அமெரிக்கத் துணை ஜனாதிபதி எங்கட கமலா அக்காவோ?

உங்களுக்கு தமிழ் தெரியுமா தெரியாதா என்று எனக்கு தெரியாது. நீங்க பச்சைத் தமிழச்சியா இல்லையா என்று கூட எனக்கு கொஞ்சமும் தெரியாது.
ஆனாலும் உங்கட பெயர் தமிழ் பெயரைப் போல இருப்பதால், நீங்க தமிழ் என்று நினைத்து இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

நாங்க சின்னனில் இந்திரா காந்தி கூட
தமிழ் என்று யோசிச்சாக்கள் தானே!

ஏனென்றா அக்கா, நாங்க சின்னனில் இந்திரா காந்தி கூட தமிழ் என்று யோசிச்சாக்கள் தானே.
நேற்று அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் Joe Biden ; துணை ஜனாதிபதி வேட்பாளராக நீங்கள் அறிவிக்கப்பட்டதும், ஏனோ எங்களுக்கு எங்கிருந்தோ வந்த ஒரு ஆனந்தம் புகுந்து கொண்டதுக்கு உங்கட கமலா என்ற அழகிய தமிழ் பெயர் தான் காரணம்.
இன்னும் கொஞ்ச நாட்களில், கமலா ஒரு சிங்களப் பெயர், நீங்கள் சிங்களம் என்று ஞானசார தேரர் எங்களோட சண்டைக்கு வருவார்.
கதிர்காம கந்தனை சிங்களவனாக மாற்றியது போல, கன்னியாவையும் இராவணனையும் தங்கட என்று தம்பட்டம் அடிக்கும் பௌத்த சிங்கள பேரினவாதம், கமலாக்காவையும் வெள்ளை வானில் தூக்கி தங்கட ஆள் என்று கொண்டாடத் தான் போகுது.
உங்கட அம்மாவும் தமிழ், அவ பெயர் ஷியாமளா கோபாலன் உங்கட பெயரும் தமிழ்,கமலா நாங்களும் தமிழ் என்றபடியால் மட்டுமே நீங்க எங்கள கவனிப்பியலோ தெரியாதக்கா.
ஆனால், உலகமே வியக்கும் வண்ணம் கட்டுக்கோப்பான ஒரு ஆயுதப் போராட்டத்தை நடாத்தி, ஒரு இருபது வருடங்களிற்கு முன்னம் வெற்றியின் விளிம்பில் நின்ற எங்களின் இன்றையை கையறு நிலையை கவனிப்பார் யாருமில்லை அக்கா.
பேசித் தீர்க்கலாம் வாங்கோடா என்று ஊரூராக கூட்டிப் போன நோர்வேக்காரனின் சிலமனையும் காணோம், அவங்களோடு கூட்டுக் களவாணிகளாக சேர்ந்த உங்கட அமேரிக்காவும், யப்பானும், ஐரோப்பிய ஒன்றியமும் நாங்கள் யுத்தத்தில் தோற்றதோடு எங்களை கைவிட்டு விட்டது உங்களிற்கு தெரிஞ்சிருக்கும்.
கமாலாக்கா, உங்களுக்கு எங்கட உண்மையான பிரச்சினை என்னென்று தெரியுமோ தெரியாது, தெரிய முயற்சிக்க போறியலோவும் தெரியாது.

உண்மையானப் பிரச்சினை என்னென்று
எங்களுக்கே சரியா தெரியாமல் போய்ட்டுது

உதுக்க ஆகப் பெரிய பகிடி என்னென்றால், எங்கட உண்மையானப் பிரச்சினை என்னென்று எங்களுக்கே சரியா தெரியாமல் போய்ட்டு, உண்மையை சொல்லப் போனால் தெரியாமல் ஆக்கிட்டாங்கள்.
எங்களுக்கே எங்கட பிரச்சினை என்னென்று தெரியாமல் இருக்கேக்க, உங்களுக்கு எங்கட உண்மையான பிரச்சினையை என்னென்று நாங்கள் உங்களுக்கு விளங்கப்படுத்த போறம்?
எங்கட ஊர் பெடியளிற்கே எங்களால எங்கட பிரச்சினையை சரியா விளங்கப்படுத்த ஏலாமல் இருக்கிற சீத்துவத்தில, வொஷிங்டனில் இருக்கிற உங்களுக்கு எப்படி அக்கா விளங்க வைக்கிறது?
ஒருத்தனை கேட்டால் எங்களுக்கு தனி நாடு கிடைச்சால் எல்லாம் சரியாகிடும் என்றுறான். இன்னொருத்தனோ இல்லையடாப்பா தனித் தேசம் தான் வேணும் என்றுறான்.
சரியடாப்பா, தனி நாட்டுக்கும் தனித் தேசத்துக்கும் என்னடாப்பா வித்தியாசம் என்று கேட்கப் போனால், இருத்தி வைச்சு மண்டை காயப் பண்ணுறாங்கள்.
ஆள விடுங்கோடாப்பா என்று அவங்கட இருந்து கழற, “இஞ்ச வாரும் ஐசே, நாங்க சமஷ்டி எடுத்து தாறம்” என்று ஒராள் சீனியில்லாத தேத்தண்ணி வாங்கித் தந்தார்.
சீனி இல்லையே என்று கேட்டால் எங்க என்னை மொக்கன் என்று யோசித்து விடுவாரோ என்ற பயத்தில், தேத்தண்ணியாவது வாங்கித் தந்தாரே என்று யோசித்து விட்டு, சீனியில்லாத கச்சல் தேத்தண்ணியை கைக்க கைக்க குடிச்சுக் கொண்டிருக்க, வெளில டீபை ஆயவஉhக்கு அடிக்கும் பப்பரே சத்தமும் பைலா பாட்டும் கேட்குது.
அரைவாசி குடிச்ச தேத்தண்ணியை அப்படியே வச்சிட்டு, தேத்தண்ணிக் கடையால வெளியே ஓடிவர, “வாங்கோண்ணா… வாங்கோண்ணா.. வேலை வேணுமாண்ணா வேணுமாண்ணா” என்று இளம் பெடியள் ஆடிக்கொண்டே கூப்பிடுறாங்கள்.
“ஆளுக்கொரு வேலை, ஆனையிறவில் ஒரு Resort, அத்தியடியில் ஒரு car park, அலுவல் முடிஞ்சுது.. எலகிரி அண்ணே” என்று ஆண்டாண்டு கால எங்கட பிரச்சினையை தீர்க்க அவங்கள் டக் டிக் டோஸ் என்று planஐ சொல்லுறாங்கள்.
வாற நவம்பரில் உங்கட ஆள் வென்று, தை மாதம் நீங்க பதவியேற்றாப் பேந்து, எங்கட ஆக்களை உங்க அனுப்பி, உங்களைச் சந்தித்து, உங்களுக்கு ஒரு பொன்னாடை போர்த்தலாம் என்றால், இந்த நாலு கோஷ்டியில் எந்தக் கோஷ்டியை அனுப்புவது என்று யோசிச்சா நமக்கே மண்டை வெடிக்குது, கமலாக்கா.

தப்பித் தவறி, இந்தியாக்கோ சைனாக்கோ போற வழியில், கட்டுநாயக்காவில் நீங்க தங்குற, அஞ்சு நிமிஷத்தில, எங்கட ஆக்களில் ஆரை சந்திப்பியல் என்றதை முடிவெடுக்க, உங்கட ஆனானப்பட்ட இராஜாங்க திணைக்களமே திணறப் போகுதென்றால் பாருங்கோவன் எங்கட திறத்தை.
கமலாக்கா, இதுக்கு மேலயும் எழுதி உங்களுக்கு அலுப்புத் தர விரும்பேல்ல.. கடைசிய ஒன்றை சொல்லிட்டு போறன்..
நீங்க பதவியேற்கும் போது, ஒரு வார்த்தை.. ஒரே வார்த்தை தமிழில் சொல்லிட்டியல் என்றா காணுமக்கா.. நாங்க அதை வச்சே.. நீங்க வருவியல்.. ஏதாவது செய்வியல் என்று நம்பி நம்பியே அடுத்த அஞ்சு வரியத்தை ஓட்டிடுவம்..
ஏனென்றா அக்கா, எங்களுக்கு மிஞ்சியிருப்பது எங்களுக்கு எப்பவாவது ஒருநாள் விடிவு கிடைக்கும் என்ற ஏதோவொரு முரட்டுத் தனமான நம்பிக்கை மட்டுமே.
அந்த நம்பிக்கையை எந்த கொப்பனோ, சுப்பனோ, கோத்தாவோ ஏன் அவன்ட ஆத்தாவோ வந்தாலும் எங்களிடம் இருந்து பறிக்கேலாது, கமலாக்கா…
ஏலுமென்றா பண்ணிப் பார்க்க சொல்லுங்கோக்கா..
நன்றி வணக்கமக்கா.

— ஜூட் பிரகாஷ்- மெல்பேர்ண்

1,558 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *