்கிறது. வெட்டுவதும், வீழ்த்துவதுமே வெற்றி எனும் போதனையை அது கற்றுத் தருகிறது. இலக்கானது அடுத்தவனின் தலையை வீழுத்துவது எனும் இலட்சியமே உள்ளுக்குள் உறைகிறது.
நடுவயது தனக்கு முன்னால் தாயக்கட்டைகளை உருட்டுகிறது. அங்கே அனுபவத்தின் வெளிச்சம் வீசுகிறது. ஆனாலும் சபைகளின் நடுவினிலே தனக்கான லாபங்களே கணக்கிடப்படுகின்றன. பிறரின் அவமானங்களை விட, தனக்கான வெகுமானங்களையே தாயக்கட்டைகள் உருண்டு புரண்டு புரிய வைக்கின்றன.
முதிர் வயது தனக்கு முன்னால் தன்னையே ஒரு விளையாட்டுப் பொருளாய் விரிக்கிறது. அங்கே விளையாடுவதற்கு ஆட்கள் இல்லை. அவரவர் கற்றுக் கொண்ட சுயநலத்தின் பாதைகளில் பயணித்துக் கொண்டிருக்கின்றனர். திடீரென முதுமை விழித்துக் கொள்கிறது. தான் விளையாடியவை எல்லாம் வினையாகிப் போனதை உணர்கிறது.
காலச்சக்கரம் மீண்டும் தன்னை பால்யத்தில் கொண்டு போனால், விளையாட்டுகளை அல்ல விளையாடியவர்களை அரவணைக்க வேண்டும் ! களங்களை அல்ல, களமாடியவர்களை நேசிக்க வேண்டும் !! விளையாட்டின் வெற்றியை அல்ல, விளையாடிய நேரத்தின் அன்னியோன்யத்தை ரசிக்க வேண்டும். என தனக்குள் நிறைவேறாக் கற்பனையை வளர்க்கின்றன.
நிறைவேறாத தனது ஆதங்கங்களை தனது அடுத்தடுத்த தலைமுறைக்கு அறிவுரைகளாக அன்புடன் அள்ளித் தெளிக்கின்றன. ஆனால் அடுத்த தலைமுறையோ தனக்கான வெற்றி விளையாட்டுகளில் தீவிரமாய் ஈடுபடுகின்றன.
நீரற்ற குளத்துப் பறவைகள் போலே, காலம் தனது உறவுகளின் சிறகுகளை காடுகளுக்கு அழைத்துச் செல்கிறது. காடுகளோ ஒற்றையடிப் பாதைகளைப் போன்றவை. எந்த அமானுஷ்யத்தையும் தனக்குள் இழுத்துக் கொண்டு மௌனமாய் உறங்கும் மகோன்னதம் அதற்கு உண்டு.
நீரற்ற குளத்தில் பறவைகளைப் போல, இன்றைக்கு உறவுகளும் நட்புகளும் காலத்தின் கழுத்துகளைப் பிடித்துக் கொண்டு சீறிப் பாய்கின்றன. இந்தப் பறவைகளுக்கு கொஞ்சம் கூட ஈவு இரக்கமே இல்லையா ? ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்கலாமா, அருந்தக் கொடுத்த குளத்தை அவமதிக்கலாமா என தார்மீகக் கோபம் கொள்ளும் முன் ஒரே ஒரு கேள்வியை நாம் கேட்கவேண்டும்.
ஏன் குளம் நீரற்றதாய்ப் போனது ?
இந்தக் குளத்தைத் தூர் வாராத குற்றம் யாருக்கு இருக்கிறது ?
குளத்தைக் கவனிக்காமல், நீரிருக்கிறதா எனும் பிரக்ஞையற்று ஏன் நாம் வாழ்க்கையைக் கழித்தோம் ?
நீரில்லாக் குளத்தில் பறவைகள் என்ன செய்யும் ? வேரில்லா மரத்தின் பூக்கள் எத்தனை காலம் தான் வாசம் வீச முடியும் ?
எனவே, முதலில் நாம் குளங்களைக் கவனிப்போம். கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த நமது பழைய கால வாழ்க்கை அற்புதமானது. ஒருவர் சுமைகளை ஒருவர் தாங்கி, ஒருவர் குறைகளை ஒருவர் ஏற்று வாழ்ந்த காலம் அது. அவமானமும், சண்டையும் நடந்தால் கூட வாழ்வின் இறுதி மூச்சுவரை உறவுகளோடே ஒன்றித்துக் கிடந்த காலம் அது. “ஐயா தானே சொன்னாங்க… “ என எந்த ஒரு மிகப்பெரிய சண்டையையும் ஏற்றுக் கொள்ளும் மன வலிமை அன்று இருந்தது. ஒருவர் மனமுடைந்து போனால், மற்ற பறவைகளெல்லாம் வந்து தங்களுடைய சிறகுகளால் அந்த உடைந்த மனதை ஒன்று சேர்த்தன.
அப்போது குளங்கள், வளங்களோடு இருந்தன. பறவைகள் பரவசத்தோடு இருந்தன.
காலம் குடும்பங்களை சின்னச் சின்ன துண்டுகளாக உடைத்தது. கூட்டுக் குடும்பம் ஒற்றைக் குடும்பமாகவோ, ஒன்றரை குடும்பமாகவோ உருமாறிப் போனது. வெட்டி ஒட்டும் புகைப்படப் புதிர் போல வாழ்க்கை தனது முழுமையை இழந்து துண்டுகளோடு துவண்டது. தன்னிடம் இருக்கும் துண்டுப் படமே முழுமையான படம். அதைத் தாண்டிய படம் இல்லை என்றும், அது தேவையில்லை என்றும் குடும்பங்கள் கருதிக் கொண்டன. ஒரு சின்னச் சண்டை வந்தால் கூட அதிலிருந்து மீண்டு வருவதற்கான காலம் நீளமாகிப் போனது. கிடைக்கின்ற காயம் ஆழமாகிப் போனது. “ஒட்டாத புகைப்படப் புதிரின் துண்டுகள்” ஒன்றோடொன்று வழக்காடத் துவங்கின. “அவன் எப்படி என்னைப் பாத்து சொல்லலாம்” எனும் ஈகோவை மனம் தன்மேல் சூடிக்கொண்டது. ஈகோ, வலிமையற்ற மனதின் உதாரணம். ஈகோ தன்னம்பிக்கை குலைந்தவனின் அடையாளம். ஈகோ, சவால்களை எதிர்கொள்ளும் துணிச்சலற்றவனின் துணைவன்.
அப்போது குளங்கள், சிறு குட்டைகளாகச் சுருங்கின. அவ்வப்போது பறவைகள் வந்து பார்த்துவிட்டுப் போயின.
காலம் அத்துடன் தனது விளையாட்டை நிறுத்தவில்லை. ஏற்கனவே துண்டான குடும்பங்களையும் துண்டாடியது. கானகங்கள் தோப்புகளாகி, தோப்புகள் தனிமரங்களாக்கியது. பிற குடும்பங்களுக்கான தற்காலிகத் தஞ்சமாகக் கூட அவை இருக்கவில்லை. இங்கே தவறுதலாய் விழுகின்ற வார்த்தைகள் கூட தற்கொலைக்குத் தூண்டுகின்றன. வாய்தவறி விழுகின்ற வார்த்தைகள் கூட விவாகரத்தில் போய் முடிகின்றன. அடைக்கலச் சிறகுகள் இல்லாத பறவைக்குஞ்சுகள் பரிதவிக்கின்றன. தான் பார்க்கும் வாழ்க்கையே முழுமையானது எனும் கற்பனையுடன் மழலைகள் தவழ்கின்றன. தொட்டிச் செடிகளே கானகமெனும் புரிதலுடன் அவை வாழ்வுக்குள் புறப்படுகின்ரன.
இப்போது குளங்கள், மண்ணை விட்டு கண்ணுக்கு இடம் மாறி இருக்கிறது !
நீரற்ற குளத்துப் பறவைகளைப் போல வாழ்க்கை ஆனதன் காரணம் மிக எளிமையானது. எப்படி ஒரு சின்ன கோணம் தவறினால் கடல் பயணம் கடைசியில் வேறோர் எல்லையில் நம்மைக் கொண்டு போய் சேர்க்குமோ, எப்படி அடித்தளத்தில் நேர்கின்ற ஒரு பிழை ஒட்டு மொத்த கட்டிடத்தையும் குலைத்து விடுமோ அப்படித் தான் ஆகிவிட்டது. நமது பார்வை குளத்தை மேன்மைப்படுத்துவதில் இருந்திருக்க வேண்டும். பறவைகளின் உள்ளத்தை நிம்மதிப் படுத்துவதாக இருந்திருக்க வேண்டும். கடலுக்குக் கூட வேலி போட்டு சொந்தம் கொண்டாடும் மனநிலையே இருக்கின்ற இன்பங்கள் களவு போகக் காரணம்.
உறவுகளின்றி கட்டப்படும் வாழ்க்கையானது கடைசியில் சிறகுகளின்றி துக்கப்படும். குளம் தன்னையே தூர்வார முடியாது. குளம் தன்னையே நிரப்பிக் கொள்ள முடியாது. குளம் தன்னையே பாதுகாத்துக் கொள்ள முடியாது. அதற்கு பறவைகளின் பரிவு அவசியம்.
நமது வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் நாம் அன்பைப் பகிர்பவர்களாக இருக்க வேண்டும். வெறுப்புகளின் முனைகளைக் கூட அன்பின் இழைகளால் உடைத்து விட முடியும். முள்ளை முள்ளால் எடுப்பதல்ல புத்திசாலித்தனம், முள்ளை பூவால் பிடுங்குவதே இல் வாழ்க்கையின் மகத்துவம்.
“விட்டுக் கொடுத்தவன் என்றும் கெட்டுப் போனதில்லை” என என் பாட்டி அடிக்கடி சொல்வார்கள். பழமொழிகள் நமது வாழ்க்கையை புதுசாக்கிக் கொண்டே தன்னைப் பழசாக்கிக் கொள்பவை. எதற்காக எதை விட்டுக் கொடுப்பது என்பதில் தெளிவு வேண்டும். அன்புக்காக செல்வத்தை விட்டுக் கொடுக்கலாம். உறவுக்காக பெருமையை விட்டுக் கொடுக்கலாம். நட்புக்காக ஈகோவை விட்டுக் கொடுக்கலாம். குடும்பத்துக்காக சுய விருப்பங்களை விட்டுக் கொடுக்கலாம். என பல விட்டுக் கொடுத்தல்கள் நம்மை வாழ்வின் உயரத்துக்கு இட்டுச் செல்ல முடியும்.
நீரற்ற குளத்துப் பறவைகள் போல வாழவேண்டியவர்கள் அல்ல நாம். நீரூற்றின் பறவைகளைப் போல சிறகு சிலிர்க்க வேண்டியவர்கள். காலம் இப்போதும் கடந்து விடவில்லை. காரணம், எல்லோருக்குள்ளும் நமது பால்யத்தின் குளம் உறைந்து கிடக்கிறது. நமது நினைவுகளின் பரண்களில் பழைய காலத்தின் நீரூற்றுகள் புழுதி படிந்து கிடக்கின்றன. இன்றே அதை தூர்வாருவோம்.
ஒவ்வொருவரும் நமது அன்பினை துலக்கும் போது, தம் குளத்தினை கண்டுபிடிக்கும் போது, பறவைகள் சிறகுவிரிக்கும். குளத்தைத் தேடி வரும் பறவைகள் போல உறவுகள் மீண்டும் இனிமையின் படிக்கட்டில் வந்தமரும். நினைவில் கொள்வோம். வாழ்க்கை என்பது எதையெல்லாம் சாதித்தேன் என்பதல்ல, எல்லோருடைய இதயத்தையும் சந்தித்தேனா என்பதில் தான் அளவிடப்படுகிறது. செல்வம் நம்மை மதில் கட்டிப் பிரிக்கும், அன்பே நம்மை பாலம் கட்டி இணைக்கும்.
அன்பின்றி அமையாது உலகு !
அன்பற்ற எதையுமே விலக்கு !
சேவியர்
2,222 total views, 2 views today