சிக்கனம் முக்கியம்
சம்பவம் 01.
“வெளியீட்டுவிழா செலவுகளைக் குறைச்சுக் கொள்ளவேணும். சிக்கனம் முக்கியம்” வளர்மதி பிடிவாதமாக நின்றுகொண்டார். ஹோல், சாப்பாட்டுச் செலவுகளில் ஒன்றும் செய்துகொள்ள முடியாது. அழைப்பிதழ் அடிப்பதில் முயன்று பார்க்கலாம் எனக் களம் இறங்கிவிட்டார் அகமுகிலன்.
ஏதோ இங்கிலிசில் அடிக்க தமிழில் வருமாமே! ஒற்றை விரலால் கீ போர்டை நொருக்கித் தள்ளி கொம்பியூட்டர் திரையில் அழைப்பிதழை அடித்துவிட்டார். அழைப்பிதழ் பகட்டாக இருக்க – புத்தகம், தொட்டெழுதும் பேனா, இறகு என்னும் ஓவியப்பின்னணி கொண்ட ஹபக்கிறவுண்ட்’ ஒன்றைத் தேடி எடுத்துக் கொண்டார். வந்ததே வினை. அழைப்பிதழை ஹபக்கிறவுண்டிற்குள்’ கொண்டு செல்லும்போது எழுத்துக்கள் அங்கும் இங்கும் ஓடின. ஒருவிதமாக ஒரு வசனத்தைச் சரிக்கட்டிக் கொண்டு வந்துவிட்டு, மறு வசனத்தைப் பார்த்தால் அது குதித்துக் கூத்தாடி இருக்கும். அவர் அடித்த சொற்களில் சிலவற்றைக் காணவும் இல்லை. போராடிக் களைத்து, அப்படியே போட்டுவிட்டு உறக்கத்திற்குப் போய்விட்டார்.
உறக்கம் வரவில்லை. மூன்று தடவைகள் விழித்து எழுந்து கொம்பியூட்டருக்கு முன்னால் போய் இருந்தார். தமிழில் ஒரு சொல்லுக்கு பல அர்த்தங்கள் இருப்பதைப் புரிந்துகொண்டு, அழைப்பிதழில் சொற் சிலம்பாட்டம் விளையாடினார். ஹமாலை என்பதைப் ஹபிற்பகல்’ என்று மாற்றினார். பின்னர் ஹபிற்பகல்’ என்பதை ஹபி.ப’ என மாற்றினார். இப்படிச் சதுரங்கம் விளையாடி, விடிய ஐந்து மணிக்குள் எல்லாவற்றையும் சரிப்படுத்திவிட்டு உறக்கத்திற்குப் போனார்.
காலை பத்து மணியளவில் எழுந்தார் அகமுகிலன். அழைப்பிதழை ஒரு ஹயு எஸ் பி’யில் சேமிக்க முயன்றார், இருட்டுக்கு பயந்து சொல்வழி கேட்ட அழைப்பிதழ், பகலானதும் தன்னுடைய விளையாட்டைக் காட்டிவிட்டது. கொம்பியூட்டர் திரையில் இடது புறமாக அழைப்பிதழ் அரைக்கட்டை தூரத்திற்கு ஓடியிருந்தது. இரவு காணாமல் போயிருந்த சொற்கள் எல்லாம் அங்கே கூடிக் கும்மாளமிட்டிருந்தன. அப்படியே எல்லாவற்றையும் சேர்த்துக்கட்டி, சேமித்துக் கொண்டு அச்சிடுவதற்காகச் சென்றார்.
“தம்பி… அழைப்பிதழ் கொஞ்சம் அங்கை இங்கை ஓடிக் கிடக்கு. அதைக் கொஞ்சம் சரிக்கட்டிப் போட்டு பிறின்ற் பண்ணும்.”
“ஐயா… நேரம் தான் பிரச்சினை. நேரத்துக்கு காசு தருவியள் எண்டா சொல்லுங்கோ… “
“தரலாம்… ” என்றார் அகமுகிலன்.
ஹயு எஸ் பி’ யைத் தனது கொம்பியூட்டரில் சொருகியவர் அகமுகிலனை மேலும் கீழும் பார்த்தார். கொம்பியூட்டர் திரையை அகமுகிலனின் பக்கம் திருப்பினார். திரையில் சமஸ்கிருதத்தில் அவருடைய அழைப்பிதழ் இருந்ததைக் கண்டார்.
“இதுக்குத்தான் ஐயா, நாங்கள் பிடிஎவ் இலை தாருங்கோ எண்டு கேக்கிறனாங்கள். சரி…. இதுவும் நல்லதுக்குத்தான். திருத்த வசதியா இருக்கும்.
உங்களுக்கு பிளக் அண்ட் வைற்றிலை வேணுமா? கலரிலை வேணுமா? கலர் எண்டா, பிளக் அண்ட் வைற்றைவிட ஐஞ்சு மடங்கு விலை.”
அகமுகிலன் யோசித்தார். “தம்பி… உமக்கு பதில் சொல்லலாம். மனிசிக்குமல்லே சொல்ல வேணும். பத்து அழைப்பிதழ்களைக் கலரிலும் மிச்சம் தொண்ணூறை கறுப்பு வெள்ளையிலையும் அடிச்சுத் தாரும். இரண்டுக்கும் பிறிம்பு பிறிம்பா ரிசீற் தாரும்.”
வளர்மதி கேட்டால் ஒரு பற்றுச்சீட்டைக் காட்டலாம் என்பது அவர் எண்ணம். வெளியே வந்ததும் கலரில் அடிச்சதற்கான பற்றுச்சீட்டைக் கிழித்தெறிந்தார்.
களைத்துப் போய் வீடு வந்து சேர்ந்தார் அகமுகிலன். வந்ததும் அழைப்பிதழை மனைவிக்குக் காட்டினார்.
“நீங்கள் அழைப்பிதழ் அடிக்கிறதிலையும் கெட்டிக்காரர் தான்” மெச்சினார் வளர்மதி.
“பெரிய பெரிய ஆக்கள் எல்லாம் வாற விழாவுக்கு நானும் வரவேணும் எண்டால் – எனக்கொரு புது சாறி வாங்கித் தரவேணும்” பிடிவாதமாக நின்றுகொண்டார் வளர்மதி. அகமுகிலனுக்கு வளர்மதி இப்போது தேய்மதியாகத் தெரிந்தார்.
— கே.எஸ்.சுதாகர்
1,281 total views, 3 views today