எங்கிருந்து வருகுவதோ பாடல்!
கலாசூரி திவ்யா சுஜேன்
ராத்திரியின் நிசப்தத்துள் எழும் சப்தங்களை செவிகளால் அல்ல உணர்வினால் கேட்டு அகமுக மலர்வடைதல் என்பது எனக்கு ஒன்றும் புதிதல்ல. இன்றும் அப்படித்தான் ராத்திரிக்கு ரகசிய முத்தமிட்டு மகிழ்ந்திருக்கும் வேளை எழுந்த ஓசை இசையாகி என் செவிகளை நிரப்பிக் கொண்டிருந்தது.
எங்கிருந்து வருகுவதோ இந்த ஓசை ? என்று அதிசயித்தேன் பாரதி என்னை ஆட்கொண்டான்.
இப்படித்தான் பாரதிக்கும் ஓர் நாள் நிகழ்ந்திருக்குமோ?
இப்பிரபஞ்ச இசையில் தன்னைத் தொலைத்திருப்பாரோ ? என்று எண்ணத் தோன்றியது.
பாரதியை கவிஞனாய் காண்பதா ? கலைஞனாய் காண்பதா ?
எங்கு நோக்கினும் கண்ணனின் அம்சமாய், எப்பொருளும் அவன் லீலையின் உச்சமாய், ஆக்கமும், ஊக்கமும், ஏக்கமும், தாக்கமும், நோக்கமும், நீக்கமும் கண்ணனே கண்ணனே என்று கருத்தினில் இருத்தி காதலால் கசிந்த கற்பக உணர்வுகளில் தோய்ந்த பாரதியின் செவிகளில் மெல்ல நுழைகிறது ஓர் இசை.
அந்த இசை எங்கிருந்து வருகிறது ? யார் இதனை இசைகிறார்? என்று பாரதிக்குள் வினா எழும்புகிறது. அதற்குப் பல விடைகளைத் தந்து பார்க்கிறார்.
- மலை குன்றினின்று வருகிறதா?
- மர கொம்பினின்று வருகிறதா ?
- அகண்ட ஆகாய வெளியிலிருந்து வருகிறதா ?
- அலை ஒலித்திடும் தெய்வீகமான யமுனை ஆற்றில் இருந்து ஒலிகிறதா?
- இலைகள் சலசலத்திடும் பூஞ்சோலையிலிருந்து எழுகிறதா?
- காட்டில் இருந்து வருகிறதா ?
- நிலவின் ஒளிக்கற்றை தான் கொண்டுவந்து தருகிறதா ?
- அயல் நாட்டில் இருந்து இந்த தென்றல் நாதத்தை கொண்டு வருகிறதா?
- ஏதேனும் பறவை இருக்கிறதா இவ்வாறு அமுதக்கனல் போல பாட ?
- இசையில் உயர் கின்னரர் வாத்தியத்தில் இருந்து வருகிறதா ?
இவ்வாறு பத்து விடயங்களை இப்பாடலின் மூலம் வெளிப்படுத்துகிறார்.
ஒரு கணம் சிந்தித்தால் புரியும் , இயற்கையின் இசையை எவ்வளவு ஆழமாக உள்வாங்கி இருக்கிறார் பாரதி என்று. இப்பிரபஞ்சத்தின் ஓசை இசையாகிப் பரந்து கிடக்கிறது. அந்த மந்திர இசைகளின் சக்தியை உணர்ந்தால் ஆத்ம பலம் நிறையும். இதுவே இந்தப் பட்டியலின் ரகசியம்.
இந்த இயற்கை ஓசையின் சந்தமே மந்திரச் சொற்களாக பாரதி கவிதைகளில் தாளமிட்டுக்கொண்டு இருக்கின்றன.
எங்கிருந்தோ வந்த இந்த இசையினால் பாரதிக்கு என்ன நேர்கிறது என்று குறிப்பிடுகிறார்.
இனிய அமுதை போல இருக்கும் இந்த இசை, அறிவு மயக்கத்தை தருகிறதே, இந்த நாதம் என் உயிரை உருக்குகிறதே எங்கு இருந்து தான் வருகிறது என்று இசைக்கு அடிமையாகிறார். ஈற்றில் கண்டு கொள்கிறார்… ஆ ! இந்த தெய்வீக இசை வேறெங்கிருந்தும் வரவில்லை, கண்ணன் ஊதிடும் வேய்ங்குழல் தான் என்று உணர்ந்து அனுபவிக்கிறார்.
அந்த உயிர் நாதத்தின் உன்னதத்தை எப்படி உள்வாங்கி கொள்கிறார் என்று பாருங்கள். இது இசையே இல்லை ,காதிலே அமுதாகவும் உள்ளத்திலே நஞ்சுமாக பெண்கள் கஷ்டப்படுவதற்கென்றே வீசுகின்ற அம்பு தான் கண்ணனின் குழலிசை என்று தவிக்கிறார்.
இசையின் மீது பாரதிக்கு இருந்த அதி மோகத்தை அவரது பல கவிகளினூடு கண்டிருக்கிறோம். வேய்ங்குழல் என்ற பாடலும் அதற்க்கு சான்று பகர்கிறது.
பாரதியின் புனிதமான எழுத்துக்களை ஒவ்வொரு முறை படிக்கும் போதும் வெவ்வேறு பொருள் கொள்ள மனம் விரும்பும். கணம் தோறும் புதிதாய் பிறந்து என்று வாழ்ந்தவன் கவிகளும் தினம் தோறும் புதிதாய்த் தான் தெரிகின்றன. ஐயோ ! பாரதி நீ எங்கு இருக்கிறாய் ? நீ கலைஞனா? கவிஞனா? எனத் தத்தளித்து வியந்தேன். என் உள்ளத்தே உள்நின்று புன்னகைக்கிறான் அடையாளங்களுக்கு அப்பாற் பட்டவனாய். மீண்டும் அவனிடத்தே சரணடைவதை விட வேறு வழியுளதோ ? .
எங்கிருந்து வருகுவதோ ? – ஒலி
யாவர் செய்கு வதோ ? – அடி தோழி !
குன்றினின்றும் வருகுவதோ ? – மரக்
கொம்பினின்றும் வருகுவதோ ? – வெளி
மன்றினின்றும் வருகுவதோ ? – என்றன்
மதி மருண்டிடச் செய்குதடி ! – இஃது (எங்கிருந்து)
அலை ஒலித்திடும் தெய்வ – யமுனை
ஆற்றினின்றும் ஒலிப்பதுவோ ? – அன்றி
இலை ஒலிக்கும் பொழில் இடை நின்றும்
எழுவதோ இஃது இன்னமுதைப்போல் (எங்கிருந்து)
காட்டினின்றும் வருகுவதோ ? – நிலாக்
கற்றை கொண்டு தருகுவதோ ? – வெளி
நாட்டினின்றும் இத்தென்றல் கொணர்வதோ ?
நாதம் இஃது என் உயிரை உருக்குதே ! (எங்கிருந்து)
பறவைஏதும் ஒன்றுள்ளதுவோ ? – இங்ஙன்
பாடுமோ அமுதக் கனல் பாட்டு
மறைவில் நின்றிடும் கின்னரர் ஆதியர்
வாத்தியத்தின் இசைஇதுவோ அடி ! (எங்கிருந்து)
கண்ணன் ஊதிடும் வேய்ங்குழல்தானடீ !
காதிலே அமுது உள்ளத்தில் நஞ்சு
பண்ணன் றாமடி பாவையர் வாடப்
பாடி எய்திடும் அம்படி தோழி (எங்கிருந்து)
14,393 total views, 9 views today