எனக்கு எல்லாம் தெரியும் எனக்குத்தான் எல்லாம் தெரியும்
கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு. இன்று இலத்திரன் ஊடகங்களின் பெரும் படையெடுப்பின் காரணமாக உலகம் சிறுத்துவிட்டது. உலகின் எந்த மூலையில் எது நடந்தாலும் செய்தி உடன் உள்ளங்கைக்குள் வந்துவிடும். அது உண்மையோ பொய்யோ அது பற்றி எவருக்கும் கவலைகிடையாது. முதல் சொல்பவனையே உலகம் கவனிக்கிறது. அது அம்ஸ்ரோங் முதல் இன்று வரை வெகு ஸ்ரோங்காகப் பதிந்துவிட்ட ஒரு காரியம். உலகத்தையே முற்றுமுழுதாக அறிந்துவிட்டதாக ஒருவித நினைப்புக் குடிகொண்டுவிட்டது. எனக்குத்தெரியும் என்பதில் இருக்கும் இன்பம் வேறு எதிலும் இல்லை. அந்த இன்பத்தை அடையவே பல இடங்களில் மனிதன் மூக்கை நுழைக்கின்றான்.
ஒரு மனிதன் சாப்பிடுவதற்காக மட்டும் அல்ல. தன்னைப்பிறரிடம் இருந்து வித்தியாசப்படுத்திக்காட்டவும் எதோ ஒரு வகையில் பிறரைவிட தான் உயர்ந்தவன் பலவற்றை அறிந்தவன் என்பதை விளக்கவே வாயைத் திறக்கின்றான். மனிதர்களின் செயற்பாடுகளை சற்று அதானித்துப் பார்த்தால் இவை நன்றாகவே தெரியும்.
நீங்கள் ஒரு தகவலைச் சொல்லிப்பாருங்கள். அல்லது எழுதிப்பாருங்கள் ( இன்று எந்தச்செலவும் இல்லாமல் எழுத ஆயிரம் வழிகள் உண்டு அல்லவா) அதனைக் கேட்டதும் அல்லது வாசித்ததும் கேட்பவர் வாய்திறப்பார்.அல்லது ஒரு பதிவிடுவார். அதில் நீங்கள் சில விடையங்களை நோக்கி இருப்பீர்கள், அல்லது இனி நோக்குங்கள்.
01.இந்த தகவல் எனக்கு முதலேதெரியும் என்பதனைக் காட்ட முயல்வார்.
02.அந்த தகவலோடு சேர்த்து தனது அறிவைப் புலப்படுத்த மேலும் சில தகவல்களை சொல்வார், அல்லது எழுதுவார்.
03.சிலர் ஏதும் பேசவும் மாட்டார்கள். எந்தப்பதிவும் இட மாட்டார்கள் அமைதிகாப்பார்கள். அதன் அர்த்தம் உங்கள் பேச்சோ பதிவோ சரியானது என்பது அந்த மௌனம் சொல்லும் பதில் என்று மட்டும் எண்ணிவிடாதீர்கள், அந்தமௌனம் ஒரு எரிமலைக்குச் சமம். ஆனால் வெளியில்தெரியாது.
- மேற்குறிப்பிட்ட வகையினைரைத் தவிர இப்போது குறிப்பிடப்படும் இவர்கள்தான் மிக மிக ஆபத்தானவர்கள். நாம்; எமது அனுபவத்தில் எனக்கு யாவும் தெரியும் என்று சொல்பவர்களை விட, எழுதுபவர்களைவிட, எனக்குத்தான் தெரியும் என்று எண்ணுபவர்களையே நாம் அதிகமாகச் சந்தித்திருப்போம்.
மேற்குறிப்பிட மூன்று வகையினரும் பிறரைக்காயப்படுத்தினாலும் அவை புறக்காயமாகவே இருக்கும். ஆனால் இந்த நான்காவது பிரிவினர்களான எனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற பிரிவினர்கள் உள்காயங்களை ஏற்படுத்த வல்வர்கள். பலரது தன்னம்பிக்கையை வேரோடு பிடுங்கி எறியும் ஆற்றல் மிக்கவர்கள். சுயமான சிந்தனைகள் ஒருவரிடத்தில் ஏற்படாவண்ணம் மட்டம் தட்டுவதும், ஒருவித மலட்டுத்தன்மையை அவர்களுக் ஏற்படுத்துவதிலும் வல்வர்களாக இருப்பார்கள்.
வாழ்கையில் எதிர்மறையான சிந்தனைகள் உடையவர்களது சகவாசத்தை குறைத்துக்கொள்ளவேண்டும் என்பது எவ்வளவு நல்லதோ! அதனைவிடச்சிறந்தது எனக்குத்தான் தெரியும் என்பவர்களது நிழலையும் தொடாது நகர்வது.
புத்தகங்கள் வாசிப்பது உண்மையில் சிறப்பானதே! அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. வாசிப்பு மனிதனைப் பூரணமாக்குகிறது அதுவும் தெய்வ வாக்கிற்கு ஒப்பானதே!
ஆனால் இந்த வாசிப்பு பிறருக்கு தன்னை நாலும் தெரிந்தவன், எனக்குத்தான் தெரியும் என்பதனைப் புலப்படுத்த மட்டுமே பயன்படுமானால் அந்த வாசிப்பு ஒரு மனிதனைப் பூரணமனிதனாக்காது. ஒருவன் வாசிப்பின்மூலம் முதலில் தன்னைப் பூரணப்படுத்தவேண்டும்.
உங்கள் வீட்டிலோ அல்லது அருகிலோ ஒரு வயோதிபர் பேச்சுத்துணையின்றித் தவிக்க பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள ஒருவருடன் உங்கள் ஆற்றலை காட்டுவதற்காக மணிக்கணக்காக கதைப்பது உங்கள் அகத்தை மகிழ்விக்குமா?
அதிகம் வாசிப்பவனதும் கண்காட்சிகள் பார்ப்பவனதும் படைப்புகளில் சொந்தக்கருத்துகள் மந்தமாகவே இருக்கும். பிறரது அனுபவங்கள் படைப்புக்கள் உங்களுக்குள் ஒரு சுயமான உணர்வை உருவாக்க மட்டுமே அவற்றை உள்வாங்கவேண்டும். அதன் மூலம் பிறக்கும் உங்கள் படையல்கள் பேச்சுக்கள் இவற்றின் மூலம் உங்களுக்கு தெரிந்தவற்றைப் பகிருங்கள். அந்தப்பகிர்வில் அதுவே முடிந்தமுடிவு எனவும்,எனக்குத் தெரியும் என்ற தொனியும், எனக்குத்தான்தெரியும் என்ற கர்வமும் விட்டொழிந்திருந்தால் உங்கள் தேடல்கள் எந்த மனிதரையும்காயப்படுத்தாது கனிவாக பிறரைச் சேரும்.
இதனைத்தான் நான் நான் எனக்குத்தான் இவற்றை அறுத்தால் முத்தியின்பம் கிட்டும் என்றார்கள். ஆம்.அந்த இன்பம் முத்திபெறும் வரை காத்திருக்கத்தேவை இல்லை. இப்பிறப்பிலேயே அதனை அறுத்தால் இப்பொழுதே இக்கணமே அந்த இன்பத்தைப் பெறலாம். முயற்சிப்போமா?
பறவைகளுக்கோ அல்லது வீட்டு மிருகங்களுக்கோ உணவு கொடுக்கிறோம். அது போதாதோ!!! என்ற நினைப்பில் அவற்றைக் காயப்படுத்தி உணவுகொடுத்தால் எவ்வளவு துன்மானதோ! அதுபோலவே உங்கள் கருத்தை விருப்பத்தை பிறருக்கு காயப்படுத்தி வழங்குவதும் அமையும். எனக்குதெரியும் என்று அகமகிழுங்கள் ஆனால் எனக்குத்தான்தெரியும் என்று எவருக்கும் எதனையும் திணிக்கதீர்கள்.
இக்கட்டுரையில்: எந்தப்பறவைகளையோ, மிருகங்களையோ ஏன் எந்த தனிப்பட்ட மனிதர்களையோ காயப்படுத்தவில்லை என்பதனை அறியத்தருகிறோம்.
-மாதவி
2,041 total views, 3 views today