இணையவழிக் கல்வியும் இரையாகும் ஆசிரியர்களும்!
தமிழகம் ஒரு பார்வை.
- பொலிகையூர் ரேகா M.com.>M.phil.>MBA.>M.phil.>
கொரோனா என்னும் கொடிய தீநுண்மியானது உலக மக்களின் செயல்பாட்டினை முடக்கிப்போட்டுள்ளது. அனைத்து மக்களும் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கியுள்ள நிலையில் ஆசிரியர்களின் நிலமையும் எதிர்பார்த்திராத அளவில் மாற்றம் கண்டுள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரையில் இன்னும் பள்ளி,கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில் இணையத்தினூடாகக் கல்வி நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது. இணையவழிக் கல்வியில் மாணவர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களைப் பற்றி விவாதிக்கும் ஊடகங்கள் ஆசிரியர்களின் சிக்கல்கள் குறித்துப் பெரிதும் பேசவில்லை என்றே சொல்ல வேண்டும்.
அரசியல் மாற்றங்களுக்கேற்ப, புதிய திட்டங்களுக்கேற்ப சில ஆண்டுகளுக்கு ஒருமுறையேனும் தம் கற்பித்தலில் மாற்றங்களை எதிர்நோக்கும் ஆசிரியர் சமூகம் இன்றும் இந்த நோய்த் தொற்றால் பாரியதொரு மாற்றத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த மாற்றங்களையும், கல்வி நிறுவனங்களின் அழுத்தங்களையும் தாங்க முடியாமல் வெளியேறிய ஆசிரியர்களும்; வெளியேற்றப்பட்ட ஆசிரியர்களும் ஏராளம்.
புலவுச்சோறு விற்பனை, பழக் கடை, காய்கறிக் கடை, திண்பண்ட விற்பனையாளர்கள் , கூலியாட்கள் எனப் பல ஆசிரியர்களும் இன்னொரு வடிவம் எடுத்திருப்பது காலக்கொடுமை. எந்த வேலையும் இழிவற்றதுதான் ஆனால் கல்விமான்களாய் வலம் வந்தவர்கள் திடீரென்று இப்படியொரு சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்வதென்பது அத்தனை
சுலபமானதல்ல. எத்தனையோ மாணவர்களை பெரியவர்களாக மாற்றிவிட்ட அவர்கள் நிலமை இப்படி மாறியது வேதனைக்குரியது.
ஆட்குறைப்பு, மாணவர் சேர்க்கைக்காக உதவாமை, மாணவர்கள் கட்டணம் கொடுக்காமை ஆகிய காரணங்களுக்காக வேலையை விட்டு நீக்கப்பட்ட ஆசிரியர்கள் ஒரு புறம் என்றால்
ஊதியக் குறைப்பு, ஊதியமின்மை என்ற நிலையில் வேலை பார்க்கும் ஆசிரியர்களின் நிலமை இன்னும் கொடுமையானதாகவுள்ளது.
ஊதியம் குறித்துக் கேட்டால் இருக்கும் வேலையும் பறி போய்விடும் என்பதால் பலர் அமைதியாகவே இணைய வகுப்புகளை எடுத்துக்கொண்டிருக்கின்றனர். சில கல்வி நிறுவனங்கள் மட்டுமே ஊதியத்தை முழுமையாக வழங்குகின்றன. வீட்டிலிருந்துதானே வேலை பார்க்கின்றீர்களெனப் பல கல்வி நிறுவனங்கள் ஊதியத்தைக் குறைத்தே கொடுக்கின்றனர்.
இது ஒரு பக்கம் என்றால் வீட்டில் இருந்து வேலை பார்க்கும் இச் சூழலில் நேர வரைமுறையின்றி வேலை பார்க்கப் பணிக்கப்படுவது அதைவிடக் கொடுமையானதாக மாறியுள்ளது. குறித்த நேரத்தில் மாணவர்களுக்கான வகுப்பு எடுப்பது போக, நேரம் காலமின்றிக் கொடுக்கப்படும் கல்வி தொடர்பான வேலைகளையும் உடனுக்குடன் செய்தாக வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.
இணையவழிக் கல்விக்குப் பலரும் எதிர்ப்புத் தெரிவிக்கும் நிலையில் அந்த விமர்சனங்களையும் தாங்கிக்கொண்டு பாடம் நடத்தியாக வேண்டிய கட்டாயத்தில் ஆசிரியர்கள் உள்ளனர். வீட்டிலிருந்து
கற்பிப்பதென்பது அத்தனை சுலபமானதல்ல. ஒரு நாள் வகுப்புக்காகக் குறைந்தது மூன்று மணி நேரமாவது செலவு செய்து Pழறநசீழiவெ ,காணொளி ஆகியன தயாரிக்க வேண்டும். இணைய வழிக் கல்வியில் பெற்றவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற இதுபோன்று செயலூக்கம் உள்ள வழிகளில் வகுப்புகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் ஆசிரியர்கள் உள்ளனர்.
இணைய வசதியற்ற அல்லது சரியாக வராத இடங்களில் இருக்கும் ஆசிரயர்களும்கூட வகுப்பெடுக்க இணைய வசதியுள்ள இடங்களை நாடவேண்டியுள்ளது.
வகுப்பெடுக்கும்போது இடையூறுகள் வராத வண்ணம்
அவர்கள் சூழலையும் பார்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
பாடத்தில் மட்டுமன்றிக் கல்வி நடவடிக்கைகள், இணையத்தைப் பயன்படுத்துவது, பயன்பாட்டுச் சிக்கல் என எந்த நேரத்தில் மாணவர்கள் அழைத்தாலும் பதிலளிக்க வேண்டிய கட்டாயம் இப்போது அனைத்து ஆசிரியர்களுக்கும் உள்ளது. சொந்த உபயோகித்திற்கென வாங்கிய எதுவுமே இப்போது அவர்களற்றதாகியுள்ளது. அலைபேசி, கணனி ஆகியன கல்லூரி அழைப்புகளுக்காவும், இணைய வகுப்பெடுக்கவும் என மாறியுள்ளது.
வீட்டிலிருந்து வேலை செய்வதற்காக கணனிகளை வழங்கும் தொழில் நிறுவனங்கள் போன்று எந்தக் கல்வி நிறுவனங்களும் ஆசிரியர்களுக்காக இணைய வகுப்பெடுக்க எதையும் வழங்கவில்லை. பெரும்பாலும் அவர்கள் சொந்த அலைபேசியையோ, கணனியையோ தொடர்ந்து உபயோகிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இணையக் கட்டணமும் அவர்கள் சொந்த செலவிலேயே அடங்கிப்போகின்றது.
இணைய வகுப்பிற்காகவே அலைபேசியும் ,கணனியும் கடனடிப்படையில் வாங்கிய ஆசிரியர்கள் ஏராளம். அலைபேசியின்றி இணைய வகுப்பில் மாணவர்கள் கலந்துகொள்ள முடியாமல் போவதைப்பற்றி மட்டுமே இங்கு பேசப்படும்போதும், ஆசிரியர்களாய் இருப்பதற்காய் கரித்துக்கொட்டப்படும்போதும் மனம் வலித்தாலும் தம்மிடம் இணைய வகுப்பெடுக்கும் வசதி இல்லாமல் இருப்பது குறித்து ஆசிரியர்கள் கூறிக்கொள்ளவில்லை. மாற்றங்களுக்கேற்ப தம்மை மாற்றிக்கொண்டு பாடம் நடத்தவே கட்டளையிடப்பட்டவர்களாக ஆசிரியர்கள் இருக்கின்றனர்.
வேலை கைவிட்டுப் போய்விடக்கூடாது என்பதற்காக ஊமைகளாயிருக்கப் பழகிக்கொண்டார்கள் என்பதே உண்மை.
கல்வி காசாகிப் போனதால் ஆசிரியர் சேவைக்கு மதிப்புக் குறைந்துதான் உள்ளது. ஆனால் சொற்ப வருமானத்துக்காக ஆசிரியப் பணியைச் செய்பவர்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள் இப்போது அதிகமாயுள்ளது. மாணவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் பற்றியே பேசிப் பெரிதாக்கியிருப்பவர்கள் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களையும் சிறிதேனும் புரிந்து கொள்ள முயற்சி செய்தால்; உலகமே எதிர்கொள்ளும் இக்கட்டான சூழலிலும் இந்தக் கல்வி ஆண்டுக்கான படிப்பை காலத்தை வீணாக்காமல் முடித்துவிடலாம். இடர்களோடும் கடமையாற்றும் ஆசிரியர்களை இனிமேலாவது புரிந்துகொள்ள முயற்சியுங்கள்.ஆசிரியப் பணிக்காய் தம்மை அர்ப்பணித்தவர்களை பாராட்ட முடியாவிட்டாலும் தூற்றாமல் இருப்பதே இந்த இக்கட்டான சூழ்நிலையில் மாற்றங்களுக்கேற்ப தம்மை மாற்றிக்கொண்டு பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கு அனைவரும் செய்யும் நற்செயலாக அமையும்.
2,155 total views, 2 views today