அது அப்படித்தான் என்றுதுண்டிக்கப்படும் கேள்விகள்

தோழுக்கு மேல் வளர்ந்தால் தோழமை தானே..?
மனித சமுதாயத்திலும் குழந்தை முதல் முதுமைப் பருவம் வரையான காலப்பகுதியில் மனிதன் தன் ஆற்றலுக்கேற்ப அனுபவம் பெற்று வாழ எத்தனிக்கின்றான். இப்பருவ நிலையில் பெற்றோர் மற்றும் பாதுகாவலரிடமிருந்து பாதுகாப்பு மற்றும் அனுபவங்கள் பெறும் இளமைப் பருவமானது மிக மிக முக்கிய திருப்பு முனை உடையது. பருவ வயது பத்திரம் என்பார்கள்.
பருவ வயதை அடையும் குழந்தைகளுக்கு எத்தனையோ சடங்குகள், சம்பிரதாயங்களை எம் சமூகத்தில் கடைப்பிடிக்கின்றனர். அதே சமயம் அந்நிலையிலுள்ள குழந்தைகள் உடலளவிலும், மனதளவிலும் பெற்றிருக்கின்ற மாற்றங்கள் குறித்தோ, இயற்கை அவர்களுக்கு வழங்கிய புதிய பரிணாமங்கள் குறித்தோ மதிப்பளிக்க தவறிவிடுகின்றனர் பல பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள். இயற்கையாகவே தோன்றும் உணர்வுப் பிளம்பு நிலை, மற்றும் பதற்றம், பல்வேறு கேள்விகள் போன்றனவற்றால் மனதளவில் சூழப்பட்டிருக்கின்ற போது பிள்ளைகள் பல குழப்பங்களுக்கு ஆளாகின்றனர். பெற்றோரின் அலட்சியப் போக்கு மற்றும் தம் பிள்ளைகள் என்றும் குழந்தைகள் என்ற பார்வை பிள்ளைகள் தமது பெற்றவர் மீதுள்ள நம்பிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை ஏமாற்றமடையச் செய்கின்றன.
ஒவ்வொரு உயிரினத்திற்கும் அதற்கென பருவ வளர்ச்சிகள், பரிணாமங்கள் உண்டு. எப்பேற்பட்ட சூழலில் எவ்வாறு வளர்க்கப்பட்டாலும் இயற்கை தகுந்த காலத்தில் தகுந்த இரசாயன மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். அறிவியலோடு போட்டி போட்டு வாழ வேண்டிய இக்காலகட்டத்தில் நீண்ட காலக் கல்வி, மற்றும் தனக்கான சூழலைத் திட்டமிடுதல் போன்ற காரணங்களினால் நெடுங்காலம் பிள்ளைகள் பெற்றோருடன் வாழ நேர்வதால் தம் பிள்ளைகள் பருவமடைந்துவிட்டதை மறந்து குழந்தைகளாகவே பராமரித்து வருகின்றனர் பல பெற்றோர். இந்நிலையில் ஒரு சிறிய வட்டத்திற்குள் தம் பிள்ளைகளை வாழப் பழக்கப்படுத்தி தாம் கையாள்வதற்கு இலகு படுத்தி அதனை கண்ணியம், நாகரிகம் என பல போர்வைகளால் அலங்கரிக்கின்றனர்.
பருவ வயதை அடைந்த பிள்ளைகள் எதிர்ப்பாலினர் பற்றிய அந்தரங்க விடயங்களையோ, தம் எண்ணங்களையோ பெற்றோருடன் பகிர்ந்து கொள்ள எத்தனிக்கும் முன்னரே சீ.. என்றும் காச்சு மூச்சு என்றும் கத்தித் தீர்ப்பவர்களையும், இவைபற்றி இனி பேசவே கூடாது என அப்படியே பேச்சை நிறுத்தி பயத்தோடு தம் பிள்ளைகளை கையாள்வதையும் காண்கின்றோம். தம்மிடம் பெற்றுக் கொள்ள முடியாத ஒரு தெளிவை தம் பிள்ளை பிறரிடம் கேட்டு விடாதா என்ற புரிதல் கூட இன்றி பலர் காணப்படுகின்றனர்.
தனக்கு தெரியாத விடயங்களை தம் பிள்ளைகளிடம் காட்டிக் கொள்வதையோ, ஒப்புக் கொள்வதையோ பெற்றோர் பலர் விரும்புவதில்லை. தன்னை குறைவாக காட்டிவிடுமோ என்று கௌரவக் குறைவாக எண்ணுகின்றனர். தெரியாத விடயங்களை கேட்கும் போது அதை அப்படியே அடித்து முடக்குவது போன்று செயற்படுவார்கள் பலர். “உனக்கு எதுவும் தெரியாது” எனக் கூறி தப்பித்துக் கொள்ளுவார்கள். “அது அப்படித்தான்” அல்லது “எங்கள் காலத்தில் இப்படியெல்லாம்…” எனக் கூறி தம் பிள்ளைகளின் கேள்விகளைக் கூட துண்டித்து விடுவார்கள். இன்னும் பல பெற்றோர் தாம் அடைய நினைத்து முடியாது போன தம் கனவுகளை தம் பிள்ளைகள் மீது திணித்து, அவர்களின் தனிப்பட்ட ஆற்றலுக்கு வழி விடாது முழு அடைப்பு செய்து அவர்கள் விரும்பாத பாதையில் பயணிக்கச் செய்கின்றனர். இதனால் மனச்சோர்வு ஏற்பட்டு எந்தப் பாதையிலும் திடமாக பயணிக்க முடியாது தவிக்கின்றனர் பிள்ளைகள்.
தமக்குத் தெரியாத கற்பனைகளைச் சொல்லித் தப்பித்துக் கொள்வதை விட தெரிந்த விடயங்களைச் சொல்லிக் கொடுத்து தெரியாத விடயங்களை தேடித் தெரிந்து கொள்ளச் சொல்லி ஊக்கமளிப்பதே சிறந்தது. அவற்றில் உள்ள சிக்கல்கள், கரடுமுரடுகளை விழிப்புணர்வாக சொல்லிக் கொடுப்பதில் தவறில்லை.
ஒரு உயிர் பூமிக்கு வருகிறது என்றால் அவ்வுயிர் ஒரு தாய் தந்தையினுடைய இணைப்பின் ஊடாக வருகிறதே தவிர ஒரு போதும் அந்த தாய் தந்தைக்கோ, உறவுகளுக்கோ முழு உடமையானதோ அல்லது அடிமையானதோ அல்ல. தன் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இப்பூமியில் உள்ள பல்வேறுபட்ட உயிருள்ள, உயிரற்ற பொருட்களை பயன்படுத்தி இப்பூமியில் மகிழ்வாக வாழ்வதற்கே வருகிறது. ஆனால் அந்த பொருட்களினாலோ, சம்மந்தபட்ட அல்லது பிற நபர்களினாலோ அதன் சுதந்திரம் பறிக்கப்படும் போது அதன் தனித்தன்மை மழுங்கடிக்கப்பட்டு துவண்டு போகிறது.
எப்பொழுதும் தம் உருவாக்கத்திற்கு பிறர் பாராட்டு கிடைக்க வேண்டும் என ஏங்குவதே மனித மனதின் இயல்பு. அதனாலேயே தமது குழந்தையும் முற்றுமுழுதாக தம் உருவாக்கம் என்ற தவறான புரிதலோடு தம் பிள்ளைகளை தாம் சொல்வதை எல்லாம் கேட்டு நடக்கக் கூடிய பதிவேற்றம் செய்யப்பட்ட ஒரு இயந்திரத்தனமான சொத்துக்களாக தமது கரங்களுக்குள் என்றென்றும் வைத்துக் கொள்ள பல பெற்றோர்கள் விரும்புகிறார்கள். அதற்கான சகல முன்னேற்பாடுகளையும் செய்து அவர்கள் வெளியேறாதபடி பெரிய அரணாக கட்டி எழுப்புகிறார்கள். இது தன் மரபணுக்களின் சிறப்பை இப்பூமியில் பரவ செய்யப்போகும் ஆற்றல் மிக்க பிறப்புக்கள் மீது செலுத்தப்படும் வன்முறை நிறைந்த அத்துமீறலாகும்.
வாழ்வின் அனைத்து விடயங்களிலும் உரிமையோடு பிறக்கின்ற உயிர்கள் ஒரு தாய் தந்தையைக் கருவியாகக் கொண்டே பிறக்கின்றனவே தவிர அவர்களுக்கான உடமையாக பிறக்கவில்லை. ஆகவே அவர்கள் ஆற்றல் பெறும்வரை பாதுகாத்து நல்வழி காட்டி அவர்கள் சுயமாக செயற்பட பெற்றோர், பாதுகாவலர் உதவ வேண்டும். முடியாது விடின் அவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கிக் கொள்ள வேண்டுமே தவிர அவர்களின் ஆற்றலை உறிஞ்சி பதிவேற்றம் செய்யப்பட்ட பொம்மைகளாக உருவாக்கி எதிர்கால சமூகத்திற்கு மிகப்பெரும் குற்றத்தை செய்து விடக் கூடாது.
உங்கள் அனுபவங்களை பிள்ளைகளோடு பகிர்ந்து பேசி மகிழுங்கள். உங்கள் தவறுகளையும் ஒப்புக்கொண்டு சிரித்து மகிழுங்கள் உங்கள் பிள்ளைகள் குறிப்பறிந்து செயற்படத் தொடங்கி விடுவார்கள். தோழமையோடு அணுகிப் பாருங்கள் நீங்கள் சாய்வதற்கு ஏற்ற உன்னத தோள் அவர்களிடமே இருக்கிறது