வதந்திகள் வராமல் இருக்க திறந்த மடல் இது.!

பெரு மன்னர்கள் காலடிபட்ட அரண்மனை!
வெற்றிமணி; இல்லத்தின் தனிச்சிறப்பு!
Brinker Höhe 13 Lüdenscheid.Germany

எத்தனை சதுர மீற்றர்,எத்தனை அறைகள்,சுவர் செங்கல்லா? வெண்கல்லா? எத்தனை குளியலறை? இப்படி எத்தனை எத்தனை என்று கேட்டாலும், அத்தனையும் இருந்தும் அதற்கும் மேலாக அரணாக, தமிழ் அரண்மனையாக, இந்த வீடு இருக்கிறது என்றால். அதற்கு காரணம் இந்த வீட்டில் காலடி பட்டவர்களது பெருமையே ஆகம்.

ஓவ்வொரு மனிருக்கும் தாம் வாழ்ந்த வீடு கோவில் போன்றதே. வீட்டைக் கோவிலாக்கியவர்கள் மறக்கமுடியாதவர்கள் அல்லவா? ஓவ்வொரு நற்செயலும் வீட்டில் இருந்தே புறப்படுகிறது என்பது சான்றோர் வாக்கு. அதற்கு விதிவிலக்கு அல்ல நான் வாழ்ந்த வீடு. 21 வருடங்கள் வந்தவர்கள் வாழ்தியவர்கள் தமிழுக்கு விருந்தானவர்கள் கலைக்கு கலசமானவர்கள், என்று பல வர்ணங்கள் எண்ணங்களை அலங்கரிக்கின்றன.
வெற்றிமணி வெற்றிக்கொடி நாட்டிய வீடு. 290 வெற்றிமணிகளைப் பிரசவித்த பிரசுரித்த வீடு.25க்கு மேற்பட்ட புத்தகங்களையும் 30 மேற்பட்ட விழாக்களையும் கண்ட வீடு.

இந்த வீட்டுக்கு வந்தவர்கள் இன்றுபோல் சும்மா சூமில் (Zoom) வந்துபோனவர்கள் அல்ல! பெரியேர்களின் திருவடிகள் பதித்த புண்ணியத்தலம்.

தாயிற்சிறந்த ஒரு கோவிலும் இல்லை. ஆம் எனது அன்னையும் வெற்றிமணி ஸ்தாபகர் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும் 2000 அண்டு வெற்றிமணி விழாவிற்கு இலங்கையில் இருந்து வருகைதந்து 6 மாதங்கள் தங்கிச்சென்ற இல்லம். எனது மாமன் மாமி எம்முடன் வசித்த இல்லம்.
இவர்களுடன் கலை இலக்கிய நண்பர்கள் கல்விமான்கள் என பலர் எம்முடன் தங்கி விழாக்களில் கலந்து ஒன்றாகக்கூடி மகிழ்ந்த இன்ப இல்லம்.

யேர்மனி கல்விக்கழகப்பொறுப்பாளர் இரா.நாகலிங்கம், (கனடா) மகாஜனாக்கல்லூரி அதிபர் பொ.கனகசபாபதி டாக்டர் கதிர்.துரைசிங்கம்.சங்;கீதபுஷணம் பொன்.சுந்தரலிங்கம்.(இலங்கை) பேராசிரியர்.சண்முகதாஸ்,மனோன்மணி சண்முகதாஸ், திருமதி வலன்ரீனா இளங்கோவன், ரூபவாகினி அறிவிப்பாளர் ரேலங்கி செல்வராஜா (இந்தியா)சீர்காழி. சிவசிதம்பரம்,(இங்கிலாந்து)நூலகவியலாளர் என்.செல்வராஜா,ஓவியர்.கே.கே.ராஜா,இராமநாதன் (இந்து சமயப்பேரவை லண்டன) ஓவியர்.சந்திரவதனி. தென்னிந்திய திரைப்படப்பாடகர்கள் பல்ராம்,மாதங்கி,டாக்டர்.ரோகினி-சதீஸ் இது மொத்த எண்ணிக்கையில் பத்தில் ஒன்று. மீதி வருங்காலத்தில் படங்களுடன் பகிர்வேன். யேர்மனியில் வாழும் பெரும்பாலனா வெற்றிமணி படைப்பளர்களுடன்; கலைவிருந்து படைத்த இல்லம்.
யேர்மனியல் தமிழர் வரலாற்றில் ஒரு பத்திரிகை எந்த இலத்திலும் இருந்து தொடர்ச்சியாக 25 வருடங்களுக் மேலாக வந்ததில்லை. அது மட்டுமா 30க்கு மேற்பட்ட விழாக்கள்.வெற்றிமணி வெள்ளிவிழா (15.09.2019) விற்கு மட்டுமே அதன்செலவில் 40 வீத வியாபார ஸ்தாபனங்களின் அனுசரனையுடன் நடைபெற்றது. அவர்களுக்கு இத்தருணத்தில் எனது நன்றி உரித்தாகட்டும். மீதி விழாக்கள் புத்தகவெளியீடுகள் அனைத்தும் செய்ய இடம் தந்த இல்லம் இது. நான் தொழில் புரிந்த முழளவயட நிறுவனத்தையும் மறக்கமுடியாது. எனது வருமானத்தில் நான்கில் ஒருபகுதி தமிழ்பணிக்காக செலவுசெய்த இல்லம் இது.

தற்போது சென்ற மாதம் 24ம் திகதியுடன் வீடனை விற்றுவிட்டுச் செல்கின்றேன். இனி வருடத்தில் நான்குமாதம் பிள்ளைகளுடனும் இங்கிலாந்திலும். (வெற்றிமணியால் 26 வருடங்கள் பிள்ளைகள் பேரப்பிள்ளைகளைப் பிரிந்து யேர்மனியில் இருந்திருக்கிறேன்) நான்குமாதம் இலங்கை, நான்கு மாதம் யேர்மனி என மூன்று தளங்களில் இருந்து வெற்றிமணி இன்னும் சிறப்பாக வெளிவரும். இதுவே எனது திட்டம். மீதி இயற்கையின் கைகளில். நான் எங்கு நின்றாலும் வெற்றிமணி பத்திரிகை அச்சில் உங்கள் கரம்வந்து சேரும்.

இவ்வளவு காலமும் வெற்றிமணி உங்களுக்கு ஆற்றிய பணிக்கு கைமாறாக நீங்கள் செய்வேண்டியது இதுதான். உங்களுக்கு கிடைக்கும் பிரதியை பிறருக்கும் பகிருதல்.கடைகளில் பத்திரிகை இருந்தால் அவற்றை ஒழுங்காக அடுக்கிவைத்தல். வெற்றிமணியின் வியாபார ஸ்தாபனங்களை ஆதரித்து துணைநிற்றல்.
இவற்றை ஏன் திறந்த மடலாக எழுதுகிறேன் என்றால் ஒன்றும் சொல்லாமல் வெற்றிமணி ஆசிரியர் ஓடிவிட்டார்.வெற்றிமணி இனிவராது என்று வதந்திகள் வராமல் இருப்பதற்காகவே.
இனிவரும் காலம் என்மீது நீங்கள் கொண்ட அன்பினை உணரும்காலமாக அமையும். உங்கள் அன்பு ஒருபொழுதும் பொய்க்காது பொழியும் என்ற நம்பிக்கையுடன் வெற்றிமணி தொடர்ந்து ஒலிக்கும்.இல்லம் எங்கும் ஒலிக்கட்டும் வெற்றிமணி
என்றும் அன்புடன். மு.க.சு.சிவகுமாரன்
பிரதம ஆசிரியர் வெற்றிமணி-சிவத்தமிழ்.(வட்சப் இலக்கம் 0163 199 2333)

1,368 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *