யேர்மனியில் ‘திரையும் உரையும் 2020’
கடந்த 12.09.2020 சனிக்கிழமை அன்று ‘திரையும் உரையும் 2020’ என்னும் நிகழ்வு யேர்மனியின் டோட்முண்ட் நகரில் தமிழர் அரங்கத்தில் நடைபெற்றது. சுஜித்ஜீ இயக்கிய ‘கடைசி தரிப்பிடம்’ என்கின்ற முழுநீளப் படத்துடன் வி.சபேசனின் இயக்கத்தில் வெளியான ‘துணை’ குறும்படம் மற்றும் சுவிஸ் நாட்டில் தயாரிக்கப்பட்ட “ஊழடழச ளநியசயவழைn” என்னும் குறும்படமும் திரையிடப்பட்டன.
இவ்வாறு படங்களின் திரையிடலும் சினிமா குறித்த உரையாடல்களுமாக நிகழ்வு சிறப்பாக நடந்தது. இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், கதாசிரியர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், எழுத்தாளர்கள், சினிமா ஆர்வலர்கள் என்று பல்வேறு தரப்பட்டவர்கள் இந் நிகழ்வில் கலந்து சிறப்பித்தார்கள். நெதர்லாந்தில் இருந்து குணா கவியழகன், இங்கிலாந்தில் இருந்து பா. நடேசன் மற்றும் சேனன், யேர்மனியில் இருந்து வெற்றிமணி சிவகுமாரன், நெடுந்தீவு முகிலன் ஆகியோர் வெவ்வேறு தலைப்புகளில் உரையாற்றினார்கள்.
சபையோர்களும் மிகக் காத்திரமான கருத்துகளை வழங்கினார். திரையிடப்பட்ட படங்கள் குறித்த தமது விமர்சனங்களையும் முன்வைத்தார்கள். ‘கடைசி தரிப்படம்’ நீண்டு விட்டது என்பது பலருடைய கருத்தாக இருந்தது.
சினிமாவை காட்சி ஆக்குதல், காட்சிகள் வெளிப்படுத்துகின்ற குறியீடுகள், கமெராக் கோணங்கள் போன்றவைகள் குறித்து வெற்றிமணி சிவகுமாரன் உரையாற்றினார். பழைய படங்களில் நாம் கற்றுக் கொள்வதற்கு நிறைய விடயங்கள் உண்டு என்று அவர் குறிப்பிட்டார்.
நெடுந்தீவு முகிலன் இன்றைய தொழில்நுட்பங்களை நாம் எப்படிப் பயன்படுத்தலாம் என்பது பற்றி பேசினார். சினிமாக் கலை திரையரங்குகளை விட்டு மெதுவாக வெளியேறிக் கொண்டிருப்பதாகவும், இதைக் கவனித்து, அதற்கேற்ற வழிமுறைகளை நாம் உருவாக்க வேண்டும் என்று கூறினார்.
பா. நடேசன் ‘கடைசி தரிப்படம்’ பற்றி வந்த விமர்சனங்களுக்கு பதில் அளித்துப் பேசினார். ‘துணை’ குறும்படத்தில் வசனங்கள் அதிகரித்து விட்டன என்று குறிப்பிட்டார். இன்றைய காலத்தில் விமர்சன வடிவம் மாறி உள்ளது பற்றியும் பேசினார். விமர்சனங்களை படைப்பாளிகள் ஆரோக்கியமான முறையில் எதிர்கொள்வது இல்லை என்கின்ற தனது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார். தமிழ்நாட்டு சினிமா இயக்குனர்களால் பேச முடியாத கதைகளையும், களங்களையும் காட்சிப்படுத்துகின்ற வல்லமை ஈழத்து சினிமா இயக்குனர்களுக்கு உண்டு என்பதை சுட்டிக்காட்டினார்.
குணா கவியழகன் ‘துணை’ குறும்படம் பற்றி அதிகம் பேசினார். ‘துணை’ குறும்படம் பேசுகின்ற பொருளை இன்றும் பேச வேண்டி இருப்பது பற்றிய வேதனை வெளிப்படுத்தினார். ஆனால் அடுத்த தலைமுறை இப்படி இருக்காது என்கின்ற நம்பிக்கையையும் அவர் தெரிவித்தார். ‘துணை’ குறும்படம் பார்வையாளர்களை நீண்ட நேரம் ஏய்க்கிறது என்றும், இப்படி கதை சொல்கின்ற முறையை தான் ஏற்பது இல்லை என்றார். சிறுகதை எழுதுகின்ற சிலர் இந்தப் பாணியை கடைப்பிடிப்பதாகவும், அதையும் தான் ஏற்றுக் கொள்வது இல்லை என்றும் குறிப்பிட்டார். கதை நகர வேண்டிய தன்மைகள் குறித்து அவர் உரையாற்றினார்.
பார்வையாளர்களின் கருத்துகள் இடம்பெற்றன. அவர்களிடம் இருந்து சினிமா குறித்த ஆழமான கருத்துகள் வெளிப்பட்டன. யேர்மனியில் சினிமா குறித்து ஆழமான உரையாடலை ஆரம்பித்து வைத்திருக்கிறோம். இவை எதிர்காலத்தில் இன்னும் விரிவடைந்து பயன் தரும் என்ற நம்பிக்கையை தனக்கு அளிப்பதாக வி.சபேசன் அவர்கள் குறிப்பிட்டார்கள். இந்த நம்பிக்கை பலருக்கும் ஏற்றுபடும் வண்ணம் நிகழ்வுகள் அமைந்திருந்தன. ஒரு பிரமாண்டமான ஆரோக்கியமான ஒரு நிகழ்வுக்கான எண்ணம், பார்ப்பவர் மனங்களில் தோன்றியிருக்கும். அப்படித் தோன்றி இருந்தால் அதுவே வெற்றியின் முதல் படியாக அமையும். அப்படி அமைந்தது என்றே கொள்ளலாம்.
அடுத்து ஆண்டு ‘திரையும் உரையும் 2021’ நிகழ்வை ஐரோப்பியரீதியிலான திரைப்பட விழாவாக நடத்த வேண்டும் என்றும் பலர் கேட்டுக் கொண்டார்கள்.
1,471 total views, 3 views today