ஒரே ஒரு ராஜ இசை வண்டு, பல மலர் மனங்களை முத்தமிட்டு செல்வதைக் கண்டதுண்டா ?

உயிருக்குள் ஊடுருவி உணர்வினைத் துளைக்கும் இசையின் சிறப்பைப் பாடாத தமிழக் கவிஞன் இருக்க முடியுமா? தமிழ்க் கவிஞன் என்று குறிப்பிட்டுக் கூறுவதற்கான காரணம் உண்டு. ஆம், இயல் , இசை, நாடகம் இவை மூன்றும் சேர்ந்ததே தமிழ். இதற்க்கு இணங்க, செறிந்த சொல்லாட்சி, சிறந்த ஓசை நயம், அரிய கற்பனை வளம் இவை மூன்றும் சேர்ந்து வடித்த கவிதை காலம் கடந்து போற்றப்படும் என்பதில் நம் தமிழ்க் கவி மரபில் சந்தேகமே இல்லை.

இசையின் தாக்கத்தினால் காலத்தை வென்ற காதல் ஒன்று உண்டாகிறது. இந்தச் சம்பவத்தைக் காலத்தை வென்று நிற்கும் கவிஞன் தன் கற்பனையிலேற்றி ஓசை கூட்டித் தேர்ந்த மொழிநடையில் சொல்ல முனைந்தால் ????

ஆஹா! கவிப்ரியர்களுக்கு இன்பக்களி அல்லவா ? களி வரலைக் கருதிக் கனவு கண்ட கவிக்கோமான் பாரதிக்கு இசை மீதுள்ள உன்னத உணர்வை அவன் தீட்டிய “குயில் பாட்டு ” என்னும் கவிதையின் அடிகளைத் துணை கொண்டு எடுத்துக் காட்ட முயல்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

ஓர் ஆண் அல்லது பெண் இசைக்கலைஞர் பாடுவதாக சித்தரிக்காமல், ஒரு பறவை அதுவும் “குயில்” கானம் இசைப்பதாய் கற்பனை செய்கிறார். இந்த கற்பனைக்கு மேலும் மேலும் சுவாரசியம் சேர்க்கிறார்.

கவிதைக்குத் தரும் உவமையின் தரத்தில் இருந்து கவிஞனின் ஞானம் விளங்கும் என்பதும் கவி மரபின் அளவுகோல். குயில் இசைக்கும் கானம் எவ்வாறு உள்ளதென்ற பிரம்மிப்பை மிக அழகாக 3 உவமைகளில் அடக்குகிறார்.

  1. காற்று மண்டலம் எங்கும் தித்திக்கும் அமுதம் கலந்து விட்டது போல
  2. மிக வேகமாக மெல்லியதாக இனிமையாக ஊடுருவி எங்கும் பரவக் கூடிய மின்னல் போல

3.தேவ லோகத்தில் உள்ள மிக அழகிய பெண்களான அப்சராஸ் ஒருத்தியோ இந்தக் குயில் போல வடிவம் எடுத்து வந்து தன் குரல் மகிமையை வெளிப்படுத்துகிறது என்று விண்ணக மாதை மண்ணகம் சேர்க்கிறார்.

அடுத்து , உன்னதமான இசையைக் கேட்போர் நிலை எப்படி இருக்கும் ?

உடம்பு சிலிர்க்கும், நான் என்ற அகங்காரம் அல்லது உறுதி குறையும், நெஞ்சத்தில் ஆசை நெருப்பு மூண்டிடும். தன்னிலை மறக்கும். பெரும் பரவசம் ஆட்கொள்ளும், நேசம் வளரும், ஒரு போதும் விலகாமல் இருக்கத் தோன்றும். காதல் களி கொண்டு ஆனந்த வாழ்வாகும். இந்த நாத நெருப்பிற்கு நம் ஆவியை அர்ப்பணம் செய்ய மாட்டோமா ? என்று தோன்றும்.

இதனைக் குயில் பாடும் சம்பவத்தினூடே பாரதி எவ்வாறு பொருத்துகிறார் என்று பாப்போம். பெண் குயில் பாடிக் கொண்டு இருக்கிறது, அதைக் கேட்ட அங்குள்ள ஆண் குயில்களின் உடம்பு சிலிர்த்து, உள்ளம் உறுதி குறைந்து , ஆசை பெருகுகிறது. இசை கேட்க, அங்குள்ள பறவைகள் எல்லாம் சூழ்ந்து வந்து விட்டனவாம். தன் காலைக் கடனைக் கூட மறந்து போய் கேட்டு இருந்தனராம். இசை கேட்டால் தன்னிலை மறக்கும் என்பதனைக் கூற இதை விட வேறு செறிந்த ஆனால் எளிதில் புரியவும் கூடிய சொல்லாடலைப் பயன்படுத்த நம் பாரதி அன்றி வேறெவரால் முடியும் ?

வேடர் வாராத விருந்துத் திருநாளில்,
பேடைக் குயிலொன்று பெட்புறவோர் வான்கிளையில்
வீற்றிருந்தே, ஆண்குயில்கள் மேனி புளகமுற,
ஆற்ற லழிவுபெற, உள்ளத் தனல் பெருக,
சோலைப் பறவையெல்லாம் சூழ்ந்து பரவசமாய்க் …
காலைக் கடனிற் கருத்தின்றிக் கேட்டிருக்க,
இன்னமுதைக் காற்றினிடை எங்குங் கலந்ததுபோல்,
மின்னற் சுவைதான் மெலிதாய் மிகவினிதாய்
வந்து பரவுதல்போல், வானத்து மோகினியாள்

இந்தவுரு வெய்தித்தான் ஏற்றம் விளங்குதல்போல், …
இன்னிசைப் பாட்டினிலே யானும் பரவசமாய்,
மனிதவுரு நீங்கிக் குயிலுருவம் வாரோதோ?
இனிதிக் குயிற்பேட்டை என்றும் பிரியாமல்,
காதலித்துக் கூடிக் களியுடனே வாழோமோ?
நாதக் கனலிலே நம்முயிரைப் போக்கோமோ? ..

சந்தமும் ஓசை நயமும் இயைந்த இசையாக எவ்வாறு பாடல் அமைய வேண்டும் ? இதனை குயில் பாட்டின் 9 அடிகளின் மூலம் அறிய முனையலாம்.

நாதம், நாதம், நாதம்;
நாதத் தேயோர் நலிவுண் டாயின்,
சேதம், சேதம், சேதம்.

பாடலுக்கு இசையே ஆதாரமானது. ஆதாரமே ஆட்டம் கண்டால் ? சேதம் தானே ? அத்தனை பெரிய அடிப்படை உண்மையை இத்தனை இலகுவாய் 3 சொற்களை மட்டும் உபயோகித்து எப்படித்தான் சொல்ல முடிகிறது?

நல்லதொரு கச்சேரியை கேட்கும் போது உள்ளத்தில் எண்ணற்ற ஆரவாரம் நிகழ்ந்தாலும், கச்சேரி நிறைவுற்ற பின் ஒரே விடயம் தான் தோன்றும். அதுவே அக்கச்சேரியின், அந்த ராஜ இசை வண்டின் வெற்றியும் விருதும் ஆகும். அது என்ன விடயம் ? ஆம், உள்ளும் புறமும் அமைதி நிலவும்.

“மோகனப் பாட்டு முடிவுபெறப் பாரெங்கும்

ஏக மவுன மியன்றதுகாண்;”

இத்தனை சுகானுபவம் தரும் இசைக் கலைஞனை போற்றுவதற்கு , உலகத்தில் உள்ள செல்ல பெயர்கள் அத்தனையையும் மனம் தேடிக்கொண்டு இருக்கும்.

இசை தந்த குயிலை நோக்கி பாரதி சொன்ன கொஞ்சும் மொழியில் மிஞ்சும் சுவையை காணும் போதெல்லாம் நெஞ்சம் கெஞ்சும்.

திரவியமே – செல்வமாகத் திகழ்கிறாய்.

பேரின்பப் பாட்டுடையாய் – பெரு மகிழ்வை நல்க கூடிய பாட்டு இசைகிறாய்.

ஏழுலகும் இன்பத் தீ ஏற்றும் திறனுடையாய் – ஏழு உலகங்களிலும் சுக நெருப்பை ஏற்றக் கூடிய திறமையுடையாய்.

வானத்து புள்ளெல்லாம் மையலுறப் பாடுகிறாய் – ஆகாயத்தில் பறக்கின்ற பறவைகள் எல்லாம் மோகம் கொள்ளும் படி பாடுகிறாய்

ஞானத்தில் புட்களிலும் நன்கு சிறந்துள்ளாய் – மற்றைய எல்லாப் பறவைகளை விடவும் அறிவில் சிறந்துள்ளாய்

ஆசைக்குயிலே
அரும் பொருளே – கிடைத்தற்கு அரிய செல்வமே
தெய்வதமே – என் தெய்வமே.

பொன்னை நிகர்த்த குரல் பொங்கி வரும் இன்பத்தை தவிர பாட்டு முடியும் வரை பார் அறியேன் விண்ணறியேன், என்னையே அறியேன் என்று சொல்லும் பாரதியின் இசை உணர்வுக்கு மகுடமாய் , இசை தரும் தவிப்புக்கும் தத்தளிப்புக்கும் பிரம்ம தேவனை அழைக்கிறார். பிரம்மனே ! ,உன் படைப்பு மிக மிக ஆச்சரியமானவை. காடு , வானம், கடல் யாவுமே ஆச்சர்யம் ஆனாலும் உன் படைப்புக்களில் பெரும் ஆச்சர்யமானது அமுதம் போன்ற இசை தான். ஐம்பூதங்களும் அதிசயம் . ஆனாலும் ஸ்வரங்களின் சேர்க்கையால் உருவாகும் பாடலின் இனிமைக்கு இணையாகுமா ? ஆசையைத் தூண்டுகின்ற கோடிக்கணக்கான அதிசயங்களை கண்டிருக்கிறோம். அதில் சந்த ஓசை தருகின்ற இன்பம் தான் எதனோடும் ஒப்பிட்டு உவமை சொல்ல முடியாத பேரின்பம் என்று உருகி உணர்ந்து இசைந்து இசையாகி நிற்கிறார் பாரதி.

பாட்டு முடியும்வரை பாரறியேன், விண்ணறியேன்;
கோட்டுப் பெருமரங்கள் கூடிநின்ற காவறியேன்!
தன்னை யறியேன்; தனைப்போல் எருதறியேன்;
பொன்னை நிகர்த்தகுரல் பொங்கிவரும் இன்பமொன்றே
கண்டேன், படைப்புக் கடவுளே! நான் முகனே! .
ஆனாலும் நின்றன் அதிசயங்கள் யாவினுமே
கானா முதம்படைத்த காட்சிமிக விந்தையடா!
காட்டுநெடு வானம், கடலெல்லாம் விந்தையெனில், …
பாட்டினைப்போல் ஆச்சரியம் பாரின்மிசை இல்லையடா!
பூதங்க ளொத்துப் புதுமைதரல் விந்தையெனில்
நாதங்கள் நேரும் நயத்தினுக்கு நேராமோ?
ஆசைதருங் கோடி அதிசயங்கள் கண்டதிலே,
ஓசைதரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ! …

இவ்வுலகம் இனிது, அங்குள்ள உயிர்கள் அனைத்தும் இனியவை , உயிர் அற்றனவும் இனிது என்று படைப்பின் பிரம்மாண்டத்தை வியந்து வியந்து பாடினாலும் ,பிரம்மனின் படைப்பில் ஒப்புயர்வற்ற அதிசயம் இசை என்று கூறும் நம் பாரதியை வியந்து எண்ணிப் பித்தாகி சரண் புகுந்து ஆட்கொள்கிறேன்.

1,727 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *