கறுப்பு இனவாதம் – எமக்கும் அதில் பங்கு இருக்கிறது

கறுப்பினத்தவர் வலியை அதிகம் தாங்குவார்கள் என்ற தவறான கருத்தால்
அவர்கள் வலியை மருத்துவ துறையினர் உதாசீனம் செய்கிறார்கள்

மே மாதம், 25ம் திகதி அன்று Minnesota,US இல் கறுப்பினத்தவரான George Floyd கழுத்தின் மேல், கிட்டத்தட்ட 9 நிமிடங்களுக்கு ஒரு வெள்ளை இன காவல்துறை அதிகாரி, தன் முழங்காலை அழுத்திக்கொண்டிருந்தார். George “என்னால் மூச்சு எடுக்க முடியவில்லை” என்று மீண்டும் மீண்டும் குரல் கொடுத்த பின்பும், பின் மூச்சிழந்து விட்ட பின்னும், அழுத்திய முழங்காலை அந்த காவல்துறை அதிகாரி எடுக்கவில்லை. புநழசபந இன் இறப்பு, காலம் காலமாக கறுப்பு இனத்தவர்களுக்கு எதிராக நடக்கும் அநீதிக்கெதிரான புது போராட்டத்தை ஆரம்பித்துவிட்டிருக்கிறது.

இதில் கவனிக்கத்தக்க ஒரு விடயம்: கூட இருந்த ஆசிய இனத்தை சேர்ந்த காவல்துறை அதிகாரியின் பங்கு தான் அது. George இறக்கும் தறுவாயிலும் கூட, அந்த ஆசிய அதிகாரி விறைத்த நிலையில் நின்றார். அருகில் நின்றவர்கள் அந்த கொலையை தடுத்து நிறுத்தாமல் இருக்க காவல் நின்றார். இந்த காட்சி எம் ஆசிய இனத்தினை அப்படியே சித்தரிக்கும் ஒரு வரலாற்று சின்னமாக இருக்க போகிறது. இதற்கு நாம் என்ன செய்யமுடியும்? தமிழர்களாகிய நாம் இதை கேட்கலாம். அந்த ஆசிய அதிகாரியும் அப்படி தான் யோசித்திருப்பார். ஒரு பிழையை செய்பவர் மட்டுமல்ல, அதற்கு உடந்தையாக இருப்பவருக்கும் அந்த பிழையில் பங்கிருக்கிறது.

நாமே சிறுபான்மையினர், நம்மால் என்ன செய்யமுடியும் என நாம் கேட்கலாம். ஆனால் மேலை நாடெங்கும் நடக்கும் இஸ்லாமிய மற்றும் கறுப்பு இனத்தவர்களுக்கு எதிரான பாரபட்சத்தால், நாம் கொஞ்சம் குளிர்காய்ந்து கொண்டிருக்கிறோம். எம்மை போன்ற ஆசிய இனத்தவருக்கு “மாதிரி சிறுபான்மையினர்”, அதாவது model minority என்றொரு வறட்டு கௌரவத்தை பெரும்பான்மையினர் தந்திருக்கிறார்கள். மேலை நாடுகளில் வசிக்கும் ஆசிய நாட்டு மக்களை தான் பொதுவாக மாதிரி சிறுபான்மையினர் என்று அழைக்கிறார்கள்.

ஏனென்றால், ஆசிய நாட்டவர்கள் பொதுவாக கல்வி மற்றும் உழைப்பில் கவனம் செலுத்தி, முன்மாதிரியாகவும் சட்டத்துக்கு கட்டுப்பட்டும் நடக்கிறார்கள் என்ற மேலோட்டமான நம்பிக்கை தான் அது. இந்த ஒரு போலி கௌரவத்தை எமக்கு கொடுத்து, எம்மை எதையுமே தட்டிக்கேட்காதவாறு தக்கவைத்திருக்கிறார்கள் பெரும் பான்மையினர்.

Passive என்ற ஆங்கில பதத்திற்கு, அகராதியில் “செயலற்ற” என்று பொருள். அந்த பதத்திற்கு ஏற்றவாறு தான் தமிழர்கள் ஆகிய நாம் வாழ்கிறோமா? நிச்சயமாக, நம் எல்லோரையும் ஒரு இனமாக, ஒரே அளவுகோல் கொண்டு அளக்க முடியாது. அளக்கவும் கூடாது. சமூக விழிப்புணர்வும், அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் திறமையும் கொண்டவர்கள் நம் தமிழர் மத்தியில் இருக்கிறார்கள். ஆனால், துரதிஷ்டவசமாக, அவர்கள் விரல் விட்டு எண்ணும் அளவுக்கு தான் இருக்கிறார்கள்.

ஒரு நண்பர்; சமூக ஆர்வலர் சொன்னது போல், ஈழப் போரைப்பற்றி நாம் பேசுவோம். ஆனால், போர் நமக்கு என்ன செய்தது என்பது பற்றி பேசமாட்டோம். போர் ஒன்று தான் எங்களை சற்றேனும் செயல்திறன் உள்ளவர்களாக கண்டிருக்கிறது. விரிசல்கள் மத்தியிலும் கூட, ஒரு மட்டத்தில் நம்மை இணைத்திருக்கிறது. போரை விடுத்துப் பார்த்தால், நாம் எதை பற்றி பேசுகிறோம்? போரில் எத்தனையோ அவலங்களை சந்தித்தோம். பிரிவுகள், சித்திரவதைகள், துரோகங்கள், பாலியல் வன்முறை! இது ஒன்றையும் பற்றி வாய்விட்டு பேச மாட்டோம்.

பேரப்பிள்ளைகளை கண்டபின்னும் தனக்கு நடந்த பாலியல் வன்முறையை மனதுக்குள்ளேயே சுமந்தவர், தம் பிள்ளைகளுக்குக் கூட அவர் இதை வெளிப்படுத்த முடியாத நிலை. அகதிகோரிக்கையில் பிரச்சனை வரலாம் என்ற ஒரே காரணத்தால், என்னிடம் வெளிப்படுத்தினார். அந்த பெண்ணுக்கு, நடந்த கொடுமையை வாய் திறந்து தமிழில் சொல்லவே சரியான சொல் பதம் தெரிந்திருக்கவில்லை. இப்படி எத்தனை மௌன வடுக்கள்! போரில், காணாமல் போனோர் தாயாக, மனைவியாக, சகோதரியாக, அந்த நீதிக்காக எம் பெண்களால் போராட முடிகிறது. ஆனால், பாலியல் வன்முறைக்காக குரல் கொடுப்பது, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டம் போல் எம் சமூகத்தில் அங்கீகரிக்கப்படுமா?
பெண்கள் தினத்தில் என்னை பேச அழைக்கும் போது, பிள்ளை வளர்ப்பு பற்றி அல்லது பிள்ளைகள் உளநலத்தை பற்றி பேச சொல்கிறார்கள். பெண்களை பற்றி பேச சொல்கிறார்கள் இல்லை. ஏன்?
பெண்ணியம் பற்றி பேசினால், எங்கே நம்மை ஒழுக்கம் அற்றவர்கள் என்று எண்ணிவிடுவார்களோ என பெண்கள் பயப்படுகிறார்கள். ஆண்களோ, பெண்களுக்காக பேசினால், தம்மை “பெண்மைத்தன்மை” கொண்ட ஆண்கள் என்று மற்றவர்கள் நினைப்பார்களோ என்று பயப்படுகிறார்கள்.

சாதி வாதம் இப்பொழுதும் எம் சமூகத்தில் இருக்கத்தான் செய்கிறது. அதை ஒரு விடயமாக நாம் எடுத்து பேசுவதே இல்லை. பண்டைய கோயில்களில் சிற்பங்களை பார்த்தீர்கள் என்றால்,அது நம் முன்னோர்கள், பாலியல் அடையாளங்கள் சார்ந்து, இப்பொழுது மேலைதேசங்களில் முற்போக்குசிந்தனை என்று கருதுவதை தமிழர்கள் எப்பொழுதோ ஏற்றுக்கொண்டவர்கள் என்பதை புரியவைக்கும். காலனித்துவ ஆட்சியின் பின், எம்மை வெள்ளையர்கள் “ஒழுக்கப்படுத்திய” தன் விளைவாக, இன்று நாம் பின்தங்கியவர்கள் ஆகிவிட்டோம். ஓரினச்சேர்க்கை மற்றும் பாலியல் அடையாளங்கள் பற்றி மௌனம் கடைப் பிடிக்கிறோம். இவை எல்லாம், இப்பொழுதைய கறுப்பு இனவாதத்துடன் எப்படி தொடர்பு படுகிறது?

அடிப்படையில், நம் கைகளிலும் கறை இருக்கிறது. வெள்ளைத் தோலின் மேலான மோகம் எம்மை ஆழமாக பாதித்திருக்கிறது. எமக்குள் இருக்கும் இந்த புரையேறிப்போன மடமைத்தனம் பற்றி எமக்குள் எவ்வளவுக்கு விழிப்புணர்வு இருக்கிறது? எம்மில் எத்தனை நிறம் குறைவான இளம் பெண்கள், தம் தாய் தந்தையராலேயே ஏதோ வேண்டாத நோய் வந்தவர்கள் போல் பார்க்கப்படுகிறார்கள்? எம்மில் எத்தனை வயது வந்தோர் சிறுவயதில் தம் நிறக்குறையால் வேற்றுமை பாராட்டப்பட்டு, இன்றும் அந்த பாதிப்பால் மனம் வெந்து சுயமரியாதைக் குறைவோடு வாழ்கிறார்கள்?

தற்பொழுது இருக்கும் புலம்பெயர் சமூகத்தின் மிகப்பெரும் சாபக்கேடு தென்னிந்திய சினிமாவின் உள்வாங்கல். அத்தி பூத்தாற் போல் ஒரு சில நல்ல படைப்புகள் வரத்தான் செய்கின்றன. Fair & Lovely போட்டால் தான் பெண் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளலாம் என்ற செய்தியை தரும் விளம்பரங்களில் இருந்து, சிங்கம் திரைப்படத்தில் சூர்யா “ஆபிரிக்க குரங்கு” என்று ஒரு கறுப்பினத்தவரை தாழ்மைப்படுத்தி பேசுவது வரை, இன, நிற பால்வெறி இந்த துறையில் தலைவிரித்தாடுகிறது. கறுப்புநிற நடிகை தேவைப்படும் போது மட்டும் வெள்ளை தோல் கொண்ட நடிகைகளுக்கு கறுப்பு பூசி ஒரு இயல்பில்லாத தோற்றத்தை முன்னிறுத்துவார்கள். இந்த அப்பட்டமான முட்டாள் முரண்பாடுகளை பார்த்து சிரிப்பதா, கோபம் கொள்வதா?

எம் “மாதிரி சிறுபான்மையினர்” பதவியை தக்க வைத்துக்கொள்ள நாம் என்ன செய்கிறோம்? பாரிசில் இஸ்லாமிய தீவிரவாதிகள் தாக்குதல் செய்தால் உடனே பிரான்ஸ் நாட்டு கொடியை எம் முகநூல் பக்கத்தில் போட்டு அனுதாபம் தெரிவிக்கிறோம். அதுவே இஸ்லாமியர்களுக்கு எதிராக பெரும்பான்மையினர் செய்யும் அநீதி என்றால், அதை கண்டும் காணாமல் விட்டுவிடுகிறோம்.இனவெறி அதனால் பாதிக்கப்படுபவர்களை மன அழுத்தத்துக்கு உள்ளாக்குகிறது. பதட்டம், போதை நாட்டம், இருதய, மற்றும் வேறு உடல் நோய்களுக்கு கூட காரணமாகிறது.

இனவாதம் எம் கண்ணை மறைக்கிறது. இனம் சார்ந்து, மதம் சார்ந்து பிழையான வார்படங்களை உருவாக்குகிறது. உங்களுக்கு தெரியுமா? அமெரிக்காவில் மகப்பேற்றின் போது கறுப்பின பெண்கள் இறப்பு விகிதம் வெள்ளை இனத்தவரை விடவும் 2-6 முறை அதிகம் என கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இது மற்ற சிறுபான்மையினருக்கும் பொருந்தும். கறுப்பினத்தவர் பொதுவாகவே வலியை அதிகம் தாங்குவார்கள் என்ற ஒரு தவறான வார்படத்தால், அவர்கள் வலியை மருத்துவதுறையினர் உதாசீனம் செய்கிறார்கள் என்றும் இதற்கு ஒரு காரணம் சொல்லப்பட்டிருக்கிறது. எப்பொழுதுமே அதிகாரத்தில் இருப்பவர்கள் தான் அந்த வார்படங்களை நிர்ணயிக்கிறார்கள். இலங்கையில் இருந்து அகதிக்கப்பல்கள் கனேடிய எல்லைகளை தொட்டபோது, அந்த அதிகாரம் தான், தமிழர்களை பயங்கரவாதிகளாக வரையறுத்தது.
;

1,374 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *