எங்கிருந்தாலும் உன்னை நான் அறிவேன்!
இந்த வசனம் நாம் அடிக்கடி அம்மாவிடமும் அப்பாவிடமும் அதற்கு மேலாக காதலியிடமும் காதலனிடமும் கேட்டவைதான்.
அன்பும், காதலும், தனக்கே உரிய சக்திகொண்டு எந்த ஒரு தொடர்பு ஊடகமும் இன்றி ஒருவரது இருப்பைக் கண்டுகொளும் வல்லமை உள்ளதாகத் திகழ்கிறது. துற்;போது அன்பும், காதலும் அதன் அக்கறைகள் சற்று தேய்ந்து சேதாரமாகிவிட்டதால் அதன் இருப்பை அறிய விஞ்ஞானம் கைகொடுக்க வந்துள்ளது.
அன்று ஆட்டைக்காணவிட்டால் தெருத் தெருவாக கையில் குழையுடன் – செவியாடு ஒன்று இந்தப்பக்கம் வந்ததா அந்தப்பக்கம் வந்ததா என்று போறவர்கள் வாறவர்கள் எல்லேரையும் கேட்டுக் கேட்டுக் களைத்துபோய் வீடு வந்தால் சிலசமயம் எங்கோ ஒரு வீட்டு அடுப்படிக்குள் ஆட்டு இறைச்சி வாசம் மூக்கைத்துளைக்கும்.
ராஜாத் தியேட்டரில் படம் பார்க்க யாழ்ப்பாணம் சென்று, 15 சதம் சைக்கிள் செட்டுக்கு கொடுக்க மனமில்லாமல் எதிர்பக்கத் தேத்தண்ணிக் கடைக்கு முன்னால் சைக்கிளைவிட்டு பூட்டிவிட்டு சிவாஜி நடித்த பாபு படத்தை பாரத்துவிட்டு அழுது கொண்டு வெளியில் வந்தால், சயிக்கிளை விட்ட இடத்தில் காணது அழவேண்டி இருக்கும். திறப்பு அப்படியே பொக்கற்றுக்குள் இருக்க றலிச்சைக்கிள் மட்டும் திருட்டுபோய்விடும்.
இப்படி கட்டிவைத்த ஆட்டைக்காணோம்
பூட்டிவைத்த ரலிச்சைக்கிளைக் காணோம்.
கூட்டுக்குள் அடைத்த கோழியைக்காணோம்
இப்படி பாதுகாப்பாக வைத்தவை பலவும் காணாமல்போய்விடும் காலத்தில் பிறந்து வளர்ந்த எமக்கு. இன்று அதிசயமாக சுதந்திரமாக வெளிப்படையாக பலரும் காணும்படியாகவும் காணதபடியாகவும் நிறுத்திவைக்கும் மின்சார ஸ்கூட்டர்; நிறுத்திய இடத்தில் அசையாது அப்படியே நிற்கிறது.
இ-ஸ்கூட்டர்கள் வந்துவிட்டன! அவை தெருவில் விட்ட இடத்தில் நிற்கின்றது!!!
2019 ஆம் ஆண்டு கோடையில் இருந்து, ஜெர்மனியில் போக்குவரத்து இன்னும் ஒரு முறையால் வளப்படுத்தப்பட்டுள்ளது: மின்-ஸ்கூட்டர்களை இப்போது பொது இடத்தில் காணலாம். 48 நகரங்களில் 17 மில்லியனுக்கு மேலான பயணங்களை மக்கள் மேற்கொண்டுள்ளனர். தங்கள் உடன்பிறப்புகளைப் போலவே, மின்சார மோட்டார்-ஸ்கூட்டர்களும் வாழ்வோடு கலந்துவிட்டன. (பெரும்பாலும் ‘இ-ஸ்கூட்டர்கள்’ என்றும் அழைக்கப்படுகின்றன)
யேர்மனியில் பேர்லின் பம்பேக் பிராங்பேட் பிறேமன் டோட்மூண்ட்; என பல நகரங்களில் இந்த சைக்கிளகள் தெருவோரம் பூங்காக்கள்; ஏன் குச்சு தெருக்கள் எல்லாம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. யாரும் தொடுவதாக இல்லை. நிச்சயமாக கொரோனா பயம் அதற்கு காரணம் அல்ல. அதற்கும் மேல் ஒரு பயம் அதற்குள் இருக்கும் அபஸ்;சுக்கு Apps இருக்கு.
வாடகை கார்போல இவையும் வந்து விட்டன. கார் Frankfurt இல் வாடகை;கு எடுத்து Dortmund அந்த நிறுவனத்தின் கிளைகளில் விடுவதுபோல அல்ல, இது அதற்கும் மேலாக தெருவில் எடுத்து எந்தத் தெருவிலும் விட்டுசெல்லும் புது முறை அறிமுகத்திற்கு வந்துள்ளது.
உங்கள் தொலைபேசியில் ஒரு அப்ஸ்சை(Apps) பதிவுசெய்தால் போதும். அது உங்கள் அருகில் உள்ள பைக்கை காட்டும். அங்கு சென்று அந்த அபஸ் மூலம் ஸ்கன் செய்துவிட்டு ஓடவேண்டியதுதான். எங்கு போகிறீங்களோ அங்கு நிறுத்திவிட்டுப் போகவேண்டடியதுதான். சொந்த வாகனம் என்றால் கூட இப்படி நடக்கமுடியாது அல்லவா.
மின்சார பற்றியின் அளவு குறைந்தால் என்ன செய்வது என்று கேட்கிறீங்களா? முன்பு ஆடுகளை தெருத் தெருவாக மேய்வதற்கு விட்டாலும் ஆட்டுக்காரர் ஒரு வாளியுடன் வந்து அந்த அடுகளுக்கு புண்ணாக்கு தண்ணீர் எனக் கொடுத்துவிட்டுப் போவதை பார்த்திருப்பீர்கள். அதேபோல் இங்கும் எந்த பைக்கிற்கு மின்சாரம் தேவைப்படுகிறதோ அந்த இடத்திற்கு ஒருவர் வாகனத்தில் வந்து அந்த பைக்குகளுக்கு மின்சாரம் ஏற்றிவிட்டுச் செல்வார்.
எங்கு இருந்தாலும் பைக்கை கண்டுபிடிக்க அன்பு பாசம் அக்கறை எதுவும் தேவை இல்லை, அந்த அப்ஸ் இருந்தால் போதும். அவர்களால் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் கண்டுபிடித்துவிடுவார்கள்.
அப்ஸ் இருக்கும் துணிச்சிலில் அந்த பைக் நடு இரவிலும் துணிச்சலுடன் தெருவில் நிற்கிறது. எவரும் கைவைக்கமுடியாது. வருங்காலத்தில் பொலீசார் ரோந்து நடவடிக்கைகள் குறையலாம். இராணுவத்தின் எண்ணிக்கையும் குறையாலாம். இராணுவக் கெடுபிடிகளினால் காணிகள் சுவீகரிக்கப்படுவதும் குறையலாம் (விதிவிலக்கு எப்போதும் இலங்கைக்குண்டு) களவு செய்பவர்களை சிறையில் அடைக்க நீதிபதி அப்புக்காத்து என்று எவரும் தேவைப்படாது. இனி இந்த அப்ஸ்மட்டும் போதுமாகலாம். இந்த கொரோனா ( 2020-2021) காலப்பகுதியில் நீங்கள் நஷ்ட ஈடுக்கு பணம்பெறக் தவறுதலாகக் கொடுத்த தரவுகள் உங்களுக்கு இதுபோன்ற அப்ஸ்சுகள் ஆப்பும் வைக்கலாம். உருவம் இல்லாதா கொரோனா போல் காவல்காரர்களும் உங்களைச்சுற்றி வலம்வரலாம். ஆப்பனுக்கும் ஆத்தைக்கும் ஏன் காதலிக்கும் காதலனுக்கும் உங்களைப்பற்றி தெரியாவிட்டாலும் இந்த அப்ஸ்சுக்கு(Apps) உங்களை அக்குவேறு ஆணிவேறாகப் தெரிந்திருக்கும்.
இந்த அப்ஸ் மட்டும் இருந்திருந்தால் யாழ்ப்பாணம் ராஜா தியேட்டருக்கு முன்னால் தொலைந்த என் சைக்கிள் திருடனுக்கு இன்றும் ஆப்புவைக்கலாம். ஆனால் உங்கள் காதலன் காதலி காணமல் போய்யிருந்தால்! எந்த ஆப்சாலும் ஆப்புவைக்முடியாது. காரணம் இப்போது காதலுக்கு எல்லாம் எவரும் ஆப்புவைப்பதில்லை. அவர்கள் தமக்குதாமே மகிழ்வோடு வைத்துக்கொள்கிறார்கள் ஆப்பு!
-மாதவி.
1,326 total views, 3 views today