அகமும் அஃறிணையும்
காதலை உரியவர்களிடம் எப்படி எடுத்துரைக்கலாம்? யாரைத் தூதாக அனுப்பலாம்? அல்லது எம்முடைய உள்ளத்து உணர்வுகளை எப்படி வெளிப்படுத்தலாம்? போனால் போகிறது கண்ணாடிக்கு முன்னே நின்று தம் காதலரின் பெயரைச் சொல்லிப் பார்ப்பார்கள். நினைப்பவற்றை எல்லாம் கூறித் தீர்ப்பார்கள். ஏனென்றால், கண்ணாடி மறுவார்த்தை பேசாது. கடிதங்கள் தூது போகும். ஏனென்றால், கடிதத்திற்கு அறிவுரை கூறத் தெரியாது. கவிதைகளை கடதாசித் துண்டுகளில் எழுதி எழுதிக் கிழிப்பார்கள். கிழிக்கக் கிழிக்க கடதாசி அழுவது கிடையாது. இவ்வாறுதான் இலக்கியத்தில் காதலர்கள் மாத்திரமல்ல பலரும் தமது உணர்வுகளை தூதாக அனுப்பினார்கள். அல்லது தம்முடைய உணர்வுகளை அஃறிணைப் பொருட்களிடம் எடுத்துரைக்கின்றார்கள். ஏனென்றால், அப்;பபொருட்களிடம் உரையாடும் போது அச்சமில்லை, வெட்கமில்லை, துரோகம் இல்லை.
எனவே தம்முடைய எண்ணத்தின் உணர்வுகளை வெளிப்படுத்தக் கிளியை, மேகத்தை, காக்கையை, அன்னத்தை, புறாவை, குயிலை, காற்றைத் தூதாக அனுப்புவதும் பேசுவதும் இலக்கியங்களில் காணப்படுகின்றன. சத்திமுத்துப் புலவர் தன்னுடைய வறுமையை அறிவிக்க நாரையைத் தூதாக அனுப்பினார். நளன் தன்னுடைய காதலை தெரிவிக்க அன்னத்தைத் தூதாக அனுப்புகின்றார், மேகத்தை தூதுவிட்டால் திசை மாறிப் போகும் என்று தண்ணீரைத் தூதுவிட்டு அந்தத் தண்ணீருக்கு முத்தமிட்டு வழி அனுப்பும் காதலியானவள், தான் பூசும் சந்தனத்தை கரைத்துவிட்டுத் தான் வந்திருக்கும செய்தியை அருவியில் நீராடும் காதலனுக்கு எடுத்துரைப்பதாக வைரமுத்து எழுதுகின்றார்.
நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் கண்ணனாகிய தன் காதலனில் கொண்டுள்ள காதலை வெளிப்படுத்த சங்குடன் பேசுகின்றாள்.
கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ
திருப்பவளச் செவ்வாய் தான் தித்திக்குமோ
மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாறுமோ
விருப்புற்றுக் கேட்கிறேன் சொல்லாழி வெண்சங்கே
கடலிலுள்ள சங்கே! கண்ணனுடைய திருப்பவளச் செவ்வாயுடன் தொடர்பு கொண்டுள்ளாய். அக்கண்ணனுடைய திருவாயில் கற்பூர மணக்குமோ? தாமரைப் பூ மணக்குமோ? அந்த வாயானது நல்ல தித்திப்பாக இருக்குமோ? யானையின் கொம்பை உடைத்த கண்ணனின் வாயின் சுவையும் மணக்குமோ வேண்டிக் கேட்கிறேன் சொல் என்று பாடுகின்றாள். இவ்வாறு மனதுக்குள் இருக்கும் வார்த்தைகள் வெளிவிடப்படாது போனால், மன அழுத்தத்தைக் கொண்டு வரும். அதற்கு வெளிப்படுத்தும் இடம் பங்கம் விளைவிக்காததாக இருக்க வேண்டும்.
தோழர்களைத் தூது விட்டால், அவர்கள் மனதை மாற்றிவிடுவார்கள் என்ற எண்ணம் வேரூன்றிப் போய்விட்ட சம்பவங்களும் நடந்திருக்கின்றன. தோழி தன் காதலனை தனக்கு உடைமையாக்கிவிட்டாள். தோழி தன்னைப் பற்றி அவதூறாகச் சொல்லிவிட்டாள் என்று மனமுடைந்து போன பெண்களும் அதிகம். மாறாக தோழன் தன்னை ஏமாற்றி விட்டான் என்று கவலைப்படும் ஆண்களும் அதிகம்.
இதைவிட சில விடயங்களுக்கு உதவிக்கு என்று சிலரைச் சிலரிடம் அனுப்பும் போது நம்பி அனுப்பப்படுபவர், தம்முடைய நல்ல அபிப்பிராயங்களைச் சம்பந்தப்பட்டவரிடம் மாற்றிவிட்டு தன்னைப் பெருமையாகக் காட்டிவிட்டு வருகின்ற பல நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. கவலைகளைப் பகிர்ந்து கொள்ளும் போது ஆறுதலாகக் கேட்டுவிட்டு அடுத்தவர்களிடம் இப்படி நடந்து விட்டது என்று நக்கல் பேச்சுப் பேசுகின்ற மனிதர்களே அதிகமாகக் காணப்படுகின்றார்கள். அதனால், மனிதர்களுக்கு இருக்கின்ற வக்கிர புத்தி, பொறாமைக் குணங்கள், சம்பவங்களைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்துகின்ற தன்மை அஃறிணைப் பொருட்களுக்கு இல்லை என்று அஃறிணைப் பொருட்களுடன் பேசுகின்ற இலக்கியக் கதாபாத்திரங்கள் அமைகின்றன.
தற்காலத்திலே வட்ஸ்அப் விடுதூது இருக்கின்றது. இது காதலுக்கு மட்டுமல்ல. பலரை ஆற்றுப்படுத்துவதற்கும் பயன்படுகின்றது. இதிலே பல சங்கடங்களையும் எதிர்நோக்க காணுகின்றோம். எழுத்திலே அனுப்புகின்ற செய்திகள் பலருக்கும் பரிமாறப்படுகின்றன. பேசி அனுப்பும் செய்திகள் பரிமாற்றப்பட்டு பரிகாசமாக விமர்சிக்கப்படுகின்றன. இதனால், அச்சம் கொண்ட பலரும் வட்;ஸப் விடுதூதிலே நேரடியாகவே பேசிவிடுகின்றார்கள். ( உண்மையாக இருப்பவர்கள் எதிலும் அச்சம் கொள்ளத்தேவை இல்லை) எதிலும் அச்சம், எதிலும் நம்பிக்கை இன்மை போன்ற விடயங்கள் மனிதர்களிடம் காணப்பட மனிதர்களே காரணமாகின்றார்கள். இதனால், அஃறிணைப் பொருட்களுடன் உரையாடி மகிழ்கின்றார்கள். எழுத்தாளர்களும் இவ்வாறே உருவாகின்றார்கள்.
செருப்புவிடு தூது பற்றி அதிகம் அறிந்திருப்பீர்கள். தியேட்டர்களில், பஸ் வண்டியில் முன்னே இருக்கும் பெண்களுக்குப் பின்னே இருக்கும் ஆண்கள் செருப்பால் சுரண்டிச் சுரண்டித் தூதுவிட்ட சம்பவங்கள் பற்றி யாவரும் அறிந்திருப்போம். செருப்புவிடு தூது செருப்படித் தூதாக மாறிய சம்பவங்களும் உண்டு. மனிதர்களைத் தூதாக அனுப்பினால்,என்ன நடக்கும் என்று எம் மக்கள் அறியாதவர்கள் இல்லை.
-கௌசி
1,553 total views, 3 views today