உண்மையான ஊடகவியலாளராக உங்களுக்கு சில குறிப்புகள்!

நான் எனது ஊடகத்தொழில் வாழ்க்கையின்போது பல பயிற்சி நெறிகளில் பங்குபற்றியதால் ஊடகத்துறை பற்றிய பயிற்சிகளில் எனக்கு மிகுந்த ஈடுபாடும் நம்பிக்கையும் இருக்கிறது. குறிப்பாக, ஊடகப் பயிற்சியளிப்பதில் சர்வதேச ரீதியாக அறியப்பட்ட ஈழத் தமிழ் ஊடகவியலாளர் காலம்சென்ற சீ.வீ.இராஜசுந்தரம் அவர்களுடன் அடிக்கடி ஊடக விடயங்கள்பற்றிப் பேசியதால் ஊடகப்பயிற்சியில் மிகுந்த ஈடுபாடுடையவனாக, இலங்கையிலும் ரொறன்ரோவிலும் ஊடகப் பயில் அரங்குகளை நடத்தி, பல இளைஞர்களுக்குப் பயிற்சியளித்திருக்கிறேன். அதையறிந்த சிலர் என்னிடம் ஊடகப்பயிற்சி பற்றி பேசுவதுண்டு. அத்தகையவர்களில் ஒருவர் என்னைச் சந்தித்தபோது, அண்மையில் ஒரு கோப்பிக்கடையில் இருவரும் இருந்து பேசியதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

அவர் தான் சிறுவயதுமுதலே ஊடகத்துறைக்குள் செல்லவேண்டுமென்று ஆவலாக இருந்ததாகவும்; நாட்டின் யுத்த நிலமை காரணமாகப் புலம்பெயர்ந்துவந்து தன்னையும் தன் குடும்பத்தினரையும் நிலைநிறுத்துவதிலேயே தனது வாழ்க்கையைச் செலவழித்துவிட்டதாகவும், இப்போது தனது சுமைகள் குறைந்த நிலையில் தன்னுடைய இளவயது ஆசையை நிறைவேற்றலாமென்று பார்க்கிறேன் என்று கூறினார்.

“ஊடகத்துறையைத் தொழிலாகக்கொள்ளப்போகிறீர்களா? ”என்று சற்று வியப்புடன் கேட்டேன். அவருக்கு ஐம்பதைக் கடந்த வயதிருக்குமென்று நினைக்கிறேன்.அவர் உடனே, “தமிழர்கள் இங்கே ஊடகத்துறையைத் தொழிலாகக் கொள்ள முடியாதென்று எனக்குத் தெரியும். ஆனால் அதை ஒரு சேவையாகச் செய்யலாமென்பது என் எண்ணம்” என்று சொன்னார். “நீங்கள் என்னவிதமான உதவியை என்னிடம் எதிர்பார்க்கிறீர்கள்?” என்றேன். தான் ஒரு செய்தியாளராக வரவேண்டுமென்றும் அது பத்திரிகையோ வானொலி, தொலைக்காட்சிபோன்ற இலத்திரனியல் ஊடகங்களோ அல்லது வலைத்தள ஊடகங்களோ எதுவாக இருந்தாலும் பரவாயில்லை, அதற்கு என்ன செய்யலா மென்று கேட்டார். “அதுபற்றிய கற்கை நெறிகள் இங்கே பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் (college) இருக்கின்றன. இங்கு எந்த வயதிலும் படிக்கலாம். ஆனால் உங்களுக்குப் பல்கலைக்கழகம் போவது சிரமமாக இருக்குமென்று நினைக்கிறேன். கல்லூரிகளில் இதற்கான வகுப்புகளில் சேரலாம் என்றேன்.

அதற்கு அவர், ஆங்கிலத்தில் கற்பது தனக்கு சிரமமானதென்றும் சிறிது வழிகாட்டலிருந்தால் தானாகவே கற்றுக்கொள்ளமுடியுமென்ற நம்பிக்கை இருப்பதாகவும், அதனால்தான் உங்கள் உதவியை நாடினேன் என்றார். இன்றைய நிலையில் அவர் ஒரு கைத்தொலைபேசியைத் தூக்கிக்கொண்டோ அல்லது இணையத் தளங்களில் பத்திரிகையென்று சொல்லி ஏதாவது ஆரம்பித்து, மனம்போன போக்கில் எதையாவது எழுதி தனது ஊடகவியலாளர் கனவை நனவாக்கிக் கொள்ளலாம். இருந்தபோதிலும் கற்றுக்கொள்ளவேண்டுமென்று அவர் விருப்பம் தெரிவித்தமை நிச்சியமாக அவர் ஊடகத்துறையை ஓரளவாவது மதிக்கும் ஒருவர் என்று எனக்குப் புரிந்தது.

அவருடன் சற்றுப் பரிவோடு பேசினேன். “சரி, ஊடகவியலாளர் என்பவர் யார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்” என்று அவரைக் கேட்டேன். “ஒரு நடுநிலையாளராக இருக்கவேண்டுமென்று சொல்வார்கள்” என்று கூறினார். “நல்லது, அதற்குப் பிறகு வருகிறேன்” என்று சொல்லிவிட்டு, அவருக்கு நான் கூறிய முதல் விடயம், பத்திரிகையோ மற்றும் எந்த ஊடகங்களாகவோ இருந்தாலும் அவற்றில் ஒரு செய்தியாளராக வருவதற்கு நீங்கள் கடுமையாக உழைக்கத் தயாராக இருக்கவேண்டும். அதைவிட முக்கியமான விடயம், நீங்கள் அடிப்படையில் நேர்மையான மனிதராக இருக்கவேண்டுமென்று கூறினேன். அவருக்கு அப்படி நான் ஏன் கூறுகிறேன் என்பது புரியவில்லை. மேலும் விளக்கினேன். தற்கால நிலையில் விரும்புபவர்கள் எவராயினும் ஊடகவியலாளராகலாம். ஆனால் நேர்மையான ஒருவர்தான சிறந்த ஊடகவியலாளராகப் பிரகாசிக்கமுடியும்.

ஒரு சிறந்த மனிதனால்தான் சிறந்த ஊடகவியலாளனாகப் பிரகாசிக்கமுடியும். சகலவற்றையும் சார்பற்ற நிலையில் இருந்து பார்ப்பது ஒரு பண்பட்ட ஆன்மீக நிலை. அவர்களால்தான் உண்மையைத் தரிசிக்க முடியும் என்று சொன்னேன். செய்தியென்றால் என்ன, செய்தியை எப்படித் தேடுவது, எப்படித் தெரிந்தெடுப்பது, செய்தி எழுதும் மொழிநடை மற்றும் நுட்பங்களை ஒருவர் ஒன்று இரண்டு வருடப் பயிற்சியின்மூலம் கற்றுக்கொள்ளலாம். அப்படிக் கற்றுக்கொண்டாலும் உங்களிடம் நேர்மை இல்லையெனில் நீங்கள் கற்றுக்கொண்டவற்றால் எந்தப் பிரயோசனமும் இல்லை. வள்ளுவர் கூறுவதுபோல் அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் என்பன அற்ற அறத்தைப் பேணுபவராக நீங்கள் இருக்கவேண்டும். வெகுளிகூட (கோபம்) அநீதியைக்கண்டு ஏற்படுமானால் அது அவசியமானதே. ஆனால் அந்த வெகுளியை ஆக்கபூர்வமாகக் கையாளத் தெரிந்திருக்கவேண்டும். அழுக்காறும் அவாவும்கொண்ட ஒருவனால் நேர்மையான ஊடகவியலாளனாக ஒருபோதுமே செயற்பட முடியாதென்று சொன்னவுடன் அந்த அன்பர் “நீங்கள் என்னை ஒரு சாமியாராகச் சொல்கிறீர்களா?” என்று சிரித்துக்கொண்டே கேட்டார்.

உண்மைதான், விருப்பு வெறுப்பற்று சகலவற்றையும் சமமாகப் பார்க்கக்கூடியவர்கள்தான் உண்மையான துறவிகள் என்றால், ஊடகவியலாளர்களும் துறவிகளே. எல்லா மனிதர்களுக்குள்ளும் நல்லது கெட்டது இரண்டும் இருக்கின்றன. கெட்ட எண்ணங்கள் தலைதூக்கும்போது நாம் நிதானித்து அதை அடக்கப் பழகிக்கொண்டால் நல்ல எண்ணங்கள் மேலோங்கும். இதை நீங்கள் அன்றாட வாழ்க்கையில் பயின்றுவந்தால் நல்லமனிதனாகலாம், சுலபமாக சிறந்த ஊடகவியலாளர் என்ற பெயரையும் எடுக்கலாம் என்று சொல்லிவிட்டு, இப்போது நீங்கள் முதலில் சொன்ன நடுநிலைக்கு வருவோம் என்று தொடர்ந்தேன்.

சார்பற்ற அணுகுமுறைதான் நடுநிலையென்று கூறப்படுகிறது. ஊடகவியலாளர்கள் நடுநிலை பேணவேண்டுமென்று பொதுவாகச் சொல்லப்படுகின்றபோதிலும் இந்த நடுநிலையென்பது மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட ஒன்றாக இருப்பதையே நாம் அவதானிக்க முடிகிறது. நடுநிலையென்பது எந்தப் பக்கம் என்றில்லாமல் நடுவில் இருப்பது என்ற அர்த்தத்தில்தான் பெரும்பாலும் பேசப்;படுகிறது. நீதிமன்றத்திலே வழக்கை விசாரித்துத் தீர்ப்புச் சொல்பவரை நடுவர் என்கிறோம். ஒரு போட்டியில் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பவர்களை நடுவர்கள் என்கிறோம். இவர்கள், நாங்கள் நடுநிலை வகிப்பவர்கள், எந்தப்பக்கமும் சாரக்கூடாதென்று நினைத்து செயற்பட்டால் நீதியை யார் நிலைநாட்டுவது, வெற்றியாளர்களை யார் தீர்மானிப்பது? உண்மையில் நடுநிலை அல்லது சார்பற்ற தன்மையென்பது ஒரு விடயத்தை அணுகுவதற்குமுதல் இருக்கவேண்டிய மனநிலை. எந்தவொரு விடயத்தையும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட மனநிலையில், தனது சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடம்கொடுத்து அணுகும் ஒருவரால் உண்மையைக் கண்டறிய இயலாது. எனவேதான் ஊடகவியலாளர்கள் நடுநிலையோடு ஒரு விடயத்தை அணுகவேண்டுமென்று சொல்லப்படுகிறது.

நடுநிலையென்பது அந்தப்பக்கமும் இல்லாமல் இந்தப்பக்கமும் இல்லாமல் நடுவில் நிற்பது என்று விளக்க முற்படுவது உள்நோக்கம்கொண்ட கபடத்தனமான செயல். இலங்கை நாடாளுமன்றக் குழறுபடிகளில் எந்தவொரு அணியையும் ஆதரிக்காது தான் நடுநிலை வகிப்பதாக ஒரு தமிழ் அரசியல்வாதி சொன்னதாக ஒரு பத்திரிகையில் படித்தேன். அந்தச் செய்தி உண்மையெனில், அந்த அரசியல்வாதிபோன்ற பச்சோந்தி இருக்க முடியாது. சாதாரணமான ஒரு மனிதனுக்குக்கூட எந்தப் பக்கத்தில் நியாயம் இருக்கிறதென்பது சுலபமாகப் புரிந்துவிடும். நியாயமுள்ள பக்கத்திற்கு ஆதரவு தெரிவிப்பதே நேர்மையான ஒருவர் செய்யக்கூடிய செயல். அப்படி இருந்துவிட்டால் பிரச்சனை தீர்ந்தபின் வெல்லும் பக்கத்தில் நின்று தனது பதவியைத் தக்கவைத்துக் கொள்ளலாமென்பதே அவரது எண்ணமாக இருக்கும். உண்மையில் இரண்டு பக்கமும் சாராமல் இருப்பதென்பதற்கு இரண்டு பக்கமுமே பிழையானவையென்பதுதான் அர்த்தம்;. நேர்மையான ஒருவரால் ஒருபோதுமே அந்த இரண்;டு பக்கத்துடனும் சார்ந்துபோக முடியாது. நியாயத்தின பக்கம் நிற்பவர் ஊடகவியலாளர்.
நேர்மையாக இருந்துவிட்டால் மட்டும் ஓர் ஊடகவியலாளராகிவிட முடியுமா என்று அன்பர் கேட்டார். நேர்மையாக இருப்பதென்பது ஓர் ஊடகவியலாளருடைய அடிப்படைத் தகைமை. மேலும் சில நடைமுறைகளைப் பின்பற்று வதன்மூலம் ஒரு சிறந்த ஊடகவியலாளராக முடியு மென்று கூறி அந்த நடை முறைகளை விளக்கினேன்.

01.ஒரு பத்திரிகையாளராகவோ வேறு எந்த ஊடகவியலாளராகவோ இருப்பவர்களுக்குச் சமூகத்தில் ஒரு கௌரவம் கிடைக்கிறது. இது ஊடகத்துறை காலம்காலமாக மனித சமுதாயத்துக்கு ஆற்றுகின்ற சேவை காரணமாக மக்களிடையே இயல்பாக ஏற்படுகின்ற ஒரு மரியாதை. புதிதாக ஊடகத்துறைக்குள் வரும் ஒருவர் மக்கள் தரும் இந்த மரியாதையைத் தனக்குத் தரும் மரியாதையாகக் கருதி ஆணவம்கொண்டு தலைவீங்கி அலையக்கூடாது. தமக்குரிய கௌரவத்தை சமூகத்திடமிருந்து பெறுவதற்குக் கடுமையாக உழைக்கவேண்டும்.

02.ஊடகவியலாளரென்ற கௌரவத்தைச் சம்பாதிப்பதற்கு ஒருவன் மக்களுக்கு எப்போதுமே உண்மையைத்தான் சொல்லுவேன் என்று உறுதியெடுத்துக்கொள்ளவேண்டும். பரபரப்புக்காகவோ உள்நோக்கம்கொண்டு மக்களை வேண்டுமென்றே திசைதிருப்புவதற்காகவோ செய்திகளைக் கொடுப்பவர்கள் உடனடியாக மக்களின் கவனத்தைப் பெற்றாலும் காலப்போக்கில் ஊடகவியலாளர்களுக்குரிய கௌரவத்தைப் பெறமாட்டார்கள்.

03.யாராவது அல்லது எந்தத் தரப்பாவது உங்களை அணுகி ஒன்றைச் சொன்னால் குறிப்பாக வேறு ஒரு நபர் பற்றியதாகவோ அல்லது தரப்புப் பற்றியதாகவோ அது இருக்குமானால் அதை அப்படியே நம்பி அல்லது அதை நம்புவதால் வரும் நன்மைகளைக் கருதி அந்த நபருக்கோ தரப்புக்கோ சார்பாக எதையும் பொதுமக்களிடம் கொண்டுசென்றுவிடக்கூடாது. ஏனெனில், இப்படி முதலில் வந்து தகவல்களைத் தருபவர்களில் நூற்றுக்குத் தொண்ணூறு சதவிகிதமானவர்கள் தீய உள்நோக்கம் கொண்டவர்களாகவே இருப்பார்கள். ஊடகவியலாளராக உங்கள் கடமை குற்றம் சாட்டப்பட்ட நபரையோ தரப்பையோ அணுகித் தீரவிசாரித்து உண்மையைக் கண்டறிந்தபின் மக்களிடம் கொண்டுசெல்வதே ஆகும்.

04.சொந்த விருப்பு வெறுப்புகள் ஒருபோதும் உங்களது ஊடகப் பணியில் பிரதிபலித்தலாகாது. தனக்கு விருப்பமில்லாதவர்களது செய்தியையோ படங்களையோ பிரசுரிக்காமல் விடுவதுபோன்ற சிறுபிள்ளைத்தனமான விடயங்கள் உங்கள் பழிவாங்கும் உணர்ச்சியைத் திருப்திப்படுத்தலாம். ஆனால் உங்களுக்கு உண்மையான ஊடகவியலாளர் என்ற அந்தஸ்தை ஒருபோதும் தரமாட்டாது. ஊடகங்கள் மலிந்துவிட்ட இந்தக் காலகட்டத்தில் நீங்கள் மறைப்பதால்மட்டும் எதையும் இருட்டடிப்புச் செய்துவிட முடியாது.

05.ஒரு விடயத்திற்கு எத்தனை விதமான அபிப்பிராயங்கள் இருக்கின்றனவோ அத்தனையையும் மக்கள்முன் கொண்டுசெல்லுங்கள். மக்களைச் சரியாக வழிநடத்துகின்றேன் என்ற போர்வையில் உங்களுக்கு ஏற்புடையதை மட்டுமே மக்களுக்குக் கொடுக்கவேண்டுமென்று ஒருபோதும் நினைக்கக்கூடாது. சர்வாதிகாரத்தின் முதல்நிலையே மக்களுக்கு உங்களால் தெரிவுசெய்யப்பட்ட செய்தியை மட்டுமே கொடுப்பதுதான்.

06.ஓர் ஊடகவியலாளராக இருப்பவர் பொது இடங்களில் அரசியல் பேசியோ அல்லது வேறெந்த விடயங்களிலோ தனது நிலைப்பாட்டை அல்லது அபிப்பிராயத்தைப் பொதுமக்கள் அறியக்கூடியதாக வெளியிடக்கூடாது. அப்படி இன்னாரென்று இனங்காணப்படமுடியாதவராக ஓர் ஊடகவியலாளர் இருக்கும்போது அவரது செய்திகளுக்கு நம்பகத் தன்மை அதிகம் இருக்கும்.
இந்த ஆறு விடயங்களையும் நேர்மையான ஓர் ஊடகவியலாளர் கடைப்பிடித்தால் அவர் நிச்சயமாகத் தான் பணிபுரியும் சமூகத்தினர் மத்தியில் ஒரு சிறந்த ஊடகவியலாளராகப் பிரகாசிக்க முடியும். நான் மேலே கூறியவற்றைக்கேட்ட அந்த அன்பர் தெளிவுபெற்றவராக விடைபெற்றுச் சென்றார். அவர் ஒரு சிறந்த ஊடகவியலாளராக வருவது இனி அவர் கையில்தான் இருக்கிறது.

— பி. விக்னேஸ்வரன்

1,580 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *