அச்சமில்லை அச்சமில்லை
பாலசந்தரின் திரைப்பட வாழ்க்கையின் மிக முக்கியமான திரைப்படமாக அமைந்த படங்களில் அச்சமில்லை அச்சமில்லை திரைப்படத்துக்கு முக்கியமான பங்கு உண்டு. சரிதா, ராஜேஷ், டெல்லி கணேஷ் ஆகியோர் நடித்திருந்தனர். நல்ல குணாதிசயங்களுக்காக நாயகி கதாநாயகனை மணந்து கொள்கிறாள். வாழ்க்கை இனிமையாகப் போகிறது. அந்த இனிமையான வாழ்க்கையின் திருப்புமுனையாக கதாநாயகன் அரசியலின் சேர்கிறான்.
அரசியல் அவனை மாற்றுகிறது. அவன் கொஞ்சம் கொஞ்சமாக கெட்டவனாய் மாறுகிறான். வேறு பெண்ணுடன் தொடர்பையும் உருவாக்கிக் கொள்கிறான்.
ஆவாரம் பூவு, ஓடுகிற தண்ணியில போன்ற சூப்பர் ஹிட் பாடல்கள் திரைப்படத்தை இன்னும் பிரபலமாக்கியன. பாடல்களை வைரமுத்து, ஈரோடு தமிழன்பன் ஆகியோர் எழுதியிருந்தனர். எம்.எஸ்.விஸ்வநாதனைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்த பாலசந்தர் வி.எஸ்.நரசிம்மனை இந்தப் படத்தில் பயன்படுத்தினார். கண்ணதாசனைத் தாண்டி வைரமுத்துவை பயன்படுத்தினார். புதியவர்களின் வருகை சில புதுமைகளையும் உருவாக்கியது. இந்தப் படம் மீண்டும் ஒரு தேசிய விருதை பாலசந்தருக்குப் பெற்றுத் தந்தது.
சிந்து பைரவி.
சிந்து பைரதி, தமிழ்த் திரையுலகின் சில புதிய அத்யாயங்களைத் துவக்கி வைத்தது எனலாம். சிந்து பைரவியின் வெற்றி வரலாறாய் வாழ்கிறது. ஒரு படம் கலைப்படைப்பாகவும், வணிக ரீதியான வெற்றிப்படமாகவும் இருப்பது சிரமம். ஆனால் பாலசந்தரின் படங்கள் வெகு சகஜமாக இரண்டு நிலைகளிலும் வெற்றியடைந்திருக்கின்றன. அதன் இன்னொரு உதாரணம் தான் சிந்து பைரவி !
இசைஞானி இளையராஜாவும், கே.பாலசந்தரும் இணைந்த முதல் திரைப்படம் சிந்து பைரவி. படத்துக்கு இசையமைக்க அழைத்தபோது “என்ன இப்போ தான் என்னைக் கூப்பிடணும்ன்னு தோணுச்சா ?” என இளையராஜா கே.பியிடம் உரிமையுடன் கோபித்துக் கொண்டாராம்.
பாலசந்தர் புன்னகைத்துக் கொண்டே, “இந்த படத்துக்காக நீங்கள் தேசிய விருது வாங்குவீங்க” என்றார். அவருடைய தீர்க்கத் தரிசனம் நடந்தது! இளையராஜா, வைரமுத்து, கே.ஜே.ஏசுதாஸ், சித்ரா இவர்களின் கூட்டணியில் திரைப்படத்தின் பாடல்களெல்லாம் காலத்தால் அழியாதவையாக நிலைபெற்றுவிட்டன.
சித்ராவுக்கு சிறந்த பாடகிக்கான முதல் தேசிய விருது “பாடறியேன் படிப்பறியேன்” எனும் சிந்துபைரவிப் பாடலுக்காய் தான் கிடைத்தது.
இசைஞானி இளையராஜாவுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது கிடைத்தது. தமிழ்த் திரைப்படங்களின் மூலம் இசைஞானிக்குக் கிடைத்த முதல் தேசிய விருது இது தான். வழக்கம்போலவே இந்தப் படமும் சில முக்கியமான கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டு இயங்கும் திரைப்படம். கர்நாடக இசைப் பாடலில் உச்சத்தில் இருக்கும் கதாநாயகன். கணவனே கண்கண்ட தெய்வம் என வாழ்கின்ற இசை அறிவு இல்லாத மனைவி. இசை அறிவினால் கதாநாயகனை வசீகரித்த ஒரு பெண். இந்த மூன்று கதாபாத்திரங்களையும் சுற்றி தெளிந்த நீரோடை போல, வசீகரமான, உணர்ச்சிகரமான ஒரு காவியத்தை உருவாக்கியிருந்தார் கே.பாலசந்தர். சிவக்குமார், சுலக்ஷனா, சுகாசினி ஆகிய மூன்று பேரும் இந்தக் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருந்தார்கள்.
நான் ஒரு சிந்து, பாடறியேன், கலைவாணியே, பூமாலை வாங்கி வந்தேன், மோகம் என்னும், கலைவாணியே, தண்ணி தொட்டி தேடி வந்த என இந்தப் படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களுமே மிகவும் பிரபலமாகின. இந்தப் படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் படங்களின் வரிசையில் இடம்பெற்றது.
சிந்து பைரவி இயக்கிக் கொண்டிருந்தபோது கே.பாலசந்தரின் தமிழ் ஆளுமையும் வெளிப்பட்டது. கவிப்பேரரசு ஒரு பாடலில் “தங்கமே நீயே தமிழ்ப் பாட்டுப் பாடு” என எழுதியிருந்தார். கே.பி, கவிஞரிடம், இதைக் கொஞ்சம் மாற்றி “தங்கமே நீயே தமிழ்ப் பாட்டும் பாடு” என ஒரு சின்ன எழுத்தை மாற்றி பொருளை மொத்தமாய் மாற்றினார். அது படத்தின் காட்சிக்கு மிகவும் பொருத்தமாய் அமைந்தது. படம் வெளியாகி 19 ஆண்டுகளுக்குப் பிறகு இதன் இரண்டாம் பாகத்தை தொலைக்காட்சியில் சகானா எனும் பெயரில் தயாரித்தார் கே.பாலசந்தர்.
அதே 1985ம் ஆண்டு கல்யாண அகதிகள் என்னும் திரைப்படத்தைப் பாலசந்தர் இயக்கினார். திருமணத்தில் கணவனால் இன்னல்களுக்கு ஆளான ஆறு பெண்கள் தனியே வாழ்க்கையை எதிர்கொள்வது தான் படத்தின் மையம். சரிதா, சீமா, விஜயா, குயிலி, வனிதா, லலிதா மணி, டெல்லி கணேஷ், ரவீந்திரன், சார்லி, பூர்ணம் விஸ்வநாதன் மற்றும் பலர் நடித்திருந்தார்கள்.
இந்தப் படத்தைப் பற்றி மறக்காமல் குறிப்பிட வேண்டிய ஒரு விஷயம், இந்தப் படத்தில் தான் நாசர் அறிமுகமானார். மிகத் திறமையான கலைஞராக நாசர் திரையுலகில் வலம் வந்து கொண்டிருப்பது பாலசந்தரின் அறிமுகத்தினால் தான். 1985ம் ஆண்டு பாடறியேன் படிப்பறியேன் தமிழ்த் திரையுலகில் ரீங்காரமிட்டது என்றால் அடுத்த ஆண்டு “என்ன சத்தம் இந்த நேரம்” பாடல் இசைரசிகர்களின் தியானமானது. புன்னகை மன்னன் வெளியானான் !
2,223 total views, 3 views today