தாய்மை
அன்பு , காதல், தாய்மை, பெண்மை, வீரம், ஞானம், நாதம், அறம் , பழமை, புதுமை, அடிமை ,கடமை, கல்வி , வேள்வி, புகழ், வெற்றி,பணம், மனம் , தவம், , வரம், சக்தி, முக்தி, சித்தி, பக்தி, கனவு, நிலவு , துணிவு, தெளிவு ,மோனம், மோகம், யோகம், தானம்,உண்மை, திண்மை, ஒருமை, ஜெயம், மங்கை,கற்பு அருள், இனிது என்று பாரதியின் மூன்றெழுத்துகளுக்குள் தந்தியடித்துக்கொண்டு இருந்தது என் கண்கள்.
தமிழும் மூன்றெழுதே, தமிழாகி நின்ற பாரதியும் மூன்றெழுத்தே.
எத்தனை முறை இப்பட்டியலைப் பார்த்தாலும் ஒரு சொல்லில் சிக்கி நிக்கிறது சிந்தை அதை வென்று நிக்கிறது அறிவெனும் விந்தை. ஆம் அந்த சொல் “தாய்மை ” என்ற உன்னதச் சொல் என்பதை விட வேறென்னவாக இருக்க முடியும் ?
பெற்றால் தான் தாய்மை வருமா ??
ஒரு குழந்தைக்கு இரு தாய் என்று காட்டி அன்றே ஞானத் தேடலுக்கு வழி சமைத்த கண்ணனையும், பிள்ளையைப் பெற்ற அன்றே பிரிந்து விட்டு , மீண்டும் ஓர் தெய்வ சங்கல்பமாய் சந்திக்கும் போதும் தாய்மை மாறாதிருந்த குந்தியையும், முருகனை வளர்த்த கார்த்திகை பெண்டிரையும் பற்றிய கதைகளை நம் சிறு வயது முதல் சொல்லக் கேட்டு வளர்ந்தோம்.
தாயின் நுனிவிரல் பற்றிச் செல்லும் சேயின் மகிழ்வைக் கண்டு நெகிழ்வோரிலும்,. ஓடி வந்து தழுவும் குழந்தைக்கு அடிமையாகும் நெஞ்சங்களிலும் ,.மழலை மொழி கேட்டு மனம் இளகும் முதியோரிலும்,செல்லப் பிராணியிடத்தே பிரியம் வைக்கும் சிறுவரிடத்தும் , கேட்டதெல்லாம் கொடுக்க வேண்டும் என்று முயலும் தந்தையிலும், கேட்காததும் எட்ட வேண்டும் என்று கருணை கொண்ட குருவிலும், இன்னும் சொல்லப் போனால் நீர் விட்டாலும் இளநீர் தரும் தென்னையிலும், நிழல் தந்து அமைதி தரும் ஆலையிலும், இன்னறுங்கனி தரும் மரங்களிலும், ஆசை கொண்டு தொட்டு விட்டுச் செல்லும் அலைகளிலும் ,இத்தனைக்கும் மேலாய் மகா சக்தி கொண்டு எம்மை ரட்சிக்கும் இறைவனிடமும் தாய்மையின் தன்மை புன்னகைக்கிறது . ஆக, இவ்வுலகத்து உயிர்கள் அனைத்தினதும் அன்பின் மடியில் இளைப்பாறிக்கொண்டிருக்கிறது தாய்மை.
குழந்தை கேட்காமலே தன் உயிர் முலையினை அதன் வாயினில் நுழைத்து உணர்வூறி பால் தரும் தாயின் மகா கருணையை எண்ணியவாறு கண்ணன் தாயாகித் தரும் ஞானப்பாலை உண்ண உண்ணத் திகட்டாது உணரும் பாரதி, கண்ணன் தன் தாயானால் என்ற பாவனையில் இப்படிச் சொல்கிறார்,
உண்ண உண்ணத் தெவிட்டாதே- அம்மை
உயிரெனும் முலையினில் உணர்வெனும்பால்,
வண்ணமுற வைத்து எனக்கே – என்றன்
வாயினில் கொண்டு ஊட்டுமோர் வண்ணமுடையாள்.
தாயின் செயல்கள் சிலர்க்கு வேடிக்கையாகவும் கேலியாகவும் கூட இருக்கலாம் . ஆனாலும் ஒவ்வொரு சிறு சிறு செயலும் சேயின் நன்மை கருதி மட்டுமே இருக்கும்.
இப்பாடலின் மூலம் காலாகாலமாக,குழந்தைக்கு தாய் ஆற்றிடும் மூன்று முக்கிய செயல்களைச் சாரமாக்கிட முயலலாம்.
- குழந்தையோடு கதை பேசி நேரத்தை அர்பணித்தல்.
- சூழ்ந்துள்ள பல விடயங்களை அறிமுகம் செய்து வைத்தல்.
- இன்பம் தரும் விடயங்களை அளித்தல்.
குழந்தையை மடிமீது இருத்தி, அன்பு சொட்டச் சொட்டப் பல கதைகளை தாயானவள் சொல்லக் கேட்டு இருக்கிறோம். வெற்றி, தோல்வி , இன்பம்,துன்பம்,வீரம்,விவேகம் என வாழ்வியல் நெறி பலவும் , அறம் சார்ந்த உன்னத விடயங்களையும், வள்ளுவனும் ஒவையும் சொன்ன உயரிய கோட்பாடுகளையும் தன் சின்ன கதையில் சுருக்கி சொல்லி மனதில் ஆழப்பதிய வைக்கும் புலமையை தாய்மை மிக எளிதாகப் பெறுகிறது. குழந்தைக்கு எதில் அதிகம் ஆர்வம் உள்ளது என்பதைக் குறிப்பறிந்து , வயதின் தேவைக்கு ஏற்ப அன்போடு பரவசம் தரும் வகையில் கதைகள் சொல்லியே ஒரு சரித்திரத்தை வரைந்து கொண்டிருக்கும் தாயின் திறமையை எண்ணி பார்த்தல் இதுவும் விந்தை தான்.
சந்திரன் ,சூரியன் ,நட்சத்திரங்கள்,மலை,நதி,அவை விழும் கடல்,சோலை,வண்ணப் பூக்கள்,மரங்கள்,அதன் கனிகள் யாவற்றையும் அழகும் இனிமையும் பொருந்த பொம்மைகள் என்று கூறியாயினும் அறிமுகம் செய்வாள். அதன் மூலம் படைப்பின் பெருமையையும் , இயற்கையின் சிறப்பையும் மெல்ல மெல்ல நம் நெஞ்சூறச் செய்வாள்.
மூன்றாவதாக நமக்கு விரும்பியவற்றையெல்லாம் தருவாள் என்று குறிப்பிட்டோம். பாரதியின் கண்ணன் தாயாக என்னவெல்லாம் கொடுக்கிறார் பாருங்கள். நற்சுவை உணவு, தித்திப்பான இசை, ஒற்றுமையாக கூடிப் பழகிட அறிவுடைய உண்மையான நண்பர்கள், கொண்றுடுமென இனிதாய் மிகச் சிறந்த காதலைத் தரவல்ல பெண்கள் , சிறகுடைய பறவைகள், விலங்குகள், ஊர்வன, கடல் வாழ்வன என பல நண்பர்கள், சாத்திரங்கள், இவற்றை விட உயர்ந்த ஞானம் என்று பாரதி பட்டியல் நீள்கிறது.
“வேண்டிய கொடுத்திடுவாள்,-அவை
விரும்பும்முன் கொடுத்திட விரைந்திடுவாள்
நீண்டதோர் புகழ் வாழ்வும்-பிற
நிகரறு பெருமையும் அவள் கொடுப்பாள்”
தாய்க்கு மேல் வேறு ஒரு தெய்வம் உண்டோ ? என்னும் அளவு நமக்கு வேண்டிய அனைத்தையும் எக்காலத்திலும் தரவல்ல அதி சக்தி கொண்ட தாய்மை மட்டும் அன்று தொட்டு இன்று வரை மாறாது இருப்பது நம் பழம்பெரும் பண்பாட்டின் பெருமையும் கூட. அதனைக் கூட தக்க வைக்க விரும்பாது, தாயவள் தனக்கான சுகத்தை முதன்மை படுத்தி நாடுவதும், குழந்தைகள் அவரவர் அறிவுக்கு எட்டிய வகையில் பயணிப்பதும் கூட நவநாகரீகம் என்ற போதைக்குள் வாழ்வோரிடத்து வழக்கமாகி வருகிறது. இவர்களின் அறியாமை நிலை கண்டு நகைப்பதை விட வேறென்ன செய்யமுடியும்? நாகரீகத் தாய் என்று தன்னை அடையாளம் காட்டும் தாய் மறந்தாளோ தன் தாயின் தியாகத்தை ? நூற்றாண்டுகளுக்கு முன் எழுதிய பாரதி கவிதைகள் இன்றும் பொருந்தும் வகையில் இருப்பது நினைத்து மீண்டும் அவன் பாதம் சரணடைகிறேன்.
4,343 total views, 3 views today