தப்புத் தாளங்கள்.

இயக்குனர் சிகரம் கே பாலசந்தர் வாழ்வும் படைப்ப்பும் …

1978ம் ஆண்டு பாலசந்தர் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கிய இன்னொரு முக்கியமான படம் தப்புத் தாளங்கள். தமிழ்நாடு அரசின் சிறந்த வசனகர்த்தாவுக்கான விருது கிடைத்த படம் இது.
ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்தார். மரோ சரித்ரா அறிமுக நாயகி சரிதா தான் கதாநாயகி. கமல் இந்தப் படத்தில் கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். படம் தமிழில் தப்புத் தாளங்கள் என்றும், கன்னடாவில் தப்பித தாளா என்றும் வெளியானது.பின்னர் மலையாளத்தின் கழுக்கன் எனும் பெயரில் தயாரானது.
விரலை எடுக்கணும்ன்னா முப்பது ரூபா, கையை வெட்டணும்ன்னா 300 ரூபா, காலை வெட்டணும்ன்னா மூவாயிரம் ரூபா, ஆளையே போடணும்னா பத்தாயிரம் ரூபா என ரவுடி கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் புகுந்து விளையாடியிருப்பார். ரஜினி படங்களில் முக்கியமான படங்களில் ஒன்று இது.

1979ம் ஆண்டு வெளியான படங்களில் ஒன்று எல்லோருக்கும் தெரிந்தபடம் நினைத்தாலே இனிக்கும் !!

நினைத்தாலே இனிக்கும்
பாலசந்தருக்கென ஒரு இமேஜ் உருவாகியிருந்த காலகட்டம். நடுத்தர வர்க்கக் கதை. சீரியசான கதாபாத்திரங்கள். வலிமிகுந்த, வலிமை மிகுந்த கிளைமேக்ஸ் என ஒரு டெம்ளேட் கதைகளில் பாலசந்தர் வலம் வந்து கொண்டிருந்தபோது யாரும் எதிர்பாராத விதமாக சட்டென தனது பாணியை மாற்றிக்கொண்ட படம் நினைத்தாலே இனிக்கும்.
பாடல்களுக்காகவே இந்தப் படம் காலமெல்லாம் நினைவுகூரப்படும் என்று தைரியமாகச் சொல்லலாம். அந்த அளவுக்கு இந்தப் படத்திலுள்ள பாடல்களெல்லாம் மிகப்பிரபலம்.
“எங்கேயும், எப்போதும் சங்கீதம் சந்தோஷம்”, “சம்போ சிவசம்போ”, “இனிமை நிறைந்த உலகம்”, “பாரதி கண்ணம்மா”, “நம்ம ஊரு சிங்காரி” உட்பட இந்தப் படத்தில் பெரும்பாலான பாடல்கள் சூப்பர் டூப்பர் வகையறாவுக்குள் வரக்கூடியவை.

சீரியஸ் பாணி பாலசந்தர் இந்தப் படத்தில் எடுத்த அவதாரம் நகைச்சுவை. அதற்காக அவர் சுஜாதாவின் கதையைத் தேர்ந்தெடுத்தார். கமலஹாசனும், ரஜினிகாந்தும் இணைந்து நடித்தார்கள்.

சிங்கப்பூருக்கு ஒரு இசைக்குழு செல்கிறது. அங்கே ஹீரோ தனது காதலியைச் சந்திக்கிறான். அவள் ஊனமுற்றவள் எனும் உண்மை அப்போது தான் தெரிகிறது. என செல்கின்ற கதை முடிவில் ஒரு சோக நிகழ்வுடன் தான் முடிகிறது. ஆனால் படம் இலகுவான நகைச்சுவையை இழையோடவிட்ட படம்.
இன்றைய தேதி வரை, ரஜினியும், கமலும் இணைந்து நடித்த கடைசிப் படமும் இது தான்.
ஒரே நேரத்தில் தமிழ் தெலுங்கு இரண்டிலும் தயாராகி, தெலுங்கில் “அந்தமானின அனுபவம்” எனும் பெயரில் வெளியானது. ஜெயபிரதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். ரஜினிகாந்தின் ஸ்டைல் வெகுவாகப் பேசப்பட்ட திரைப்படங்களில் ஒன்று இது. இந்தப் படம் சமீபத்தில் டிஜிடலைஸ் செய்யப்பட்டு மறு வெளியீடு செய்யப்பட்டது.
இந்தப் படத்தின் மூலம் ஒருவரை பாலசந்தர் தமிழ்த்திரையுலகிற்கு அறிமுகம் செய்தார். அவர் எஸ்.வி.சேகர் !!!
பாலசந்தரின் அக்மார்க் படங்களில் ஒன்று என இந்தப் படத்தைச் சொல்ல முடியாது. ஆனாலும் ஒரு கமர்ஷியல் மசாலா என நிச்சயம் சொல்லலாம்.
ஆனால் அந்த ஆண்டு வெளியான நூல் வேலி மிகவும் கனமான கதையின் மேல் கட்டப்பட்டிருந்தது. சரத் பாபுவும், சுஜாதா வும் முதன்மைக் கதாபாத்திரங்களாக நடித்திருந்தனர். சரிதா முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மகளைப் போல நினைத்துக் கொண்டிருக்கும் ஒரு சின்னப் பெண்ணை மோகத்தில் நாயகன் பாலியல் உறவு கொள்வதும், அதனால் குடும்பத்தில் ஏற்படும் உளவியல் ரீதியிலான சிக்கல்களும் படத்தில் பிரதானமாக இருந்தன.

மனதைக் கனக்கச் செய்யும் முடிவு பாலசந்தரின் அக்மார்க் முத்திரையுடன் இருந்தது. தமிழிலும், தெலுங்கிலும் ஒரே நேரத்தில் தயாரான இந்தப் படத்துக்கு தெலுங்கில் குப்பேடு மனசு என்று பெயர்.
இந்த ஆண்டு “இதி கத காது” எனும் தெலுங்கு படத்தையும் கே.பாலசந்தர் இயக்கினார். கமலஹாசன், சிரஞ்சீவி, சரத்பாபு, ஜெயசுதா, ராமபிரபா நடித்த இந்தப் படம் பாலசந்தர் தமிழில் இயக்கிய “அவர்கள்” படத்தின் தெலுங்கு வடிவம்.
இதற்கு அடுத்த ஆண்டு கே.பாலசந்தர் ஒரே ஒரு படம் இயக்கினார். அந்த வருடம் அந்த ஒரு படமே போதுமானதாய் இருந்தது தமிழ் சினிமாவுக்கு. வறுமையின் நிறம் சிவப்பு !


வறுமையின் நிறம் சிவப்பு

கே.பாலசந்தரின் சமூக அக்கறையை பளிச் என சொன்ன படங்களில் வறுமையின் நிறம் சிவப்பு படத்தையும் சொல்லலாம். கமலஹாசனும், ஸ்ரீதேவியும் இணைந்து நடித்திருந்தார்கள்.
வேலை இல்லாத மூன்று இளைஞர்களின் வாழ்க்கைப் பயணம் தான் இந்தப் படத்தின் மையம். அந்தக் காலகட்ட சமூக, அரசியல் நிலைப்பாடுகளை இந்தப் படம் பேசியது.
நேர்மை எனும் தனது கொள்கையில் நிலையாக இருக்கிறான் கதாநாயகன். அதனால் எந்த வேலையிலும் அவனால் நிரந்தரமாகத் தங்க முடியாத சூழல். இருந்தாலும் தனது கொள்கையை விட்டு விட அவன் தயாராக இல்லை. எல்லாவற்றையும் இழந்தாலும் தனது இலட்சியத்தை இழக்காத கதாநாயகன் கடைசியில் முடிதிருத்தகம் வைக்கிறான்.
காட்சிகளை வெப்பமாகவும், கவிதையாகவும், உணர்ச்சிகரமாகவும் இந்தப் படம் அடுக்கி வைத்திருந்தது. பாலசந்தர் படங்களில் இந்தப் படம் டாப் டென் பட்டியலில் இடம் பெறும் அத்தனை தகுதிகளையும் கொண்டிருக்கிறது.
சிப்பி இருக்குது முத்தும் இருக்குது, நல்லதோர் வீணை செய்தே, தீர்த்தக்கரையினிலே என பிரபலமான பாடல்களுக்குச் சொந்தக்காரன் இந்தத் திரைப்படம். இத்திரைப்படம் பின்னர் தெலுங்கிலும், இந்தியிலும் வெளியானது.
சிறந்த இயக்குனருக்கான தமிழக அரசின் விருதை இந்தப் படம் பெற்றது. அதே போல சிறந்த இயக்குனருக்கான பிலிம் ஃபேர் விருதையும் இந்தப் படம் பெற்றது.

1980ம் ஆண்டு ஒரே ஒரு படம் தந்த கே.பாலசந்தர், அடுத்த ஆண்டு வட்டியும் முதலுமாய் படங்களை வெளியிட்டார்.
1981ம் ஆண்டு வெளியான கே. பாலசந்தரின் திரைப்படங்கள் 9 !!! பாலசந்தரின் படங்கள் அதிக அளவு வெளியான ஆண்டு அது தான் 1981 !

தில்லுமுல்லு

1981ம் ஆண்டு வெளியான படங்களில் ஒரு படம் இந்தித் திரையுலகை அசைத்தது. அது தான் ஏக் துஜே கேலியே.
தமிழில் வெளியான இரண்டு படங்களில் ஒன்று நகைச்சுவையில் கொடிகட்டிப் பறந்தது. ரஜினிகாந்த் நடித்த தில்லு முல்லு தான் அந்தப் படம்.
இந்தியில் 1979ம் ஆண்டு வெளியான கோல்மால் திரைப்படத்தின் ரீமேக் தான் தமிழில் தில்லு முல்லு. ரஜினிகாந்துடன் ஜோடியாக மாதவி நடித்திருந்தார். இந்தப் படத்தில் தேங்காய் சீனிவாசனின் கதாபாத்திரம் மிகவும் ரசிக்கப்பட்டது. இவர்களைத் தவிர நாகேஷ், சௌகார் ஜானகி, பூர்ணம் விஸ்வநாதன் மற்றும் பலர் நடித்திருந்தார்கள்.
தேங்காய் சீனிவாசனை ஏமாற்ற காந்தியவாதி, நல்ல குணமுடையவன், விளையாட்டையே வெறுப்பவன் என சொல்லி வேலையில் சேரும் ரஜினி உண்மை வெளிப்படும்போது, தப்பிப்பதற்காக தனக்கு ஒரு தம்பி உண்டு அவனுக்கு மீசை இல்லை என்கிறான். அந்த பொய்யை காப்பாற்றுவதற்காக அவன் செய்யும் தில்லு முல்லுகள் தான் படம்.
முரட்டுத் தனமான கதாபாத்திரங்கள், வில்லத்தனமான கதாபாத்திரங்கள், ஆக்ஷன் நிறைந்த கதாபாத்திரங்கள் இவை தான் தில்லு முல்லு வரும் வரை ரஜினிகாந்த் செய்து வந்த கதாபாத்திரங்கள். ரஜினி க்கு நகைச்சுவை வரும் என கணித்து அதை நிரூபித்துக் காட்டியதில் பாலசந்தரின் திறமை அலாதியானது.
தில்லு முல்லு சூப்பர் ஹிட். வசூலில் கொடி நாட்டிய படம். அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன், அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் இந்திரன் என கதாபாத்திரங்களின் பெயர்கள் ஹிட் வரிசையில் இருக்கின்றன.
இந்தப் படத்தை இயக்கியது பாலசந்தராக இருந்தாலும் வசனம் எழுதியது விசு ! ரஜினிகாந்த் மீசையில்லாமல் நடித்த முதல் படம் இது எனும் சுவாரஸ்யப் பெயரும் இந்தப் படத்துக்கு உண்டு.
ராகங்கள் பதினாறு, தில்லு முல்லு தில்லு முல்லு போன்ற பிரபலமான பாடல்களைக் கண்ணதாசன் எழுத எம்.எஸ்.வி இசையமைத்திருந்தார். 2013ம் ஆண்டு இந்தப் படம் சிவா, பிரகாஷ்ராஜ் நடிக்க பத்ரியின் இயக்கத்தில் வெளிவந்தது. அதுவும் சுமாரான வெற்றியைப் பெற்றது.
ரஜினிகாந்தின் டாப் திரைப்படங்களில் தில்லுமுல்லுவுக்கு நிரந்தர இடம் உண்டு. டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகை ரஜினி படங்களில் தில்லுமுல்லுவுக்குக் கொடுத்திருப்பது ஏழாவது இடம் !
இந்தப் படத்திலிருந்து அப்படியே ஒரு யூ டர்ன் அடித்து பாலசந்தர் இயக்கிய படம் தண்ணீர் தண்ணீர். அப்படி ஒரு சீரியஸ் படம்.

2,150 total views, 2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *