முரண்பாடான குணங்களே முன் கதவைத் தட்டும் கருணையே கதவைத் திறக்கும்!

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். எல்லோருக்கும் அவரவர் அம்மா அழகாக தெரிவது அம்மாவின் அகம் பிள்ளைக்கு என்றும் பேரழகாக இருப்பதனாலேயே. அன்பென்ற ஒரு விடயம் ஏனைய விடையங்களையெல்லாம் அழகாக காட்டிவிடக்கூடியது. அன்பே அனைத்தும் என்பதை விட அன்பே சௌகரியமானது. அன்புள்ள இடம் பாதுகாப்பானது, அன்பு இருந்தாலே கருணை, இரக்கம், தியாகம் போன்ற நற்பண்புகள் மேலோங்கும்.
கருணை என்பது அந்த தன்மையோடு கரைந்து போதலாகும். அந்நிலையில் இறுக்கம் தளர்வு பெற்று உருக்கம் பிறந்துவிடும். எனவேதான் இரக்கத்தை உருக்கம் என்றனர். இது ஒருவரை அன்பு கொண்டவராக மட்டுமல்லாது முழுமையையும் அன்பாகவே மாற்றிவிடும்.
புதிதாக பிராணிகளை அணுகையில் அந்த பிராணிகளுக்கு நாம் மென்மையாக தடவிக் கொடுத்தோ அல்லது உணவு கொடுத்தோ எம் இயல்பை அதனோடு வெளிப்படுத்தியதும் அவை தம் பாதுகாப்பை உறுதிப்படுத்திய பின்னரே எம்மோடு ஒட்டி உறவாடும்.
நாம் பழகும் மனிதர்களினிடையே பணம் படைத்தவர்கள், நல்ல பதவி வகிப்பவர்கள், அல்லது மிக அருகில் வசிப்பவர்கள் என எத்தனை வகையானவர்கள் இருந்தாலும் எப்போதும் வெளிப்படையாக பேசிப்பழகும் அன்பானவர்களிடமே அன்னியோன்யம் அதிகரிப்பாகும். அவர்களையே நாடுவதோடு பாதுகாப்பான உறவாகவும் மனம் ஏற்றுக் கொள்ளும்.
பாடசாலையில் மிக கடினமாக வெறுப்போடு நடந்துகொள்ளும் ஆசியர் அந்த பாட வேளையில் வகுப்பிற்கு சமூகமளிக்கவில்லையெனில் மாணவர்கள் மிகவும் மகிழ்வோடு காணப்படுவார்கள். எவர் ஒருவரை கண்டு பயம் கொள்கிறோமோ அவர் இல்லாத போது அவரை வெறுக்கிறோம் என்பதே பொருள். அவர் இல்லாத இடத்தையே விரும்புகிறோம். இங்கு பயம் வேறு, பக்தி வேறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஏதாவது கொண்டாட்ட நிகழ்வுகளுக்கு அழைப்பு விடுக்கும் போதே இன்னார் வந்தால் நாங்கள் வரமாட்டோம் என சிலர் கூறக் கேட்டிருப்போம். இது இரு பக்கத்திற்கான உணர்வுநிலையினை பார்க்க கூடியதாக உள்ளது. இங்கே காழ்ப்புணர்ச்சி தலைகாட்டுகிறது.
அன்பற்ற அணுகுமுறையை யாருமே விரும்புவதில்லை. ஒருவர் எவ்வளவு பண்பட்டு இருப்பினும் கருணையற்ற தன்மை கொண்டிருப்பாராகில் அவருடைய ஏனைய நற்குணங்கள் வெளித்தெரியாமல் அடிபட்டு போய்விடும். அழகான மலர்களாக இருப்பினும் அவற்றில் துர் நாற்றம் வீசும் எனில் அதனை எவரும் பயன்படுத்த மாட்டார்கள். அதேநேரம் கண்ணை கவரும் வகையில் இல்லாவிடினும் நல்ல நறுமணமுள்ள மலரை அதிகம் விரும்புவார்கள். இந்நிலையே மனிதர்களிடையேயும் காணப்படுகின்றது.
நாம் வெளிவிடும் வார்த்தைகள், அவை பிரயோகிக்கும் தன்மைக்கேற்ப உணர்வு பிரதிபலிப்பை ஏற்படுத்துவதோடு அதன் அதிர்வலையும் விரிந்து செல்கிறது. அது சூழலில் இருந்து மறுதாக்கம் புரிகிறது. இதனை இரு தாவரங்களை வைத்து ஆய்வு மேற்கொண்டு கண்டுபிடித்துள்ளார்கள். ஒரே வகையான இரு தாவரங்களை ஒரே வகையான சூழலில் வைத்து ஒன்றை மிக அன்பாக பராமரித்து மற்றையதை அன்பற்ற வெறுப்புணர்வோடு பராமரித்தனர். இரண்டுக்கும் ஒரே மாதிரியான ஊட்டச்சத்து வழங்கப்பட்டது. சில நாட்களின் பின் இரண்டு தாவரங்களுக்குமிடையே பெரிய மாறுபாடு உள்ளதை அறிந்து கொண்டார்கள். அன்பான பராமரிப்புடனான தாவரம் அதிக வளர்ச்சியையும், செழுமையையும் கொண்டிருக்க மற்றைய தாவரம் சோபையிழந்து காணப்பட்டது. இந்த ஆய்வு பல தடவைகள் மேற்கொள்ளப்பட்டு ஒரே பெறுபேறுகளையே காட்டியது. அதேவேளை அன்பு, கோபம் என இரு வேறு வகை எண்ணங்களுடன் தாவரங்களை அணுகும் போது அவை வெளிவிடும் அதிர்வலைகளும் (Frequency) வேறுபாட்டுடன் இருப்பதோடு கோபத்தோடு, அழிக்கும் எண்ணத்தோடு அணுகையில் தாவரம் பரபரப்போடு சீரற்ற அதிர்வலையை வெளிப்படுத்துவதை கண்டுபிடித்து வெளியிட்டுள்ளனர்.
இரக்கமற்ற இறுக்கமான மனநிலையில் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் பலர். இந்நிலை வெளியில் உள்ள சூழ்நிலையில் முரண்படுவது மட்டுமல்ல அவரவர் உடல் மற்றும் மனநிலையிலும் முரண்பட்டு பாதிக்கப்படுவார்கள். தாம் பிறரால் புரிந்து கொள்ளப்படாமல் போகின்றோம் என்றே தமக்குள் வருந்துவார்கள். பெரும்பாலும் தம்மில் உள்ள நேர்மறையான விடயமே தத்தம் பார்வைக்கு அதிகம் புலனாகிறது. எனவே பொதுவாக அதிகாரமாக நடந்துகொள்பவர்கள் கூட தமக்குள் தம்மைப்பற்றி தாம் சரியாக நடந்துகொள்வதாகவே எண்ணத்தைக் கொண்டிருப்பார்கள். ஆனால் எத்தகைய நற்குணங்கள் இருப்பினும் பிறர் பார்வைக்கு முதலில் புலப்படுவது முரண்பாடான குணங்களே.
முரட்டு சுபாவம் குழந்தைகள் முதல் பெரியவர்களை மட்டுமல்ல எந்த பிராணிகளையும் கவர்வதில்லை. அவற்றை தவிர்த்து விலகவே விரும்புவர். இத்தகையவர்கள் சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டு தனித்தே போய்விடுவார்கள். அன்பான தலைமைக்கு விசுவாசிகள அதிகம்;, அடக்குமுறையாளனுக்கு துரோகிகள் அதிகம் என்பார்கள். இது ஒரு கூட்டத்திற்குள் மட்டுமல்ல பேரண்டத்திலும் பிரதிபலிக்கும்.
ஒருவரது நற்குணங்களுக்கு மத்தியில் கருணையற்ற தன்மை இருக்குமாயின் அவருடைய பிறந்த குடிப்பெருமையை உலகம் சந்தேகிக்கும் என்பது வள்ளுவன் வாக்கு.
— கரிணி