இலங்கை அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவமும் அதற்கான சவால்களும்.
பெண்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கும் அவர்களை நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தவும் பெண்களின் அரசியல் பிரவேசம் இன்றியமையாததாக இருப்பினும், பெண்கள் இது குறித்து எதிர் நோக்கும் சவால்களினால் ஆளுமையுள்ள பெண்கள் கூட அரசியலில் ஆர்வம் காட்டத் தயங்குகிறார்கள். இலங்கையின் வரலாற்றில் பல திறமையும் ஆளுமையும் உள்ள பெண்கள் அரசியலில் இருந்திருக்கிறார்கள், இருந்து வருகிறார்கள்.
ஆண்கள் போலல்லாது ஒரு பெண்ணானவள் பொது வெளிக்கு சேவை செய்ய வருவதற்கு முன்னரும் சரி அல்லதுசேவை செய்யும் போதும் சரி, சமையல், குழந்தைகள் பராமரிப்பு,பொருளாதாரத் தேவைகள் எனப் பலவகையான குடும்பச் சுமைகளை சுமந்தவாறே தான் வர வேண்டியுள்ளது. அதிகமான பெண்களுக்கு இது ஒரு மிகப் பெரிய சவாலாகவேஅமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அநேகமான கட்சிகளில் ஒரு பெண் வேட்பாளர் தனக்காக சேர்க்கும் வாக்குகளை தனது கட்சிக்கு வளங்குவதற்காகவே பயன்படுத்தப்படுகிறார், அது மட்டுமல்ல ஒருவாறு அவர் அந்த கட்சியில் சேர்ந்து இயங்குகின்ற சந்தர்ப்பம் கிடைத்தாலும் அவர் தான் மக்களுக்கு செய்ய வேண்டும் என முயற்சிக்கின்ற ஒரு திட்டத்தை நிறைவேற்றுவதற்கான அதிகாரத்தை இழந்து விடுகிறார். அனேகமான திட்டங்கள் ஆண் கட்சி உறுப்பினர்களாலேயே தீர்மானிக்கப்பட்டு நிறைவேற்றப்படுகிறது. தமது குடும்ப அமைப்பிலிருந்து பல சவால்களை முறியடித்து, பல சிக்கல்களுக்கு முகம் கொடுத்து பொது வெளிக்கு வந்து, அதன் பின்னர் அரசியலில் காலூன்றும் போது, பெண்கள் தமது குரலை இங்கு இழந்து விடுகிறார்கள். பெண்கள் வெறும் பொம்மைகளாகவே இருக்க வேண்டிய நிர்பந்தம் பல கட்சிகளிலும் ஏற்படுத்தப்படுகின்றது.
அரசியலுக்கு வரும் பெண்களைப் பற்றிய பாலியல் ரீதியான அவதூறுகளைப் பரப்பல்!
அரசியலுக்கு வரும் பெண்களைப் பற்றிய பாலியல் ரீதியான அவதூறுகளைப் பரப்புவதும், அதன் மூலம் அவர்களை அரசியலுக்கு வராமல் தடுப்பதும் தான் எமது சமூகத்தில் பெரும்பான்மையான அரசியல் சார்ந்து நிற்கும் ஆண்களின் தந்திரங்களில் பிரதானமானதாக இருக்கிறது. எமது சமூகம் என்று சொல்கின்ற போது முக்கியமாக ஆண் ஆதிக்கங்களும் ஊடகங்கங்களும் சேர்ந்தே இப்படியான இழி செயலைச் செய்வது என்பது கவலைக்குரியது.
அரசியலுக்கு வரும் பெண்களின் குரல் வளையை நசுக்கப் பார்ப்பது அநாகரீகமானது மட்டுமல்ல பெண்களுக்கான அரசியல் உரிமைகளை மழுங்கடிக்கப் பார்க்கும் சட்ட விரோத செயலுமாகும்.
அரசியல் ரீதியான கருத்துக்களை அல்லது அவர்கள் கட்சி சார்ந்த தேர்தல் விஞ்ஞாபனங்களை கிண்டல் பண்ணுவது. வேறு அப்பெண்களை தனிப்பட்ட ரீதியில், பாலியல் ரீதியான அவதூறுகளைப் பரப்பி அதன் மூலம் அவர்களை மன உளைச்சளுக்கு ஆளாக்கி, தனி நபர்தாக்குதல் நடத்துவது வேறு என்பது புரியாத ஒரு ஊடகம் கூட இருக்கிறது அதை மக்கள் ரசிக்கிறார்கள் என்பது ஒரு சமூகத்தை, அதன் விழுமியங்களை எவ்வளவு தூரம் ஆரோக்கியமானதாக மாற்றி முன்னெடுத்துச் செல்லும்?
தனது கட்சியின் கொள்கைகளுக்கெதிரான ஒரு சிந்தனை எழும் போது அதைத் தைரியமாக எதிர் கொள்ளும் பெண்கள் இல்லாமல் இருப்பது மாத்திரமல்ல, அப்படியான கேள்விகள் எழுப்பும் பட்சத்தில் அப்பெண்களும் தமது கட்சிலிருந்து விலக வேண்டுமென திரை மறைவிலிருந்து உள்கட்சியின் பயமுறுத்தல் அப்பெண்ணின் மீது விழுகிறது.
அனேகமாகப் பெண்களின் உரிமைகள் தொடர்பாக எந்தக் கட்சியிலும் தொடர்ச்சியான முற்போக்கான சிந்தனைகள் திட்டமிடப்படுவதில்லை. இப்படியான கட்சிகளில் இணைந்து கொள்ளும் பெண்களுக்கு கட்சிகளுக்குளேயே அவர்களுக்கான சம உரிமைகளோ ஜனநாயகமோ பேணப்படுவதில்லை. இவர்கள் குறித்து பாலியல் ரீதியான அவதூறுகள் வரும் போது கூட, அப்படி அவதூறு செய்தவர்களைத் தட்டிக் கேட்பதற்கும் யாருமில்லாமல் போவதும் ஒரு பெரிய சவாலே.
கட்சிகளுக்குள் ஆண் ஆதிக்கம், சம உரிமைகளும், ஜனநாயகமும் பேணப்படுவதில்லை போன்ற உள்கட்சி சிக்கல்களால் அதிகமான அரசியல் கட்சிகள் தமக்குள்ளேயே பிளவு பட்டிருப்பதால்,பல சுமைகளைத் தாண்டி வரும் பெண் வேட்பாளர்களுக்கு இது எந்த விதத்தில் நன்மை பயக்கும் என்பது கேள்விக்குறியே. பெண்கள் தமது கருத்துக்களை முன் வைக்க முடியாமல் இருப்பதுடன் தான் சேர்ந்த கட்சிகளில் உள்ள ஆண்கள் முன் வைக்கின்ற கருத்துக்களை, தமது விருப்பு இல்லா விட்டாலும் கூட அமைதியாகவே ஆதரிக்கவும் வேண்டி வருகிறது.
தேர்தல் காலத்துக்கு மாத்திரமல்லாமல் பெண்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான தொடர்ச்சியான பயிற்சிகளும் அது குறித்த சிந்தனைகளும் வளர்த்தெடுக்கப்பட்ட வேண்டும்.
பெண்களுக்கான ஒரு தனியான கட்சி ஒன்றே இப்படியான ஆண் ஆதிக்கம் நிறைந்த ஏனைய கட்சிகளிலிருந்துவிடுபட்டு பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுக்க உதவும் என்ற கருத்தையும் நாம் சிந்தித்துப் பார்ப்பது நல்லது.
— பூங்கோதை (கலா ஸ்ரீரஞ்சன்- இங்கிலாந்து )
1,613 total views, 3 views today