அண்டத்தின் வெற்றிடத்தில் பாதுகாப்புடை இல்லாமல் சென்றால் வெடித்துவிடுவோமா?

நண்பர்களே, எனக்கு ஒரு சுவாரசியமான கேள்வி ஒன்று தோன்றுகிறது. அதைக் கேட்பதற்கு முதல் நீங்கள் என்னுடன் ஒரு இடத்திற்கு வரவேண்டும். அது எங்கே என்றால் ஒரு ஏவூர்தியில், அதாவது சழஉமநவ இல் என்னுடன் விண்வெளிக்குப் போக வேண்டும். அங்கே போனதும், அந்த ஏவூர்தியின் ஜன்னல் வழியே பார்த்தால், நமது பூமி, சந்திரன், சூரியன் மேலும் பல நட்சத்திரங்கள் தெரியும், இல்லையா? சரி இது எல்லாமே ஒரு புரம் இருக்கட்டும். இப்படி விண்வெளியில் இருக்கும் நாம், சட்டென்று அந்த ஏவூர்தியின் ஜன்னல் அல்லது கதவைத் திறந்து வெளியே சென்றால் என்ன நடக்கும்? Wait… நான் சொல்வது விண்வெளி உடை போட்டுக்கொண்டு இல்லை! சும்மா ஒரு காட்சட்டை மற்றும் T-shirt போட்டுக்கொண்டு வெளியே போனால் எப்படி இருக்கும்? அடடா! இது என்னடா இடக்கு முடக்கான கேள்வியாக இருக்கிறது என்று யோசிக்கின்றீர்களா?
பல அறிவியல் புனைவுத் திரைப்படங்களில் அதாவது Science Fiction படங்களில் விண்வெளி வீரர்களை விண்வெளியின் வெற்றிடத்தில் பல வித்தியாசமான முறைகளில் இறப்பது போல் காட்சிகளைக் காட்டுவதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், அப்படி இறப்பது சாத்தியமானதா? அப்படி இறந்தாலும், படங்களில் வருவது போல் கொடூரமான முறையில் இறப்போமா?
நான் ஒன்றை மட்டும் சொல்லிவிடுகின்றேன். விண்வெளி உடை இல்லாமல் நீங்கள் விண்வெளியில் இருக்கும் போது கண்டிப்பாக வெடித்துச் சிதற மாட்டீர்கள். இது என்ன தான் பல ஆண்டுகளாக நம்பப்பட்டு வந்திருந்தாலும் இதற்குச் சாத்தியமே இல்லை என்று விஞ்ஞானிகள் கூறிவிட்டார்கள்.
இதைத் தொடர்ந்து விண்வெளியில் பாதுகாப்பில்லாமல் இருந்தால் நமது இரத்தம் கொதித்து நாம் இறந்து விடுவோம் என்று சிலர் கூறினார்கள். இதற்குக் காரணம் என்னவென்றால், பொதுவாகக் காற்றின் அழுத்தம் குறையும் போது நீர்மங்களின் கொதிநிலையும் சேர்ந்து குறையும். எனவே விண்வெளியில் காற்றின் அழுத்தம் இல்லாத காரணத்தால், இதன் விளைவாக அனைத்து நீர்மங்களும் உடனடியாக கொதித்துவிடும். சரி, இது என்ன தான் உண்மையாக இருந்தாலும், இப்படி நமது இரத்தம் கொதிக்கும் என்பதற்குச் சாத்தியமே இல்லை. ஏனென்றால் நமது உடல் ஒரு மூடப்பட்ட மேற்பரப்பைக் கொண்டது. அத்துடன் அதிலுள்ள நீர்மம் அதாவது இரத்தம் நேரடியாக வெற்றிடத்துடன் தொடர்பில்லாமல் நமது உடலினுள் தான் செயல்படுகிறது. நமது உடலிலுள்ள அழுத்தம் மற்றும் வெப்பநிலை இரத்தத்தினை கொதிக்கும் அளவிற்கு மாற்றிவிடாது. எனவே இதுவும் நடக்க இயலாத காரியம் தான்.
சரி இது எல்லாம் சாத்தியம் இல்லையென்றால், இதைப் பார்ப்போம். விண்வெளி உடை இல்லாமல், நமது உடல் உறைந்துபோய் விடுமா? நண்பர்களே, இது கூட கண்டிப்பாக நடக்காது. என்ன தான் விண்வெளியின் வெப்பநிலை வெறும் 2.7 கெல்வின், அதாவது -270 டிகிரி செல்சியசாக இருந்தாலும், நமது உடலில் இருக்கும் வெப்பத்தைக் கடத்துவதற்கு விண்வெளியில் ஏதாவது இருக்க வேண்டும், அதாவது ஒரு வெப்ப பரிமாற்ற முறையில் நமது உடலிலிருந்து வேறு ஏதாவது ஒரு ஊடகத்துக்கு வெப்பம் போக வேண்டும். எளிமையாகக் கூறினால் காற்று போன்ற ஏதாவது ஒரு ஊடகம் இருந்தால் தான் வெப்பம் ஓரிடத்தில் இருந்து வேறொரு இடத்திற்குச் செல்லும். வெற்றிடத்தில் காற்றில்லாததால் நமது உடலில் இருந்து வெப்பம் போக முடியாது, எனவே நமது உடலைக் குளிரச் செய்து உறைய வைக்க முடியாது.
சரி அப்ப ஆக மொத்தத்தில் விண்வெளி உடை இல்லாமல் நம்மால் விண்வெளியில் இறக்கவே முடியாது, சரி தானே? தயவு செய்து அதை மட்டும் செய்துவிடாதீர்கள் நண்பர்களே. விண்வெளியில் இறக்காமல் இருப்பதற்கு நாம் ஒன்றும் Super Man கிடையாது. நீங்கள் கண்டிப்பாக இறந்துவிடுவீர்கள். அது ஏன் என்றால், விண்வெளி உடை இல்லாமல், முதலில் உங்கள் உடலில் காணப்படும் அனைத்துக் காற்றும் உங்கள் உடலை விட்டு நீங்கிவிடும். அதுவும் மூக்கினூடாக மட்டும் இல்லை, உங்கள் உடலில் காணப்படும் அனைத்து வழிகளாலும் மிக விரைவாக வெளியேறும். தொடர்ந்து இன்னும் ஒரு 10 – 15 வினாடிகளில் நீங்கள் மயங்கிவிடுவீர்கள், ஏனென்றால் மூளைக்குச் செல்ல வேண்டிய இரத்தம் சரிவரச் செயல்படாததால், மூளைக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்காது. தொடர்ந்து காற்றின் அழுத்தம் இல்லாத காரணத்தால், நமது உடலின் மேற்பரப்பில் காணப்படும் அனைத்து இரத்தக் குழாய்களையும் பாதித்துவிடும், குறிப்பாக நமது கண்களின் இரத்தக்குழாய்கள் உடைந்துவிடுவன. இதன் விளைவாக நமது உடலில் காணப்படும் நீர்மம் வெற்றிடத்துடன் நேரடியாகத் தொடர்பில் இருக்கும், எனவே இதனால் அந்த நீர்மம் உடனடியாக கொதிக்கத் தொடங்கி, இறந்துவிடுவீர்கள். சபாஸ்… கேட்கவே தலை சுற்றவில்லையா?
சரி நண்பர்களே, இனி நீங்கள் கூறுங்கள். திரைப்படங்களில் காட்டுவது அனைத்தையும் நாம் நம்பக்கூடாது என்பதற்கு இதுவே ஒரு உதாரணமாகிவிட்டது அல்லவா? எனது சிறு கட்டுரை பற்றிய அபிப்பிராயத்தை எனது முகநூல் பக்கத்தில் (www.facebook.com/scinirosh) அறியத் தாருங்கள்!
1,738 total views, 4 views today