ஆமாசாமி
நானும் மருமகளும் ரயிலுக்காகக் காத்திருக்கின்றோம். இருவரும் நண்பர்களாக மனம்விட்டு பேசுவோம். வீடுவாங்குவதில் இருந்து நாய்க் குட்டிக்கு என்ன பெயர் வைப்பது வரை அலசுவோம்.
இப்போ ரயில் வந்தது ஏறிக்கொண்டோம்.
அட அரவிந்! உன்னைக்கண்டு எத்தனை நாள். சரி பறவாயில்லை மறக்காமல் மகளின் திரு மணத்திற்கு அழைப்பு அனுப்பியிருந்தாய். நேற்று கிடைத்ததில் இருந்து உன்னைப்பற்றித்தான் வீட்டில் பேச்சு. சரி நல்ல இடத்தில் மாப்பிள்ளை கிடைத்திருக்கிறார். நல்ல படிப்பு குணம். வேறு என்ன வேணும்! ஓன்று தெரியுமே உன்னடைய சம்மந்தி என்னுடன் ஒன்றாகப் படித்தவன். என்றேன்.
அரவிந் முகத்தில் எனக்கிருந்த மகிழ்ச்சியில்லை. நான் கவனிக்கவில்லை மருமகள் தான் கவனித்து கண்யாடைகாட்டினாள். (கொரோனாக் காலம். முகம் பார்த்து எதுவும் அறியமுடியாது. முகக்கவசம் மூடிக்கிடக்கிறது. எல்லாம் கண்பாசைதான்.) உடன் என்னை சுதாகரித்துக்கொண்டு என்னடா! அரவிந் ஒருமாதிரியாய் இருக்கிறாய், ஏதும் காதல் கீதல் பிரச்சினையா என்றேன்.
சீச்சீ அப்படி ஏதும் இல்லை. சீதனம் என்றான்.
அட வெளிநாட்டிலுமா! இந்தக் கண்;றாவி என்றேன். என்ன செய்வது ஒரு பெண் பிள்ளை தானே எனக்கு, கேக்கிறதைக் கொடுத்து கட்டி வைக்கின்றேன்.
எப்படி என்றாலும் இங்கு என்ன குறை, சீதனம் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. மனம் ஒத்துப்போனால் சீ! தனம் பாராமல் கட்டி வைக்கவேண்டியது பெற்றவர்களின் கடமை தானே என்றேன்.
அவனும் தலையாட்டி ஆமோதிக்க ரயில் வண்டி தரிப்பிடம் நின்றது. நானும் மருமகளும் அடுத்த வண்டிக்காக சுரங்கப்பாதையால் ஓடி மறுபக்கம் வரும் வண்டியில் ஏறினோம்.
அட இவன் சந்தானம்! இப்பதானடா உன்னைப் பற்றி உன்னுடைய சம்மந்தியுடன் வந்த ரெயிலில் கதைத்துக்கொண்டு வந்தேன்.
நான் இப்ப மாறி இதில் ஏறுகிறேன், நீ இங்கை இருக்கிறாய். கலியானவீடு மகனுக்கு, மறக் காமல் நீயும் அழைப்பிதழ் அனுப்பியிருந்தாய். நல்ல பெண் படித்தவள், குணமானவள் உன்னுடைய சம்மந்தி அரவிந் எனக்கு தூரத்து உறவும்கூட என்றேன்.
இம்முறை மருமகள் யாடை எதுவும் காட்டவில்லை நானே சந்தானத்தின் முகத்தை பார்த்துப் புரிந்துகொண்டேன். ஏதோ சிக்கல் அங்கு தெரிந்தது.
என்னடா! அரவிந் உன்னடைய சொந்தம் என்கிறாய் சுத்த நப்பியாய் இருப்பார் போல் இருக்கு. ஒரு பெண்பிள்ளையை வைத்துக் கொண்டு காசு கண்ணிலும் காட்டமாட்டார் என்கிறார். சீதனமாய் கொஞ்சம் தரலாம்தானே. நாம் என்ன சும்மாவா பிள்ளையை படிப்பித்தது.
சரிதான் சந்தாணம். அங்கை எண்டால் என்ன! இங்கை எண்டால் என்ன, எங்கள் வாழ்க்கை முறை மாறவில்லைத்தானே. எத்தனை கடை ஏறி அங்கு ஒரு செருப்பு வாங்குவோம், இங்கை வந்து அது மாறிவிட்டதே! இங்கேயும் பார் எத்தனை ரெயில் ஏறி நானும் மருமகளும் செருப்பு வாங்கத்தான்; போய்கொண்டு இருக்கிறோம். சிக்கனம் பணம் சேர்ப்பு எல்லாம் எங்கள் பிள்ளைகளுக்காத்தானே! நீ கேட்கிற சீதனம் தந்தால் என்ன குறை. வாங்கிறதை வாங்கலாம் இல்லாதவையிட்டை வாங்கினால்தான் பிழை.
சந்தானம் தன் மனவருத்தத்தை சொல்லி முடிவு கேட்டகமுன் ரயில் பயணம் முடிந்து விட்டது. சரி ஒன்றுக்குள் ஒன்று சமாளிப்போம் என்றபடி நகர்ந்தார் சந்தாணம்.
மருமகள் அசைவில்லை! அப்படியே விறைத்துப்போய் நின்றாள். என்ன கால் விறைத்துப் போச்சே! அப்படி என்றால் கொஞ்சநேரம் இங்கு நின்றுவிட்டு நாடப்போம் என்றேன்.
இல்லை மாமா!
நீங்கள் யார் என்று நினைத்து விறைத்துப் போனேன்!
இருவருக்கும் அவர்களுக்கு ஏற்றமாதிரி கதைத்து நீங்கள் மாதவிஅவர்களுக்கு நல்வராக காண்பித்துவிட்டீர்கள்.
ஆனால் எனக்குப் பயமாக இருக்கிறது மாமா! அப்படி என்றால் நீங்கள் யார். ஆளுக்கு ஆள் எற்றமாதிரி உங்கள் கருத்தை சொல்லும் உங்களுக்கு, உங்களுக்கும் என்று ஒரு கருத்து இருக்கும் அல்லவா! அதனை என்னால் உணர முடியாமல் இருக்கிதே! என்றாள் மருமகள்.
மருமகளுக்கு என்னைப் புரியவில்லை. அது சரி ஆனால் எனக்கும் என்னைப் புரியவில்லையே! அப்படி என்றால் நான் யார்.
ஆமாசாமியா!
— மாதவி
1,238 total views, 3 views today