ஈழத்து வணிகனின் நன்கொடை பற்றி சேரநாட்டு செப்பேடுகள் செப்புகின்றன!

இயற்கை அழகிலும், உணவு முறைகளிலும் இன்னும் சிலவழக்கங்களாலும் சேரநாடும் ஈழநாடும் சில ஒற்றுமைகளைப் பெற்றிருக்கின்றன. சேர நாடு வேழமுடைத்து என்பர் அதுபோலவே மலைகளும் யானைகளும் நிறைந்தது ஈழ நாடு. கடற்கரையும் அப்புறத்தே வானளாவிய மலைகளும் காடுகளும் கொண்டது கேரளம் அதுபோலவே கடல் சூழ்ந்து மத்தியில் பெரிய மலைகளும் காடுகளும் கொண்டது ஈழம்.
ஆப்பமும் பிட்டும் தேங்காயும் கேரளத்தை யாழ்ப்பாணத்தின் அடுத்த வீடு போலே காட்டும். பேசும் தமிழில் பழந்தமிழின் அழகிய சொற்களை இன்றும் பேணிவரும் பெருமையும் ஈழத்தமிழுக்கும், பழைய மலையாளமென்னும் கொடுந்தமிழுக்கும் உண்டு.
அப்படி ஒரு அழாகான சேரநாட்டு ஈழநாட்டுத் தொடர்பை ஆயிரமாண்டு பழமையான செப்பேடு ஒன்று சொல்லுகிறது. ஈழம் என்ற சொல்லின் பயன்பாட்டுக்கு ஒரு ஆதராமாகத் திகழ்வதும் இந்த செப்பேடு தான்.
திருவல்லா எனும் திருவல்லவாழ் சேரஃ மலைநாட்டில் ஆழ்வார்கள் பாடிப்பரவிய ஊர்களில் ஒன்று, இன்றைய கேரளத்தின் பத்தனம்திட்டாவிற்கு அருகே அமைந்த ஊர். இவ்வூரில் திருமாலுக்கு சிறப்பாய் கோவிலொன்று இருக்கிறது, வல்லபன் என்ற பெயரோடு திருமால் எழுந்தருளியிருக்கும் இக்கோவில் நம்மாழ்வாராலும் திருமங்கைமன்னனாலும் பாடல் பெற்றது !
“பச்சிலை நீள் கமுகும் பலவும் தெங்கும் வாழைகளும்
மச்சு அணி மாடங்கள் மீது அணவும் தண” சூதிருவல்லவாழ் (நம்மாழ்வார்)
இந்த கோவிலுக்கு தொடர்புடைய செப்பேடு திருவனந்தபுரம் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகிறது. மொத்தம் 44 ஏடுகளை கொண்டுள்ளது இது, இதன் காலம் 10-11 ஆம் நூற்றாண்டாக கருதப்பெறுகிறது.
வட்டெழுத்து கிரந்த எழுத்துக்கள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. செப்பேடுகள் கோவிலுக்கு பல்வேறு காலகட்டத்தில் கொடுக்கப்பட்ட கொடைகள், அவற்றை கொடுத்தோர், அவர்களின் ஊர், கோயில் விழாக்கள் என பல தகவல்களைத் தருகிறது.
அவற்றில் ஒரு அழகான குறிப்பு ஈழத்தில் இருந்து வந்த வணிகன் அமுது செய்ய கொடுத்த கொடை, இதன் வரிகள்
“….இ(ஈ)ழத்து நின்று வந்ந வாணியன் பள்ளத்து பொக் கொவிந்நன் கைய்யில் திருவமிர்தினு கொடுத்த…”
இந்தக் கோவில் அக்காலத்தில் பெரும்புகழ் பெற்றிருந்திருக்கிறது அதே போல் வாணிபத்தில் சிறந்து விளங்கிய சேரநாடு பல நாடுகளில் இருந்து வரும் வணிகர்களுக்கு சிறந்த வாணிபத்தலமாகவும் விளங்கிவந்தது. இதே போல ஈழ நாடும் வாணிபத்தில் சிறந்து விளங்கிவந்துள்ளது. அப்படி ஈழ நாட்டிலிருந்து வந்திருந்த வாணியன் ஒருவன் கோவில் திருவமுது எனும் ப்ரசாதத்திற்கு பள்ளத்து கோவிந்தன் என்பவரிடம் கொடுத்த பணத்தைப் பற்றிய குறிப்பு குறிக்கப்பட்டுள்ளது.
ஈழத்திலிருந்து கேரளத்திற்கு வருவதும், கோவில்களை தரிசிப்பதும் இந்த செப்பேட்டுக் காலத்துக்கு முன்னரே தொடங்கிவிட்டது.
சுமார் இரண்டாம் நூற்றாண்டளவிலேயே கயவாகு மன்னன் சேரநாடு வந்ததை சிலப்பதிகாரம் சொல்லும்.
“குடகக் கொங்கரும் மாளுவ வேந்தரும்
கடல்சூ ழிலங்கைக் கயவாகு வேந்தனும்
எந்நாட் டாங்கண் இமய வரம்பனின்
நன்னாட் செய்த நாளணி வேள்வியில்”
சிலப்பதிகாரம் பாடிய இளங்கோவின் அண்ணன் சேரன் செங்குட்டுவன் தமிழரை அவமதித்த வடபுல மன்னர்களும் கனக விசையரை வெல்ல படையெடுத்துச்சென்றான். அவரைகளை வென்று இமயத்தில் கல் எடுத்து கங்கையில் நீராட்டி தோற்ற மன்னர்களின் தலைமீதே அதனை சுமத்தி வஞ்சிமாநகர் கொண்டு வந்து பத்தினித் தெய்வமாம் கண்ணகிக்கு கோவில் எடுத்து சிலையும் நாட்டினான். அங்கே அப்போது பல நாட்டு மன்னர்களும் வந்திருந்தனர் அவர்களுள் கடல் சூழ்ந்த இலங்கையின் கயவாகுவும் ஒருவர். இவரே ஈழத்திற்கு பத்தினி வழிப்பாட்டை எடுத்துச்சென்றவர்.
இப்படி உணவுமுறை, இயற்கை அழகு, அழகான சொற்கள் கலந்த பேச்சால் மட்டும் ஈழமும் சேரநாடும் தொடர்புடையவை அல்ல, காலங்கள் கடந்த பயணங்களிலும், வாணிபங்களாலும் தான்.
-தனசேகர் பிரபாகரன்