ராஜபக்ஷக்கள் அரசியலமைப்பில் செய்யப்போகும் மாற்றம்?
நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு என்ற அசுர பலத்துடன் ஆட்சி அமைத்திருக்கின்ற ராஜபக்ஷக்களின் பொது ஜன பெரமுன அரசின் நிகழ்ச்சி நிரலில் முதலாவதாக அரசியலமைப்பு மாற்றமே இருக்கப்போகின்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் நிகழ்த்திய தனது சிம்மாசன உரையில் அதனைத் தெளிவாகக் கூறியிருக்கின்றார். “19 ஆவது திருத்தத்தை இல்லாதொழிப்பது” என்பதுதான் தமது தேர்தல் வாக்குறுதியாக இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், அதற்கு மக்களுடைய ஆணை கிடைத்திருப்பதால் அதனைத்தான் தாம் முதலில் செய்யப்போவதாகவும் சொல்லியிருக்கின்றார்.
அரசியலமைப்பை முழுமையாக மாற்றாமல் 19 ஆவது திருத்தத்தை மாற்றியமைப்பதுதான் அரசாங்கத்தின் முதலாவது இலக்காக இருக்கின்றது. இதற்கான செயற்பாடுகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுவிட்ட போதிலும், எவ்வாறான மாற்றத்தை அரசாங்கம் செய்யப்போகின்றது என்பது தெளிவாகத் தெரியவில்லை. அதனைச் செய்த பின்னர் முழுமையான மாற்றம் ஒன்றையிட்டு அவர்கள் சிந்திக்கலாம் எனத் தெரிகின்றது.
19 ஆவது திருத்தத்தத்தை இல்லாதொழிக்க வேண்டும் என ராஜபக்ஷக்கள் சிந்திப்பதற்குக் காரணம் இருந்தது. ராஜபக்ஷக்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதைத் தடுப்பதை இலக்காகக் கொண்டே இந்தத் திருத்தத்தை ரணில் விக்கிரமசிங்க கொண்டுவந்தார். 2015 இல் ஆட்சி அமைத்தவுடன் அவர்களால் நடைமுறைப்படுத்தப்பட்ட 100 நாள் வேலைத்திட்டத்தில் இந்த திருத்தம் அவசரமாகக் கொண்டுவரப்பட்டது. தனக்கு சவால்விடக்கூடிய ஒருவராக ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர்தான் இருக்க முடியும் என்பதை சரியாகக் கணித்த ரணில் விக்கிரமசிங்க, அவரது குடும்பத்தில் செல்வாக்கு மிக்க எவருமே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாதவாறு இந்தத் திருத்தத்தைக்கொண்டுவந்தார்.
“19” இன் மீது ராஜபக்ஷக்களுக்கு இருந்த சீற்றத்துக்கு இவைதான் காரணம். மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதியாக வரும் இலக்குடன் மஹிந்த ராஜபக்ஷ கொண்டுவந்த 18 ஆவது திருத்தத்தை இல்லாமல் செய்துவிட்டது 19 ஆவது திருத்தம். அதனால்தான் கடந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவினால் போட்டியிட முடியவில்லை. ஆனால், ராஜபக்ஷ குடும்பத்தில் கோட்டாபய ராஜபக்ஷவோ, பசில் ராஜபக்ஷவோ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாதவாறு போடப்பட்ட தடையான ‘இரட்டைப் பிரஜாவுரிமை’ விவகாரத்தை கோட்டாபய கடும் பிரயத்தனத்தின் மத்தியில் தாண்டினார்.
அமெரிக்கப் பிரஜாவுரிமையைத் துறந்து ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ களமிறங்கியது ரணில் எதிர்பார்க்காத ஒரு அதிரடித் திருப்பம். அத்துடன் ரணிலின் கனவும் கலைந்தது. 19 ஆவது திருத்தத்தை ரணில் கொண்டுவந்த நோக்கம் தோல்வியடைந்தது.
19 ஆவது திருத்தத்தை இல்லாதொழிக்க வேண்டும் என ராஜபக்ஷக்கள் தொடர்ந்தும் கூறிவந்தாலும், போதிலும், கோட்டாபய ஜனாதிபதியாக வருவதற்கு அந்தத் திருத்தம்தான் உதவியது. 19 வரவில்லையெனில் மஹிந்தான் 2019 நவம்பர் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கி 3 ஆவது தடவையாகவும் ஜனாதிபதியாகியிருப்பார். மஹிந்தவின் தலைமையில் ஒரு சர்வாதிகார ஆட்சிக்கு அது வழிவகுத்திருக்கும்.
19 ஆவது திருத்தத்தின் மூலமாக ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டிருக்கின்றது. பாராளுமன்றம் பலமடைந்திருக்கின்றது. அதனால், பிரதமரின் பலமும் அதிகரித்திருக்கின்றது. இன்று பலம்வாய்ந்த ஒரு பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ இருப்பதற்கும் இந்தத் திருத்தம்தான் காரணம். ஆக, 19 ஐ இல்லாதொழிப்பதன் மூலம் இந்த நிலைமையை மாற்றியமைக்க மஹிந்த விரும்புவாரா?
அரசியலமைப்புத் திருத்தம் செய்யும் குழுவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இரண்டு யோசனைகளை முன்வைத்திருக்கின்றார். அந்த இரண்டும் முக்கியமானது. ஒன்று – ஜனாதிபதியின் பதவிக்காலம் இரண்டு தவணைகள் என்றிருப்பதை மாற்ற வேண்டாம் என அவர் கூறியிருக்கின்றார். இதனைவிட, சுயாதீன ஆணைக்குழுக்களின் அதிகாரங்களைக் குறைக்கக்கூடாது என்பதும் அவரது பரிந்துரைகளில் முக்கியமானது. ஆக, மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதியாக வருவதற்கு அங்கு தடைபோப்பட்டுள்ளது.
19 மஹிந்தவுக்கு அதிருப்தியைக் கொடுத்தமைக்கு இந்த இரண்டும்தான் காரணமாக இருந்தன. ஜனாதிபதியின் பரிந்துரையின்படி இந்த இரண்டிலும் கைவைப்பதில்லை என இப்போது தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.
அரசியலமைப்பு மாற்றத்தில் என்ன செய்யப்பட வேண்டும் என்பதை ஜனாதிபதி சொல்லவில்லை. என்ன செய்யக்கூடாது என்பதைத்தான் அவர் அடித்துக் கூறியிருக்கின்றார். இந்தப் பின்னணியில்தான் 19 குறித்து அரச தரப்பில் குழப்பங்கள் உருவாகியிருக்கின்றது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் சொல்லத் தொடங்கியுள்ளார்கள்.
19 ஆவது திருத்தம் ராஜபக்ஷக்களுக்குச் சீற்றத்தை ஏற்படுத்தியமைக்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று – சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டது. இரண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு ராஜபக்ஷ குடும்பத்தில் நால்வரை (மஹிந்த, கோட்டாபய, பஸில், நாமல்) இலக்கு வைத்துக் கொண்டுவரப்பட்ட சரத்துக்கள். அதில் ஒன்றை கோட்டாபய தாண்டிவிட்டார். ஜனாதிபதியுமாகிவிட்டார். அடுத்த தடவையும் ஜனாதிபதியாகும் நோக்கம் அவருக்கு இருப்பதாகவே தெரிகின்றது.
19 ஆவது திருத்தம் ராஜபக்ஷக்களை இலக்கு வைத்து அவசரமாகக் கொண்டுவரப்பட்ட ஒன்றாக இருந்தாலும், பல ஆரோக்கியமான அம்சங்களும் அதில் பொதிந்திருந்தன. குறிப்பாக, சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு அதிகாரங்களைக் கொடுத்தது, தகவல் அறியும் சுதந்திரம் குறித்த சட்டமூலம் போன்றன ஆரோக்கியமான விடயங்கள். அவற்றை மாற்றியமைக்க முற்பட்டால் கடுமையான விமர்சனங்கள் உருவாகும். அப்படியானால், இரட்டைப் பிரஜாவுரிமை குறித்த அம்சம் மட்டும் மாற்றப்படலாம். அதன் மூலம் பசில் ராஜபக்ஷ தேசியப்பட்டியல் எம்.பி.யாக்கப்பட்டு முக்கிய அமைச்சர் பதவி ஒன்று அவருக்குக் கொடுக்கப்படலாம்.
இலங்கையைப் பொறுத்தவரையில் அரசியலமைப்புக்களும், அவற்றுக்கான திருத்தங்களும் தனிப்பட்ட நலன்களையும், கட்சி நலன்களையும் அடிப்படையாகக் கொண்டவையாகவே இருந்துள்ளன. அந்த வகையில் இப்போது மூன்றில் இரண்டு என்ற இராட்சச பலத்துடன் ஆட்சியை அமைத்துள்ள ராஜபக்ஷக்கள் தமக்கேற்ற விதமாக தமது ஆட்சி தொடரத் தக்க வகையில் அரசியலமைப்பை மாற்றியமைப்பதற்கு நிச்சயமாக முற்படுவார்கள். அதில், தேசிய இன நெருக்கடிக்கான தீர்வை அவர்கள் தருவார்கள் என்பது எதிர்பார்க்கக்கூடியதல்ல.
— பாரதி
1,505 total views, 3 views today