‘குட்டி சீனா’வாகும் அம்பாந்தோட்டை இந்தியாவின் பிரதிபலிப்பு என்ன?

உலகின் முன்னணி டயர் உற்பத்தி நிறுவனமான சீன ஷாங்டொங் ஹா{ஹவா டயர் நிறுவனம் 300 பில்லியன் அமெரிக்க டொலரை முதலீடு செய்து அம்பாந்தோட்டை துறைமுக தொழிற்துறை பூங்காவில் ஆரம்பிக்கப்படும் தொழிற்சாலைக்கான ஒப்பந்தம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கைச்சாத்திடப்பட்டது. கொரோனாவினால், இலங்கையின் பொருளாதாரம் பாரிய பின்னடைவைச் சந்தித்திருக்கும் நிலையில், இந்த உடன்படிக்கை நவம்பர் 19 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டமை முக்கியமான ஒரு செய்தியைச் சொல்லியிருக்கின்றது.

இலங்கையின் பொருளாதாரத்துக்கு உதவ சீனா தயாராக இருக்கின்றது என்பதுதான் அந்தச் செய்தி. “கடன் உதவிகளைத் தருவது மட்டும் எமக்குப் போதுமானதல்ல் முதலீடுகளைச் செய்யுங்கள்” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ சீனாவிடம் தெரிவித்த அடுத்த நாளே இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருக்கின்றது. அம்பாந்தோட்டையைப் பொறுத்தவரையில் அது ஒரு “குட்டி சீனா”வாக மாறிக்கொண்டிருக்கின்றது. அம்பாந்தோட்டை துறைமுகமும் சீனாவினால்தான் அமைத்துக்கொடுக்கப்பட்டது. இப்போது செய்யப்பட்டுள்ள பாரிய முதலீடு இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் மேலோங்குவதற்கான மற்றொரு உதாரணம்.

அமெரிக்க இராஜாங்க அமைச்சர் மைக் பொம்பியோவின் இலங்கை விஜயத்தையடுத்து, சீனா குறித்து மேற்கு நாடுகள் எவ்வாறான அணுகுமுறையைக் கொண்டுள்ளன என்பது வெளிப்படையாகியது. குறிப்பாக, இந்தியாவைத் திருப்திப்படுத்த வேண்டிய தேவை ஒன்றிருப்பதை இலங்கை உணர்ந்தது. அதற்கான முக்கியமான இராஜதந்திர நகர்வு ஒன்றையும் கோட்டாபய அரசாங்கம் மேற்கொண்டது. நீண்டகாலமாகவே சர்ச்சைக்குரிய ஒன்றாக இருந்துவந்த கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் உடன்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோவின் இலங்கை விஜயத்தின் தொடர்ச்சியாகவே இதற்கான முடிவை கொழும்பு எடுத்திருப்பதாகத் தெரிகின்றது. இலங்கையில் அதிகளவில் காணப்படும் சீனாவின் ஆதிக்கம் தொடர்பில் கடும் தொனியில் மைக் பொம்பியோ தெரிவித்த கருத்துக்கள், இந்தியாவின் உணர்வுகளைப் பெருமளவுக்குப் பிரதிபலிப்பதாகவே அமைந்திருந்திருந்தது.

அதன் தொடர்ச்சியாகவே புதுடில்லியைச் சாந்தப்படுத்தும் ஒரு செயற்பாடாக கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்யும் ஒப்பந்தத்தை இந்திய நிறுவனம் ஒன்றுக்கு வழங்கும் முடிவை கொழும்பு எடுத்திருப்பதாகத் தெரிகின்றது. சீனாவின் ஆதிக்கத்தை சமப்படுத்தும் ஒரு முயற்சியாக இந்த நகர்வை கொழும்பு மேற்கொண்டிருந்தாலும், புதுடில்லியும், அமெரிக்காவும் இதனால் சாந்தமடையுமா என்ற முக்கியமான கேள்வி உள்ளது. அதேவேளையில், அம்பாந்தோட்டை குறித்த புதிய உடன்படிக்கையும் இந்தியாவை குழப்பத்துக் குள்ளாக்கலாம்.
கொழும்புத் துறைமுகத்தின் கிழக்குக் கொள்கலன் முனையை அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் கைச்சாத்திட்டிருந்தபோதும், அந்தத் திட்டம் இதுவரை செயற்படுத்தப்படாத நிலைதான் இருந்தது. கொழும்பில் இடம்பெற்ற ஆட்சி மாற்றங்களும், அரசியல் குழப்பங்களும்தான் இதற்குக் காரணம்.

2015ஆம் ஆண்டு 500மில்லியன் டொலர்களில் இத் திட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. 2016ஆம் ஆண்டு மைத்திரி- ரணில் அரசாங்கதில் உருவான குழப்பங்களினால் அது கைவிடப்பட்டிருந்தது. அதனைச் செயற்படுத்தப்போவதில்லை என அப்போது ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன பகிரங்கமாகவே அறிவித்திருந்தார். ஆனால், அதனைச் செயற்படுத்த வேண்டும் என்பதில் ரணில் விக்கிரமசிங்க அக்கறையாக இருந்தார்.
2019ஆம் ஆண்டு மே மாதம் இந்தத் திட்டத்திற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருந்தது. ஆனால் அதே ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னரான சூழலில், அந்த ஒப்பந்தம் பற்றி எதுவுமே பேசப்படவில்லை. அது பெருமளவுக்குக் கைவிடப்பட்டுவிட்ட ஒரு நிலைதான் காணப்பட்டது. துறைமுக தொழிற்சங்கங்கள், கொடுத்த அழுத்தம், சிங்களத் தேசியவாத அமைப்புக்கள் கொடுத்த நெருக்குதல் என்பன இதற்குக் காரணம்.

இதனைச் செயற்படுத்த வேண்டும் என இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்குக் கடும் அழுத்தம் கொடுத்திருப்பதாகச் சொல்லப்படுகின்றது. அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ கடந்த மாதம் இந்தியாவில் உயர்மட்டச் சந்திப்புகளில் ஈடுபட்டிருந்தபோதும், கொழும்புத் துறைமுகத்தின் கிழக்குக் கொள்கலன் முனைய விவகாரம் கலந்துரையாடப்பட்டிருந்ததாக டில்லி உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன. அந்தப் பேச்சுகளை முடித்துக்கொண்டே கொழும்புக்கு வந்திருந்தார் பொம்பியோ.

கிழக்கு முனையத்தை எப்படியாவது எடுத்தவிட வேண்டும் என்பதில் இந்தியா அவசரமாக இருந்தமைக்கு காரணம் உள்ளது. சீனாவின் மண்டலமும் பாதையும் என்ற செயற்திட்டத்தின் வரைபடத்தில் கொழும்புத் துறைமுகத்தின் கிழக்குக் கொள்கலன் முனையம் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே, கொழும்பு துறைமுக நகரத் திட்டத்துக்காக பெருமளவு காணியை எடுத்துள்ள சீனா, கிழக்கு முனையத்தையும் எடுத்துக்கொண்டால், கேந்திர ரீதியாக தமக்கு பாரிய நெருக்கடி ஏற்படும் என்பதைத் தெரிந்திருந்தது.

கிழக்குக் கொள்கலன் முனையத்தின் அபிவிருத்தி வேலைகளை 2019ஆம் ஆண்டு மே மாதம் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் செய்து முடிக்க வேண்டுமென இந்தியா அழுத்தும் கொடுத்தமைக்கு அதுதான் காரணம். “சீனா இலங்கையை சூறையாடுகின்றது. கடன்பொறிக்குள் சிக்கவைத்துள்ளது” போன்ற பொம்பியோவின் கருத்துக்களும் இந்த விடயத்தில் எதனையாவது செய்ய வேண்டும் என்ற அழுத்தத்தை கோட்டாபய அரசாங்கத்துக்குக் கொடுத்திருந்தது.

இந்தப் பின்னணியில்தான் இரு வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இணையவழி கருத்தரங்கு ஒன்றிலும், இந்த விடயம் குறித்துப் பேசப்பட்டுள்ளது. ஏசியன் இந்திய நிலையம், உலக விவகாரங்களுக்கான இந்தியக் கவுன்சில், பாத் ஃபைண்டர் உட்பட பல ஆய்வு நிறுவனங்கள் கூட்டாகச் சென்ற வியாழக்கிழமை இந்தக் கருத்தங்கை ஏற்பாடு செய்திருந்தன. இதில், கொழும்புத் துறைமுகத்தின் கிழக்குக் கொள்கலன் முனைய அபிவிருத்தித் திட்டத்தின் அவசியம் தொடர்பாக இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே விரிவாக எடுத்து விளக்கியிருந்தார்.

இதனைக் கூட்டாக ஏற்பாடு செய்திருந்த அமைப்புக்களில் ஒன்று “பாத் ஃபைண்டர்” என்ற அமைப்பு என்பது கவனிக்கத்தக்கது. புதுடில்லிக்கான இலங்கைத் தூதுவராகப் பிரேரிக்கப்பட்டிருக்கும் மிலிந்த மொரகொடைதான் இந்த அமைப்பின் நிர்வாக இயக்குனர். அவரது கருத்துக்களுக்கு அமைவாகவே இந்த அமைப்பும் செயற்பட்டுவருகின்றது. அமைச்சரவை அந்தஸ்த்தைக் கொண்ட தூதுவாக அவரது பெயர் பிரேரிக்கப்பட்டுள்ளது. புதுடில்லி அவரை ஏற்றுக்கொள்வதற்குத் தயாரென பச்சைக் கொடி காட்டியிருக்கின்றது. இலங்கையில், உயர் பதவிகளுக்கானவர்களை நியமிப்பதற்கான குழுவின் முடிவுக்காக அவர் காத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த ‘மெய்நிகர்’ கருதரங்கு கூட, கொழும்பின் இராஜதந்திரிகள், கொள்கை வகுப்பாளர்கள் மத்தியில் ஒரு அழுத்தத்தைக் கொடுப்பதற்கான முயற்சிதான்.

இந்தப் பின்னணியில்தான் இந்த கொள்கலன் துறையை அபிவிருந்தி செய்வதற்கான பொறுப்பை “அதானி போட் என்ட் ஸ்பெசல் எக்கொனமிக் சோன்” (அதானி துறைமுக மற்றும் சிறப்பு பொருளாதார வலயம்) என்ற இந்திய நிறுவனத்திற்கு கிழக்கு முனையத்தில் 49மூ பங்குகளை விற்பனை செய்வதற்கு இலங்கை இணங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதனைவிட அதன் முழு நிர்வாகத்தையும் குறித்த நிறுவனத்திற்கு வழங்க இலங்கை அரசு இணங்கியுள்ளதாக சர்வதேச பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையின் 100 வீதமும் இலங்கை துறைமுக அதிகார சபையின் கீழ் செயற்படுத்தப்படும் என தேர்தலுக்கு முன் வாக்குறுதி அளித்த கோட்டாபய அரசாங்கம், தற்போது கொரோனா ஊரடங்கை சாதகமாக பயன்படுத்தி கிழக்கு முனையத்தின் முழு நிர்வாகத்தையும், 49 வீத பங்கையும் இந்திய நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா குற்றம் சுமத்தியிருக்கின்றார். கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்குவதாகச் சொல்லியிருக்கும் நிலையில்தான் அம்பாந்தோட்டையில் பாரிய முதலீட்டை சீனா செய்கின்றது. இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் சில செய்திகளை இலங்கை அரசாங்கம் கொடுத்தாலும், அது சீனாவின் பக்கம்தான் நிற்கின்றது என்பதற்கு அம்பாந்தோட்டை உடன்படிக்கையும் ஒரு உதாரணமாகவுள்ளது.

-கொழும்பிலிருந்து ஆர்.பாரதி

1,943 total views, 2 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *