இலக்கியத்தில் இவர்கள் -02
குரு தட்சணை
-கௌசி
நாம் குரு தட்சணையாக நாம் விரும்புவதை ஆசிரியர்களுக்குக் கொடுப்பது வழக்கம். பரதநாட்டிய அரங்கேற்றம், சங்கீத அரங்கேற்றம் நடக்கின்ற போது ஆசிரியர்களுக்கு மாணவர்கள் தாம் கற்ற வித்தையை மதித்து கற்றுத் தந்த குருவுக்கு குரு தட்சணை கொடுத்து மகிழ்ச்சி அடைவார்கள். இவ்வளவு தொகை குருதட்சணையாக எனக்குக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுப்பெறும் ஆசிரியர்களும் இருக்கின்றார்கள். ஆசிரியர் கேட்காமலே மாணவர்கள் விரும்பிக் கொடுக்கும் தொகையைக் குருதட்சணையாகப் பெற்றுக் கொள்ளும் ஆசிரியர்களும் இருக்கின்றார்கள். குருதட்சணை கொடுப்பதற்கும் பெற்றுக்கொள்வதற்கும் மனம் என்பது முதல் இடத்தில் வந்து அமர்ந்து கொள்ளுகின்றது. இந்த மனம் இணக்கம் ஏற்படுவதற்கு கற்பித்தல் முறை முன்னிலையில் நிற்கின்றது. இக்கருத்தை மனதில் நிறுத்தி இலக்கியத்திலே ஒரு குருதட்சணை பற்றி நாம் பார்ப்போம்.
மகத நாட்டைச் சேர்ந்த ஹிரண்யதனு என்னும் மன்னனின் மகனே ஏகலைவன். வேட்டுவ குலத்தைச் சேர்ந்திருந்தாலும்; ஒடுக்கப்பட்ட நிஷாத மக்களுக்கு இளவரசன் ஆவான்;;. இந்த மகதநாடு அஸ்தினாபுரத்திற்கு அருகே அமைந்து இருந்தமையால் அர்ச்சுனன், துரியோதனன் ஆகியோர் துரோணாச்சாரியாரிடம் வில் வில்வித்தை பயில்வதைக் காண்கின்றான். அவர் கற்பிக்கும் முறையில் ஆசை கொள்கின்றான். அவரிடம் எப்படியாவது சீடனாக சேர்ந்து வில்வித்தை பயில வேண்டும் என்று ஆசை கொள்ளுகின்றான். இங்கு கற்பித்தலின் கவர்ச்சியை அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது. கற்பித்தல் என்பது ஒரு கலை. பல பட்டங்களைப் பெற்று இருப்பவர்களுக்குக் கூட கற்பிக்கும் முறை என்பது தெரியாமல் இருக்கும். அக்கலை தெரிந்த ஆசிரியர்களே மாணவர்களின் மனதில் இடம்பிடிக்கின்றார்கள். அந்த ஆசிரியர்களை மேதாவிகளாகவே மாணவர்கள் கருதுகின்றார்கள். இதை மனதில் பதித்து ஏகலைவனையும் துரோணரையும் அணுகுவோம்.
துரோணரிடம் தனக்கு வில்வித்தை கற்றுத் தரும்படி ஏகலைவன் கேட்கின்றான். ஒரு வேட்டுவ குலத்தில் பிறந்தவனுக்கு வில்வித்தை கற்றுத் தர முடியாது என துரோணர் மறுக்கின்றார். இதையிட்டு ஏகலைவன் கோபம் கொள்ளாது, துரோணரைச் சிலையாக முன்னிறுத்தி அவரைத் தனது குருவாகக் கொண்டு வில்வித்தை கற்கின்றான். எதுவானாலும் ஒரு வேடுவ குலத்தில் பிறந்த ஒருவனுக்கு வில்வித்தை ஒன்றும் கடினமான காரியமல்ல. ஒரு கற்கின்ற மாணவனுக்கு ஆசிரியர் ஒன்றும் முக்கியமல்ல. ஒரு வழிகாட்டி மாத்திரமே ஆகும். ஆனால், அவனின் நம்பிக்கை அந்த ஆசிரியர். அந்த நம்பிக்கையே ஏகலைவனுக்கு துரோணாச்சாரியாராக அமைகின்றது.
ஒரு அமாவாசையிலே ஒரு நாய் குரைக்கும் சத்தம் தன்னுடைய நித்திரையை குலைக்கும் போது வில்வித்தையிலே சிறந்த வீரனான ஏகலைவன், அந்த நாயின் வாயைக் கட்டுவதற்காக ஒலி வந்த திசையை நோக்கி 7 அம்புகளைப் பாய்ச்சுகின்றான். ஒலி வந்த இடமான நாயினுடைய வாயினுள் அத்தனை அம்புகளும் சென்று வாயைக் கட்டிப் போடுகின்றது. என்னைத் தவிர வேறு யாரும் இக்கலையை அறிந்திருக்க முடியாது என்னும் எண்ணப் போக்கில் இருந்த அர்ச்சுனன் இந்த நாயைக் காண்கின்றான். இதனை யார் செய்திருக்க முடியும் என்று பொறாமை கொள்ளுகின்றான். துரோணாச்சாரியாரிடம் கேட்கின்றான். காட்டிலே அவ்வித்தையைச் செய்தவனை துரோணரும் அர்ச்சுனனும் தேடிப் போகின்றனர். ஏகலைவனைக் காணுகின்றனர். இதனைக் கற்பித்த குரு யார் என்று ஏகலைவனை வினாவ அவனும் துரோணாச்சாரின் சிலையைக் காட்டி அவரே தன்னுடைய குரு என்கின்றான். துரோணாச்சாரியாரும் குருதட்சணையாக ஏகலைவனுடைய வலது கை கட்டைவிரலைக் கேட்கின்றார். மறுப்புத் தெரிவிக்காத ஏகலைவனும் தன்னுடைய கட்டைவிரலை அவருக்குக் குருதட்சணையாகக் கொடுக்கின்றான். இங்கு குருதட்சணை கொடுப்பது தருமம் என்று ஏகலைவன் கருதுகின்றான். கட்டைவிரலைக் கேட்பது சரியா என்னும் கேள்வி காலம் காலமாகக் கேட்கப்படும் கேள்வி. குருதட்சணை கேட்கும் போது யாரிடம் எது கேட்க வேண்டும் என்னும் அடிப்படை அறிவு ஆசிரியர்களுக்கு இருக்க வேண்டியது அவசியம். இதுவே மறுவாசிப்பில் அலசப்பட வேண்டிய அறிவாக இருக்கின்றது.
துரோணாச்சாரியார் ஏகலைவனுக்கு வில்வித்தை கற்பிக்க மறுப்பதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆசிரிய மமதையாக இருக்கலாம். இல்லையெனில் அரசகுமாரர்கள் கற்கும் இடத்தில் ஒரு வேடுவக் குலத்து மனிதன் கற்பது தராதரக் குறைவாக மற்றைய அரசகுமாரார்கள் நினைத்து மறுப்புத் தெரிவிப்பார்கள் என்ற காரணமாகவும் இருக்கலாம். ஒரு வேடுவன் இவ்வாறு திறமையுடன் இருந்தால் சட்டதிட்டங்களை மீறும் வழியில் தன்னுடைய திறமையைப் பிரயோகிப்பான் என்ற எண்ணப் போக்கும் காரணமாக இருக்கலாம். இதைவிட வேடுவ குலத்தில் வளருகின்ற ஒருவனுக்கு இரத்தத்திலேயே வில்வித்தை ஊறியிருக்கும். இக்கலையை ஏகலைவன் ஏன் துரோணாச்சாரியாரின் அவமானச் சொல்லைத் தாங்கி அவரை குருவாகக் கொள்ள வேண்டும் என்பதும் கேள்விக்குறியே! கற்கும் வல்லமையுள்ளவன் ஒரு ஆசிரியரையே தஞ்சம் அடைந்து கிடக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், நாம் கற்கின்ற கல்வி எங்கிருந்து கிடைக்கப்பெற்றது என்பதைப் பொறுத்தே அதற்குப் பெருமை அமைகின்றது. இது எக்காலத்திற்கும் உரிய பொதுவிதியாகப் படுகின்றது. யுஉhநn பல்கலைக்கழகத்தில் டீயரiபெநnநைரச கல்வி கற்பவர்களுக்கு ஒரு மதிப்பு இருப்பதை நாம் அறிவோம். அதுபோலவே துரோணரின் மாணவன் என்பதில் ஏகலைவனுக்குப் பெருமை இருந்தது.
ஏகலைவனும் வேடனாகப் பிறந்தது என் குற்றமில்லை என்று எதிர்த்துப் பேசியிருக்கலாம். குருதட்சணையாக என்னுடைய விரலைத் தரமுடியாது என்று சொல்லியிருக்கலாம். ஆனால், ஏகலைவன் தருமத்தை மதிக்கும் ஒரு மாணவனாக இருந்தான். அதுபோலவே மாணவர்கள் தருமத்தை மதித்து குருதட்சணை வழங்குகின்றார்கள்.
2,132 total views, 3 views today