நன்றியுணர்வு நலிந்து போகிறதா ?

அந்த நிறுவனத்தின் ஹைச்.ஆர் அலுவலகத்தில் அமைதியாய் உட்கார்ந்திருந்தார் குருமூர்த்தி. அவரது கண்களில் திட்டுத் திட்டாய்த் துயரம் அமர்ந்திருந்தது. எப்போது வேண்டுமானாலும் அணைஉடைக்கக் காத்திருந்தது கண்ணீர். அலுவலகத்தில் அரசல் புரசலாய்க் கேட்ட ஒரு செய்தி நிஜமென்றாகிவிட்டது. வாழ்வின் விளிம்பில், கைப்பிடியற்ற மலை முகட்டில் உட்கார்ந்திருக்கும் அவஸ்தை அவருக்கு. சலனமேயில்லாத விழிகளுடன் ஹைச்.ஆர் தலைவர் பேசினார்.

“வெரி சாரி…. ஆபீஸ்ல 50 வயசுக்கு மேல இருக்கிறவங்களை ரிலீஸ் பண்ண சொல்லிட்டாங்க… நீங்களும் அந்த லிஸ்ட்ல வரீங்க… நீங்க உடனே ரிசைன் பண்ணிடுங்க, சாயங்காலமே உங்களை ரிலீஸ் பண்ணிடறோம்”

“என்ன சார்… இருபது வருஷமா இந்த ஆபீஸ்ல வேலை செய்யறேன். இந்த அலுவலகத்தோட ஒவ்வொரு வளர்ச்சியை நீங்க தொட்டுப் பாத்தாலும் என்னோட உழைப்போட இரத்தத் துளிகள் இருக்கும். இந்த அலுவலகத்தின் முன்னேற்றத்தோட எல்லா பாதைகளிலும் என்னோட வியர்வைத் துளிகள் ஈரம் காயாம இருக்கும். இப்படி சட்டுன்னு கிளம்புன்னு சொல்றீங்களே.. நியாயமா இருக்கா ?”

“உங்க கஷ்டம் புரியுது… பட். எங்களால ஒண்ணும் பண்ண முடியல. இது எம்.டியோட டிசிஷன். நாங்க ஒண்ணும் பண்ண முடியாது. வி ஆர் ஹெல்ப்லெஸ்”

“ உங்க கஷ்டம் புரியுதுன்னு – சொல்ற யாருக்குமே எங்க கஷ்டம் புரியாது சார்…. உங்களால ஏதும் பண்ண முடியாதுன்னா ஏன் சார் ஹைச்.ஆர் ந்னு இருக்கீங்க ? மக்களோட குறைகளைத் தீர்க்கிறது தானே உங்க வேலை… மக்களுக்காக பேச மாட்டீங்களா “

“சீ… நிறுவனம் மோசமான நிலையில போயிட்டிருக்கிறது உங்களுக்கே தெரியும்…” ஹைச் ஆர் சொல்லி முடிக்கும் முன் குருமூர்த்தி இடைமறித்தார்.

“லாபம் குறைஞ்சிருக்குன்னு சொல்லுங்க. லாபம் டபுள் ஆனப்போ எங்க சம்பளம் டபுள் ஆகல. லாபம் பாதியானப்போ மட்டும் ஊழியர்கள் பாதியாகணுமா.. எங்க சார் போச்சு உங்க நன்றியுணர்வு ? “

“உங்க லெக்சரைக் கேக்க நேரமில்லை. இன்னிக்கு நீங்க ரிசைன் பண்ணினா உங்களுக்குக் கிடைக்க வேண்டிய செட்டில்மெண்ட் பணம் கிடைக்கும். இல்லேன்னா, டெர்மினேட் பண்ணிடுவோம். எதுவும் கிடைக்காது. . முடிவெடுக்க வேண்டியது நீங்க தான்”

“நன்றியுணர்வு மட்டுமில்ல, மனிதாபிமானமும் கூட காணாம போயிடுச்சுன்னு தெரியுது. “

“ஐம் சாரி… என்னோட வேலையை நான் பண்ணிட்டிருக்கேன். இவ்ளோ வருஷம் கம்பெனி உங்களுக்கு சம்பளம் தந்து பாதுகாத்ததுக்கு நன்றி சொல்லிட்டு கிளம்புங்க” ஹைச் ஆர் சற்றும் உணர்ச்சியற்ற வெறுப்பின் தொனியில் சொல்ல குருமூர்த்தி எழுந்தார். தனது அறைக்குச் சென்று ராஜினமா ஃபார்மை நிரப்பத் துவங்கினார். கலங்கிய அவரது விழிநீரில் இரண்டு பிள்ளைகளின் படிப்பும் எதிர்காலமும் ஈரமாகிக் கொண்டிருந்தது.

நன்றியுணர்வு என்பது இலாபம் கொடுக்கும் வரை பிந்தொடரும் நாயாக மாறிவிட்டது. அதன் முகங்களில் போலித்தனத்தின் எச்சில் வடிந்து கொண்டிருக்கிறது. நன்றியுணர்வு கெட்ட முதலாளித்துவ சமூகம், நன்றியுணர்வற்ற சமூகத்தையே கட்டமைத்துக் கொண்டிருக்கிறது.

கடந்த தலைமுறையின் வீதிகளில் நடந்து, இந்தத் தலைமுறையின் செயல்பாடுகளைக் கவனிப்பவர்களுக்கு இந்த நன்றியுணர்வின் வீழ்ச்சி மிகப்பெரிய அதிர்ச்சியாக இருக்கும். காரணம், நன்றியுணர்வு பழைய காலத்தில் அத்தனை வலுவாக இருந்தது. இன்றைக்கு கை தவறி விழுந்த மண்பானையாய் உடைந்து கிடக்கிறது.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகர்க்கு – என்பதே பழைய கால விதியாக இருந்தது. அது ஒவ்வொரு சின்னச் சின்ன செயல்பாடுகளிலும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் இருந்தது. உதாரணமாக, இயலாமையில் கை கொடுத்தவர்களை பயன் பெற்றவர்கள் கடைசி மூச்சு உள்ளவரை மறக்காமல் இருந்தார்கள்.

“அவன் ஒருகாலத்துல கைதூக்கி விடாம இருந்திருந்தா….” என மிகப் பெரிய உயரத்துக்குச் சென்றபின்பும் மக்கள் நன்றி பாராட்டினார்கள். இன்றைக்கு அது நீர்த்துப் போய்விட்டது என்பதில் சந்தேகமேயில்லை.
இப்போதெல்லாம் ஒரு செயலுக்கான நன்றியுணர்வு என்பது பூவில் விழுந்த பனித்துளியைப் போல சிறிது காலமே தங்கி நிற்கிறது. நாட்களில் வெயிலில் அது ஆவியாகிவிடுகிறது.

அப்பாவின் முன்னால் கைகட்டி நின்று, “ஐயா.. என்றழைத்த காலங்கள் உண்டு” அதெல்லாம் பழைய கதை. “அப்படி… என்னத்த பெருசா செஞ்சுட்டீங்க…” என பெற்றோரைப் பார்த்தே எதிர்த்துக் கேள்வி கேட்கும் தலைமுறை சகஜமாகிவிட்டது. நன்றியுணர்வு குடும்பங்களிலேயே ஆவியாகிக் கொண்டிருக்கிறது.

நன்றியுணர்வுக்கு அடிப்படையான தேவை, நாம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம் எனும் உணர்வு தான். இந்த இயற்கையினால், இந்த பிரபஞ்சத்தினால், இந்தப் பிரபஞ்சத்தின் படைப்பாளியால் நாம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம் எனும் உணர்வு இருந்தால் நமக்கு நன்றியுணர்வு ஆழியாய் பெருகும் என்பதில் சந்தேகமில்லை.

இயேசுவின் வாழ்க்கையில் ஒரு கதை உண்டு. ஒரு முறை பத்து தொழுநோயாளிகளுக்கு அவர் நலமளித்தார். தொழுநோயாளிகள் சமூகத்தில் விலக்கி வைக்கப்பட்ட காலகட்டம் அது. அவர்கள் ஊருக்குள் நுழைய முடியாது. எந்த நிகழ்விலும் கலந்து கொள்ள முடியாது. ஊர்ப்பக்கம் வரவேண்டுமெனில் “தீட்டு தீட்டு “ என கத்திக் கொண்டே வரவேண்டும். ஒரு நீண்ட குச்சியின் நுனியில் ஒரு குடுவையைக் கட்டி சுமந்து வருவார்கள். தண்ணீர் வேண்டுமெனில் ஏதேனும் வீட்டில் அருகே தொலைவில் நின்று கொண்டே அந்தக் குச்சியை நீட்டுவார்கள். வீட்டிலுள்ளவர்கள் அதை தப்பித் தவறியும் தொட்டு விடாத அதீத கவனத்துடன், அதற்கான பழைய பாத்திரத்தில் தண்ணீர் மொண்டு அதில் ஊற்றுவார்கள்.

அத்தகைய சமூக இடைவெளி அன்று நிலவியது. இயேசு அந்த சூழலில் தொலைவிலிருந்து கதறிய பத்து தொழுநோயாளிகளுக்கு நலமளித்தார். நலமடைந்ததை அறிந்த அந்தப் பத்து பேரில் ஒரே ஒருவர் மட்டும் இயேசுவைத் தேடி வந்து நன்றி சொல்லி தாழ்பணிந்தார். இயேசு கேட்டார், “என்னாச்சு பத்து பேருக்கும் சுகம் கிடைக்கலையா ? மற்ற ஒன்பது பேர் எங்கே ?”. பெற்றதற்கு நன்றி சொல்பவர்கள் இறைவனின் பிரியத்துக்குரியவர்களாகிறார்கள். காரணம், நன்றியுடையவர்களாய் இருப்பவர்கள், தாங்கள் கடவுளிடமிருந்து பெற்றிருக்கிறோம் எனும் உணர்வைக் கொண்டிருக்கிறார்கள்.

அதனால் தான் உண்மையான ஆன்மீகவாதிகள், தங்களுடைய ஒவ்வொரு நாளுக்காகவும், ஒவ்வொரு நிமிடத்திற்காகவும், ஒவ்வொரு செயலுக்காகவும், ஒவ்வொரு உணவுக்காகவும், ஒவ்வொரு சின்னச் சின்ன நிகழ்வுக்காகவும் கூட கடவுளுக்கு நன்றி செலுத்துவார்கள். காரணம் எல்லாமே கடவுளின் அருள் எனும் புரிதல் தான்.

எல்லாம் தன்னால் நிகழ்கின்றன எனும் மனநிலையும். எல்லாம் தனக்கே கிடைக்கவேண்டும் எனும் சுயநலமும் உள்ளவர்கள் எக்காலத்திலும் நன்றி உணர்வு உடையவர்களாய் வாழவே முடியாது.

மகிழ்ச்சியாய் இருக்கும் போது நன்றி சொல்வது சாதாரண விஷயம். நன்றி சொல்வதால் மகிழ்ச்சியாய் இருப்பதே உயர்ந்த நிலை. உண்மையில் நமக்கு கிடைக்கின்ற பொருட்களை விட அதிகமாய் கிடைக்காத பொருளுக்கு நன்றி சொல்பவர்களாக இருக்க வேண்டும். அதனால் தான் நண்பனுக்கு மட்டுமல்ல, எதிரிக்கும் நன்றி சொல் என்பார்கள். நமது வாழ்க்கையை கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்.

நன்றியுணர்வை வெளிப்படுத்தும் போது நமது மனம் இலேசாகிறது. ஒரு மரம் தனது கனிகளை வேர்களுக்குள்ளே ஒளித்து வைத்திருந்தால் என்ன பயன். அதை பிறருக்குத் தெரியும்படி கிளைகளில் பதித்து வைக்கும்போது தானே பயனுடையதாகிறது. அப்படித் தான் நன்றியுணர்வும், வார்த்தைகளாலும் செயல்களாலும் வெளிப்படுத்தப்பட வேண்டும். வெளிப்படாத நீரூற்றும், வெளிப்படுத்தப்படாத நன்றியுணர்வும் பிறருக்குப் பயனற்றுப் போகும்.

நம்மைச் சுற்றிப் பார்ப்போம். நமது வாழ்க்கையின் ஒவ்வொரு நாளிலும் எத்தனையோ பேர் நமக்கு உதவி செய்கிறார்கள். அவர்களுக்கு நன்றி சொல்கிறோமா ? நமக்கு ஒரு காபி போட்டுத் தரும் வேலைக்கார அம்மா. நம்மை ஒரு இடத்துக்கு அழைத்துச் செல்லும் டிரைவர் அண்ணா, நமக்கு பொருட்களை எடுத்துத் தரும் ஒரு விற்பனைப் பிரதிநிதி, நம்ம தெருவில் குப்பையை அள்ளும் ஒரு கார்ப்பரேஷன் பணியாளர். இப்படி நாம் நன்றி சொல்ல வேண்டிய நபர்கள் எத்தனை எத்தனையோ.

புன்னைகை ஒரு தொற்று வியாதி என்பார்கள். ஒருவருக்குக் கொடுக்க, அதை அவர் பெற்றுக் கொண்டு அடுத்தவருக்குக் கொடுக்க, இப்படி கொரோனா போல பற்றிப் படரும் ஒரு விஷயம் தான் புன்னகை. நன்றியும் அது போல தான். நாம் நன்றியைச் சொல்லச் சொல்ல அது அடுத்தடுத்த நபர்களுக்கு சென்று கொண்டே இருக்கும். நன்றி சொல்தல் ஒருவித நேர் சிந்தனையை நமக்குள் ஊட்டும். வாழ்க்கையில் எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கிறது என நமக்கே ஒரு புத்துணர்ச்சியை அது தரும்.

நன்றியுணர்வோடு இருப்பவர்களுக்கு நோய் குறைவாக இருக்கும், ஆரோக்கியம் வலிமையாக இருக்கும் என்பது மருத்துவக் கணக்கு. நன்றியுணர்வு உடையவர்கள் மன அழுத்தம் இல்லாமல் இருப்பார்கள் என்பது உளவியல் கணக்கு. நன்றியுணர்வு வெறும் உணர்வல்ல, நம் உடலோடும் மனதோடும் பின்னிப் பிணைந்தது என்பதை இதன் மூலம் புரிது கொள்ளலாம். நம்முடைய ஆனந்தத்திற்கு இது அடிப்படையாய் மாறிவிடுகிறது.

நன்றியுணர்வு நட்பைச் சம்பாதித்துத் தரும். இருக்கின்ற உறவுகளை வலுவாகும். வாழ்க்கை என்பது எதையெல்லாம் சேர்க்கிறோம் என்பதல்ல, உறவுகளோடு சேர்கிறோம் என்பதில் தான் அமைகிறது. மக்களோடு இணைந்து வாழ்கின்ற மிகப்பெரிய வலிமையை நன்றியுணர்வு தருகிறது.

செஞ்சோற்றுக் கடனுக்காக வாழ்ந்த கர்ணனின் கதை முதல், நமது சமூக வீதிகளில் உப்பிட்டவரை உள்ளளவும் நினைக்கின்ற கதைகள் வரை நமக்குச் சொல்வதெல்லாம் நன்றியுடையவர்களாய் இருக்க வேண்டும் என்பதே. நன்றியுணர்வு நலிந்து போகிறதே என அழுவதல்ல, அதை வலுப்படுத்த எழுவதே இன்றைய தேவை. அதை நம்மிடமிருந்து, நம்முடைய குடும்பத்திலிருந்து துவங்குவோம்.

இந்தக் கட்டுரையைப் பிரசுரித்த பேரன்புக்குரிய என்னுயிர்த் தந்தைக்கும், பொறுமையுடன் வாசித்த உங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி கூறி நன்றிப் பயணத்தை நான் தொடங்கி வைக்கிறேன். தொடர்வோம்.

1,535 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *