உனக்குத்தெரியுமா – 05

ஒற்றை பனைமரம் புகழ் புதியவன்

வணக்கம் நண்பர்களே, இன்று நாம் சந்திப்பது, புதியவன் இராசையாவை. ஈழத்தில் கனகராயன்குளம். விடுதலை இயக்கத்தில் 82 ல் இணைந்து 84 கைது செய்யப்பட்டு வெலிக்கடை, தங்காலை, பூசா முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு 86 மேல் விடுதலை ஆனபின், பிரித்தானியாவுக்கு 86 மார்கழி. இல் இடம் பெயர்ந்தவர் . கணக்கியல் துறையில் பயின்று 15 வருடங்கள் விரிவுரையாளராக கடமையாற்றி பின் திரைத்துறையில் முழு நேரமாக ஈடுபடும் நோக்கோடு வேலையை ராஜினாமா செய்தவர். திரைத் துறையில் முதுமாணி பட்டம் பெற்றவர். 2001 மாற்றம், 2003 கனவுகள் நிஜமானால், 2005 மண், 2015 யாவும் வசப்படும், 2018 ஒற்றைப்பனைமரம் ஆகிய முழு நீழப் படங்களை எழுதி இயக்கியவர்.

ஈழத்தில் ஒரு போராளியாக இருந்து இப்பொழுது ஒரு திரைப்பட இயக்குனராக வாழ்ந்து வரும் நீங்கள், உங்கள் திரைப்படங்களில் ஈழத்தமிழரின் போர்காலத்து கதைகளை கையாண்ட அனுபவம் கொண்டவர். இப்பொழுது நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் மேல் எழுப்பப்படும் குற்றச்சாட்டை பற்றி என்ன நினைக்கிறீர்கள். அவர் இலங்கை தமிழரான கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனை பற்றிய Bio -Pic ல் நடிப்பது தவறா?

ஒரு படம் வெளிவரும் முன்னே, ஒரு கலைஞனை அடக்க நினைப்பது தவறு. விஜய் சேதுபதி ஒரு கலைஞனாக எந்த வேடத்திலும் நடிக்கலாம். அவரது உரிமை. ஒரு ஈழத்து போர் வரலாற்றை, தமிழரின் தியாகத்தை, போராட்டத்தை கேவலப்படுத்தும் ஒரு படமாக இந்த படம் உருவாக்கப்பட்டாள் அதை தடை செய்ய சொல்லும் உரிமை பொறுப்பு தமிழருக்கு உண்டு. ஆனால் அதை படத்தை பார்த்துவிட்டு தான் முடிவு செய்ய வேண்டும்.

இப்பொழுது எந்த படத்தில் பணிபுரிகிறீர்கள்?
இப்பொழுது யுத்தத்தின் பின்னால் காணாமல் போனவர்கள் பற்றிய கதை ஒன்று அமைத்து படவேலைகளை ஆரம்பிக்க நினைத்த நேரம் உலகத்தையே கொரோணா ஆட்டிப்படைக்க ஆரம்பித்து விட்டது. பயணிக்க முடியாது என்ற காரணத்தினால் நான் வாழும் பிரித்தானியாவை மையமாக வைத்து ஒரு கதையை உருவாக்கி திரைக்கதை வேலைகளை செய்து வருகிறேன். இது அகதியாக வந்த ஒரு இலங்கை தமிழர் இங்கே எப்படி வீடற்றவராக homelessஆக மாறுகிறார் என்பதை கொஞ்சம் அரசியலும் கலந்து எழுதி வருகிறேன். சூழலுக்கு ஏற்றவாறு விரைவில் படப்பிடிப்பு ஆரம்பிக்கவுள்ளேன்

ஒற்றை பனைமரம் படத்தில் உங்கள் மகளை நடிக்கவைத்த அனுபவம் பற்றி?
எனக்கு 2 மகள்கள், இருவருமே சின்ன வயதிலிருந்து பேச்சு மற்றும் நாடக கலை பயில்பவர்கள். இந்த படத்தில் எனது மூத்த மகள் அஜாதிகா நடித்திருந்தார். இயல்பாகவே அவருக்கு நடிப்பில் ஆர்வமும் திறமையும் உள்ளவர். இந்த பாத்திரத்தை பொறுத்தவரையில் அவர் ஒரு அதிர்ச்சியின் காரணத்தால் வாய்ப்பேச்சை இழந்த ஒரு சிறுமி, அதே சமயத்தில் அவர் தனது உணர்வுகளை புல்லாங்குழல் மூலம் வெளிப்படுத்த கூடிய திறமையுடையவர். என் மகள் என்ற காரணத்தால் இந்த கதாபாத்திரத்துக்கு தேவையான பயிட்சியை பிரித்தானியாவிலேயே என்னால் ஒழுங்கு படுத்த முடிந்தது. சொல்லும் காட்சிகளை உள்வாங்கி அதை உணர்வுபூர்வமாக வெளிக்கொண்டுவரும் திறமை இருந்த காரணத்தினால்தான் நான் அவரை இந்த படத்தில் நடிக்க தேர்ந்தெடுத்தேன்.

ஒற்றை பனைமரம் போல மிகவும் அழகான ஈழத்திரை படைப்புகளை தந்த “புதியவன்” தொடர்ந்து சாதனை புரிய என்ன தேவைப்படுகின்றது ?
சாதிக்க வேண்டுமென்ற அடிப்படையில் நான் சினிமாவுக்கு வரவில்லை. தொடர்ந்து வெளிவந்துகொண்டிருந்த சிறுசஞ்சிகைகள் பத்திரிகைகள் புலம்பெயர் நாடுகளில், நிதி பத்தாக்குறை காரணத்தால் நின்று போகின்ற சூழ்நிலை 80ஃ90களில் நேரிட்டது. அப்பொழுது சமூகம் தொடர்பான உழைக்கும் மக்களின் அவலங்களை, அன்றாடம் அவர்கள் படும் துயரை பற்றிய செய்திகள் வெளியிட முடியாத நிலை உருவானது. அப்பொழுதுதான் சினிமா ஜனங்களிடம் சென்றடைய கூடிய ஒரு விவேகமான ஊடகம் என்ற காரணத்தால் நான் சினிமாவை தேர்ந்தெடுத்தேன். இது என் கனவு, லட்சியம் என்றெல்லாம் எண்ணி வரவில்லை. எனது சினிமா மக்களின் அவலங்களை ஆவணப்படத்தும் ஒரு கருவி.

ஒற்றைப்பனைமரம் படத்தை பற்றி சொல்லுங்கள்.
யுத்தத்தின் பின் விதவையாக வாழும் ஒரு பெண் போராளியின் போராட்டங்களை, மற்றும் அந்த பிரச்சனைகளிலிருந்து விடுபட அவர்கள் எடுக்கும் முயற்சிகளை விவரிக்கும் ஒரு திரைப்படம் தான் ஒற்றைப்பனைமரம். இது 43 சர்வேதேச திரைப்பட விழாக்களில் தெரிவுசெய்யப்பட்ட படம், இது 23 விருதுகளை வெற்றிபெற்றிருக்கிறது. நண்பர்களின் உதவியோடு ழேசறயலஇ நுபெடயனெஇ யுஅநசiஉயஇ ஊயயெனயஇ நெறளநயடயனெ மற்றும் பல நாடுகளில் திரையிடமுடிந்தது. சினிமாவை 1வது, 2வது 3வது சினிமாவென பிரிப்பார்கள். 4வது சினிமாவும் உருவாக்க முடியுமென்ற ஒரு சிந்தனையில் நான் உருவாக்கியதே இந்த ஒற்றைப்பனைமரம். அதாவது விடுதலையடையாமல் தவித்துக்கொண்டிருக்கும் 4வது உலகநாடுகளில் இடம்பெறும் கதைகளை திரைப்படமாக்குவதே 4வது சினிமா. ஒற்றைப்பனைமரதின் வெற்றி தோல்விஎன்பதை விட திரையரங்குகளுக்கு வெளியே அந்த படம் உருவாக்கிய விவாதம் எனக்கு பெரும் திருப்தியளித்தது. தேடி தேடி இலங்கை இயக்குனர்களைபற்றி பதிவுசெய்து வரும் என் தோழி பிரபாலினி தொடர்ந்து உங்கள் பணியை செய்ய வேண்டிக்கொண்டு இன்று என்னையும் நேர்கண்டமைக்கு தோழி பிரபாலினிக்கும் வெற்றிமணி பத்திரிகைக்கும் நன்றி சொல்லி விடைபெறுகிறேன். அன்புடன் புதியவன்.

2,057 total views, 3 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *