தமிழ் மக்களின் அரசியல் போக்கில் திருப்பத்தை ஏற்படுத்துமா தேர்தல்?
இலங்கையில் தேர்தல் களம் கொரொனாவை கடந்து சூடு பிடித்துள்ளது. ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்காக அனைத்துக் கட்சிகளும் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிட்டுள்ளன. மீண்டும் கொரொனா அச்சம் ஆட்கொண்டு இரண்டாம் அலை என பேசப்படுகிறது. இந்த இரண்டாம் அலையின் வருகைக்கு மத்தியில் தேர்தல் பிரச்சாரங்களை அரசியல் கட்சிகள் முன்வைத்து வருகின்றன. இதற்கான கட்டுப்பாடுகள் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன. பொதுத் தேர்தலின் போதும் பல கட்டுப்பாடுகளுடன்தான் மக்கள் வாக்களிக்கப்போகின்றார்கள்.
தமிழர்களைப் பொறுத்தவரையிலும் இந்தத் தேர்தல் முக்கியமானதுதான். வடக்கு, கிழக்கு அரசியலைப் பொறுத்தவரையில் கட்சிகள், கொள்கைகள் என்பவற்றைத் தாண்டி சுமந்திரனே அதிகமாகப் பேசப்படுகிறார். தினசரி அவர் வெளியிடும் அறிக்கைகளும், அவரது செயற்பாடுகளும் அனைத்துக் கட்சிகளும் அவரை மையமாகக் கொண்ட பிரச்சாரம் ஒன்றை முன்னெடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளன. இது அவரது வாக்கு வங்கியில் தாக்கத்தை ஏற்படுத்துமா இல்லையா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். கிழக்கில் அண்மைக்காலத்தில் கருணா பேசு பொருளாகியிருக்கின்றார்.
வடக்கைப் பொறுத்தவரையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு (இலங்கைத் தமிழரசு கட்சி), தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி (அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்), தமிழ் மக்கள் தேசிய கூட்டணி (விக்கினேஸ்வரன் தலைமையிலான அணி), ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பி.டி.பி), தமிழர் சமூக ஜனநாயக கட்சி (ஈ.பி.ஆர்எல்.எப் வரதர் அணி), பொது ஜன பெரமுனை (ராஜபக்ஷககள்), ஐக்கிய தேசிய கட்சி (ரணில் அணி), ஐக்கிய மக்கள் சக்தி (சஜித் அணி), ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி, இப்படி பிரதான கட்சிகள் களமிறங்கியுள்ளன.
அதேவேளை சுயேச்சைக் குழுவாக போட்டியிடும் மக்கள் மேம்பாட்டு ஐக்கிய முன்னணி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தலைமையிலான சுயேச்சைக் குழு, முன்னாள் வடமாகாண அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையிலான சுயேட்சைக்குழு, வடக்கு வாழ் இந்திய வம்சாவளி மக்களின் சுயேச்சைக் குழு, பேரினவாத கட்சிகள் வாக்குகளை சிதறடிப்பற்கென இறக்கிவிடப்பட்டுள்ள சுயேச்சைக் குழுக்கள் என பல அணிகள் களமிறங்கி உள்ளன. சுமார் 30 அணிகள் வடக்கில் களமிறங்கியிருக்கும் நிலையில், மக்களுடைய தெரிவாக பிரதானமான சில கட்சிகள்தான் இருக்கப் போகின்றன.
இப்போதைய ஆளுந்தரப்பின் ஒரே தமிழ் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா கடந்த காலங்களில் அமைச்சுப் பதவி வகித்ததன் மூலம் அபிவிருத்தி அரசியலை வடக்கிலே முன்னெடுத்துள்ளார். ஆனால், கடந்த நான்கரை வருடங்களாக அந்த வாய்ப்பு அவருக்கு இல்லாமல் போயிருந்தது. எல்லோருமே அரசின் எதிரணி என்று இருந்திருந்தால் அரசாங்கத்தின் சேவைகளை, அபிவிருத்திகளை வடக்கு நோக்கிக் கொண்டு வருவதிலும் வடக்கு மக்களின் அன்றாட பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதிலும் பல சிக்கல்களை எதிர்நோக்கவேண்டி வந்திருக்கும். அதனை டக்ளஸ் சரிவர முன்னெடுத்தார் என விமர்சகர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
ராஜபக்ஷ அரசு இனவாதப் போக்கோடு பௌத்த பேரினவாத கருத்தாக்கத்தை புராதன தடயங்கள் மீது கட்டமைக்க உருவாக்கியுள்ள செயலணியில் வடக்கு- கிழக்கு தமிழர் தரப்பில் ஒருவர் இல்லாத நிலையை கூட போக்கும் வல்லமை டக்ளசிடத்தில் இருக்கவில்லை. இது குறித்து அவர் முன்வைத்த கோரிக்கையை ராஜபக்ஷக்கள் கணக்கில் எடுக்கவில்லை என்பது தேவானந்தாவுக்கு ஒரு பின்னடைவுதான். ஆனால், தன்னுடைய வாக்கு வங்கி நிலையானதாக இருக்கும் என அவர் நம்புகின்றார். அதனால், ஒன்று அல்லது இரண்டு ஆசனங்கள் தனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையை அவர் வெளியிட்டு வருகின்றார்.
ஆனால், கடந்த பொதுத் தேர்தலில் ஈ..பி.டி.பி. சார்பில் போட்டியிட்ட மு.சந்திரகுமார் இப்போது தனியாகக் களமிறங்கியுள்ளார். சந்திரகுமாருக்கு கிளிநொச்சியில் கணிசமான வாக்குப் பலம் உள்ளது. தேவானந்தாவின் வாக்கு வங்கியில் இது எந்தளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நாம் பொறுத்திருந்தூன் பார்க்க வேண்டும்.
இதே நிலைமையை ஐக்கிய தேசிய கட்சியை ஆதரிக்கும் விஜயகலாவின் எதிர்கால அரசியலும் கேள்விக்கு உள்ளாகிறது. கடந்த தேர்தலில் சொற்ப வாக்கு வித்தியாசத்தில்தான் அவரால் பாராளுமன்ற ஆசனத்தைத் தக்கவைக்க முடிந்தது. இந்தமுறை சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி தனியாக யாழ்ப்பாணத்திலும் களம் இறங்கியுள்ள நிலையில் விஜயகலாவின் எதிர்காலம் கேள்விக்குறியாகியிருக்கின்றது.
அங்கஜன் தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டாலும் இது மொட்டு அணிதான். கடந்த முறை தோல்வி கண்ட பிறகு தேசிய பட்டியல் மூலம் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், இந்த முறை எப்படியும் வெற்றி பெற்றே வர வேண்டும் என்ற வேகத்தில் பணத்தை தண்ணீராக இறைத்து கடுமையான பரப்புரைகளை அங்கஜன் முன்னெடுத்து வருகின்றார். அவரது கட்சியைச் சேர்ந்த விண்ணன் போன்றவர்களும் வெற்றியை நோக்கி கடுமையாக உழைக்கின்றார்கள். அதனால், இவர்கள் தரப்பு ஒரு ஆசனத்தையாவது பெற்றுக்கொள்ள வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாணத் தகவல்கள் சொல்கின்றன.
இவற்றைவிட்டால், தமிழ்த் தேசியத்தை கொள்கையாக வெளிப்படுத்தும் மூன்று அணிகளுக்குள் கடும் போட்டி உள்ளது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்பனவே அவை. தமிழ் மக்களின் ஏகபோக பிரதிநிதிகள் என்ற கூட்டமைப்பின் தொடர்ச்சியான பிம்பம் இந்தத் தேர்தலில் உடைக்கப்படுமா என்ற கேள்வி முக்கியமாக எழுகின்றது. ஆனால், அதிகளவு ஆசனங்களைப் பெறப்போகும் கட்சியாக கூட்டமைப்பே இருக்கப்போகின்றது என்பதை வடக்கு கிழக்கு தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.
வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் தேசிய கூட்டமைப்பு இந்த தேர்தலில் முதன்முதலாக களமிறங்கியிருக்கின்றது. கூட்டமைப்புக்கு மாற்றாக ஒரு புதிய தமிழ் தலைமையை உருவாக்க வேண்டும் என்ற இலக்குடன் தான் விக்கினேஸ்வரனின் தலைமையிலான கூட்டணி இந்த முறை தேர்தல் களத்தில் குதித்து இருக்கின்றது. விக்னேஸ்வரன் தலைமையிலான புதிய கூட்டணி மாற்றுத் தலைமையை உருவாக்குமா என்ற கேள்விக்குறி இந்த முறை வடக்கு கிழக்கு தேர்தல் களத்தை பரபரப்பாகி இருக்கின்றது என்பது உண்மை.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை பொறுத்தவரையில் மாற்று அணி அல்லது மாற்று தலைமை ஒன்றுக்காண சாத்தியமில்லை என்பதுதான் அவருடைய நிலைப்பாடு. தமிழ் தேசியக் கூட்டமைப்பு 20 ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும் என்ற நம்பிக்கையுடனேயே தாம் செயற்ப்படுவதாக திருமலையில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஒன்றில் சம்பந்தன் கூறியிருக்கின்றார். கடந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 16 ஆசனங்களைப் பெற்றிருந்தது இந்த முறை அதற்கு மேலதிகமாக அவர்களால் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்குமா என்பது முக்கியமான கேள்வி.
அதேவேளையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மாற்றுத் தலைமைக்கான தகுதி தம்மிடமே இருக்கின்றது என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றது. கூட்டமைப்புக்கு அடுத்ததாக பலம் வாய்ந்த கட்சியாக தமது அணி தான் இருக்கின்றது என்ற பரப்புரையை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்னெடுத்து வருகின்றார். கடந்த வருடம் பிப்ரவரி மாதம் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது தமிழ் தேசிய மக்கள் முன்னணி இரண்டாவது பலம் வாய்ந்த ஒரு கட்சியாக வெளிப்பட்டு இருந்தது என்பது அவரது நம்பீக்கைக்குக் காரணம்.
வடக்கே கிழக்கு உள்ள நிலைமைகளை பார்க்கும்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிக ஆசனங்களை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் இருப்பதை அவதானிக்க முடிகின்றது. இருந்தபோதிலும் கூட்டமைப்பின் முக்கியமான தலைவர்கள் சிலருக்கு இந்தத் தேர்தல் கடுமையான ஒரு சவாலாக அமையும். அதேவேளை மாற்று தலைமை ஒன்றை உருவாக்குவதற்குத் தேவையான ஆசனங்களை பெற்றுக் கொள்ளப் போகும் அணியாக விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணி உருவாகுமா அல்லது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அணியினர் உருவாகுவார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இரண்டு தரப்பினருமே அந்த நம்பிக்கயுடன்தான் இருக்கின்றார்கள்.
— கொழும்பிலிருந்து
ஆர்.பாரதி
1,557 total views, 2 views today