பாலசந்தரின் தமிழ்ப் படங்கள்

தில்லுமுல்லு

1981ம் ஆண்டு வெளியான படங்களில் ஒரு படம் இந்தித் திரையுலகை அசைத்தது. அது தான் ஏக் துஜே கேலியே.
தமிழில் வெளியான இரண்டு படங்களில் ஒன்று நகைச்சுவையில் கொடிகட்டிப் பறந்தது. ரஜினிகாந்த் நடித்த தில்லு முல்லு தான் அந்தப் படம்.

இந்தியில் 1979ம் ஆண்டு வெளியான கோல்மால் திரைப்படத்தின் ரீமேக் தான் தமிழில் தில்லு முல்லு. ரஜினிகாந்துடன் ஜோடியாக மாதவி நடித்திருந்தார். இந்தப் படத்தில் தேங்காய் சீனிவாசனின் கதாபாத்திரம் மிகவும் ரசிக்கப்பட்டது. இவர்களைத் தவிர நாகேஷ், சௌகார் ஜானகி,பூர்ணம் விஸ்வநாதன் மற்றும் பலர் நடித்திருந்தார்கள்.

தேங்காய் சீனிவாசனை ஏமாற்ற காந்தியவாதி, நல்ல குணமுடையவன், விளையாட்டையே வெறுப்பவன் என சொல்லி வேலையில் சேரும் ரஜினி உண்மை வெளிப்படும்போது, தப்பிப்பதற்காக தனக்கு ஒரு தம்பி உண்டு அவனுக்கு மீசை இல்லை என்கிறான். அந்த பொய்யை காப்பாற்றுவதற்காக அவன் செய்யும் தில்லு முல்லுகள் தான் படம்.
முரட்டுத் தனமான கதாபாத்திரங்கள், வில்லத்தனமான கதாபாத்திரங்கள், ஆக்ஷன் நிறைந்த கதாபாத்திரங்கள் இவை தான் தில்லு முல்லு வரும் வரை ரஜினிகாந்த் செய்து வந்த கதாபாத்திரங்கள். ரஜினி க்கு நகைச்சுவை வரும் என கணித்து அதை நிரூபித்துக் காட்டியதில் பாலசந்தரின் திறமை அலாதியானது.

தில்லு முல்லு சூப்பர் ஹிட். வசூலில் கொடி நாட்டிய படம். அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன், அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் இந்திரன் என கதாபாத்திரங்களின் பெயர்கள் ஹிட் வரிசையில் இருக்கின்றன.

இந்தப் படத்தை இயக்கியது பாலசந்தராக இருந்தாலும் வசனம் எழுதியது விசு ! ரஜினிகாந்த் மீசையில்லாமல் நடித்த முதல் படம் இது எனும் சுவாரஸ்யப் பெயரும் இந்தப் படத்துக்கு உண்டு.
ராகங்கள் பதினாறு, தில்லு முல்லு தில்லு முல்லு போன்ற பிரபலமான பாடல்களைக் கண்ணதாசன் எழுத எம்.எஸ்.வி இசையமைத்திருந்தார். 2013ம் ஆண்டு இந்தப் படம் சிவா, பிரகாஷ்ராஜ் நடிக்க பத்ரியின் இயக்கத்தில் வெளிவந்தது. அதுவும் சுமாரான வெற்றியைப் பெற்றது.
ரஜினிகாந்தின் டாப் திரைப்படங்களில் தில்லுமுல்லுவுக்கு நிரந்தர இடம் உண்டு. டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகை ரஜினி படங்களில் தில்லுமுல்லுவுக்குக் கொடுத்திருப்பது ஏழாவது இடம் !
இந்தப் படத்திலிருந்து அப்படியே ஒரு யூ டர்ன் அடித்து பாலசந்தர் இயக்கிய படம் தண்ணீர் தண்ணீர். அப்படி ஒரு சீரியஸ் படம்.

21
தண்ணீர் தண்ணீர்

தண்ணீர் தண்ணீர் படத்தைக் கொண்டாடாத விமர்சகர்களே இல்லை எனலாம். தமிழகத்தின் ஓரமாக இருக்கும் ஒரு கிராமத்தின் தண்ணீர் பஞ்சமும், அதில் புகுந்து விளையாடும் அரசியலும் தான் கதையின் மையம். சரிதாவின் அட்டகாசமான நடிப்பில் காண்போரையெல்லாம் கண்கலங்க வைக்கும் படமாக தண்ணீர் தண்ணீர் உருவாகியிருந்தது.
கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது போல, இந்தப் படத்துக்கு திரையிட்ட இடமெல்லாம் வரவேற்பு. பல சர்வதேசத் திரைப்பட விழாக்களில் இந்தப் படம் பாராட்டப்பட்டது.

கோமள் சுவாமிநாதனின் நாடகத்தின் கதையை மையமாக வைத்துக் கொண்டு திரைக்கதையை பாலசந்தர் எழுதியிருந்தார். ராதாரவி, சார்லி, ஷண்முகம், வீரசுவாமி ஆகியோர் நடித்திருந்தனர்.
சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருது, சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது, சிறந்த திரைப்படத்துக்கான பிலிம் ஃபேர் விருது, சிறந்த இயக்குனருக்கான பிலிம் ஃபேர் விருது, சிறந்த திரைப்படத்துக்கான சினிமா எக்ஸ்ப்ரஸ் விருது என இந்தப் படம் பல்வேறு விருதுகளை அள்ளிக் குவித்தது.
கே.பாலசந்தர் படங்களில் மிக முக்கியமான பதிவு இந்தத் தண்ணீர் தண்ணீர்.
அதே ஆண்டு எங்க ஊர் கண்ணகி என்றொரு படத்தை சரிதா, சீமா, மாதவி ஆகியோரை முக்கியக் கதாபாத்திரங்களாகக் கொண்டு பாலசந்தர் எடுத்தார். ஆனால் வணிக ரீதியாக அந்தப் படம் வெற்றியடையவில்லை
அதே போல 47 நாட்கள் என்றொரு படத்தையும் கே.பாலசந்தர் அந்த ஆண்டு இயக்கினார். ஜெயப்ரதா, சரத்பாபு, ராமபிரபா ஆகியோருடன் இந்தப் படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்தவர் சிரஞ்சீவி.
சிரஞ்சீவியின் தமிழ் அறிமுகம் இந்தப் படம் தான் ! அந்த வகையில் இந்தப் படம் கவனிக்கப் பட்டது. சிரஞ்சீவியின் துவக்க காலப் படங்களில் முக்கியமான படம் எனும் பெயரைப் பெற்றது.
அதே ஆண்டு தோலி கொடி கூசிந்தி என்றொரு தெலுங்குப் படத்தை இயக்கி அதற்கு சிறந்த திரைப்படத்துக்கான ஆந்திர அரசின் நந்தி விருதினைப் பெற்றுக் கொண்டார் பாலசந்தர்.
மொத்தத்தில் 1981ம் ஆண்டு பாலசந்தரின் கொடி உச்சத்தில் பறந்த ஆண்டு எனக் கொள்லலாம். ஏக் துஜே கேலியே எனும் சூப்பர் டூப்பர் இந்திப் படம், தில்லு முல்லு எனும் கமர்ஷியல் ஹிட், தண்ணீர் தண்ணீர் எனும் கிளாசிக் ஹிட், கூடவே நாலு தெலுங்கு படங்கள், இரண்டு தமிழ்ப் படங்கள் என அமர்க்களப் படுத்தினார் கே.பாலசந்தர்.
இந்த ஆண்டு பரபரப்பாய் இருந்ததாலோ என்னவோ, அடுத்த ஆண்டு பாலசந்தர் ஒரே ஒரு படத்தை இயக்கினார். அதுவும் வணிக ரீதியாக தோல்விப்படமாக அமைந்தது.
அந்தப் படம் அக்னி சாட்சி. சிறந்த நடிகைக்கான தமிழக அரசின் விருது சரிதாவுக்குக் கிடைத்தது மட்டுமே இந்தப் படத்துக்குக் கிடைத்த ஆறுதல். மனநிலை பாதிக்கப்பட்ட “ஸ்கிட்ஸோஃபெரினா” நோயாளியாக அவர் நடித்திருந்தார். சிவகுமார், சரிதா முதன்மைக் கதாபாத்திரங்களாக நடித்த இந்தப் படத்தில் ரஜினிகாந்த், கமலஹாசன் ஆகியோர் கவுரவ வேடமேற்றிருந்தனர்.
அடுத்த ஆண்டும் பாலசந்தரின் தமிழ்ப் படங்கள் பரபரப்பை ஏற்படுத்தவில்லை. பொய்க்கால் குதிரை என்றொரு தமிழ்ப் படத்தை இயக்கினார். அந்தப் படத்தில் கவிஞர் வாலி அறிமுகமாகியிருந்தார். “எனக்கு நடிக்கத் தெரியாது” என வாலி மறுத்தபோது, “அதை நான் தான் சொல்லணும்.. ஒழுங்கா நடி” என பாலசந்தர் நடிக்க வைத்தார்.
கிரேஸி மோகனின், “மேரேஜ் மேட் இன் சலூன்” நாடகத்தின் கதையை மையமாக வைத்து உருவானது இந்தப் படம். கமலஹாசன் இதில் கவுரவ வேடமேற்றிருந்தார்.
தனது முத்திரையைப் பதிக்கும் முக்கியமான படத்துடன் அடுத்த ஆண்டு களத்தில் குதித்தார் பாலசந்தர். அந்தப் படம் “அச்சமில்லை அச்சமில்லை”

1,968 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *