பிளாஸ்டிக் முட்டையும், பிளாஸ்டிக் அரிசியும்!

‘கேட்பவர்கள் கேனையர்கள் என்றால் கேழ்வரகில் நெய்வழியும்’

ஆசி கந்தராஜா-அவுஸ்திரேலியா

பிளாஸ்டிக் முட்டை பற்றிய வதந்தி தற்போது இலங்கையில் பரவியுள்ளது. இதே மாதிரித்தான் முன்னர் வந்த பிளாஸ்ரிக் அரிசி பற்றிய வதந்தியும். வதந்தி பரப்புவதில் இன்பம் காண்பவர்கள் பலர் இருக்கிறார்கள். ‘கேட்பவர்கள் கேனையர்கள் என்றால் கேழ்வரகில் நெய்வழியும்’ என்ற கிராமத்துச் சொல்லடைதான் இதற்கான பதில். ஒரு முட்டை செய்வதற்கான பிளாஸ்டிக்கின் விலை, தொழில் நுட்பம், கூலி எல்லாவற்றையும் கூட்டிப் பார்த்தால் கோழி இயற்கையாக இடும் முட்டையின் விலையிலும் அதிகமாக இருக்கும். இந்நிலையில் வியாபாரிகள் பிளாஸ்டிக் முட்டை விற்று லாபமடைய முடியுமா?
பிளாஸ்டிக் அரிசி சாத்தியமா?
சீன மொழியில் விளக்கம் சொல்லும் ஒரு யூ-டியூப் வீடியோ! அதன் முதலாவது காட்சியில், மெல்லிய பிளாஸ்டிக் தகடுகள் இயந்திரம் ஒன்றுக்குள் போடப்படுகிறது. அடுத்து நூல்கள் போன்ற அமைப்பு ஒரு இயந்திரத்திலிருந்து இன்னொரு இயந்திரத்துக்குப் போவது காண்பிக்கப்படுகிறது. மூன்றாவது காட்சியில் இயந்திரத்திலிருந்து அரிசி வெளியேறுகிறது. ஆனால் இந்த மூன்று காட்சிகளுக்குமான தொடர்புகள் எதுவும் அங்கு காட்டப்படவில்லை.
இதேபோன்ற ‘பிளாஸ்டிக் அரிசி’ பற்றிய பல யூ-டியூப் வீடியோக்களும் தகவல்களும் ஊடகங்களிலும் வலைத் தளங்களிலும் வெளிவருவதைப் பார்த்திருப்பீர்கள்.

பிளாஸ்டிக்கில் அரிசி செய்வது சாத்தியமா?
பிளாஸ்டிக் அரிசி, உண்மையான அரிசிபோல கொதி தண்ணீரில் வேகுமா? என்ற பல கேள்விகள் எழுந்தாலும் பிளாஸ்டிக் என்றவுடன் எமக்குள் ஒருவித பயம் ஏற்படவே செய்கிறது. ஹபிளாஸ்டிக் அரிசி, சந்தைக்கு வந்திருப்பதாகச் சொல்வது முற்றிலும் புரளிக் கதை!
2011-ஆம் ஆண்டு வியட்நாமிய இணையப் பத்திரிகை ஒன்றுதான் முதன்முதலில் பிளாஸ்டிக் அரிசி சந்தைக்கு வந்திருப்பதாகவும், அது சீனாவில் உற்பத்தி செய்யப்படுவதாகவும் செய்தி வெளியிட்டது. அதன் பின்னர், பிளாஸ்டிக் அரிசி குறித்து வெளிவந்த செய்திகள் அனைத்துமே வியட்நாமிய இணையப் பத்திரிகை வெளியிட்ட செய்தியைச் சார்ந்தே இருந்தன.
சீனாவில் வுச்சாங் என்னும் இடத்தில் விளையும் அரசி மிகப் பிரபல்யமானது. இது நல்ல சுவையும் மணமும் கொண்டது. இந்த அரிசி அவியும்போது வெளிவரும் வாசைன பசியைத் தூண்டும் என்று சொல்லப்படுகிறது. வுச்சாங் அரிசி விலையானதால் வியாபாரிகள் கலப்படம் செய்வதாகவும் இதனுடன் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட போலி அரிசியை கலப்பதகவும் வியட்நாமிய இணையப் பத்திரிகை மேலும் தெரிவித்தது.

இந்த கலப்பட அரிசியானது உருளைக் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு போன்ற மாச்சத்துள்ள கிழங்குகளை அரைத்து, அரிசி போன்று செய்யப்படுவதாகவும் இரசாயனங்களைப் பூசி அவை விற்கப்படுவதாகவும் சொல்லப்பட்டது. சீனாவின் புகழ்பெற்ற ‘வுச்சாங் ‘ ரக அரிசியைப் போன்று தோற்றமளிக்க கலப்பட ரக அரிசிகளில் வாசனைத் திரவங்கள் தெளிக்கப்படுவதாகவும் பின்னர் செய்திகள் வெளிவந்தன. ஆனால் எந்த செய்தியிலும் நேரடியாக பிளாஸ்டிக் கலக்கப் பட்டதாகத் தகவல்கள் இல்லை.

பிளாஸ்டிக்கை அரைத்து அரிசிகளின் அச்சுகளாக மாற்றுவதன் மூலம் எந்தவொரு வணிகலாபமும் பெற்றுவிட முடியாது. கலப்படம் செய்யப்படுவது இலாப நோக்கத்திற்காக மட்டும்தான். ஒரு கிலோ அரிசியைவிட ஒரு கிலோ பிளாஸ்டிக்கின் விலை அதிகம் என்பதால் வியாபாரி இதில் எந்தவித இலாபத்தையும் பெறமுடியாது. அதுமட்டுமல்ல அரிசியில் பிளாஸ்டிக்கை கலந்தால் உலை கொதிக்கும்போது அல்லது அரிசி அவியும்போது பிளாஸ்டிக் உருகிவிடுமல்லவா?
நாம் உண்ணும் பலவிதமான உணவுகளில் கலப்படம் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. சில துரித உணவுகளைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கும், குறித்த வடிவம் பெறுவதற்கும், கெட்டுப்போகாமல் இருப்பதற்கும் நெகிழ்வுத் தன்மையுள்ள சில வேதிப் பொருட்கள் கலக்கப்படுகின்றன என்பது உண்மையே. ஆனால், ஒட்டுமொத்தமாக பிளாஸ்டிக்கைக் கொண்டு வாளி, கோப்பை, கதிரை, மேசை செய்வது போல, அரிசி தயாரிப்பது சாத்தியமில்லை.

ஐரோப்பிய நாடுகளில் திடீர் நூடுள்ஸ் போன்று திடீர் அரிசிப் பைகள் விற்கப்படுகின்றன. அந்த அரிசிப் பையை கொதி தண்ணீரில் போட்டால் சில நிமிடங்களுக்குள் பைக்குள் இருக்கும் அரிசி அவிந்து சோறாகிவிடும். இது இயற்கையான அரிசி இல்லை. சரியாகச் சொன்னால் இது நூடுள்ஸ் அரிசி. இதிலும் பிளாஸ்டிக் சேர்ப்பதில்லை. இந்த அரிசியின் விலை இயற்கை அரிசியிலும் பல மடங்கு அதிகம். இது அவசர உலகத்தில் வாழும் சிலருக்கு அவ்வப்போது உதவலாம். ஆனால் அன்றாடம் அரிசி உணவு சாப்பிடுபவர்களுக்கு தோதுப்படாது.

சமூக வலைத் தளங்கள், இணையங்களில் பிளாஸ்டிக் அரிசியினால் சமைக்கப்பட்ட சோறு எனக் காட்டி, அதனை உருண்டையாக்கி, நிலத்தில் அடித்தும் காண்பிக்கிறார்கள்.
அரிசியில் இயற்கையாகவே அமைலோஸ் (இனிப்புத்தன்மை), அமைலோஸ்-பெக்ரின் (பசைத்தன்மை) என்ற இரண்டு வேதிப் பொருள்கள் உண்டு. இற்றின் அளவுக்கேற்றபடியே அரிசியின் தன்மை மாறுபடும். குச்சிகளால் சாப்பிடும் சீனர்களுக்கு பசைத் தன்மையுள்ள சோறு வேண்டும். இந்தியர்களுக்கு உதிர்ந்த சோறு வேண்டும். இதனால் ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் ஸ்டிக்கி ரைஸ் எனப்படும் இயல்பிலேயே ஒட்டும் தன்மையுடைய அரிசி வகைகள் பயிரிடப்படுகின்றன. இதனால்தான் நம்மவர்கள் இதை போஸ்டர் ஒட்டப் பாவிப்பது. பசைத் தன்மையுள்ள அரிசி மாவில் செய்யப்பட்ட பிடி கொழுக்கட்டையை நிலத்தில் எறிந்து பாருங்கள் அது உடையாதல்லவா? அது மாதிரித்தான் இதுவும். இதேவேளை நான் இன்னுமொன்றையும் சொல்லவேண்டும். இந்த மாதிரியான செய்திகளை வலைத்தளங்களில் பதிவேற்றுகையில், ஆதாரமும், உண்மைத் தன்மையும் தெரிந்தால் மட்டுமே பகிரவேண்டும். இதுகுறித்த வீடியோக்கள் பெரும்பாலும் புரியாத மொழிகளிலேயே முதலில் வெளிவந்தன. இன்றுவரையும் நிரூபிக்கப்படாத இந்தச் செய்திகள் அனைவரையும் அச்சுறுத்தும் வதந்திகளாகவே பல மொழிகளில் பரவி வருகின்றன. இதே போன்றதுதான் பிளாஸ்டிக் முட்டைக் கதையும்!

2,090 total views, 2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *