பிரபலமான ஓவியங்களில் ஒளிந்திருக்கும் மர்மங்கள்?
னுச.நிரோஷனின் அதிசய உலகம்
நாம் இத்தனை நாட்களும் ஒன்று அல்ல இரண்டு அல்ல நூறு தடவைக்கு மேல் பார்த்த பல விதமான பிரபலமான ஓவியங்கள் மற்றும் கலைப் பொருட்களில் நம் கண்ணில் படாத பல ஆச்சரியமூட்டும் விஷயங்கள் மறைந்திருக்கின்றன என்று கூறினால், அதை உங்களால் நம்ப முடியுமா? என்ன நண்பர்களே, நம்ப முடியவில்லையா? அப்படி என்றால் கண்டிப்பாகத் தொடர்ந்து படியுங்கள்.
பிரபலமான கலை வேலைப்பாடு கொண்ட ஓவியங்களில் நம்மால் யூகிக்கக் கூட முடியாத ரகசியங்கள் ஒளிந்துள்ளன என்பதை கூறியிருந்தேன். இந்த வரிசையில் முதலாவது இடத்தைப் பிடித்திருப்பது வேறொன்றும் இல்லை, லியொனார்டோ டா வின்சி (Leonardo da Vinci) வரைந்த மோனாலிசா ஓவியம் தான். இந்த ஓவியத்தில் என்ன சிறப்பு என்று எல்லோருக்குமே தெரிந்திருக்கும், இருந்தாலும் என்னுடைய திருப்திக்காக ஒரு தடவை கூறுகின்றேன். இந்த ஓவியத்தில் இருப்பது யார் என்பது யாருக்குமே தெரியாது, அந்த ஓவியத்தில் இருக்கும் பெண்ணைப் பார்த்தால் சிரிப்பது போன்று தெரியும், ஆனால் சிரிக்காத மாதிரியும் தோன்றும், உண்மையில் அந்தப் பெண் சிரிக்கிறார்களா இல்லையா எனக் கூடத் தெரியாது.
சரி அதைவிடுங்கள், இப்போது விஷயத்திற்கு வருவோம். இந்த ஓவியத்தினை வரைந்தவரான லியொனார்டோ டா வின்சி பெயரில் உள்ள எழுத்துக்கள் L மற்றும் V ஓவியத்தின் வலது கண்ணில் எழுதப்பட்டுள்ளது. அத்துடன் ஓவியத்தில் உள்ள அந்தப் பெண், அவரது கையை தனது வயிற்றுப் பகுதியுடன் அரவணைத்து இருப்பதால், பெரும்பாலும் அவர் கர்ப்பமாக இருந்த ஒரு பெண்ணாகத் தான் இருக்கும் என்று நம்புகிறார்கள். அதுமட்டுமில்லை இந்த ஓவியத்தில் உள்ள பாலத்தில் 72 என்கிற எண்ணும் வரையப்பட்டுள்ளதைக் காணலாம். இதற்கும் கூட என்ன அர்த்தம் என்பது தெரியவில்லை! இது எல்லாமே போதாது என்று, இன்றைய நவீன தொழினுட்ப முறைகளின் உதவியுடன் இந்த ஓவியத்தை நன்றாகச் சோதித்துப் பார்த்த போது தான் ஒரு வியப்பூட்டும் உண்மை தெரியவந்தது. இன்று நாம் காணக்கூடிய இந்த மோனாலிசா ஓவியம் உண்மையில் ஏற்கனவே டா வின்சி வரைந்த ஒரு பெண்ணின் மெருகேற்றிய ஓவியமென்று.
இப்படியே இரண்டாவது ஓவியத்திற்கு வருவோம். இது தான் பொட்டிச்செல்லியின் (Botticelli) Primavera ஓவியம் ஆகும். 1482ம் ஆண்டு வரையப்பட்ட ஓவியமாக கணிக்கப்பட்டுள்ள இந்த ஓவியம் மேற்கத்திய கலை வேலைப்பாட்டைக் காட்டுகின்றது. பல கற்பனை பாத்திரங்களை இந்த ஓவியம் எளிதாக காட்டினாலும், இந்த ஓவியத்தில் மறைமுகமாக சுமார் 500 வகையான வித்தியாசமான தாவர இனங்கள் காட்டப்பட்டுள்ளன. அவற்றுள் அநேகமாக அனைத்துத் தாவர இனங்களையும் இந்றைய தாவரவியலாளர்கள் இனம் கண்டுபிடித்துள்ளனர், இதில் உள்ள ஆச்சரியம் என்னவென்றால், இந்தப் படத்தில் சுமார் 190 வகையிலான பூ இனங்கள் மிகவும் நுணுக்கமாக வரையப்பட்டுள்ளன என்பது தான். எனவே இதில் தோன்றும் கேள்வி என்னவென்றால், ஓவியராகிய பொட்டிச்செல்லி இத்தனை வித்தியாசமான பூ வகைகளை ஏன் வேறுபடுத்திக்காட்ட வேண்டும்? அதுவும் குறிப்பாக இந்த படத்தில் ஏன் அப்படிக் காட்ட வேண்டும். இதற்குப்பின்னால் இருக்கும் மர்மம் என்ன?
அப்படியே அடுத்த ஓவியத்திற்கு வருவோம். இப்போது பாபிலோ பிக்காசோவின்(Pablo Picasso) The old Guitarist எனும் ஓவியத்தைப் பார்ப்போம். 1901 முதல் 1904 வரை இருந்த Picasso’s Blue Period என்கிற காலகட்டத்தில் ஒரே வண்ணத்தினாலான ஓவியங்களை வரைந்தார். அதில் பிரபலமான ஒன்று தான் “The old Guitarist” ஓவியம் ஆகும். இதில் உள்ள விசேஷம் என்னவென்றால், இந்த ஓவியத்தை பிக்காசொ உண்மையில் முதலில் வரைந்த ஒரு பெண் உருவம் கொண்ட காகிதத்தில் தான் வரைந்துள்ளார். அந்த ஓவியத்தில் இருக்கும் நீல வண்ணத்தைக் கொஞ்சம் கூர்ந்து பார்த்தால் அதே ஓவியத்தின் கழுத்துப் பகுதி அருகே மற்றொரு பெண்ணின் உருவம் அமைந்திருப்பதைக் காணலாம். இது ஆச்சரியமாக இல்லையா?
சரி இனி நான்காவது ஓவியத்திற்கு வருவோம். லியொனார்டோ டா வின்சியின் The last supper அதாவது இயேசு கிருஸ்துவின் இறுதி இராவுணவு ஆகும். இதில் உள்ள விசேஷம் என்னவென்றால், இந்த ஓவியத்தை இடது – வலது மாற்றம் செய்து இந்த ஓவியத்தின் மீது வைத்துப் பார்த்தால் அதில் இரு தேவாலய புனித வீரர்கள் அருகருகே இருப்பதுபோலவும், இயேசுவின் அருகே ஒரு பெண்மணி கையில் குழந்தையுடன் இயேசுவினை பார்ப்பது போலவும் இருக்கும். அது மட்டுமில்லாமல் ஓவியத்தில் இயேசுவுக்குப் பின்னால் உள்ள ஜன்னலில் கண்டுபிடிக்கப்பட்ட சில விஷயங்களை வைத்து 4006 ஆம் ஆண்டில் பெருவெள்ளத்தினால் நாம் உலக அழிவை எதிர்பார்க்கலாம் என்று கூட கூறப்பட்டுள்ளது.
அட இது எல்லாமே போதாது என்று 2007 ஆம் ஆண்டில் Giovanni Maria Pala என்பவர் இந்த ஓவியத்தில் காணப்படும் ஒவ்வொரு பாண் துண்டுகளிலும், மேலும் ஒவ்வொருவரின் கைகளிலும் கருப்புப் புள்ளிகளை வரைந்தார். பின்பு இந்தக் கருப்புப் புள்ளிகளை இசைக் குறிப்புகளாக கருதி வலப்புறமிருந்து இடப்புறமாக வாசிக்கும் போது, 40 வினாடிகள் நீடிக்கும் இசையை உருவாக்கமுடிந்தது.
கடைசி ஓவியத்திற்கு வருவோம். இது தான் மிக்கெலஞ்சலோவின் (Michelangelo) The Creation of Adam ஆகும். Michelangelo தனது 17 வயதிலேயே தேவாலயத்திற்குரிய கல்லறையில் உள்ள மனித உடல்களின் மூலம் மனித உடற்கூற்றியலைத் தெரிந்துகொண்டவர். தான் கற்றுக்கொண்டவற்றை ஓவியம் மூலம் கூற விரும்பிய அவர் “The Creation of Adam” ஓவியத்தை உருவாக்கினார். ஓவியத்தில் கடவுள் ஆதாமினை படைப்பது போன்ற காட்சி அமைக்கப்பட்டிருக்கும். இது தற்செயலாக நடந்ததா இல்லை அவர் இதைக் கூறத்தான் இந்த ஓவியத்தை தீட்டினாரா என்பது தெரியவில்லை. ஏனென்றால் ஓவியத்தில் கடவுள் இருப்பதாகக் காட்டப்படும் இடம், மனித மூளையை போல் உள்ளது. அதுவும் சும்மா இல்லை நண்பர்களே, நாம் இன்று மூளையைப் பற்றி தெரிந்துகொண்ட மூளையின் நுணுக்கமான பகுதிகளைக் கூட, அந்த ஓவியத்தில் காணக்கூடியதாக இருக்கிறது.
இவ்வளவு காலமும் சர்வசாதாரணமாகப் பார்த்த இந்த ஓவியங்களுக்குப் பின்னால் இவ்வளவு மர்மங்கள் உள்ளன என்பதை நினைக்க ஆச்சரியமாக இருக்கிறதா? அப்படி இருப்பதால் தான் இந்த அனைத்து ஓவியங்களும் மிகவும் பிரபலமாக உள்ளன, இல்லையா? கட்டுரை பற்றிய அபிப்பிராயத்தையும் எனக்குக் எனது முகநூல் பக்கத்தில் (www.facebook.com/scinirosh)
2,343 total views, 2 views today