சீடர்
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
திருமந்திரத்தில் திருமூலநாயனார் சீடன் என்ற சொல்லால் ஞானோபதேசம் பெறும் தகுதியுடைய மாணவனையே குறிப்பிடுகின்றார். நற்குணமுடமை, உண்மை பேசுதல், அன்பு செய்தல், விவேகமுடமை, கருணையுடைமை, குருவின் உபதேசத்தைக் கவனமாகக் கேட்டுச் சிந்தித்துத் தெளிந்து ஞானம் பெறவேண்டும் என அவாவுடைமை, குருவைப் பின் தொடர்தல் ஆகியவனவே நல் மாணாக்கனுக்குரிய இலக்கணங்கள் ஆகும். பக்குவனுக்குரிய இக்குணங்களை உடையவனுக்கே சற்குரு ஞானொபதேசம் செய்வார், இதை பின் வரும் சைவ சித்தாந்த சாஸ்திரங்களில் ஒன்றான அருணந்தி சிவாச்சாரியார் அருளிய “சிவஞான சித்தியார் (சுபக்கம்)” 113 ஆவது பாடல் மூலம் அறியலாம்.
“ஒழுக்கம் அன்பு அருள் ஆசாரம் உபசாரம், உறவு சீலம்
வழுக்கிலாத் தவம் தானங்கள் வந்தித்தல் வணங்கல் வாய்மை
அழுக்கிலாத் துறவு அடக்கம் அறிவொடு அர்ச்சித்தல் ஆதி
இழுக்கிலா அறங்களானால் இரங்குவான் பணி அறங்கள்”
ஒழுக்கம் முதல் அர்ச்சித்தல் வரை ஆகிய செயல்கள் இறைவனால் தரப்பட்ட குற்றமில்லாத அறங்கள் என்பதை அறிந்து செய்தால், அவை அறமாக முடியும். அவற்றைச் செய்தால் அவற்றைத் தனக்குச் செய்யும் பணியெனக் கொண்டு அவற்றிற்குரிய பயனை இறைவன் அளிப்பான்.
நல்ல சீடனுக்கு அடையாளம் இவையே எனக் கூறும் திருமந்திரம் பாடல் 1703
“சற்குணம் வாய்மை தயாவிவேகம் தண்மை
சற்குரு பாதமே சாயைபோல் நீங்காமை
சிற்பர ஞானம் தெளியத் தெளிவுஓர்தல்
அற்புதமே தோன்றல் ஆகும் சற்சிடனே”
நல்ல குணம், உண்மையே பேசுதல், இரக்கம், அறிவு, பணிவு, நல்லாசிரியன் திருவடிகளே துணை என்று, நீங்காது அவரை நிழல் போல் தொடர்ந்திருத்தல், தத்துவ ஞான மெய்ப்பொருளான இறையருளை உணர்தல், உணர்ந்ததை ஆய்ந்தறிந்து தேர்தல், அற்புத சாதனைகள் புரிதல் ஆகியவை நல்ல மாணவனுக்குரிய மேலான உயர்ந்த நல்ல குண இயல்புகளாகும்.
பக்குவன் பற்றி கூறும் திருமந்திரம் பாடல் எண் 1690
“தொழில் அறிவாளர் சுருதி கண்ணாக
பழுது அறியாத பரம குருவை
வழி அறிவார் நல்வழி அறிவாளர்
அழிவு அறிவார் மற்றை அல்லாதவரே”
பேரின்ப முத்தியை அடையும் சரியான வழி அறிந்து, அதனை ஆளும் வல்லமை பெற்றவர்கள், வேத ஆகம நூல்களைக் கண்போலக் கற்றுக் குறையொன்றும் இல்லாத சீடனைக் கரையேற்றும் செயல் திறம் உடைய ஆசிரியனை வழிபடும் முறை அறிந்தவர்கள், நல்வழிச் செல்லும் மார்க்கம் உணர்ந்தவர் ஆவார்கள். இதனை அறியாத மற்றவர்கள் தமக்கு வரப்போகும் அழிவை அறியாதிருப்பவர்களே ஆவர்.
பரம்பொருள் வித்தை பக்குவர்க்கு அருளுக எனக் கூறும் பாடல் எண் 1692
“பதைக்கின்ற போதே பரம்என்னும் வித்தை
விதைக்கின்ற வித்தினை மேல்நின்று நோக்கிக்
சிதைக்கின்ற சிந்தையைச் செவ்வே நிறுத்தி
இசைக்கின்ற அன்பருக்கு ஈயலும் ஆமே”
இறை அருளைப் பெறத் துடிக்கும் உள்ளம் பதைபதைக்கும். அந்த நிலையிலேயே பரம்பொருள் ஞானம் என்னும் விதையை விதைக்கின்ற மூலப் பொருளை நெற்றிப் புருவ நடுவில், மேல் நோக்கிப் பார்த்து, உலக இச்சையில் நாட்டம் கொண்டு, உள்ளத்து உறுதியைக் கெடுக்கின்ற மனதை ஒருமுகப்படுத்தி, அப்பரம்பொருள் சிந்தனையில் இலயித்து, ஒன்றி இருக்கச் செய்து, அப்பரம்பொருள் உணர்வோடு கலந்து நிற்கும் சீடர்களுக்கு உபதேசிப்பது உத்தமம் ஆகும்.
நல்ல சீடனுக்கு அடையாளம் கூறும் திருமந்திரம் பாடல் எண் 1696
“சாத்திக னாய்ப் பரதத்துவம் தான்உன்னி
ஆத்திக பேத நெறி தோற்றமாகியே
ஆர்த்த பிறவியின் அஞ்சி அறநெறி
சாத்த வல்லான் அவன் சற்சீடனாமே”
ஆரவார அலை ஓசைகள் அற்று ஆழ்கடல் அமைதியாக இருக்கின்ற மனநிலை கொண்டவனாய், பரம்பொருள் அன்றி வேறு எது பற்றியும் அறியாத தன்மையுள்ளவனாய், கடவுள் ஒருவன் உண்டென நம்பும் இறைபற்றாளர்கள் பலவாகச் சொன்னவற்றில் ஒன்றை ஏற்பவனாய், வினைப்பயனால் சேர்த்துக் கட்டப்பட்ட பிறவிகளை எண்ணிப் பயந்து, அவை எய்தாமல் தடுக்க மேலான நல்லொழுக்க நெறிவழி நின்றொழுகுபவனே நல்ல சீடனாவான்.
ஞானம் பெற நல் ஆசான் அடிபணிக எனக்கூறும் திருமந்திரம் பாடல் எண் 1698
“அடிவைத்து அருளுதி ஆசான் இன்றுஉன்னா
வடிவைத்த மாமுடி மாயப் பிறவி
அடிவைத்த காய அருட் சத்தியாலே
அடிபெற்ற ஞானத்தன் ஆசற்று உளோனே”
ஆசானே! நீங்கள் உங்கள் திருவடிகளை என் தலைமேல் வைத்து அருளுக, என்று தியானித்தவுடனேயே, குருவினுடைய திருவுருவம் தன் மனதில் பதிந்த அக்கணமே, தொடர்ந்து தோன்றி மறையும் மாயப் பிறவி காய்ந்து தீய்ந்து போகும். அருளுருவான பராசக்தியின் துணையாலே, தவஞானம் சிறக்கப் பெற்ற இவனே, குற்றம் குறையற்ற நல்ல மாணாக்கனாவான்.
அபக்குவன் (பக்குவம் இல்லாத மாணவன்) பற்றி திருமந்திரம் பாடல் எண் 1680
“குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழி விழுமாறே”
பக்குவம் இல்லாத சீடர் (மாணவர்) அறியாமையைப் போக்கும் நல்லாசிரியனைத் தேடிப் போகமாட்டார்கள். அறியாமையை நீக்க முடியாத ஒருவரை ஆசிரியராகக் கொண்டு அவரிடம் போவார். இப்படி அறிவு இல்லாதவரும், அறிவு புகட்ட முடியாதவரும் கூடி ஒன்று சேர்ந்து இருப்பது, குருடருக்கு வழிகாட்டக் குருடர் முற்பட்டு இருவரும் துன்பக் குழியில் விழுந்து துயருறுவதைப் போன்றதாகும்.
1,921 total views, 2 views today