30க்கு மேற்பட்ட நடிகர்கள் நடிக்கும் “நாளைய நாம்” தொடர் நாடகம்
ஜேர்மனியில் முதன்முதலாக தயாரிக்கப்பட்டு வரும் “நாளைய நாம்” தொடர் நாடகத்தின் படப்பிடிப்புகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன.சாதாரண மனிதர்களையும் அவர்களின் கலை ஆர்வம் கண்டு அவர்களையும் நடிகர்களாக மிளிரச் செய்து வருகின்றது இத்தொடர் நாடகம்.
திரைப்படத்துறையில் அனிமேசன் தொழில்நுட்பப்பிரிவில் டிப்ளோமாப் பட்டப் படிப்பை படித்தவரான திருமதி.சிபோ சிவகுமாரனின் தயாரிப்பிலும் இயக்கத்திலும்,திரு.சிவகுமார் சிவஞானத்தின் ஒளிப்பதிவிலும் ஐரிஎன் தொலைக்காட்சியின் ஒத்துழைப்புடனும் இத்தொடர் தயாரிக்கப்பட்டு வருகின்றது.
புலம்பெயர் தேசத்தில் வாழும் எமது உறவுகளின் மேம்போக்கான வாழ்க்கையைப் பார்க்கும் போது,பிரச்சினைகள் எதுவுமற்ற மன அமைதியான,சமூக உறவில் அன்னியோன்னியம் இருப்பதாக தோன்றினாலும் சராசரி மனிதர்கள் சந்திக்கும் அத்தனை உளவியல் நெருக்கடிகளை அவர்களும் நாளாந்தம் சந்தித்துக் கொண்டேதானிருக்கிறார்கள் என்பதை இத்தொடர் வெளிச்சம் போட்டுக் காண்பிக்கிறது.
ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார வளமும்,அதுசார்ந்து எமது உறவுகளினால் உள்வாங்கப்பட்ட தமிழருக்கே உரித்தான பணபாட்டு விழுமியங்களுடன் மேலைத்தேய நாகரீகமும் அது சார்ந்த உள்ளக வெளித் தோற்றப் ஈர்ப்புக்கும்; உட்பட்ட வாழ்வியல் தடங்களை உற்று நோக்கி,பெற்றோர் பிள்ளைகளுக்கு இடையில் ஏற்படும் தலைமுறை முரண்பாடுகள்,உறவுகள் நண்பர்களுக்கிடையில் இருக்கும் இருமுகத் தொடர்புகள்,எது உண்மையான வாழ்வு என்றும் அன்பு பாசம்கூட பொய்யானதோ என நினைக்கத் தோன்றும் வெறுமையான பாலைவன வாழ்க்கையை தேடி ஓடிக் கொண்டிருக்கும் மனிதர்களை இனங் காட்டுகிறது இத்தொடர்.
புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் தமக்கான படைப்புக்களை தமது நடிகர்களை கொண்டு தாமே படைக்க வேண்டும் என்ற பெரும் கலைத் தாகத்துடன் இத்தொடர் தயாரிக்கப்பட்டு வருகின்றது.
இத்தொடரில் நடிக்கும் நடிகர்கள் ஒவ்வொருவரும் எங்கு படப்பிடிப்பு நடந்தாலும்,ஆகக் குறைந்தது ஒவ்வொருவரும் 100 கிலோ மீற்றர் தூரத்திலிருந்து சிரமங்கள் பார்க்காது இத்தொடரில் அர்ப்பணிப்புடன் பங்குபற்றி இவ்வேலைத் திட்டம் குழுநிலை வேலைத் திட்டம் என்பதை நிரூபித்து வருகின்றனர்.
ஜேர்மனியில் இருக்கும் நடிகர்கள் மட்டுமல்ல பிரான்ஸ்,சுவிஸ்,இலண்டன் ஆகிய நாடுகளிலிருந்தும் பலர் இத்தொடரில் நடித்து வருவதுடன், அந்தந்த நாடுகளிலும் படப்பிடிப்புகள் நடைபெறவுள்ளன.
இத்தொடருக்கான ரைற்றில் பாடலை எழுதியவர் பிரான்ஸ் வாழ் மூத்த கலைஞர் திரு.தயாநிதி தம்பையா, அவர் தொடர்ந்தும்; பாடல் காட்சிகளுக்கான பாடல்களை எழுதுகிறார் பாடலைப் பாடியவர் தாயக பிரபல பாடகர் திரு.கோகுலன் சாந்தன். ஐரோபபிய நாடுகள் பலவற்றில் அந்தந்த நாடுகளைக் குறிக்கும் பாடல்கள் இடம்பெற்று அந்தந்த நாடுகளிலேயே பாடல் காட்சிகள் ஒளிப்பதிவு செய்யப்படவுள்ளன. பாடலுக்கு இசையமைப்பவர் தாயக இசையமைப்பாளர் பத்மஜன் சிவநந்தன்.
இத்தொடருக்கான கதை வசனத்தை எழுதி வருபவர்கள் இயக்குனர் திருமதி.சிபோ சிவகுமாரன், திரு.ஏலையா க.முருகதாசன்,திரு.தயாநிதி தம்பையா உட்பட இன்னும் பல எழுத்தாளர்கள் இத்தொடரில் இணைக்கப்படவிருக்கிறார்கள்.
கலை,இலக்கிய சமூக பொதுவாழ்வில் ஈடுபட்டு வரும் பலர் இத்தொடரில் கௌரவ தோற்றத்தில் நடிக்கவிருப்பது குறிப்பிடத் தக்கது. தயாரிப்பு, இயக்கம்,படத்தொகுப்பு ஆகியவற்றுடன் அதற்காக கடுமையாக உழைத்து வரும் திருமதி.சிபோ சிவகுமாரன் ஏறகனவே 40க்கு மேற்பட்ட நாடகங்களையும், ஒரு முழுநீளத் திரைப்படத்தையும் பல குறும்படங்களையும் தயாரித்தவர்.; யேர்மனியில் திரைத்துறை ஆவலர்களில் இவரும் ஒருவர்; என்பது குறிப்பிடத்தக்கது.
-அவதானி
1,550 total views, 3 views today